ரொங்காலி பிஹு விழாவையொட்டி அசாம் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள் அல்லது இதனை தொலைக்காட்சியில் காண்பவர்கள் இதனைத் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். இது மறக்க முடியாதது, சிறப்பானது முன் எப்போதும் காணப்படாதது. இது தான் அசாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் மத்தளத்தின், நாயனத்தின், கோகோனாவின் ஒலி கேட்கிறது. அது வானத்தில் எதிரொலிக்கிறது. அசாமைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்களின் கடின உழைப்பையும், ஒருங்கிணைப்பையும், பெருமிதத்துடன் நாடும் உலகமும் இன்று காண்கிறது. முதலாவதாக இந்த நிகழ்ச்சி பிரமாண்டமானது. இரண்டாவதாக உங்களின் ஆர்வமும், உணர்வும் மெச்சத்தக்கது. சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் நான் இங்கே வந்தபோது அசாம் என்றால் ஏ (முதலாவது) என்று கூறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று மக்கள் கூறியதை நாள் நினைவில் வைத்திருக்கிறேன். இன்று அசாம் உண்மையிலேயே முதன்மை மாநிலமாக மாறியிருக்கிறது. அசாம் மக்களுக்கும் நாட்டுக்கும் மகிழ்ச்சியான பிஹு வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த உணர்வுடன் வடகிழக்கு மற்றும் அசாம் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அசாம் மற்றும் வடகிழக்குப் பிராந்தியம் இன்று குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பெற்றுள்ளது. 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. ரயில்போக்குவரத்துத் தொடர்பாக பல திட்டங்களும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. போக்குவரத்தை மேம்படுத்த பிரம்மபுத்ரா நதியின் மீது மற்றொரு பாலம் அமைப்பதற்கான பணியும் தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
சுற்றுலா மூலமாக நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை இணைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் எங்கு சென்றாலும் பணத்தை மட்டும் அவர்கள் செலவு செய்வதில்லை, அந்தப் பகுதியின் கலாச்சாரத்தை தங்களின் நினைவுகளில் கொண்டு செல்கிறார்கள். போக்குவரத்து தொடர்பு இல்லாத போது, வடகிழக்கின் கலாச்சாரத்தை எவ்வாறு இணைக்க முடியும்? எனவே எங்களின் முதன்மை நோக்கமாக ரயில், சாலை, விமானப் போக்குவரத்து இருக்கிறது. நீண்ட காலமாக தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த மக்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில், போக்குவரத்துத் தொடர்பை விரைவான வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறோம். கடந்த 9 ஆண்டுகளில், வடகிழக்குப் பிராந்தியத்தில் பல புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. முதன் முறையாக வணிக ரீதியான விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் அகல ரயில்பாதை ரயில்கள் மணிப்பூரையும் திரிபுராவையும் அடைந்துள்ளன. தற்போது வடகிழக்குப் பகுதியில் ரயில்பாதைகளை இரட்டிப்பாக்குவது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இருந்ததைவிட பத்து மடங்கு வேகமாக நடைபெறுகிறது. இது போன்ற திட்டங்களில் ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அசாம் உள்ளிட்ட வடகிழக்கின் பெரும் பகுதி துரிதமாக மேம்பட்டு வருகிறது.
நண்பர்களே,
அரசின் முயற்சிகள் காரணமாக வடகிழக்குப் பகுதியில், எல்லா இடங்களிலும் நிரந்தர அமைதி நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் வன்முறைப் பாதையை கைவிட்டு வளர்ச்சிப் பாதையில் இணைந்துள்ளனர். சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க இந்தச் சூழ்நிலையை நாம் மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து நாம் முன்னேற வேண்டியுள்ளது. இந்த சிந்தனையுடன், புனிதமான விழாவில் அசாம் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்னுடன் இணைந்து கூறுங்கள் – பாரத் மாதா கீ ஜெ! இது பரந்து விரிந்து எதிரொலிக்க வேண்டும். பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ! பாரத் மாதா கீ ஜெ!
வந்தே மாதரம்
மிக்க நன்றி