மேதகு அதிபர் டினுபு அவர்களே,
நைஜீரியாவின் தேசிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜரை எனக்கு வழங்கி கௌரவித்த உங்களுக்கும், அரசிற்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கௌரவத்தை நான் பணிவுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கவுரவத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும், இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான நீடித்த நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த கவுரவம் இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான உத்திசார் கூட்டாண்மையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் நைஜீரியா இடையேயான உறவுகள் பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இரு துடிப்பான ஜனநாயகங்கள் மற்றும் செயலூக்கமான பொருளாதாரங்கள் என்ற முறையில், நமது மக்களின் நலனுக்காக நாம் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். நம் இரு நாடுகளிலும் உள்ள சமூக மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை தான் நமது அடையாளம், நமது பலம். நைஜீரியாவின் 'புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை திட்டம்' மற்றும் இந்தியாவின் 'வளர்ந்த பாரதம் 2047' ஆகியவை பல பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு அதிபர் டினுபுவின் இந்தியப் பயணம், நமது உறவில் புதிய அத்தியாயத்தை சேர்த்தது. இன்று, நமது பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் ஆழமாக விவாதித்தோம். பொருளாதாரம், எரிசக்தி, விவசாயம், பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், கலாச்சாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளி என்ற முறையில், நைஜீரிய மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். நைஜீரியாவில் வசிக்கும் 60,000-க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் நமது உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவளித்த அதிபர் டினுபு மற்றும் அவரது அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஆப்பிரிக்காவில் நைஜீரியா குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறையான பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆப்பிரிக்காவுடனான நெருக்கமான உறவுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. எங்களது அனைத்து முயற்சிகளிலும், நைஜீரியா போன்ற நட்பு நாட்டுடன் தோளோடு தோள் நின்று முன்னேறி வருகிறோம்.
நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுவதன் மூலம், உலகளாவிய தெற்கின் நலன்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம்.
மேதகு அதிபர் அவர்களே,
இந்த கவுரவத்திற்காக மீண்டும் ஒருமுறை 140 கோடி இந்தியர்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.