18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக இந்திய அரசு வழங்கவுள்ளது
மாநிலங்களிடம் உள்ள 25 சதவீதம் தடுப்புமருந்து வழங்கலை இனி இந்திய அரசு எடுத்துக் கொள்ளும்: பிரதமர்
தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை இந்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கும்: பிரதமர்
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுகிறது: பிரதமர்
நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும்: பிரதமர்
கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட மோசமான பேரிடர் கொரோனா: பிரதமர்
தடுப்பு மருந்து விநியோகம் வரும் நாட்களில் அதிகரிக்கப்பட இருக்கிறது: பிரதமர்
புதிய மருந்துகளின் உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தகவல்
குழந்தைகளுக்கான தடுப்பு மருந்து, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தின் பரிசோதனை நடைபெற்று வருகிறது: பிரதமர்
தடுப்பூசி குறித்து சந்தேகங்களை உண்டாக்குவோர் மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்: பிரதமர்

எனதருமை நாட்டு மக்களே வணக்கம்! கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான நமது போராட்டம் தொடர்கிறது. உலகின் பல நாடுகளைப் போல, இந்தியாவும் இந்தப் போராட்டத்தில் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளது. நம்மில் பலர் உறவினர்களையும், நெருக்கமானவர்களையும் இழந்துள்ளோம். அத்தகைய அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்று இது. நவீன உலகம் இது வரை கண்டிராத, அனுபவிக்காத மிகப்பெரிய பெருந்தொற்று இது. இதை எதிர்த்து பல்வேறு முனைகளில் நாடு போரிட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, கோவிட் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை அதிகரித்தல், வென்டிலேட்டர் தயாரிப்பு, மிகப்பெரிய பரிசோதனைக்கூட கட்டமைப்பை உருவாக்குதல், புதிய சுகாதார கட்டமைப்புகளை ஏற்டுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில், இரண்டாவது அலையின் போது, இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்தது. இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு ஆக்சிஜன் தேவை இதுவரை இருந்ததில்லை. இந்தத் தேவையைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் முழு எந்திரமும் பயன்படுத்தப்பட்டன. ரயில்கள், விமானங்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டன. அதேபோல ஆக்சிஜன் உற்பத்தியும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

நண்பர்களே, கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத, உருமாறும் எதிரியை எதிர்த்துப் போராடும் மிகச்சிறந்த ஆயுதம், முக்ககவசங்களை அணிதல், சமூக இடைவெளியைப் பராமரித்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதுதான். இந்தப் போரில் நம்மைக் காக்கும் கவசம் தடுப்பூசியாகும். உலகம் முழுவதும் தடுப்பூசிகளுக்கு மிகப் பெரிய அளவில் தேவை உள்ள நிலையில், அவற்றைத் தயாரிக்கும் நாடுகளும், நிறுவனங்களும் மிகச் சில அளவிலேயே உள்ளன. இதனை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் தடுப்பூசிகளை நாம் உருவாக்காமல் இருந்திருந்தால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். கடந்த 50-60 ஆண்டு வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. போலியோ, பெரியம்மை, மஞ்சள்காமாலை நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு நம் நாட்டு மக்கள் பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2014-ல் நாட்டு மக்கள்  அவர்களுக்கு சேவை புரிய நமக்கு வாய்ப்பளித்த போது, நாட்டில் தடுப்பூசி 60 சதவீதம் அளவுக்கே போடப்பட்டிருந்தது. தடுப்பூசி திட்டத்தை முன்கூட்டியே ஆரம்பித்திருந்தால், 40 ஆண்டுகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கலாம். இது நமக்கு மிகுந்த கவலையை அளித்ததால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திர தனுஷ் திட்டம் தொடங்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததன் பயனாக 5-6 ஆண்டுகளில் 90 சதவீதம் என்ற அளவை தடுப்பூசி வழங்கல் திட்டம் எட்டியது.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பல நோய்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பல புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. தடுப்பூசி போடாத ஏழைக் குழந்தைகளின் மேல் நமக்கு இருந்த அக்கறை காரணமாக இந்த முடிவை நாம் மேற்கொண்டோம். கொரோனா தொற்று நம்மைத் தாக்கத் தொடங்கிய போது, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதலை நோக்கி நாம் முன்னேறியிருந்தோம். மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா எவ்வாறு மக்களைக் காப்பாற்ற முடிகிறது என்ற சந்தேகம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இருந்தது. ஆனால், நண்பர்களே, எண்ணம் தூய்மையாக இருந்தால், கொள்கை தெளிவாக இருந்தால், கடின உழைப்பு தொடர்ந்தால், நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த சந்தேகங்களை எல்லாம் புறம்தள்ளி, இந்தியாவில் ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கினோம். நமது விஞ்ஞானிகள் இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு குறைந்ததல்ல என்று நிரூபித்தனர். இன்று உங்களுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போது, நாட்டில் 23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

