அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்களே, பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, என்சிசி தலைமை இயக்குனர், ஆசிரியர்கள், விருந்தினர்கள் உள்ளிட்ட தோழர்களே, ஏராளமான சிறார்கள் நேதாஜி போன்ற உடையில் எனது இல்லத்திற்கு முதல் முறையாக வந்துள்ளனர். இதற்காக உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த் என்னும் மந்திரம் நம் அனைவரையும் எப்போதும் ஊக்குவிக்கிறது.
கடந்த பல வாரங்களில் நாட்டின் இளைஞர்களுடன் நான் கலந்துரையாடியுள்ளேன். தேர்வு குறித்து விவாதிப்போம் என்ற மாணவர்களுடனான நிகழ்ச்சி, வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது நினைவிருக்கலாம்.
இளைஞர்களுடன் உரையாடும் போது, அவர்களது ஆற்றல், புத்துணர்வு, புதுமை, இளைஞர்களின் ஆர்வம், ஆகியவை நமக்கு மேலும் இரவு பகலாக கடினமாக உழைக்க ஊக்கமளிக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த அமிர்த காலத்தில், கனவுகளையும், அபிலாசைகளையும் கொண்டுள்ளீர்கள். வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகளாக நீங்கள் இருக்க போகிறீர்கள். இதை கட்டமைக்கும் பெரும் பொறுப்பையும் நீங்கள் தாங்கி செல்வீர்கள்.
பொது வாழ்க்கையில், இளைஞர்களின் பல்வேறு பரிமாணங்களின் பங்கு அதிகரித்து வருவதைப் பார்ப்பது உற்சாகம் அளிக்கிறது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் நிகழ்ச்சிகள், பராக்கிரம தின நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிகப்படியாக பங்கேற்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் என்சிசி மற்றும் என்எஸ்எஸ் ஆர்வலர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. நாட்டின் எல்லைப்பகுதிகள், கடலோர பிராந்தியங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இளைஞர்களை தயார்ப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
நண்பர்களே,
மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்கும், உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பு இன்றியமையாதது. இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என்ற கொள்கையை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. இளைஞர்களின் இலக்குகள் நாட்டின் இலக்குகளோடு இணைந்திருக்கும் போது, இருதரப்பினருக்கும் வெற்றி எளிதானதாக இருக்கும். இளைஞர்களின் வெற்றியை இந்தியாவின் வெற்றியாக உலகம் கருதுகிறது. அறிவியல் விஞ்ஞானிகளான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், ஹோமி ஜஹாங்கிர் பாபா மற்றும் டாக்டர் சி வி ராமன், விளையாட்டு சாதனையாளரான மேஜர் தயான்சந்த் உள்ளிட்டோர் இதற்கு உதாரணமாவார்கள். இவர்கள் அனைவரது சாதனைகளையும், இந்தியாவின் வெற்றியாக உலகம் பார்க்கிறது. அதேநேரத்தில் இந்தியாவின் சாதனைகளில் புதிய எதிர்காலத்தை உலகம் காண்பதுடன், இந்த வரலாற்றுச் சாதனைகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவை மனித குலத்தின் எதிர்காலம் மீதான புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளன.
எதிர்காலத்திற்கான இலக்குகள் மற்றும் தீர்மானங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. அனைத்துத் துறைகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் அவ்வப்போது உருவாக்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தி, தாங்கள் சார்ந்துள்ள பகுதி, கிராமம், நகரம் ஆகியவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும். அமிர்த காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும், விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த கவிதை, கட்டுரை, கதை ஆகிய செயல்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், ஃபிட் இந்தியா இயக்கத்தில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு, தங்கள் குடும்பத்தினரையும் ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும். இந்தியாவின் கலாச்சாரமாக திகழும் யோகாசனப் பயிற்சியை ஒவ்வொரு இல்லங்களிலும் மேற்கொள்ள வேண்டும். ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு தொடர்பான தகவல்களை இளைஞர்கள் தெரிந்து வைத்துக் கொள்வதோடு, இந்தியாவின் தலைமைத்துவம் சார்ந்த தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும்.
இளைஞராக உள்ள இந்த நேரத்தில் உங்களுடைய எதிர்காலத்தை தற்போதே தீர்மானித்துக் கொள்வதோடு, புதிய எண்ணங்களையும் புதிய இலக்குகளையும் உருவாக்குபவராக மாறுவதன் மூலம் புதிய இந்தியாவின் வழிகாட்டியாக மாற முடியும்.