மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 17-வது மக்களவையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், நாட்டிற்கு வழிகாட்டுவதிலும் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. சித்தாந்தப் பயணத்தையும், அதன் மேம்பாட்டுக்கான நேரத்தையும் தேசத்திற்கு அர்ப்பணிப்பதற்கான சிறப்பான தருணத்தை இது குறிக்கிறது. "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதே கடந்த 5 ஆண்டுகளாக தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இதை இன்று ஒட்டுமொத்த தேசமும் அனுபவிக்கிறது. 17-வது மக்களவையின் முயற்சிகளுக்காக இந்திய மக்கள் தொடர்ந்து ஆசீர்வதிப்பார்கள். அவையின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் குறிப்பாக அவைத் தலைவருக்கு எனது நன்றி. சபையை எப்போதும் புன்னகை யுடனும், சமநிலையுடனும், பாரபட்சமின்றியும் அவைத் தலைவர் கையாண்டதற்குப் பாராட்டுகள்.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
உறுப்பினர்களின் கூட்டு முயற்சி, மக்களவைத் தலைவரின் திறமை மற்றும் உறுப்பினர்களின் விழிப்புணர்வு ஆகியவை 17-வது மக்களவையின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டை 97 சதவீதமாக உயர்த்தியதற்கு காரணம். இது குறிப்பிடத்தக்க சதவீதமாக இருந்தாலும், 18-வது மக்களவையின்போது செயல் திறனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று உறுப்பினர்கள் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு சாதனை.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் அமிர்தப் பெருவிழாவை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளனர். அதேபோல், அரசியலமைப்பின் 75-வது ஆண்டு ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளித்தது.
பல தலைமுறைகளாக எதிர்பார்த்துக் காத்திருந்த பல விஷயங்கள் 17வது மக்களவையின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை நான் மிகுந்த மனநிறைவுடன் கூற முடியும். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், அரசியலமைப்பின் முழுமை வெளிப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம். இன்று சமூக நீதிக்கான எங்கள் அர்ப்பணிப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களைச் சென்றடைகிறது.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
இந்த அவையில் இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வலுப்படுத்தியுள்ளன. இது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுபவர்களின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பது நிச்சயமாக நிறைவேறும்.
இந்த நாடு 75 ஆண்டுகளாக தண்டனைச் சட்டத்தின் கீழ் வாழ்ந்திருந்தாலும் இப்போது நாம் நியாயச் சட்டத்தின் கீழ் வாழ்கிறோம்.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கியதற்காக அவைத் தலைவருக்கு நன்றி. முதல் கூட்டத்தொடர் மற்ற கூட்டத்தொடர்களை விட குறுகியதாக இருந்தாலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டதன் விளைவாக, வரும் காலங்களில் இந்த அவை பெண் உறுப்பினர்களால் நிரம்பும். பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 17-வது மக்களவையில் முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டது.
தேசத்திற்கு அடுத்த 25 ஆண்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாடு தனது கனவுகளை நனவாக்கத் தீர்மானித்துள்ளது. 1930-ம் ஆண்டு மகாத்மா காந்தியால் உப்பு சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடங்கப்பட்ட போது முக்கியமற்றதாக இருந்திருக்கலாம். ஆனால் அது 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வழிவகுத்து. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ள நிலையில், இதே போன்ற உணர்வை நாட்டில் காண முடியும்.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டத்தின் தொலைநோக்குப் பார்வையின் மூலம் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலகின் மையமாக இந்தியாவை மாற்ற முடியும். 21 ஆம் நூற்றாண்டில் உலகின் அடிப்படைத் தேவைகள் மாறியுள்ளன. டிஜிட்டல் தனித் தரவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது தற்போதைய தலைமுறையினரின் தரவைப் பாதுகாத்துள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து ஆர்வத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் அதன் முக்கியத்துவம் காரணமாக நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நாட்டில் அது பன்முகப்படுத்தப்பட்ட விளைவுகளை உருவாக்கியுள்ளன.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
பாதுகாப்பின் புதிய பரிமாணங்கள், கடல், வான் மற்றும் இணையதளப் பாதுகாப்பில் நாம் நேர்மறையான திறன்களை உருவாக்க வேண்டும். எதிர்மறை சக்திகளை சமாளிப்பதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும். விண்வெளிச் சீர்திருத்தங்கள் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் முன்னோக்கிய பார்வை கொண்டவை.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
17வது மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஆயிரக்கணக்கான சிக்கலான நடைமுறைகள் நீக்கப்பட்டன. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச அரசு தலையீட்டை உறுதி செய்வதன் மூலம் எந்தவொரு ஜனநாயகத் திறன்களையும் அதிகபட்சமாக்க முடியும்.
மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
காலாவதியான 60-க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்த இது தேவைப்படுகிறது. எனவே மக்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேவையற்ற வழக்கு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க சமரசச் சட்டம் உதவியுள்ளது.
திருநங்கைகளின் சமூகத்தைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக உறுப்பினர்களைப் பாராட்டுகிறேன். பாதிக்கப்படும் பிரிவினருக்கு முக்கியமான இந்த ஏற்பாடு உலக அளவில் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதன் மூலம் திருநங்கைகள் ஓர் அடையாளத்தைப் பெற்று தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். பத்ம விருது பெறுவோர் பட்டியலிலும் திருநங்கைகளின் பெயர் இடம்பெறுகிறது.
ஏறக்குறைய 2 ஆண்டுகளாக சபையின் நடவடிக்கைகளை பாதித்த கொவிட் தொற்றுநோயால் உயிர் இழந்த உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவின் ஜனநாயகப் பயணம் நிலையானது, முழு மனிதகுலத்திற்கும் சேவை செய்வதே தேசத்தின் நோக்கம். இந்தியாவின் வாழ்க்கை முறையை உலகம் ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பாரம்பரியத்தை உறுப்பினர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வரவிருக்கும் தேர்தல்கள் ஜனநாயகத்தின் இயற்கையான மற்றும் அத்தியாவசியமான பரிமாணமாகும். நமது ஜனநாயகத்தின் பெருமைக்கு ஏற்ப தேர்தல் இருக்கும்.
17-வது மக்களவையின் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டை தொடர்பாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால சந்ததியினர், பாரம்பரியத்தில் பெருமை கொள்வதற்கான அதிகாரத்தை இது வழங்கும். இந்தத் தீர்மானத்தில் 'சிறந்த உணர்வு', 'லட்சியத் தீர்மானம்' ஆகியவற்றுடன் ‘அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரமும் அடங்கியுள்ளது.
உறுப்பினர்கள், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் செல்லவும், எதிர்காலத் தலைமுறையினரின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றவும் நாடாளுமன்றம் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
இந்த நம்பிக்கையுடன் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி!