குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா, திரு சி.ஆர்.பாட்டில் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, அகில பாரதிய சிக்ஷா சங் உறுப்பினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
விடுதலையின் அமிர்த காலத்தில் வளர்ந்த நாடாக முன்னேறும் உறுதிப்பாட்டுடன் இந்தியா முன்னேறி வரும் வேளையில், ஆசிரியர்களின் பங்களிப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திரு ரூபாலா அவர்கள் கூறியதைப் போல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தால் ஏராளமான மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது. அதனால் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகளை கட்டமைக்கும் சிறப்பு திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அதேபோல, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரு காலத்தில் அறிவியல் பிரிவு வழங்கப்படவில்லை. இன்று, ஆசிரியர்கள் அறிவியலை கற்றுத் தருவது மட்டுமல்லாமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆசிரியர்கள் உலகம் முழுவதும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
வேகமாக மாறிவரும் இந்த 21-வது நூற்றாண்டில் இந்திய கல்வி முறையுடன், ஆசிரியர்களும், மாணவர்களும் மாற்றத்தை சந்திக்கிறார்கள். போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் குறைவு போன்ற சவால்களை முன்னர் ஆசிரியர்கள் எதிர்கொண்டு வந்தனர். ஆனால் இன்று இதுபோன்ற பிரச்சனைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. இருந்த போதும் இன்றைய தலைமுறை குழந்தைகளிடையே உள்ள ஆர்வம், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வது அவசியமாகிறது.
தகவல்கள் பெருமளவு கொட்டிக் கிடக்கும் போது, மாணவர்கள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். எனவே 21-வது நூற்றாண்டில், மாணவர்களின் வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பு அதி முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பத்தால் தகவல்களை வழங்கக்கூடும் என்ற போதும், சரியான அணுகுமுறையை ஆசிரியரால் மட்டுமே அளிக்க முடியும். ஆசிரியர்களுக்கு நமது பாரம்பரியம் அளித்துள்ள மரியாதை, பெருமையை முன்னெடுத்துச் சென்று, புதிய இந்தியாவின் கனவை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.