பாரத் மாதா கி - ஜெய்!
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு அர்ஜூன் முண்டா மற்றும் திருமிகு அன்னபூர்ணா தேவி அவர்களே, மதிப்பிற்குரிய வழிகாட்டி திரு கரியா முண்டா அவர்களே, எனது அருமை நண்பர் திரு பாபுலால் மராண்டி அவர்களே, மற்ற சிறப்பு விருந்தினர்களே, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எனது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,
அனைவருக்கும் வணக்கம்!
இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாள். பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹட்டுவில் இருந்து சிறிது நேரத்திற்கு முன் நான் திரும்பினேன். அவரது உறவினர்களைச் சந்தித்த மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது. புனித மண்ணை என் நெற்றியில் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்காவையும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகத்தையும் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. பழங்குடியினர் கௌரவ தினத்தன்று அனைத்துக் குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, நாடு முழுவதும் பல இடங்களில் ஜார்க்கண்ட் நிறுவன தினத்தை மதிப்பிற்குரிய நபர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாநிலத்தின் உருவாக்கம், திரு அடல் அவர்களின் முயற்சியால் சாத்தியமானது. நாடு, குறிப்பாக ஜார்க்கண்ட், மொத்தம் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் வடிவத்தில் பரிசுகளைப் பெற்றுள்ளது. ஜார்க்கண்டில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு விரிவாக்கத்தின் கீழ் பல ரயில்வே திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் இப்போது நாட்டில் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்தத் திட்டங்களுக்காக ஜார்க்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்களே,
பழங்குடிகளின் பெருமை மற்றும் போராட்டத்தின் அடையாளமான பகவான் பிர்சா முண்டாவின் வரலாறு ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளிக்கிறது. ஜார்க்கண்டின் ஒவ்வொரு மூலையும் அத்தகைய பெரிய ஆளுமைகள், அவர்களின் தைரியம் மற்றும் இடைவிடாத முயற்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தில்கா மாஞ்சி, சித்து கன்ஹு, சந்த் பைரவ், புலோ ஜானோ, நீலாம்பர், பிதாம்பர், ஜாத்ரா தன பகத், ஆல்பர்ட் எக்கா போன்ற நபர்கள் இந்த மண்ணின் பெருமையை உயர்த்தியுள்ளனர். மங்கர் தாம் படத்தில் கோவிந்த் குருவின் பங்களிப்பை யாரால் மறக்க முடியும்? மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தியா பில், பீமா நாயக், சத்தீஸ்கரைச் சேர்ந்த தியாகி வீர் நாராயண் சிங், மணிப்பூரைச் சேர்ந்த வீர் குண்டதூர், ராணி கெய்டின்லியூ, தெலங்கானாவைச் சேர்ந்த ராம்ஜி கோண்டு, ஆந்திராவில் பழங்குடியினருக்கு உத்வேகம் அளித்த அல்லூரி சீதாராம ராஜு, கோண்ட்வானாவின் ராணி துர்காவதி - இவர்களுக்குத்தான் நம் தேசம் இன்றளவும் கடன்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்திற்குப் பின், இந்த மாவீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் அமிர்தப் பெருவிழாவின்போது, அத்தகைய துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவுகளை நாம் நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
ஏழைகளின் மிகப்பெரிய பலமான ஆயுஷ்மான் திட்டம் ஜார்க்கண்டில் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், குந்தியில், சூரிய சக்தியில் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தைத் திறந்து வைத்தேன். ஒன்றல்ல, இரண்டு வரலாற்று சிறப்புமிக்க யாத்திரைகள் இந்தப் புனித பூமியான ஜார்க்கண்டில் இருந்து இன்று தொடங்கவுள்ளன. 'வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரை' - அரசின் திட்டங்கள் 100 சதவீதம் இலக்குகளை அடைய ஒரு வலுவான வழிமுறையாக செயல்படும். 'பிரதமரின் பழங்குடி நீதி மகா இயக்கம்’- அழிவின் விளிம்பில் நிற்கும் பழங்குடி சமூகங்களைப் பாதுகாக்கும், அதிகாரமளிக்கும். இந்த இரண்டு இயக்கங்களும் ‘அமிர்த கால'த்தில் பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய ஆற்றலை ஏற்படுத்தும்.
