வணக்கம்
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக ஊழியர்கள், தூதர்கள், தூதரகத்தலைவர்கள், உலகம் முழுவதும் சேவை செய்யும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பல்வேறு ஏற்றுமதி கவுன்சில்கள், வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே! விடுதலை பெற்று பவள விழா கொண்டாடவிருக்கும் நேரமிது. விடுதலையைக் கொண்டாடுவது மட்டுமல்ல; எதிர்கால இந்தியாவுக்கான தெளிவான பார்வையோடு, அதற்கான வழிகாட்டு வரைப்படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாகும் இது. நமது ஏற்றுமதி லட்சியங்களுக்கான உங்கள் பங்கும், ஈடுபாடும் ஏராளமானவை. உலக அளவில் இன்று என்ன நடக்கிறது என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும் என்பதை நான் அறிவேன். தொழில்நுட்பத் தொடர்பு, நிதி இணைப்பு போன்றவை காரணமாக இன்று உலகம் ஒவ்வொரு நாளும் சிறியதாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நமது ஏற்றுமதியின் விரிவாக்கத்திற்கு உலகம் முழுவதும் புதிய சாத்தியங்கள் உருவாகி வருகின்றன. நீங்கள் என்னை விட அனுபவம் வாய்ந்தவர்கள். இன்றைய முன்முயற்சி மற்றும் இரு தரப்பிலிருந்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புக்காக உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். ஏற்றுமதி தொடர்பான நமது லட்சிய இலக்குகளை அடைய நீங்கள் அனைவரும் காட்டும் உற்சாகம், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.
நண்பர்களே,
உலக பொருளாதாரத்தில் நமது பங்கு மிக அதிகமாக இருந்தது. நமக்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வர்த்தக தொடர்பும் வர்த்தக வழிகளும் உள்ளன. ஏற்றுமதியின் பங்கு மிக முக்கியமானது. கோவிட்டுக்குப் பிந்தைய காலத்தில், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நமது முயற்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும். நமது ஏற்றுமதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதமாகும். நமது பொருளாதாரத்தின் அளவு, நமது திறன், உற்பத்தி, சேவை மற்றும் தொழில் தளத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில், ஏற்றுமதி வளர மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதியைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது, சுயசார்பு இந்தியா இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று. நமது தொழிற்துறையும் சிறந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு, கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளில் தங்கள் பங்கை அதிகரிக்க வேண்டும்.
நண்பர்களே,
ஏற்றுமதியை அதிகரிக்க நான்கு காரணிகள் மிக முக்கியமானவை. முதலாவதாக, நாட்டில் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் அது தரமான போட்டியாக இருக்க வேண்டும். விலையை விட தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கும் உலகில் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இரண்டாவதாக, போக்குவரத்து சிக்கல்கள் களையப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் அமைப்புகள் இதற்கு, பங்காற்ற வேண்டும். மூன்றாவதாக, அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுடன் தோளோடு தோள் நடக்க வேண்டும். நான்காவதாக, இந்திய பொருட்களுக்கான சர்வதேச சந்தை. இந்த நான்கு காரணிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்தியாவின் உள்ளூர் பொருட்கள் உலகளாவியதாக இருக்கும், அப்போதுதான் உலகிற்கான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்ற இலக்கை நாம் சிறந்த முறையில் அடைய முடியும்.
நண்பர்களே,
மத்திய, மாநில அரசுகள் வணிக உலகின் தேவைகளைப் புரிந்துகொண்டு முன்னேற முயற்சிக்கின்றன. சுய சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ .3 லட்சம் கோடியளவிற்கு நடுத்தர, சிறு குறு தொழில்பிரிவிற்கும், நலிவுற்ற பிற துறைகளுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. நலிவுற்ற தொழில்களை மீட்டெடுக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மேலும் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளிக்க சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நண்பர்களே,
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் நமது உற்பத்தியின் அளவை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் உலகளாவிய தரம், செயல்திறனின் அளவையும் அதிகரிக்க இது உதவும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். மொபைல் போன் – அலைபேசி துறையில் அதன் தாக்கத்தை நாம் காண்கிறோம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நாம் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள அலைபேசிகளை இறக்குமதி செய்தோம். அது 2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா 0.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அலைபேசிகளை ஏற்றுமதி செய்தது, இப்போது அது 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
போக்குவரத்துக்கான நேரம் மற்றும் செலவைக் குறைப்பது மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதற்கென, கொள்கை முடிவு, உள்கட்டமைப்பு கட்டுமானம் என எதுவாயினும், நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இன்று நாம் மல்டிமாடல் - பல்முனை இணைப்பை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
பங்களாதேஷ் தனது அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டது. ரயில் பாதை வழியாக சரக்குகள் நகரத் தொடங்கி விட்டன. திடீரென சரக்குகள் வரத்தும் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கவும், வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நாட்டில் தடுப்பூசி போடும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் மற்றும் தொழில்துறையினரின் பிரச்சினையையும் அகற்ற அனைத்து சாத்தியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலையை சமாளிக்க தொழில்துறை உதவியது. வளர்ச்சியை புதுப்பிப்பதில் பங்கு வகித்தது. இன்று மருந்துகள் மற்றும் மருந்தாளுமைத் துறைகளுடன் விவசாயம் போன்ற துறைகளிலும் ஏற்றுமதி புதிய நிலையை எட்டியதற்கு இதுதான் காரணம். இன்று நாம் பொருளாதார முன்னேற்றத்தில் மட்டுமல்லாமல் உயர் வளர்ச்சியிலும் சாதகமான அறிகுறிகளைக் காண்கிறோம் .. சமீபத்தில், ஏற்றுமதியாளர்கள் தொடர்பாக அரசாங்கம் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இந்த முடிவின் மூலம், நமது ஏற்றுமதியாளர்கள், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 88,000 கோடி ரூபாய் அளவிற்கு, நன்மையடைவார்கள்.
