அனைவருக்கும் வணக்கம்,
பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் ராஜ்கர்-ஐ சேர்ந்த அன்புச் சகோதர – சகோதரிகளே,
ஜூன் மாதத்தின் வெப்பத்திலும் தாங்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருப்பது எனக்கும், என்னை சேர்ந்தவர்களுக்கும் கிடைத்த பாக்கியமாகும். உங்களது சக்தியும், வாழ்த்துகளும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் தங்களது சேவையை மேலும் சிறந்த முறையில் ஆற்றிட உற்சாகத்தைத் தருகிறது. 3 பெரிய நீர் விநியோகத் திட்டங்கள் உட்பட 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தை தொடங்கிவைக்கும் வாய்ப்பினைப் பெற்றது எனக்கு கிடைத்த பேராகும். இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணியில் பங்காற்றிய அனைத்துச் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் அன்னையரை பாராட்டுவதோடு, அவர்களைச் சிரம் தாழ்த்தியும் வணங்குகிறேன். தேசத்தின் வளர்ச்சியில் இவர்களது கடப்பாடு ஈடு இணையற்றது.
அன்புச் சகோதர சகோதரிகளே,
ஒரு பொத்தானை அழுத்தி இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமேயாகும். உங்களது கடின உழைப்பும், வேர்வையும்தான் இந்தத் திட்டத்தின் தொடக்கமாகும். உங்களது வாழ்த்துகள் மற்றும் கடின உழைப்போடு பொது நலனையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் பாரதீய ஜனதா கட்சியின் அரசு, தனது நான்காண்டுக் கால ஆட்சியை மக்கள் சேவைக்கு அர்ப்பணித்துள்ளது. பெரும் எண்ணிக்கையில் இங்கு மக்கள் கூடியிருப்பது பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் கொள்கைகளின் மீது அவர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கைக்குச் சான்றாகும். பொய், குழப்பம் மற்றும் நம்பிக்கையற்ற தன்மையை பரப்புபவர்கள் அடிமட்டத்தில் உள்ள உண்மையை உணரவில்லை.
இன்றைய நாள் மிகச் சிறந்த ஆளுமையான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவுநாளும் ஆகும். இந்நாளில்தான் அவர் மர்மமான முறையில் கஷ்மீரில் உயிரிழந்தார். இத்தருணத்தில் அவரை நினைவுகூர்ந்து சிரம் தாழ்த்தி வணங்கி அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன்.
சகோதர சகோதரிகளே,
“எந்த நாடும் தனது சக்தியால் மட்டுமே தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று கூறியவர் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் வளத்தின் மீதும், மக்களின் திறமையின் மீதும் அவர் அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களை ஏமாற்றத்திலிருந்தும், நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குப் பார்வை பல கோடி மக்களுக்கு ஒர் உந்து சக்தியாக இருந்தது. நாட்டின் முதல் தொழில் மற்றும் விநியோகத் துறை அமைச்சர் என்கின்ற முறையில் அவர் நாட்டின் முதலாவது தொழில்துறைக் கொள்கையை வடிவமைத்தார். “அரசு, நாட்டின் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஆதரவு தந்தால் நாடு விரைவில் நிதி சார்ந்த சுதந்திரம் அடையும்” என்றார். அவரது பணி கல்வி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகள் பற்றிய கருத்துக்கள் அவரது காலத்திற்கும் முந்தையதாகும். நாட்டின் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பு பற்றிய அவரது கருத்துக்கள் காட்டிய பாதை தற்போதும் பின்பற்றக் கூடியதாகவே இருக்கிறது.
நண்பர்களே,
ஏழைகளுக்கும், வீடற்றவர்களுக்கும் சேவை செய்வது, அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்துவது ஆகியவையே அரசின் முக்கிய கடமை என்றார் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் தொழில்துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன், வங்காளத்தின் நிதியமைச்சராக இருந்த அவர், நிலச் சீர்திருத்தத்தில் செய்த குறிப்பிடத்தக்க பணிக்கும் இதுவே காரணமாகும். நிர்வாகம் என்பது குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகவே இருக்க வேண்டுமேயன்றி, பிரிட்டிஷ் ஆட்சி போன்று ஆள்வதற்காக இருக்கக் கூடாது என்று அவர் நம்பினார்.