என் குடும்ப உறுப்பினர்களே,
அரசின் தலைமைப் பொறுப்பில், அரசின் தலைவர் என்ற முறையில், நான் இந்தப் பொறுப்பை ஏற்று இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டது. குடிமக்களின் விருப்பங்களை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அனுபவங்களின் அடிப்படையில், நான் இன்று ஓர் ‘அமிர்த மந்திரத்தை' உங்கள் முன் வைக்கிறேன். பகவான் பிர்சா முண்டாவின் நிலத்திலிருந்து அதை முன்வைக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த பாரதத்தின் அற்புதமான மற்றும் தெய்வீகக் கட்டமைப்பை நாம் உருவாக்க விரும்பினால், அதன் நான்கு 'அமிர்த தூண்களை' நாம் வலுப்படுத்த வேண்டும், தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தின் இந்த நான்கு 'அமிர்த' தூண்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் 'அமிர்த' தூண்: பாரதத்தின் நமது பெண்கள் - நமது தாய்மார்கள், சகோதரிகள், நமது 'பெண்களின் சக்தி’
இரண்டாவது 'அமிர்த' தூண்: பாரதத்தின் விவசாயிகள் - நமது விவசாய சகோதர சகோதரிகள், விவசாயத்துடன் தொடர்புடையவர்கள், கால்நடை வளர்ப்பு அல்லது மீன் வளர்ப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய நமது 'உணவு வழங்குநர்கள்’
மூன்றாவது 'அமிர்த' தூண்: பாரதத்தின் இளைஞர்கள் - பாரதத்தின் இளைய தலைமுறை, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் இளைஞர் சக்தி.
நான்காவது 'அமிர்த' தூண்: பாரதத்தின் நடுத்தர வர்க்கம் - புதிய -நடுத்தர வர்க்கம், மற்றும் பாரதத்தின் எனது ஏழை சகோதர சகோதரிகள்.
இந்த நான்கு தூண்களையும் வலுப்படுத்துவது ' வளர்ச்சியடைந்த இந்தியா' கட்டமைப்பை புதிய உயரத்திற்கு உயர்த்தும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நான்கு தூண்களை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதற்கு முன்பு ஒருபோதும் செய்யப்படவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
அண்மைக் காலங்களில், இந்தியாவின் வெற்றி குறித்த விவாதங்கள் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளன. நமது அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில், 130 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து உயர்ந்துள்ளனர். 2014-ஆம் ஆண்டில், தில்லியில் அரசை வழிநடத்தும் பொறுப்பை நீங்கள் எங்களிடம் ஒப்படைத்தபோது, எங்கள் 'சேவை காலம்' அன்று முதல் தொடங்கியது. நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். இந்த சேவைக் காலத்தைப் பற்றி பேசுகையில், நாங்கள் அரசு அமைப்பதற்கு முன்பு பாரதத்தின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் அடிப்படை வசதிகளை இழந்தனர். கோடிக்கணக்கான வறிய மக்கள் தங்கள் வாழ்க்கை எப்போதாவது மாறும் என்ற நம்பிக்கையைக் கைவிட்டனர். முந்தைய அரசுளின் அணுகுமுறை தங்களை இறுதி அதிகாரமாக கருதும் வகையில் இருந்தது. எனினும், அதிகார உணர்வுடன் செயல்படாமல், விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தி, ஊழியர்களாக பணியாற்றத் தொடங்கினோம். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை, நாட்டின் கிராமங்களில் சுகாதாரம் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இன்று நாம் 100 சதவீதம் என்ற இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எங்கள் அரசு அமைவதற்கு முன்பு, 50-55 சதவீத வீடுகளில் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தன. இப்போது, ஏறத்தாழ 100 சதவீத வீடுகளில் புகை சுமையிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில், நாட்டின் 55 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைத்தன, இதனால் பாதி குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தனர். இன்று, தடுப்பூசி வழங்கல் ஏறத்தாழ 100 சதவீதமாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களில், கிராமப்புற குடும்பங்களில் 17 சதவீதத்தினருக்கு மட்டுமே குழாய் நீர் கிடைத்தது. ஜல் ஜீவன் இயக்கத்தினால் இந்த எண்ணிக்கை இப்போது ஏறத்தாழ 70 சதவீதத்தை எட்டியுள்ளது.
என் குடும்ப உறுப்பினர்களே,
நமது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறார். கடந்த ஆண்டுகளில், பெண்கள் மேம்பாட்டிற்கான பாதையை இந்தியா உலகிற்குக் காட்டிய விதம் முன்னெப்போதும் இல்லாதது. இந்த ஆண்டுகள் நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு வசதிகள், பாதுகாப்பு, மரியாதை, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டன. பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் மனதில் கொண்டு, அவர்களுக்கான திட்டங்களை எங்கள் அரசு உருவாக்கியுள்ளது.
நண்பர்களே,
'அமிர்த காலத்தின்' நான்கு 'அமிர்த' தூண்களான நமது மகளிர் சக்தி, நமது இளைஞர் சக்தி, நமது விவசாய வலிமை மற்றும் நமது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் அதிகாரமளித்தல் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் மற்றும் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்கும். இந்தத் திட்டங்களுக்காகவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் இயக்கங்களுக்காகவும் உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!