மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் சிவபெருமானின் ஆசி பெற்ற பெயரைத் தாங்கியுள்ள மதுரை மாநகருக்கு வந்திருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
குடியரசு தினத்தை நாடு நேற்று கொண்டாடிய வேளையில், மதுரையில் இன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவது, ஒருவகையில், “ஒரே இந்தியா உன்னத இந்தியா” என்ற நமது சிந்தனையை பிரதிபலிப்பதாக உள்ளது.
நண்பர்களே,
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, சுகாதார சேவையில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதன் மூலம், இந்த சேவை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர், அங்கிருந்து மதுரை; குவஹாத்தி முதல் குஜராத் வரை என நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த பிரசித்திப் பெற்ற சுகாதார சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பலனளிக்கும்.
நண்பர்களே,
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சுகாதாரத்துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது, இதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவை குறைந்த செலவில் கிடைக்கிறது.
பிரதமரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு ஊக்கமளித்து வருகிறோம்.
இன்று (27.01.2019) மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகளை தொடங்கிவைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திர தனுஷ் இயக்கம் செயல்படும் வேகம் மற்றும் வீச்சு காரணமாக, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பிரதமரின் பேறுகால கவனிப்புத் திட்டம் மற்றும் பிரதமரின் பாதுகாப்பான பேறுகாலத் திட்டம் போன்றவை பாதுகாப்பான பிரசவத்தை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதும் ஒரு மாபெரும் நடவடிக்கை ஆகும்.
நம்நாட்டிற்கு தேவையான உலகளாவிய சுகாதார காப்பீடு வழங்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம் இது. உடல்நலப் பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோருக்கு, இதுவரை இல்லாத வகையில் முழு அளவிலான காப்பீட்டு வசதியை வழங்கும் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த ஆரம்ப சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சேவைகளை வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமரின் பொது சுகாதாரத் திட்டம் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த சுமார் பத்து கோடி பேருக்கு, ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வகை செய்கிறது.
இத்திட்டம் உலகிலேயே மாபெரும் சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 57 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 89000 பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஏற்கனவே 1320 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நோய் தடுப்பு பணியைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை அளித்து வருகிறது. 2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதேநேரத்தில் காசநோயற்ற சென்னை என்ற முன்முயற்சி மூலமாக 2023-க்குள்ளாகவே தமிழகத்தில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மாநில அரசு முனைப்புடன் இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மாற்றியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தை அனைத்து வகைகளிலும் செயல்படுத்த உறுதிபூண்டுள்ள மாநில அரசுக்கு எனது பாராட்டுக்கள்.
இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் 12 இடங்களில் அஞ்சலக பாஸ்போர்ட் மையங்களை அர்ப்பணிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் முயற்சியில் இது மற்றுமொரு உதாரணமாகும்.
சுகாதார சேவை வழங்கும் முன்முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, அனைவருக்கும் சுகாதார காப்பீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.