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார் டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. இளைஞர்கள் தங்களது கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் சேவையாற்றும் வகையில் அவர்களிடம் புதைந்து கிடக்கும் திறனை வெளிக்கொணரும் சூழலை ஏற்படுத்துவதற்கு, ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை போதிய வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என்றார் அவர். அறிவு, செல்வம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் சங்கமமாக விளங்கியது டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை.
ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சிறப்பிப்பதற்காகவே இந்திய அன்னையின் பல புதல்வர்களின் பங்களிப்பு மக்களின் மனதிலிருந்து மறைக்கப்பட்டது நமது நாட்டிற்கு நிகழ்ந்த துரதிருஷ்டமாகும்.
நண்பர்களே,
மத்தியிலும், மாநிலங்களிலும் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி அரசுகளின் தொலைநோக்குப் பார்வை டாக்டர் முகர்ஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு வேறானதல்ல. இந்திய திறன் மேம்பாட்டு இயக்கம், தொழில்முனைவோர் முனைப்பு இயக்கம், சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்த உத்தரவாதம் இல்லாமல் வங்கிக் கடன் வழிவகுக்கும் முத்ரா திட்டம் ஆகியவை டாக்டர் முகர்ஜியின் தொலைநோக்கு பார்வையின் கூறுகளைக் கொண்டதாகும்.
ராஜ்கர் மாவட்டம் இனியும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்பட மாட்டாது. இந்த மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக உருவாக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, சத்துணவு, நீர் சேமிப்பு மற்றும் வேளாண் துறைகளுக்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். ராஷ்டிரிய கிராம் ஸ்வராஜ் அபிமான் திட்டத்தின்கீழ் வளர்ச்சிகாணும் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்குத் தேவையான வசதிகள் கொண்டு சேர்க்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் எரிவாயு இணைப்பு, சௌபாக்கியா திட்டத்தின்கீழ் மின்சார இணைப்பு, ஜன்தன் திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு மற்றும் இந்திர தனுஷ் இயக்கத்தின்கீழ் கருவுற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தடுப்பூசியும், காப்பீடுத் திட்டங்களும் சென்று சேர்ந்திட அரசு அனைத்து முயற்சிகளையும் உறுதி செய்து வருகிறது.
நண்பர்களே,
இவை யாவையும் முந்தைய அரசுகளாலும் செய்திருக்க முடியும். அவர்களை எவரும் தடுக்கவில்லை. ஆனால், பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, உங்கள் மீதும், உங்களது கடின உழைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அதற்கு நாட்டின் திறனின் மீதும் நம்பிக்கை இருந்ததில்லை.
நீங்களே சொல்லுங்கள்; கடந்த 4 வருடங்களில் இந்த மத்திய அரசு தனது இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தையையாவது கூறியிருக்கிறதா? இது இயலாது என்று நாங்கள் எப்போதாவது சொல்லியிருக்கிறோமா?. எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றி, உரிய பலன்களை நோக்கியே நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம்.
ஆகவே, சகோதர சகோதரிகளே,
நன்நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்பதே எங்களது விழையும் நம்பிக்கையும் ஆகும்.
நண்பர்களே,
நாட்டின் தேவைகளை உணர்ந்து நாட்டின் வளங்களின் மீது நம்பிக்கை வைத்து கடின உழைப்போடு 21 ஆம் நூற்றாண்டில் நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த அரசின் உறுதிப்பாடாகும்.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசும், 13 ஆண்டுகளாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்குக் கடினமாக பாடுபட்டு வருகின்றன. கடந்த 5 வருடங்களாக 18 சதவீதத்திலிலேயே நிலைபெற்று இருக்கும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் வருடாந்திர வேளாண் வளர்ச்சி நாட்டிலேயே அதிகமாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சோயா, தக்காளி மற்றும் வெள்ளைப்பூண்டு உற்பத்தியில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கோதுமை, கடுகு, நெல்லிக்காய், கொத்துமல்லி ஆகியவற்றின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள மத்தியப்பிரதேசம் முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது.
திரு. சிவ்ராஜ் அவர்களின் ஆட்சியின்கீழ், மத்தியப் பிரதேசம் வளர்ச்சியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. மோகன்புரா நீர்ப்பாசனத் திட்டத்தின் தொடக்கமும், 3 நீர் விநியோகத் திட்டங்களுக்கான பணிகளின் துவக்கமும் மத்தியப் பிரதேசத்தின் சாதனையின் ஒரு முக்கியப் பகுதியாகும். இந்தத் திட்டம் ராஜ்கர் மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்திற்கே உரிய மிகப்பெரும் திட்டமாகும்.
