ஜெய் குருதேவ்! மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதலமைச்சர் சிவராஜ் பாய் அவர்களே, சத்குரு சேவா சங்க அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களே!
இன்று மீண்டும் இந்த புனித தலமான சித்ரகூடுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நம் முனிவர்கள் சொல்லி வந்த அதே அமானுஷ்ய இடம் இது தான். ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன் ஆகியோருடன் சித்ரகூடத்தில் நிரந்தரமாக வாசம் செய்கிறார். இங்கு வருவதற்கு முன்பு, ஸ்ரீ ரகுபீர் கோயில் மற்றும் ஸ்ரீ ராம் ஜானகி கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது, மேலும் ஹெலிகாப்டரில் இருந்து காமத்கிரி மலைக்கு எனது வணக்கங்களையும் செலுத்தினேன். மதிப்பிற்குரிய ரஞ்சோடதாஸ் மற்றும் அரவிந்த் பாய் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றிருந்தேன். பகவான் ஸ்ரீராமரையும் ஜானகியையும் தரிசித்த அனுபவம், முனிவர்களின் வழிகாட்டுதல், சமஸ்கிருதக் கல்லூரி மாணவர்கள் வேத மந்திரங்களை அற்புதமாக உச்சரித்த அனுபவம் ஆகியவற்றை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
இன்று, அனைத்து ஏழைகள், சுரண்டப்பட்டவர்கள் மற்றும் பழங்குடிகள் சார்பாக, மனித சேவையின் மகத்தான தவத்தின் ஒரு பகுதியாக என்னை மாற்றிய ஸ்ரீ சத்குரு சேவா சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தொடங்கப்பட்ட ஜானகி குண்ட் மருத்துவமனையின் புதிய பிரிவு லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையை வழங்கும் என்று நான் நம்புகிறேன். வரும் காலங்களில், ஏழைகளுக்கு சேவை செய்யும் இந்த சடங்கு சத்குரு மெடிசிட்டியில் மேலும் விரிவுபடுத்தப்படும். இந்த நிலையில், அரவிந்த் பாயின் நினைவாக சிறப்பு தபால் தலை ஒன்றையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் தருணம் நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம்; ஆழ்ந்த திருப்தியின் ஒரு கணம். அதற்காக உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் செய்யும் நல்ல காரியம் எப்போதும் பாராட்டப்படும். சமகாலத்தவர்களும் அதைப் பாராட்டுகிறார்கள். ஆனால் படைப்பு அசாதாரணமாக இருக்கும்போது, அது அவரது வாழ்க்கைக்குப் பிறகும் தொடர்ந்து விரிவடைகிறது. அர்விந்த் பாயின் குடும்பத்தினர் அவரது அறக்கட்டளையைத் தொடர்ந்து வளப்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரவிந்த் பாயின் சேவைகளை புதிய ஆற்றலுடன் மேலும் பரப்பியதற்காக பாய் 'விஷத்' மற்றும் சகோதரி 'ரூபல்' மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நான் குறிப்பாக பாராட்டுகிறேன். அர்விந்த் பாய் ஒரு தொழிலதிபர். மும்பையாக இருந்தாலும் சரி, குஜராத்தாக இருந்தாலும் சரி, தொழில்துறை மற்றும் கார்ப்பரேட் உலகில் எல்லா இடங்களிலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. அவரது அபரிமிதமான திறமை எல்லா இடங்களிலும் நன்கு அறியப்பட்டது. எனவே விஷாத் மும்பையில் நூற்றாண்டு விழாவை மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் சத்குரு மீதான அவரது அர்ப்பணிப்பைப் பாருங்கள். அரவிந்த் பாய் இந்த இடத்தில் காலமானார், எனவே நூற்றாண்டு விழாவிற்கு இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மரியாதைக்குரிய ஸ்ரீ ரஞ்சோடதாஸ் ஒரு பெரிய ஞானி. அவரது தன்னலமற்ற கர்மயோகம் எப்போதும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. எல்லோரும் குறிப்பிட்டது போல, அவரது தாரக மந்திரம் மிகவும் எளிமையான வார்த்தைகளில் - பசித்தவர்களுக்கு உணவு, ஆடையற்றவர்களுக்கு உடைகள், பார்வையற்றவர்களுக்குப் பார்வை. இந்த மந்திரத்துடன், பூஜ்ய குருதேவ் 1945 ஆம் ஆண்டில் முதல் முறையாக சித்ரகூடுக்கு வந்தார். 1950 ஆம் ஆண்டில் அவர் இங்கு முதல் கண் முகாமை ஏற்பாடு செய்தார். அந்த முகாமில் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்களுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது.
