மேடையில் அமர்ந்திருக்கும் ஆளுநர் திரவுபதி அவர்களே, முதல் அமைச்சர் அவர்களே, மத்திய மற்றும் மாநில அமைச்சர்களே, ஜார்கண்டைச் சேர்ந்த எனதன்பு சகோதர, சகோதரிகளே.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உங்களுக்கும், நமது நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்த “பிரபாத் தாரா மைதானத்தில்” இருக்கும் நாட்டுமக்களுக்கு எனது காலை வணக்கங்கள். இன்று இந்த பிரபாத் தாரா மைதானம், உலக வரைபடத்தில் மின்னுகிறது. இந்தப் பெருமை இன்று ஜார்கண்டைச் சேர்ந்துள்ளது. நமது நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும், மக்கள் யோகா தினத்தைக் கொண்டாடக் கூடியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
யோகாவை உலகெங்கும் கொண்டு சேர்க்க, நமது ஊடக நண்பர்களும், சமூக வலைதளவாதிகளும், ஆற்றிய முக்கிய பங்கு மிகவும் அவசியமானது. அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
யோகா தினத்தைக் கொண்டாட ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்திருப்பதே ஒரு இனிமையான அனுபவமாகும். தொலை தூரத்தில் இருக்கும் தங்கள் வீடுகளிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி, இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐந்தாவது யோகா தினத்தைக் கொண்டாட நான் ஏன் ராஞ்சிக்கு வந்தேன் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்திருக்கலாம். சகோதர, சகோதரிகளே, ராஞ்சியுடன் எனக்கு மிக நெருக்கமான உறவு இருப்பினும், இன்று நான் ராஞ்சி வந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், ஜார்கண்ட் என்ற பெயருக்கு ஏற்றவாறு இது காடுகள் நிறைந்த பூமி. இது இயற்கையுடன் மிக நெருக்கமான நிலப்பரப்பு. இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம், முற்றிலும் மாறுபட்ட உணர்வை மனிதர்களுக்கு அளிக்கிறது. இரண்டாவது முக்கிய காரணம், வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கும், ராஞ்சி மற்றும் சுகாதார சேவை இடையே உள்ள உறவு. கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று, பண்டித தீனதயாள் உபாத்யாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ராஞ்சியில்தான் துவக்கினோம். இன்று, உலகத்தின் மிகப்பெரிய சுகாதார சேவை திட்டமான, பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம், குறைந்த காலத்திலேயே ஏழை மக்களுக்கு பெரும் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்தியர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்ற யோகாவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்தோம். அதனால், இன்று ராஞ்சிக்கு வருகை தருவது எனக்கு முக்கியமானதாகவுள்ளது.
சகோதர சகோதரிகளே,
நாம் அனைவரும் இந்த யோகா இயக்கத்தை மற்றொரு நிலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதுவே நான் ராஞ்சிக்கு வந்த மூன்றாவது மற்றும் மிக முக்கிய காரணமாகும்.
நண்பர்களே,
யோகா நமது நாட்டில் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. மேலும் அது நமது கலாச்சாரத்தின் முக்கிய கூறாகும். ஜார்கண்ட் மாநிலத்தின் ‘சாவ் நடனம்’, பல ஆசனங்கள் மற்றும் யோகா முறைகளை சித்தரிக்கிறது. ஆனால், நவீன யோகாவின் பயணமானது, ஊரக மற்றும் பழங்குடிப் பகுதிகளுக்குள் ஊடுருவி செல்லவில்லை என்பதும் உண்மை. இன்று நாம் அனைவரும், நவீன யோகாவின் பயணத்தை, நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும், காடுகளுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஏழை மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக யோகாவை நான் மாற்ற வேண்டும், ஏனெனில், ஏழை மக்கள்தான் உடல்நலக் குறைவினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உடல்நலக் குறைவு ஏழைகளை இன்னும் ஏழைகளாக மாற்றுகிறது. வறுமை வேகமாக குறைந்து வரும் தருணத்தில், வறுமையில் இருந்து வெளிவரும் மக்களுக்கு யோகா மிகவும் முக்கிய வழியாகும். யோகா, அவர்களை தழுவுதல் அவர்களை நோய் மற்றும் வறுமையின் பிடியில் இருந்து காப்பாற்றும்.
நண்பர்களே,
வசதிகளைக் கொண்டு வாழ்க்கையை எளிமையாக்குவது மட்டும் போதாது. மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலமான தீர்வுகள் மட்டும் போதாது. தற்போது மாறிவரும் காலத்தில் நோய்களை வரும் முன் காப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல உடல் நலத்திலும் நாம் கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த சக்தியை நாம் யோகா மூலம் பெறலாம். யோகாவும், இந்திய தத்துவமும் ஒரே உணர்வை கொண்டிருக்கின்றன. அரை மணி நேரம் மைதானத்திலோ, தரையிலோ அல்லது பாயின் மீதோ செய்வது யோகா அல்ல; யோகா என்பது ஒரு ஒழுக்கம், ஒரு அர்ப்பணிப்பு, அதனை வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டும். வயது, நிறம், சாதி, மதம், செல்வம், வறுமை, மாகாணம் அல்லது எல்லைகள் போன்ற அனைத்து பாகுபாட்டையும் தாண்டியது யோகா. யோகா அனைவருக்கும் சொந்தம், எல்லோரும் யோகாவிற்கு சொந்தமானவர்கள்.
நண்பர்களே,
சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துடன் யோகாவை இணைப்பதன் மூலம் நோய் தடுப்பு சேவையின் முக்கிய தூணாக யோகாவை மாற்ற எங்கள் அரசு கடந்த ஐந்தாண்டுகளாக முயற்சித்து வருகிறது. இன்று யோகா பற்றிய விழிப்புணர்வு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் உள்ளது. வீட்டின் வரவேற்பறையில் இருந்து படுக்கைஅறை வரை, பூங்காக்களில் இருந்து நகரங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் வரை, தெருக்களில் இருந்து உடல் நல மையங்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் யோகா குறித்த விழிப்புணர்வு சென்றடைந்துள்ளது என்பதை நாம் இன்று உறுதியாகக் கூற முடியும்.
சகோதர சகோதரிகளே,
இளைய தலைமுறை இந்தப் பாரம்பரிய முறையை நவீனத்துடன் இணைத்து பரப்புவதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது. இளைஞர்களின் புதுமையான முறைகள் மற்றும் ஆக்கப்பூர்வ யோசனைகளால், யோகா முன்பை விட பிரபலமும், புத்துயிரும் பெற்றுள்ளது. நண்பர்களே, இந்த தினத்தில், நமது அமைச்சர் யோகா ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமர் விருதினை அறிவித்துள்ளார். கடின உழைப்பிற்குப் பின், தேர்வுக் குழு உலகெங்கிலும் இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. வெற்றியாளர்கள் யோகாவிற்காக செய்துள்ள பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
இந்த ஆண்டு, சர்வதேச யோகா தினத்தின் மையக்கரு ‘இதய பராமரிப்பிற்கு யோகா’. உலகம் முழுவதும் இதயப் பராமரிப்பு பெரும் சவாலாக இன்று மாறியுள்ளது. இந்தியாவில், கடந்த 20-25 ஆண்டுகளில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, இளைஞர்கள் மத்தியில் இதய நோய் அதிகரித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படி பட்ட தருணத்தில், இதய நோய் குறித்த விழிப்புணர்வோடு, வரும்முன் காப்பதற்கும், சிகிச்சைக்குமான ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவது அவசியமாகும். அந்தந்த ஊர்களில் உள்ள யோகா ஆசிரமங்கள், யோகாவினை பரப்ப மேலும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ‘இதய நோய் விழிப்புணர்வு’க்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு ரிக்யபீத்யோக் ஆசிரமம், ராஞ்சியைச் சேர்ந்த யோக்டா சத்சங்க சக்கா ஆசிரமம் போன்ற அமைப்புகளை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
நல்ல ஆரோக்கியமானது, வாழ்வில் புதிய உயரத்தை அடைய வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தும். சோர்ந்த உடலும், உடைந்த மனமும் கனவுகளை உருவாக்கவோ, ஆசைகளை நிறைவேற்றவோ உதவாது. சிறந்த ஆரோக்கியத்தைப் பற்றி நாம் பேசும்போது, நாம் நான்கு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் – நீர், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மற்றும் கடின உழைப்பு. சுத்தமான நீர், தேவையான ஊட்டச்சத்து, சுத்தமான காற்று போன்ற சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் கடுமையான உழைப்பு ஆகியவை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
நண்பர்களே, இந்த நான்கு விஷயங்களும் நல்ல பலனை அளிக்கும். நண்பர்களே, யோகா தினக் கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக உலகெங்கும் உள்ள மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும், சூரியனின் முதல் கதிர் யோகா ஆர்வலர்களால் வரவேற்கப்படுவது அற்புதமான காட்சியாகும். அனைவரும் யோகாவினை கடைபிடித்து, உங்கள் தினசரி வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக அதனை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். யோகா பழமையானது மற்றும் நவீனமானது. அது நிலையானது மற்றும் உருவெடுப்பது. பல நூற்றாண்டுகளாக யோகாவின் அடிப்படை ஒன்றாகவே உள்ளது – ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒன்றுபட்ட உணர்வு, ஞானம் அல்லது அறிவு, கர்மா அல்லது பணி மற்றும் பக்தி அல்லது அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சரியான கலவையை யோகா அளிக்கிறது. யோகா ஒரு தனி மனிதனின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் மனப்பான்மையை மேம்படுத்தும்.
