மதிப்பிற்குரியவர்களே, மாண்புமிகு பிரதிநிதிகளே, வணக்கம்!
ஜெனிவாவில் உலக சுகாதார சபையின் 76-வது அமர்வில் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். 75 ஆண்டுகளாக உலகிற்கு சேவையாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கை நிறைவு செய்ததற்காக உலக சுகாதார அமைப்பை நான் வாழ்த்துகிறேன். உலக சுகாதார அமைப்பு 100 வருட சேவையை எட்டும்போது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
சுகாதாரப் பாதுகாப்பில் உலக நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை கொரோனா தொற்று நமக்குக் காட்டியது. கொரோனா சர்வதேச சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள பல இடைவெளிகளை நமக்கு எடுத்துக்காட்டியது. சர்வதேச அமைப்புகளில் மீள்திறனை உருவாக்க கூட்டு முயற்சி தேவை.
நண்பர்களே,
சர்வதேச சுகாதார சமத்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கொரோனா தொற்று எடுத்துக்காட்டியது. ஒரு நெருக்கடியின் போது, இந்தியா சர்வதேச ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. கிட்டத்தட்ட 300 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை 100 நாடுகளுக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் பல நாடுகள் தெற்கு நாடுகள். அனைவருக்கும் அனைத்து வளங்களும் சமமாகக் கிடைப்பதில், வரவிருக்கும் ஆண்டுகளில் உலக சுகாதார அமைப்பு முன்னுரிமை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவின் பாரம்பரிய அறிவானது உடல் நலம் மட்டும் ஆரோக்கியமல்ல என்று கூறுகிறது. நாம் நோயிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை நோக்கி ஒரு படி மேலே செல்ல வேண்டும். யோகா, ஆயுர்வேதம் மற்றும் தியானம் போன்ற பாரம்பரிய முறைகள், உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தின் அம்சங்களைக் குறிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் சர்வதேச மையம் இந்தியாவில் நிறுவப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சர்வதேச சிறுதானிய ஆண்டு மூலம் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை உலகம் அங்கீகரித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
உலகத்தை ஒரே குடும்பமாகப் பார்க்கும் வசுதைவ குடும்பகம் என்பதை இந்தியாவின் பண்டைய நூல்கள் நமக்குக் கற்பிக்கின்றன. இந்த ஆண்டு எங்களது ஜி-20 தலைமைப் பொறுப்பில், ''ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்'' என்ற கருப்பொருளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நல்ல ஆரோக்கியத்திற்கான நமது பார்வை ''ஒரே பூமி ஒரு ஆரோக்கியம்''. நமது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே, நமது கவனம் மனிதர்களோடு மட்டும் முடிந்துவிடவில்லை. இது விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உள்பட முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உள்ளடக்கியது.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், இந்தியா சுகாதாரப் பாதுகாப்பின் இருப்பு, எளிய அணுகல் மற்றும் மருத்துவம் மலிவு விலையில் கிடைப்பதற்காகப் பணியாற்றியுள்ளது. அது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் ஆகட்டும், அல்லது சுகாதார உள்கட்டமைப்பைப் பெருமளவில் மேம்படுத்துவது, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்குவதற்கான உந்துதல் என எங்களது பல முயற்சிகள் கடைக்கோடி மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையோடு செயல்படும் அணுகுமுறை, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம். குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் இதேபோன்ற முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
நண்பர்களே,
அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த 75 ஆண்டு காலம் பணியாற்றியதற்காக உலக சுகாதார அமைப்பைப் பாராட்ட விரும்புகிறேன். உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களின் பங்கு கடந்த காலத்தில் நிச்சயமாக முக்கியமானது. ஆனால் சவால்கள் நிறைந்த எதிர்காலத்தில் அதன் பங்கு இன்னும் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது. நன்றி. மிக்க நன்றி!