725 கிராமங்களைச் சேர்ந்த விவசாய சகோதர சகோதரிகள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர். இதனால், கிராமங்களில் உள்ள 1.25 லட்சம் ஹெக்டேர்கள் நீர்ப்பாசன வசதி பெறுவதோடு, 400 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் போக்கப்படும். இதனால், லட்சக்கணக்கான அன்னையர் மற்றும் சகோதரிகளின் ஆசிகள் நமக்கு உரித்தாகும். நீர்த்தட்டுபாடு பற்றிய பிரச்சினையை அன்னையர் மற்றும் சகோதரிகளைவிட யாரும் அதிகமாக புரிந்து கொள்ள முடியாது. இந்த வகையில் இதுவே அன்னையர் மற்றும் சகோதரிகளுக்கு நாம் ஆற்றும் உயர்ந்த சேவையாகும்.
இந்தத் திட்டம் துரிதமான வளர்ச்சியின் எடுத்துக்காட்டு மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட பணியை உரிய முறையில் நிறைவேற்றும் அரசின் அணுகுமுறைக்கு ஒரு சான்றும் ஆகும். இந்தத் திட்டம் 4 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுநீர்ப்பாசன வசதியே இந்தத் திட்டத்தின் முன்னுரிமையாகும். திறந்தவெளி கால்வாய்க்கு பதிலாக குழாய்களைப் பதிப்பதற்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
சகோதர சகோதரிகளே,
மால்வா பகுதியில் ஒரு முதுமொழி உண்டு. அதன் பொருள் மால்வாவில் ஒரு காலகட்டத்தில் தானியங்களுக்கும், நீருக்கும் எந்தத் தட்டுப்பாடும் இருந்ததில்லை. ஒவ்வொரு அடியிலும் நீர்வளம் காணப்பட்டது. முந்தைய அரசுகளின் அலட்சியத் தன்மையால், இங்கு நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும், கடந்த சில வருடங்களாக சிவ்ராஜ் அவர்களின் தலைமையில் செயல்படும் பாஜக அரசு, மால்வா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பழமையான அடையாளத்தை புதுப்பிக்க முயற்சிகளை எடுத்துள்ளது.
நண்பர்களே,
2007 ஆம் ஆண்டில் 7.5 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் மட்டுமே மத்தியப் பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களால் பயன்பெற்றன. சிவ்ராஜ் அவர்களின் நிர்வாகத்தில் இது 40 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க மாநில அரசு திட்டமிட்டு வருகிறது என்பதைத் தொலைக்காட்சி நேயர்களுக்கு நான் கூறிகொள்ள விரும்புகிறேன். சிறு நீர்ப்பாசனத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அரசு 70,000 கோடி ரூபாயை செலவு செய்து வருகிறது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அதற்கு மத்திய அரசு கைகோர்த்துக் கொண்டு ஒத்துழைப்பு வழங்கும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மத்தியப் பிரதேசம் பிரதான் மந்திரி, கிரிஷி சிஞ்சை யோஜனா திட்டத்தால் பயனடைந்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் 14 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு மத்தியப்பிரதேசம் 1,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் துணையோடு “ஒருதுளி அதிக விளைச்சல்” என்ற இயக்கம் முன்னெடுத்து செல்லப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கடினமான பணியின் காரணமாக நாட்டில் 25 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு சிறு நீர்ப்பாசன திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 1.5 லட்சம் ஹெக்டேர் நிலம் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது.
நண்பர்களே,
அரசின் திட்டங்கள் குறித்து காணொலிக் காட்சி தொழில்நுட்பம் மற்றும் நமோ செயலியின் வழியாக பலதரப்பட்ட மனிதர்களோடு நான் உரையாடி வருவதை தாங்கள் கவனித்திருப்பீர்கள். 3 நாட்களுக்கு முன்பாக நான் நாட்டின் விவசாயிகளோடு உரையாடினேன். இந்த நிகழ்ச்சியில் ஜாபூவா-வை சேர்ந்த சகோதர சகோதரிகளோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஜாபூவா-வை சேர்ந்த விவசாய சகோதரிகளில் ஒருவர், சொட்டு நீர்ப்பாசனத்தின் உதவியோடு தக்காளி உற்பத்தியை தாம் அதிகரித்திருப்பதாகக் கூறினார்.
