மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
இந்த பதவியை நீங்கள் ஏற்றுள்ள இந்தத் தருணம் அவை உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. அவையின் பழைய உறுப்பினர்களுக்கு நீங்கள் மிகவும் அறிமுகமான நபர் ஆவீர். நீங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும், ராஜஸ்தானின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகித்தீர்கள். அரசியலில் இருக்கும் நபர்களுக்கு இது நன்கு தெரிந்த விஷயமாகும்.
மாணவர்கள் அமைப்பில் சேர்ந்து, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தொடர்பான செயல்பாடுகளில் முன்னிலையிலிருந்து செயல்பட்டது முதல் பொது வாழ்க்கையில் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து சேவை செய்த நபரை அவைத்தலைவரின் பதவியில் ஒரு மனதாக இன்று அமர்த்தியது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான பின், மாணவர் இயக்கத்திலிருந்து வெளியேறி, சுமார் 15 ஆண்டுகளுக்கு மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் யுவா மோர்ச்சா அமைப்பில் அவர் பணிபுரிந்தார். பல ஆண்டுகளாக இந்த அமைப்பில் பணிபுரிய எனக்கும் வாய்ப்பு அமைந்தது. இதன் மூலம் நாங்கள் இருவரும் ஒன்றாக பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது.
ஒரு விதத்தில் கோட்டா கல்வியின் காசியாக மாறியுள்ளது. வேலைக்கு முன்னுரிமை அளிக்கும் நபர்கள் கோட்டாவை தங்களின் மனதில் முன்னிறுத்தி, அதே இடத்தில் கல்வி பயின்று வாழ்வாதாரத்தையும் அமைத்துக் கொள்கின்றனர். ராஜஸ்தானின் இந்த சிறிய நகரம், குட்டி இந்தியாவாக மாறியுள்ளது. திரு.ஓம் பிர்லாவின் தலைமை, பங்களிப்பு மற்றும் முன்முயற்சியால்தான் கோட்டாவில் இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், எப்பொழுதும் அரசியல் செய்து, விவாதங்களில் ஈடுபட்டு, தோல்வி அடையும் வகையில் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற எண்ணம் மெதுவாக நிலவி வருகிறது. ஆனால், இதில் வெளிவராத உண்மைகளும் உண்டு. அரசியல் வாழ்க்கையில் அதிக சமூக சேவை செய்வது சமூகத்தின் ஏற்றுக்கொள்ளும் திறனை அதிகரிக்கும் என்பதை சமீபத்திய தேசம் உணர்ந்தது. முனைப்பான தீவிர அரசியல் சூழ்நிலை நிலவிய காலமும் மறைந்து வருகிறது. திரு ஓம் பிர்லாவின் அரசியல் வாழ்க்கை, பொதுமக்கள் பிரதிநிதி போல மிகவும் இயல்பாக இருந்தது. ஆனால், அவரின் மொத்த வாழ்க்கையும் சமூக சேவையை மையமாகவே கொண்டிருந்தது. சமூக வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும், அவரை முதல் நபராக நாடலாம். குஜராத் நிலநடுக்கத்தின்போது, அவர், குஜராத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தை நான் தெளிவாக நினைவு கூர்கிறேன். அவரின் பகுதியிலிருந்து இளைஞர்களை உடன் அழைத்து வந்து, எந்தவித வசதியும் இன்றி, நீண்ட காலத்திற்கு அவர் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்தார். கோட்டாவிலும், குளிர்காலத்தின்போது, யாரேனும் போர்வை இன்றி இருந்தால், இரவு முழுவதும் கோட்டாவில் அலைந்து, திரிந்து, பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் போர்வைகளை ஏற்பாடு செய்து, தேவைப்படும் நபர்களுக்கு விநியோகம் செய்வார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள என்னைப் போன்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவரின் கனவாகும். கோட்டாவில் யாரும் பசியுடன் தூங்க செல்லக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற அவரின் கனவின் வெளிப்பாடாக ‘பிரசாதம்’ என்ற திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். இந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் அவர், பசியினால் வாடும் மக்களுக்கு உணவளித்தார். இதே போல, ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உடுத்த உடை வழங்குவதற்காக ‘பரிதான்’ என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார். பரிதான் இயக்கத்தின் மூலம், அவர் ஏழை மக்களுக்காக காலணிகளையும் திரட்டினார். யாரேனும் உடல் நலம் குன்றியிருந்தால், ரத்ததானம் ஏற்பாடு செய்வது அல்லது மருத்துவமனைகளில் ஏதேனும் சேவை தேவைப்படுமெனில் அவர், பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் அதனை செய்து முடிப்பார். அரசியல் வாழ்க்கையில், பொதுமக்கள் இயக்கத்தை விட பொதுமக்கள் சேவையிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.
சமூக வாழ்க்கையில், பல ஆண்டுகளாக பணிபுரிந்த இதுபோன்ற சிறந்த மனிதர் அவைத்தலைவராகியுள்ளார். பொறுப்பான நிலையிலிருந்து அவர் ஒழுக்கத்துடன் நம்மை வழிநடத்தி, ஊக்குவிப்பார். இதனால், இந்த அவை, நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்கும். அவரும், சிறப்பாக செயல்படுவார்.
அவையில் கூட அவர் எப்பொழுதும் அமைதியாக புன்னகையுடனே உரையாற்றுவார். அவரது பணிவையையும், மனசாட்சியையும் யாரேனும் தவறாக பயன்படுத்திக் கொள்வார்களோ என்று சிலசமயங்களில் நான் அஞ்சுவதுண்டு. இதற்கு முன்பு, மக்களவைத் தலைவர்களுக்கு அதிக சவால்களை சந்திக்கும் நிலை இருந்தது. அதே சமயம், மாநிலங்களவை தலைவரின் சவால்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த அவையை நாம் நினைவுக் கூர்ந்தால், நமது அவைத்தலைவரான அம்மையார் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், புன்னகையுடனும் இருந்தார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். கண்டனம் தெரிவித்த பிறகும் அவர், புன்னகையுடனே உரையாற்றுவார். அவர் புதிய பாரம்பரியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இந்த அவை மற்றும் கருவூலத்தின் சார்பில், உங்களின் வேலையை எளிதாக்க, நாங்கள் 100 சதவீதம் முயற்சி செய்வோம் என்று உறுதியளிக்கிறேன். விதிமீறல் அல்லது அவையை நடத்தும்போது ஏதேனும் இடைஞ்சல்களை இந்த அமர்வு ஏற்படுத்தினால் அவர்களிடம் அதனை எடுத்துக்கூறுவதற்கான அனைத்து உரிமைகளும் உங்களுக்கு உண்டு. இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஏனென்றால் அவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பது எங்கள் அனைவரின் கடமையாகும். முன்பெல்லாம், முதல் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அமைதியாக இருந்தன; தேர்தல் சமயத்தில் மட்டுமே சில பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தற்போது ஒவ்வொரு மூன்று நான்கு மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறுவதால், உறுப்பினர்கள் இங்கிருந்து நமது குரலை வெளிப்படுத்துகின்றனர். இதுபோன்ற தருணங்கள் உங்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கலாம். ஆனாலும், இந்த அவை, முக்கிய விஷயங்கள் தொடர்பாக தரமான விவாதங்களில் ஈடுபட்டு கூட்டாக முடிவெடுக்கும் என்று உறுதியளிக்கிறோம். இந்த நம்பிக்கையுடன், அவை மற்றும் கருவூல அமர்வு சார்பாக உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!