நண்பர்களே, நம்மிடம் தன்னம்பிக்கை இருந்தால், நமது முயற்சிகளில் வெற்றி பெறலாம். மிகக் குறுகிய காலத்தில் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. இந்த நம்பிக்கையுடன் நமது விஞ்ஞானிகள் இன்றும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சில ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த போது, தடுப்பூசி பணிக்குழு தொடங்கப்பட்டது. தடுப்பூசி உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு எல்லா வழியிலும் உதவியையும் அரசு செய்தது. ஒவ்வொரு மட்டத்திலும் அரசு அவர்களுக்கு தோளோடு தோள் சேர்ந்து உறுதுணையாக இருந்தது. தொடர் முயற்சி, கடின உழைப்பு காரணமாக, வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்க உள்ளது. தற்போது நாட்டில் ஏழு நிறுவனங்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன. மூன்று தடுப்பூசிகளின் சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டில் தடுப்பூசிகளின் இருப்பை அதிகரிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படவுள்ளன. அண்மைக்காலத்தில், நமது குழந்தைகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் இரண்டு தடுப்பூசிகளின் சோதனையும் நடந்து வருகிறது. இதுதவிர, மூக்கின் வழியாகச் செலுத்தப்படும் தடுப்பூசி ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. இந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் போது, இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மேலும் வலுவடையும்.

நண்பர்களே, குறுகிய காலத்திற்குள் தடுப்பூசியை உருவாக்குவது மிகப் பெரிய சாதனையாகும். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், மிகச்சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பு தடுப்பூசி விதிமுறைகளை வெளியிட்டது. இந்தியாவும், படிப்படியாக தடுப்பூசி வழங்கத் திட்டமிட்டது. மாநில முதலமைச்சர்களுடன் நடந்த கூட்டத்திலும், நிபுணர்களுடனான ஆலோசனையின் அடிப்படையிலும், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துதலில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் இருந்திருந்தால், இரண்டாவது அலையில் பாதிப்பு என்னவாகியிருக்கும்? நமது மருத்துவர்கள், செவிலியர்களின் நிலை பற்றி கற்பனை செய்ய முடியுமா? அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டதால், இப்போது லட்சக்கணக்கான மக்களை அவர்கள் காப்பாற்றுகின்றனர். மத்திய அரசு ஏன் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற கேள்வி எழுந்தது. சுகாதாரம் மாநில பிரச்சினையாக இருக்கும் போது, ஊரடங்கு அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட அனுமதிக்காதது ஏன் என்ற வினா எழுப்பப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

நண்பர்களே,  ஜனவரி 16 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் கடைசி வரை, இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் கண்காணிப்பில்தான் நடந்தது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் திசையில் அரசு பயணிக்கிறது. மக்களும் தங்கள் முறை வரும் வரை காத்திருந்து தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர். இதற்கிடையே, தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை குறித்து பல்வேறு பிரிவினரிடம் இருந்து மாறுபட்ட கருத்துகள் வரத்தொடங்கின. கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் வேளையில், மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக கேள்விகள் எழுந்தன, மத்திய அரசே ஏன் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஊரடங்கில் நெகிழ்வுத் தன்மை மற்றும் அனைவருக்கும் ஒரே அளவு பொருந்தாது போன்ற விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனவரி 16முதல் ஏப்ரல் இறுதி வரை மத்திய அரசின் கீழே இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை பெரும்பாலும் மத்திய அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டது. அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து வழங்கல் முன்னேற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. தடுப்பு மருந்து வழங்கலை பரவலாக்குவதற்கான கோரிக்கைகளுக்கு இடையே, சில வயதினருக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது குறித்த முடிவு பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பல விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன, ஊடகங்களின் சில பிரிவுகள் ஒரு பிரச்சாரமாகவே இதை செய்தன.

தடுப்பூசிகளை மாநில அரசுகள் வாங்குவதற்கு மத்திய அரசு ஏன் ஆட்சேபிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. எனவே, 25 சதவீத பணிகளை மே 1 முதல் மாநில அரசிடம் அளித்தோம்.

