மாண்புமிகு தலைவர்களே,
மேன்மை தங்கிய நண்பர்களே,
தொழில்நுட்பம் மற்றும் நிதி உலகத்தைச் சேர்ந்த எனது அருமை குடிமக்களே, 70-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து பங்கேற்றிருக்கும் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களே,
வணக்கம்!
நண்பர்களே,
முதன்முறையாக ‘இன்ஃபினிட்டி அமைப்பை’ தொடங்கி வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தியாவில் ஃபின்டெக் பெற்றுள்ள ஏராளமான வாய்ப்புகளை ‘இன்ஃபினிட்டி அமைப்பு’ பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்தியாவின் ஃபின்டெக் ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளிப்பதற்கு பேராற்றலைக் கொண்டிருப்பதையும் அது காட்டுகிறது.
நண்பர்களே,
பண நோட்டின் வரலாறு ஏராளமான பரிணாமங்களைக் காட்டுகிறது. மனிதர்கள் பரிணாம வளர்ச்சிப் பெற்றது போல் நமது பரிமாற்ற வடிவங்களும் மாறியுள்ளன. பண்டமாற்று முறையிலிருந்து உலோகங்களுக்கு, நாணயங்களிலிருந்து நோட்டுகளுக்கு, காசோலைகளிலிருந்து அட்டைகளுக்கு என்றாகி இப்போது இங்கே நாம் வந்திருக்கிறோம். ஏற்கனவே இந்த நடைமுறைகள் உலகம் முழுவதும் பரவ பல பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் உலகமய சகாப்தத்தின் இந்தத் தேவை இருக்காது. நிதி உலகத்தில் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முறையாக ஏடிஎம் மூலம் பணம் திரும்பப் பெறுவதை விட செல்பேசி மூலமான பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. முழுமையான டிஜிட்டல் வங்கிகள், கட்டிடம் இல்லாமல் கிளை அலுவலகங்கள் செயல்படுவது ஏற்கனவே எதார்த்தமாகி உள்ளது. பத்து ஆண்டுகளுக்குள் இது பொதுவானதாக மாறிவிடும்.
நண்பர்களே,
தொழில்நுட்பத்தை ஏற்றுப் பயன்படுத்துவதாக இருப்பினும் அல்லது புதிய கண்டுபிடிப்பாக இருப்பினும், எவருக்கும் சளைத்தது அல்ல என்பதை உலகிற்கு இந்தியா நிரூபித்திருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவின் கீழ், மாற்றத்திற்கான முன்முயற்சிகள் நிதி சார்ந்த தொழில்நுட்பத் தீர்வுகளில் புதிய முயற்சிக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. இது நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2014-ல் 50%-க்கும் குறைவான இந்தியர்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் 430 மில்லியன் ஜன்தன் கணக்குகளுடன் ஏறத்தாழ இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன. இதுவரை 690 மில்லியன் ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூபே அட்டைகள் மூலம் 1.3 பில்லியன் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் மட்டும் யுபிஐ சுமார் 4.2 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளது.
நண்பர்களே,
அனைவரையும் உள்ளடக்கிய, நிதி சார்ந்த நடைமுறை என்பது ஃபின்டெக் புரட்சியை நடத்துகிறது. ஃபின்டெக் என்பது வருவாய், முதலீடுகள், காப்பீடு மற்றும் நிறுவனங்களுக்கான கடன் என்ற 4 தூண்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. “வருவாய் அதிகரிக்கும் போது முதலீடு சாத்தியமாகிறது. காப்பீடு நிதி என்பது சவாலை மேற்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு முதலீடுகளாகவும் மாறுகிறது. நிறுவனங்களுக்கான கடன் விரிவாக்கத்திற்கு உதவி செய்கிறது. இந்தத் தூண்கள் ஒவ்வொன்றுக்கும் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த நிலைமைகள் எல்லாம் ஒன்றுசேரும் போது, ஏராளமான மக்கள் நிதித்துறையில் பங்கேற்பதை நீங்கள் காணமுடியும்.
நண்பர்களே,
குஜராத் சர்வதேச ஃபின்டெக் (ஜிஜஎஃப்டி) நகரம் என்பது வெறுமனே ஒரு வளாகம் அல்ல, அது இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது இந்தியாவின் ஜனநாயக மாண்புகள், தேவை, மக்கள் தொகை மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீட்டுக்கான இந்தியாவின் வெளிப்படைத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. உலகளாவிய ஃபின்டெக் உலகத்திற்கு கிஃப்ட் நகரம் நுழைவு வாயிலாக இருக்கிறது.
நண்பர்களே,
நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர்நாடி. தொழில்நுட்பம் என்பது அதன் வாழ்க்கை. இந்த இரண்டும் “அந்தியோதயாவையும், சர்வோதயாவையும்” அடைய சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை, கடைசியாக நாங்கள் சந்தித்தபோது திரு.மைக் ப்ளூம்பெர்க்குடன் இது குறித்து உரையாடல் நடத்தியதை நான் நினைவு கூறுகிறேன். ப்ளூம்பெர்க் குழுமத்தின் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இன்ஃபினிட்டி அமைப்பு என்பது நம்பிக்கையின் அமைப்பாகும். நம்பிக்கை என்பது புதிய கண்டுபிடிப்பு, கற்பனைத்திறன் ஆகியவற்றின் உணர்வாகும். நம்பிக்கை என்பது இளைஞர்களின் ஆற்றல், மாற்றத்திற்கான அவர்களின் ஆர்வம் என்பதாகும். நம்பிக்கை என்பது சிறந்த இடத்திற்கு உலகை மாற்றுவதாகும். உலகளவில் உருவாகி வரும் மிகவும் அழுத்தம் தரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஃபின்டெக்கின் நவீன புதிய சிந்தனைகளை நாம் ஒருங்கிணைந்து கண்டறிவோம்.
நன்றி!