அன்புமிக்க சகோதர சகோதரிகளே
வணக்கம்
தமிழ் மண்ணிற்கும் மொழிக்கும் பாரம்பரியத்திற்கும்
உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்
“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.
பெண்ணே நீ மகத்தானவள். !
திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்களே,
திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களே,
திரு. எம். தம்பிதுரை அவர்களே,
திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே,
திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களே,
பேரவைத் தலைவர் திரு. பி. தனபால் அவர்களே,
அமைச்சர்கள்
திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்களே,
திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களே,
மதிப்புமிக்க இருபாலோரே,
செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வை ஒட்டி,
அவருக்கு மரியாதை செலுத்தி, உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா எங்கிருந்தாலும், உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைக் காண்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார்.
அவருடைய கனவுத் திட்டங்களில் ஒன்றான – அம்மா இருசக்கர வாகன திட்டத்தை -தொடங்கி வைத்திருப்பதில் இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அம்மாவின் 70வது பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுக்க 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு முயற்சிகளும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இயற்கையைப் பாதுகாப்பதிலும் நீண்டகால பலன்களைத் தரும்.
நண்பர்களே,
குடும்பத்தில் பெண்களுக்கு நாம் அதிகாரம் அளித்தால், ஒட்டுமொத்தமாக இல்லத்துக்கே அதிகாரம் அளிக்கிறோம்.
பெண்களின் கல்விக்கு நாம் உதவி செய்தால், ஒட்டுமொத்த குடும்பமே கல்வி பெறுவதை நாம் உறுதி செய்கிறோம்.
பெண்ணுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் வசதியை செய்து கொடுத்தால், ஒட்டுமொத்த குடும்பத்தையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் உதவுகிறோம்.
பெண்ணின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்கினால், ஒட்டுமொத்த இல்லத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பானதாக ஆக்குகிறோம்.
இந்தத் திசையை நோக்கி நாம் பணியாற்றுகிறோம்.
நண்பர்களே,
சாமானிய குடிமக்களுக்கு “வாழ்தலை எளிதாக்கும்” நிலையை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த லட்சியத்தை நோக்கியதாகத்தான் நமது அனைத்துத் திட்டங்களும் இருக்கின்றன.
நிதி வசதியில் பங்கேற்கும் நிலையை உருவாக்குதல், விவசாயிகள் மற்றும் சிறிய வணிகர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கச் செய்தல், சுகாதாரம் அல்லது துப்புரவு வசதிகள் அளித்தல், இவற்றைத் தாரக மந்திரமாகக் கொண்டுதான் மத்தியில் உள்ள ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எந்தவித வங்கி உத்தரவாதமும் இல்லாமல் மக்களுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, இந்தப் பயனாளிகளில் எழுபது சதவீதம் பேர் பெண்கள்.
இந்தியப் பெண்கள் காலம் காலமாக தடைகளில் சிக்கியிருந்த பெண்கள், அவற்றைத் தாண்டி வந்து சுயவேலைவாய்ப்பில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தத் திட்டத்தின் வெற்றி அமைந்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு, ஏராளமான நடவடிக்கைகளை நாம் எடுத்திருக்கிறோம்.
புதிய பெண் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 12 சதவீதத்தில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு 8 சதவீதமாகக் குறைத்து, சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் அறிவித்தோம்.
நிறுவனத்தின் பங்களிப்பு 12 சதவீதமாகவே இருக்கும்.
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன்கள் அளிக்கப்படும்.
தொழிற்சாலைகள் சட்டத்தில் நாங்கள் ஒரு மாற்றம் செய்து, பெண்களையும் இரவு நேரப் பணியில் அனுமதிக்குமாறு மாநிலங்களுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறோம்.
பேறுகால விடுமுறையை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக நாங்கள் அதிகரித்திருக்கிறோம்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், வீடுகளின் பத்திரப் பதிவு பெண்களின் பெயர்களில் செய்யப்படுகிறது.
ஜன்தன் திட்டம் பெரிய அளவில் பெண்களுக்குப் பலன் அளித்துள்ளது.
மொத்தம் உள்ள 31 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் 16 கோடி கணக்குகள் பெண்களுடையவை.
வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களின் சராசரி, 2014-ல் 28 சதவீதத்தில் இருந்து, இப்போது 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தூய்மையான பாரதம் திட்டம் பெண்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது அவர்களுடைய உரிமை.
கிராமப்புற துப்புரவு வசதி 40 சதவீதத்தில் இருந்து 78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அனைத்து அரசுப் பள்ளிக்கூடங்களிலும், மாணவிகளுக்கு கழிப்பறை வசதி அளிக்க வேண்டும் என்பதை, லட்சியமாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கூடியவையாக இருந்தாலும், இயற்கையைப் பாதுகாப்பவையாகவும் உள்ளன.
உஜாலா திட்டத்தின் கீழ் இதுவரை 29 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றால் மின்கட்டணத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
அவற்றால் கரியமில வாயு உற்பத்தி கணிசமான அளவு குறைந்திருக்கிறது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் இதுவரை 3.4 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு அளித்திருக்கிறது.
புகையில்லாத சூழலால் பெண்கள் பயனடையும் சமயத்தில், கெரசின் பயன்பாடு குறைவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உதவியாக இருக்கிறது.
இந்தத் திட்டத்தால் தமிழகத்தில் ஒன்பதரை லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
கிராமப் பகுதிகளில் எரிவாயு வசதி மற்றும் துப்புரவு வசதி அளிப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கோபார்-தன் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
கால்நடைகளின் கழிவுகள் மற்றும் வேளாண்மைக் கழிவுகளை பயோ-எரிவாயுவாக, பயோ-சி.என்.ஜி.யாக மாற்றுவதுதான் நோக்கம்.
இது வருவாயைப் பெருக்கி, எரிவாயுவுக்கான செலவைக் குறைக்கும்.
நண்பர்களே,
தமிழகத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களை இப்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சூரிய மின்சார உற்பத்தி நிலையங்கள், கச்சா எண்ணெய் குழாய் வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகம் சார்ந்த பணிகள் இவற்றில் அடங்கும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.3,700 கோடிக்கும் மேல் நிதி அளிக்கப் பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, 13வது நிதிக் குழுவின் கீழ் தமிழகம் ரூ.81,000 கோடி பெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு 14வது நிதிக் குழுவின் கீழ் தமிழகம் ரூ.1.80 லட்சம் கோடி பெற்றிருக்கிறது.
இது 120% அளவுக்கு அதிகமாகும்.
ஏழைகள் ஒவ்வொருவருக்கும் 2022க்குள் வீடு அளிப்பதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கிராமப்புற வீட்டு வசதிக்கு தமிழகத்துக்கு 2016-17ல் ரூ.700 கோடியும், 2017-18-ல் ரூ.200 கோடியும் அளிக்கப் பட்டுள்ளது.
நகர்ப்புற வீட்டு வசதிக்கு மாநிலத்துக்கு ரூ.6000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் தமிழக விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ரூ.2600 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தொழிலை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது. நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கு மீன் பிடி படகுகள் அளிப்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட படகுகளை மீன் பிடி படகுகளாக மாற்றுவதற்கு மாநில அரசுக்கு நாங்கள் ரூ.100 கோடி அளித்திருக்கிறோம். மீனவர்களின் வாழ்வை எளிதாக்குவதுடன், இந்த மீன்பிடி படகுகள் மீனவர்கள் அதிகம் சம்பாதிக்க உதவக் கூடியதாகவும் இருக்கும்.
இந்தியாவின் பரந்த கடல்வளங்களும், நீளமான கடலோரப் பகுதிகளும், ஏராளமான வாய்ப்புகளைத் தருபவையாக உள்ளன. நமது சேமிப்பு வசதி துறையை மாற்றி அமைப்பதற்காக சாகர்மாலா திட்டத்தை அமல் செய்வதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான செலவைக் குறைக்கும். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்குப் பயன் தருவதாகவும் இது இருக்கும்.
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில், அடையாளம் காட்டப்படும் மருத்துவமனைகளில், இலவச மருத்துவ வசதி கிடைக்கும். இந்தத் திட்டத்தால் நாடு முழுக்க 45 முதல் 50 கோடி பேர் வரை பயன் பெறுவார்கள்.
பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் உயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் 18 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்குக் காப்பீட்டு வசதியை அளித்துள்ளன. 800க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகள் மையங்கள் மூலமாக, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வது போன்ற மற்ற நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்திருக்கிறோம்.
மக்களின் வாழ்வில் ஆக்கபூர்வமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக உழைப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மீண்டும் ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
மிக்க நன்றி