குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு ராஜீவ் சந்திர சேகர் அவர்களே, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளே, டிஜிட்டல் இந்தியாவின் பயனாளிகளே, புதிய தொழில்கள், தொழில்துறை ஆகியவற்றோடு தொடர்புடைய பங்குதாரர்களே, நிபுணர்களே, கல்வியாளர்களே, ஆராய்ச்சியாளர்களே, பெரியோர்களே
வணக்கம்
இன்றைய நிகழ்ச்சி, 21-ம் நூற்றாண்டில் இந்தியா கூடுதலாக நவீனமாகி வருகிறது என்பதன் அடையாளமாகும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் மூலம் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தொழில்நுட்பத்தை எவ்வாறு புரட்சிகரமாக பயன்படுத்துகிறது என்பதை உலகத்தின்முன் இந்தியா விவரித்திருக்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், மாறுபட்ட காலங்களுடன் விரிவடைந்திருப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் இந்தியா இயக்கத்திற்கு புதிய பரிமாணங்கள் சேர்ந்தன. புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டன. புதிய தளங்களும், திட்டங்களும் தொடங்கப்பட்டன. இன்றைய நிகழ்ச்சி இந்த சங்கிலித் தொடரை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது. சிறு, சிறு வீடியோக்களில் நீங்கள் பார்த்தது போல், மைஸ்கீம், பாஷினி-பாஷாதான், டிஜிட்டல் இந்தியா – ஜெனசிஸ், புதிய தொழில் திட்டங்களுக்கான சிப்-கள் மற்றும் இதரவை வாழ்க்கையை எளிதாக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் வலுப்படுத்துகின்றன. குறிப்பாக இவை இந்தியாவின் புதிய தொழில் சூழலுக்கு மாபெரும் பயனாக இருக்கின்றன.
நண்பர்களே,
நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பது டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்றாகும். நகரங்களில் சில வசதிகள் கிடைத்ததும் கிராமங்களில் வாழும் மக்கள் மிக மோசமான சூழலில் இருந்ததும் நாம் அறிவோம். நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையேயான இந்த இடைவெளி போக்கப்படும் என்பதை ஒருவரும் கற்பனை செய்திருக்க முடியாது. சிறுசிறு விஷயங்களுக்குக் கூட மக்கள் வட்டார, வட்ட அலுவலகங்களுக்கும், மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கும் அலைகழிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஆனால், டிஜிட்டல் இந்தியா இயக்கம் இதுபோன்ற அனைத்து சிரமங்களையும் நீக்கியது. செல்பேசி மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து குடிமக்களின் வீடுகளுக்கே அரசு சென்றது.
கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அரசு சேவைகளை டிஜிட்டல் வழியாக வழங்குவதற்கு கிராமங்களில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான புதிய பொதுசேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இன்று இந்த மையங்கள் மூலம் கிராம மக்கள் டிஜிட்டல் இந்தியா பயன்களை பெற்றுள்ளனர்.
அண்மையில் நான் டாஹோடுக்கு சென்ற போது, பழங்குடி சகோதர சகோதரிகளை சந்தித்தேன். அவர்கள் 30-32 வயதுள்ள மாற்றுத் திறனாளி தம்பதியர். முத்ரா திட்டத்தில் கடன் பெற்ற இவர்கள் கணினியின் அடிப்படையைக் கற்றுக் கொண்டபின், டாஹோடில் பழங்குடியினப் பகுதியில் பொதுசேவை மையத்தை தொடங்கினார்கள். என்னை சந்தித்த இந்த தம்பதியர், தாங்கள் மாதத்தில் சராசரியாக ரூ.28,000 சம்பாதிப்பதாக தெரிவித்ததோடு, தங்கள் கிராமத்தில் மக்கள் தங்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறினர். சகோதரர்களே, டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை கவனியுங்கள். 1.25 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் ஊரக இந்தியாவுக்கு இ-வணிகத்தை நெருக்கமாக கொண்டு வருகின்றன.
நண்பர்களே,
எதிர்காலத்தில் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைக்கு வலுவான அடித்தளமாக டிஜிட்டல் இந்தியாவை மாற்றுவதற்கும், தொழில்துறை 4.0-வில் இந்தியாவை முன்னணியில் வைப்பதற்கும் பல முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, பிளாக்-செயின், முப்பரிமாண அச்சுமுறை, ட்ரோன்கள், ரோபோ, பசுமை எரிசக்தி போன்ற புதுயுக தொழில்களுக்காக நாடு முழுவதும் நூற்றுக்கும் அதிகமான திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அடுத்த 4-5 ஆண்டுகளில் எதிர்கால திறன்களுக்காக பல்வேறு அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து 14-15 லட்சம் இளைஞர்களுக்கு மறுதிறன் அளிப்பதும், உள்ளதிறனை மேம்படுத்துவதும் எங்களின் நோக்கமாக இருக்கிறது.
இந்த டிஜிட்டல் இந்தியா வாரம் நிகழ்வுக்கு எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவிக்கிறேன். அடுத்த 2-3 நாட்களுக்கு இந்த கண்காட்சி தொடரும். நீங்கள் இதிலிருந்து பயன்பெறுவீர்கள். இத்தகைய சிறப்பான நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதற்காக மத்திய அரசு பல்வேறு துறைகளை நான் மீண்டும் பாராட்டுகிறேன். இன்று காலை நான் தெலங்கானாவில் இருந்தேன். பின்னர் ஆந்திரப்பிரதேசம் சென்றேன. அதன்பின்னர், உங்களை காண்பதற்கான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். உங்களின் உற்சாகத்தை காண்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. குஜராத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள துறைகளை நான் வாழ்த்துகிறேன். நாட்டிலுள்ள இளைஞர்களுக்கான உந்துசக்தியாக இது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
நன்றி!