நண்பர்களே,
உலகின் பல்வேறு நாடுகளில் வியாபாரம் செய்யும் நமது ஏற்றுமதியாளர்கள் ஸ்திரத்தன்மையின் தாக்கத்தை நன்கு அறிவார்கள். பின்னோக்கு வரிவிதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முடிவு, கொள்கைகளில் நமது அர்ப்பணிப்பையும் நிலைத்தன்மையையும் காட்டுகிறது. இந்தியாவின் உறுதியான அரசாங்கம் புதிய சாத்தியக்கூறுகளுக்கு கதவுகளைத் திறப்பது மட்டுமல்லாமல், அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் கொண்டுள்ளது என்று அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெளிவான செய்தியை அனுப்புகிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு மாநிலமும் நமது ஏற்றுமதி இலக்குகளை அடைவதிலும், பிற சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. முதலீடு, எளிதாக வணிகம் செய்வது அல்லது கடைசி மைல் உள்கட்டமைப்பு போன்ற எதுவாயினும் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானது. ஏற்றுமதி அல்லது முதலீடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டி ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தயாரிப்பில் கவனம் செலுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
ஏற்றுமதி தொடர்பான நமது லட்சிய இலக்கை ஒரு முழுமையான மற்றும் விரிவான செயல் திட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும். ஏற்றுமதியை முடுக்கி, புதிய பொருட்களுக்கான புதிய சந்தை இடங்களை உருவாக்க வேண்டும். நான் உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். ஒரு பொருளை உலகின் மூன்று இடங்களுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம் என்றால், ஐந்து புதிய இடங்களைச் சேர்க்கலாம். விடுதலை பெற்ற 75 வது ஆண்டில் நமது தூதரகங்கள், தாங்கள் உள்ள நாடுகளுக்கு 75 புதிய தயாரிப்புகளை வழங்க முடியுமா ? அங்குள்ள இந்திய மக்கள், உங்கள் முயற்சிகளுக்கு துணையாக இருக்கிறார்கள். விடுதலை பெற்ற 75வது ஆண்டில் ஏற்றுமதி குறித்து மாநிலங்களில் புலம்பெயர் குழுக்களை அமைத்து அந்தந்த மாநிலத்துடன் ஒரு மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்தலாம். உதாரணமாக, பீகார் அரசாங்கம் அதன் ஏற்றுமதி தொடர்பான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்கிறது என்றால், அதில் இந்திய அரசாங்கம், மாநிலத்தின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அந்தந்த நாட்டில் வசிக்கும் பீகாரிலிருந்து புலம்பெயர்ந்தோர் பங்கேற்க வேண்டும். அங்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். இதன் மூலம் நமது தயாரிப்புகள் பல இடங்களை அடையலாம். மாநில அரசுகள் 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஐந்து அல்லது பத்து தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். உலகம் அறியாத பல தயாரிப்புகள் உள்ளன. உதாரணமாக, இந்தியா உருவாக்கிய குறைந்த விலையிலான எல்இடி பல்ப். உலகெங்கிலும் உள்ள நாடுகள் உலக வெப்பமயமாதல், எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது பற்றி கவலைப்படும் நேரத்தில், நமது எல்இடி பல்புகளை ஏற்றுமதி செய்யலாம். தற்போது, நமது ஏற்றுமதியில் பாதி, நான்கு முக்கிய இடங்களுக்கு மட்டுமே செல்கின்றன. நமது ஏற்றுமதியில் 60 சதவிகிதம் பொறியியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், பெட்ரோலியம் மற்றும் இரசாயனப் பொருட்கள், மருந்துகள் தொடர்பானவை. நம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த தயாரிப்புகள் இன்னும் முழு உலகையும் அடையவில்லை. அந்த முரண்பாடுகளை நாம் அகற்ற வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க நமது தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன.