நண்பர்களே,
நவீன இந்தியாவை உருவாக்கும் கனவில் நாட்டில் கிராமங்கள் மற்றும் வேளாண் பெருமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இதனால்தான், உருவாகிவரும் நவீன இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இலக்கை நோக்கியே விதைகள் முதல் சந்தை வரை வேளாண் துறையின் ஒவ்வொரு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
நண்பர்களே,
கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கிலும் 14 கோடி மண்வள மதிப்பீடு அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கோடியே 25 லட்சம் அட்டைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாய சகோதர சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளின் உதவியோடு விவசாய சகோதரர்கள் தங்களது மண் வளத்திற்குத் தேவையான உரத்தின் அளவை அறிய முடிகிறது. அதேபோன்று மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 35 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பிரதான் மந்திரி ஃபஸல் பீமா யோஜனா திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.
நாட்டில் இருக்கும் அனைத்து மண்டிகளும் வலைதள சந்தையோடு இணைக்கப்பட்டுள்ளன. அதாவது விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு உரிய நியாயமான விலையை பெறும் வலைதள வசதியாகும் இது. இதுவரை 600 மண்டிகள் இந்த e-nam வலைதளத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள 58 மண்டிகள் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் தங்களது உற்பத்தியை பொது சேவை மையங்கள் மற்றும் கைப்பேசி வழியாக நேரடியாக விற்பதற்கான நாள் அதிக தூரத்தில் இல்லை.
சகோதர சகோதரிகளே,
கிராமங்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தலித், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அன்னையர் மற்றும் சகோதரிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுநாள் வரை நான்கு கோடிக்கும் மேற்பட்ட அன்னையர் மற்றும் சகோதரிகள் தங்களது சமையல் அறைக்கென இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை பெற்றுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 4 லட்சம் பெண்கள் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
கடின உழைப்பிற்கு பெரிதும் மதிப்புத் தருகிறது இந்த அரசு. அதிகப்படியான வேலை வாய்ப்புக்களை வழங்கும் திறமையுள்ள தொழில் முனைவர்களை ஊக்கப்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. உழைப்பு குறித்து சிலருக்கு எதிர்மறையான நிலைப்பாடு இருக்கும் போதிலும், இந்த அரசு எடுத்துவரும் முயற்சிகளின் வெற்றி அனைவருக்கும் காண கிடைக்கிறது.
இன்று முத்ரா திட்டத்தின்கீழ், உத்தரவாதம் ஏதுமில்லாமல் வங்கிக் கடன்கள் சிறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் இந்தத் திட்டத்தினால் 85 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
சகோதர சகோதரிகளே,
தில்லி மற்றும் போபாலில் செயல்படும் இரு வளர்ச்சி இயந்திரங்கள் மத்தியப் பிரதேசத்தை முன்னேடுத்துச் செல்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் நிலவிய மோசமான நிலைமையின் காரணமாக இம்மாநிலம் தொடர்பாக தகாத வார்த்தை பயன்படுத்தப்பட்டது என் நினைவிற்கு வருகிறது. “பீமாரு” என்கின்ற இந்த வார்த்தையைக் கேட்க எவரும் விரும்பவில்லை. மத்தியப் பிரதேசம் நாட்டில் நோய்வாய்ப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. இது மத்தியப் பிரதேசத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்பதை பல ஆண்டுகாலம் இந்த மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் உணரவே இல்லை.
அவர்கள், பொதுமக்களை தங்களது குடிமக்கள் என்று நினைத்து, அவர்களை தங்களது புகழ்பாட வைத்தனர். மத்தியப் பிரதேசத்தின் எதிர்காலத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை.
எனினும், பாரதீய ஜனதா கட்சி அரசு இம்மாநிலத்தை அந்த நிலையிலிருந்து விடுவித்து, நாட்டின் வளர்ச்சியை, அதனை ஒரு பங்குதாரராக்கியுள்ளது. இந்தப் பதவிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள சிவ்ராஜ் அவர்கள், இப்பகுதிக்காகவும், இங்குள்ள மக்களுக்காகவும் ஒரு பணியாள் போன்று உழைத்து வருகிறார்.
வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச மக்களையும், அரசையும் நான் பாராட்டுகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். பெருமளவில் இங்கு கூடியிருக்கும் உங்களுக்கு என் நன்றி.
கரமும் சிரமும் உயர்த்திட என்னோடு இணைந்து உரக்கக் கூறுங்கள்..
இந்திய அன்னைக்கு வெற்றி!
இந்திய அன்னைக்கு வெற்றி!
இந்திய அன்னைக்கு வெற்றி!