
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியதாவது:-
2017ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரை, பட்ஜெட் மற்றும் பல்வேறு விஷயங்களின் மீதான விவாதங்கள் ஆகியவை நடைபெறவிருக்கின்றன.
சமீப காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயலூக்கமான விவாதத்திற்கு இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்துவது அவசியம். அதே நேரத்தில் பட்ஜெட் மீதான விரிவான விவாதங்களும் நடைபெற வேண்டும்.
முதல்முறையாக பிப்ரவரி முதல் நாளன்று மத்திய அரசின் பட்ஜெட் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மத்திய அரசின் பட்ஜெட் மாலை 5 மணிக்கு முன்வைக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பேயி அரசு ஆட்சிக்கு வந்தபோது இந்த நேரம் காலையில் மாற்றப்பட்டதோடு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் துவங்கிய உடனேயே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்றிலிருந்து மற்றுமொரு புதிய வழக்கம் நடைமுறைக்கு வருகிறது. பட்ஜெட் வழக்கமான நாளுக்கு ஒரு மாதம் முன்பாக முன்வைக்கப்படுவதோடு, ரயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாகவும் இப்போது மாறியுள்ளது. இந்த விஷயம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதமும் நடைபெறும். இந்த முடிவின் விளைவாக வரும் நாட்களில் பெறவிருக்கும் நன்மைகளை பிரதிபலிப்பதாகவும் இது அமையும். மக்களின் நன்மைகளை பெரிதும் நினைவில் கொண்டு நாடாளுமன்றத்தில் தெளிவான விவாதத்தை உறுதிப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்த்துச் செயல்படுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.