நண்பர்களே,
இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் எங்கள் தூதர்கள், சகாக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் எந்த நாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்களோ அந்த நாட்டின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நீங்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்பதற்கான சிறந்த யோசனையும் உங்களிடம் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நாங்கள் ஒரு புதிய பரிசோதனையை மேற்கொண்டோம். வெளிநாடுகளில் உள்ள தூதரகப்பணியாளர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு அவர்கள் மாநில அரசுகளுடன் சுமார் இரண்டு-மூன்று நாட்கள் விவாதங்களை நடத்துகிறார்கள். இதனால் ஏற்றுமதி செய்யும் அந்தந்த மாநிலங்கள் நன்மை பெறும். நீங்கள் அனைவரும் நமது ஏற்றுமதியாளர்களுக்கும் வணிகத் தொழிலுக்கும் மிகவும் வலுவான பாலம் போன்றவர்கள். இந்தியாவில் உள்ள மக்களுக்கு வழிகாட்டுங்கள். நானும், நமது ஏற்றுமதியாளர்களுக்கும் நமது தூதரகங்களுக்கும் இடையே தொடர்ச்சியான தொடர்பு இருக்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்குமாறு வர்த்தக அமைச்சகத்தை கேட்டுக் கொள்வேன்.
நண்பர்களே
தடையற்ற, உயர்தர விநியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டும். நமது ஏற்றுமதியிலிருந்து நமது பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளைப் பெற வேண்டும். இதற்காக நாம் ஒரு புதிய உறவை, ஒரு புதிய கூட்டாண்மையை உருவாக்க வேண்டும். அனைத்து ஏற்றுமதியாளர்களும் நமது நடுத்தர, சிறு ,குறு நிறுவனங்கள் , விவசாயிகள் மற்றும் மீனவர்களுடன் கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும். புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நமது இளம் தலைமுறையினர் பெரும் பங்களிக்க முடியும். முடிந்தால், வர்த்தக அமைச்சகம் அவர்களை ஊக்குவிப்பது தொடர்பான முயற்சிகளை எடுக்க வேண்டும். புதிதாகத் தொழில் தொடங்குவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கூட்டுப் பட்டறை நடத்தப்பட வேண்டும், ஒருவருக்கொருவர் பலத்தை அறிந்து கொள்ளவும், உலக சந்தையில் அறிமுகமாகவும் இது உதவும். நமது மருந்துகள், தடுப்பூசிகளின் மூலம் இதை உலகிற்கு நிரூபித்துள்ளோம். தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு நமது தேன் துறை. தேனுக்காக ஒரு புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான சோதனையை நாம் அறிமுகப்படுத்தினோம். இதன் விளைவாக, கடந்த ஆண்டு சுமார் 97 மில்லியன் டாலர் மதிப்புள்ள தேனை ஏற்றுமதி செய்தோம். உணவு பதப்படுத்துதல், பழங்கள் அல்லது மீன்வளம் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை நம்மால் செய்ய முடியுமா? இத்தகைய சூழ்நிலையில், நமது இயற்கை வேளாண் பொருட்கள் உலகில் மிகப்பெரிய சந்தைக்கான ஆற்றல் கொண்டவை.
“பிராண்ட் இந்தியா”வுக்கான புதிய இலக்குகளுடன் ஒரு புதிய பயணத்திற்கான நேரமிது. தரம் மற்றும் நம்பகத்தன்மையின் புதிய அடையாளத்தை நிறுவுவதற்கான நேரமிது. இந்தியாவின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் மதிப்பைக் கூட்டி, உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நமது பொருட்களின் ஏற்றுமதி பெருக, நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில்துறையினருக்கும் நான் உறுதியளிக்கிறேன், அரசாங்கம் உங்களை எல்லா வகையிலும் ஆதரிக்கும். சுயசார்பு இந்தியா, செழிப்பான இந்தியாவை உருவாக்க நாம் உறுதி மேற்கொள்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள். இன்னும் ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிலும், உலகெங்கிலும் இந்திய விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவோம். 2047 ஆம் ஆண்டில் நாடு விடுதலையடைந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். இனிவரும் 25 வருடங்கள் நமக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இனிமேல் ஒரு கணம் கூட இழக்காமல் ஒரு தெளிவான வரைபடத்துடன் முன்னேறுவோம்.
உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
நன்றி.