இன்று, இந்தப் புண்ணிய பூமியில் நாம் காணும் மக்களுக்கு சேவை செய்வதற்கான இந்த முக்கிய திட்டங்கள் அனைத்தும் அந்தத் துறவியின் உறுதியின் விளைவாகும். ஸ்ரீராம் சமஸ்கிருத வித்யாலயாவை இங்கு நிறுவினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ சத்குரு சேவா சங்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. பேரழிவு ஏற்படும் போதெல்லாம், மரியாதைக்குரிய குருதேவ் அதை ஒரு கேடயம் போல எதிர்கொள்வார். பூகம்பம், வெள்ளம், வறட்சி என எதுவாக இருந்தாலும் அவரது முயற்சியாலும் ஆசீர்வாதத்தாலும் பல ஏழை மக்கள் புது வாழ்வு பெற்றனர். சுயநலத்தைத் தாண்டி சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் இத்தகைய மகத்தான ஆளுமைகளை ஈன்றெடுக்கும். நமது நாட்டின் சிறப்பு இதுதான்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
இன்று, நாம் அரவிந்த் பாயின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது, அவரது உத்வேகங்களை நாம் உள்வாங்குவது முக்கியம். தான் ஏற்ற ஒவ்வொரு பொறுப்பையும் 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் செய்து முடித்தார். இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மபத்லால் குழுமத்திற்கு புதிய உயரத்தை அளித்தார். நாட்டின் முதல் பெட்ரோரசாயன வளாகத்தை நிறுவியவர் அரவிந்த் பாய். இன்று, நாட்டின் பொருளாதாரத்திலும், சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பல நிறுவனங்கள், அவரது தொலைநோக்குப் பார்வை, அவரது சிந்தனை மற்றும் கடின உழைப்பை அடித்தளமாகக் கொண்டுள்ளன. விவசாயத் துறையிலும் இவரது பணி பெரிதும் பாராட்டப்படுகிறது. இந்திய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் தலைவராக அவரது பணியை மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். ஜவுளி போன்ற இந்தியாவின் பாரம்பரியத் தொழிலின் பெருமையை மீண்டும் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார். நாட்டின் முக்கிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கும் அவர் தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது கடின உழைப்பும், திறமையும் தொழில்துறை உலகிலும், சமூகத்திலும் அழியாத முத்திரை பதித்துள்ளது. அரவிந்த் பாய் நாடு மற்றும் உலகத்திலிருந்து பல முக்கியமான விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.
எனது குடும்ப உறுப்பினர்களே,
சத்குரு கண் மருத்துவமனை இன்று நாடு மற்றும் உலகின் சிறந்த கண் மருத்துவமனைகளில் தனது இடத்தைப் பிடித்துள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு காலத்தில் இந்த மருத்துவமனை 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 15 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். சத்குரு கண் மருத்துவமனையின் பணிகளை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன், ஏனென்றால் எனது காசியும் அதன் மூலம் பயனடைந்துள்ளது. காசியில் நீங்கள் நடத்தி வரும் "ஆரோக்கியமான பார்வை-வளமான காசி இயக்கம்" பல வயதானவர்களுக்கு சேவை செய்கிறது. சத்குரு கண் மருத்துவமனை வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 6.5 லட்சம் பேருக்கு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துள்ளது! 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதனைக்கு பின் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏராளமான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.இதற்காக எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரவிந்த் பாயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது மகத்தான முயற்சிகளுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவரது பணி, வாழ்க்கை நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கட்டும்; சத்குருவின் ஆசீர்வாதம் நம் மீது தொடரட்டும்!
இந்த உத்வேகத்துடன், உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி! ஜெய் சியா ராம்.