படிப்படியாக, இந்தப்பணியில் உள்ள பிரச்சினைகளை மாநில அரசுகள் உணர்ந்து கொள்ளத் தொடங்கின. உலகம் முழுவதிலும் தடுப்பூசி நிலைமை என்னவென்று மாநில அரசுகள் உணர்ந்தன. எனவே, முந்தைய முறை சிறந்தது என்று சில மாநிலங்கள் சொல்லத் தொடங்கின. தடுப்புமருந்து வழங்கல் யுக்தியை மறுபரிசீலனை செய்து ,மே 1க்கு முன்பிருந்த முறையை மறுபடி செயல்படுத்துமாறு பல்வேறு மாநிலங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, மாநிலங்களிடம் இருந்த 25 சதவீத தடுப்பு மருந்து வழங்கலையும் மத்திய அரசு இனி எடுத்துக்கொள்வது எனத் தீர்மானித்துள்ளது. இரண்டு வாரங்களில் இது செயல்படுத்தப்படும். புதிய வழிகாட்டுதல்களின்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் இன்னும் இரு வாரங்களில்தேவையான ஏற்பாடுகளை செய்யும். ஜூன் 21-ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துஇந்திய குடிமக்களுக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக இந்தியஅரசு வழங்கும். தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீததடுப்பூசிகளை இந்திய அரசு கொள்முதல் செய்து,அவற்றை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கும். தடுப்பு மருந்துகளுக்கு மாநில அரசுகள் எதுவும் செலவிட வேண்டியதிருக்காது. கோடிக்கணக்கான மக்கள் இதுவரை இலவசமாக தடுப்பு மருந்தை பெற்ற நிலையில்,18வயதுக்கு மேற்பட்ட பிரிவினரும் இதில் இனிமேல் சேர்க்கப்படுவர். அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக இந்திய அரசு வழங்கும். 25 சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக வாங்கும் முறை தொடரும் . தடுப்பூசி விலைக்கு மேல் சேவை கட்டணமாக ரூ 150 ரூபாய் மட்டும் தனியார் மருத்துவமனைகள் வாங்குவதை மாநில அரசுகள் கண்காணிக்கும்.

எனதருமை நாட்டு மக்களே, மற்றுமொரு முக்கிய அறிவிப்பை இப்போது வெளியிட விரும்புகிறேன். கடந்த ஆண்டு கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின் கீழ், நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு எட்டு மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டும், இரண்டாவது அலை காரணமாக மே, ஜூன் மாதங்களுக்கு அது விரிவுபடுத்தப்பட்டது. இது தீபாவளி வரை நீட்டிக்கப்படும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு  தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும். பெருந்தொற்றின் போது ஏழைகளுக்கு ஆதரவாக நிற்கும் அரசு, ஒரு நண்பனாக அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. எந்த சகோதர, சகோதரியும் படுக்கைக்கு செல்லும் போது பட்டினியாக இருக்கக்கூடாது என்பதே  மத்திய அரசின் நோக்கமாகும்.

நண்பர்களே, இந்த முயற்சிகளுக்கு மத்தியில், தடுப்பூசி பற்றி குழப்பமும், வதந்திகளும் பல தரப்பிலிருந்து வருவது கவலை அளிக்கிறது. தடுப்பூசி திட்டம் தொடங்கியது முதல், சிலர் உருவாக்கிய சந்தேகங்கள் சாதாரண மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தடுப்பூசி உற்பத்தியாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில், தடங்கல்கள் உருவாக்கப்பட்டன. இவைஅனைத்தையும் நாடு கவனித்துக் கொண்டுதான் உள்ளது. இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர், சாதாரண மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றனர்.

இத்தகைய வதந்திகள் பற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தற்போது, கொரோனா ஊரடங்கு பல இடங்களில் தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா ஒழிந்து விட்டதாக இதற்கு பொருள் இல்லை. விதிமுறைகளைக் கடைப்பிடித்து, கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தப்போரில் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியா நிச்சயம் வெல்லும். இத்துடன் எனது வாழ்த்துக்களைக் கூறி, அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Modi blends diplomacy with India’s cultural showcase

Media Coverage

Modi blends diplomacy with India’s cultural showcase
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை நவம்பர் 23, 2024
November 23, 2024

PM Modi’s Transformative Leadership Shaping India's Rising Global Stature