நண்பர்களே, முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று யோகாசனம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது, வேகமான தினசரி வாழ்க்கை, மற்றும் வேலை இடத்தில் வரும் அழுத்தத்தினால் ஏற்படுகிறது. போதைப் பொருட்கள், மதுப் பழக்கம், நீரிழிவு நோய் போன்றவற்றினால் இளம் வயது ஆண்களும் பெண்களும் பாதிக்கப்படுவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கு யோகா நல்ல தீர்வினை அளிக்கும். நமது சமூகத்திலும், மக்களிடையேயும் யோகா ஒற்றுமையை மேம்படுத்தும். நமது உலகம் சந்திக்கும் பல சவால்களுக்கு இது மருந்தாக அமையும்.
நண்பர்களே, அமைதி, நல்லிணக்கம் ஆகியவையும், யோகாவுடன் இணைந்தது. அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சிக்கான யோகா என்பது சர்வதேச யோகா தினத்தில், நமது குறிக்கோளாக அமையட்டும்.
சகோதர சகோதரிகளே,
சர்வதேச யோகா தினத்திற்குப் பின்னர் நாம் பல முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளோம். அதன் பலன்களையும் நாம் காண்கிறோம். எதிர்காலத்தை மனதில் கொண்டு நம் அனைவரின் வாழ்க்கை மற்றும் பழக்கத்தின் அங்கமாக யோகாவினை மாற்ற நாம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதற்காக யோகா ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கப்போகிறது. பல கோடி மக்களின் வாழ்க்கையின் அங்கமாக யோகாவினை மாற்ற மனித வளத்தை தயார் நிலையில் வைப்பதும் மனித வள மேம்பாடும் அவசியமாகும். யோகா மற்றும் அதன் நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தான் நாம் இதனை அடைய முடியும். இந்த நோக்கத்தோடு எங்களது அரசு முன்னோக்கிச் செல்கிறது.
நண்பர்களே,
நமது யோகாவை, இன்று உலகமே கடைபிடிக்கிறது. அதனால், யோகா தொடர்பான ஆய்வுகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது கைபேசிகளில் உள்ள செயலிகள் எவ்வாறு தானே புதுபிக்கப்படுகிறதோ, அதே போல் உலகத்திற்கு நாம் யோகா குறித்த புது புது செய்திகளை தொடர்ந்து வழங்க வேண்டும். அதனால், நாம் யோகாவை நமக்குள்ளே மட்டுமே வைத்திருக்கக் கூடாது. மருத்துவம், பிசியோதெரபி மற்றும் செயற்கை நுண்ணறிவோடு யோகாவும் இணைக்கப்பட வேண்டும். அதோடு, யோகாவுடன் இணைந்துள்ள தனியார் நிறுவனங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும், அப்போதுதான் நம்மால் யோகாவை விரிவாக்க முடியும்.
இந்த தேவைகளை மனதில் கொண்டு நமது அரசு பல்வேறு துறைகளில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நான் மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், நல்ல உடல் நலத்திற்கான வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று நாம் இங்கு செய்யும் யோகாசனங்கள் படிப்படியாக அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். மிக அதிகமாகச் செய்ய வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் அது கொண்டு வரும் அற்புதமான பலன்களை நீங்கள் உணர்வீர்கள்.
உங்கள் அனைவருக்கும் நல்ல உடல் நலம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சீரான வாழ்க்கை அமைய எனது வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாருங்கள், இப்போது யோகாவைத் தொடங்குவோம்.
குறைந்த நேரத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்ததற்காக ஜார்கண்ட் அரசுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். இதற்கு முன்னால், அவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது. அரசு அமைந்த பின், இரண்டு வாரத்திற்கு முன்புதான் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என்ற யோசனை என் மனதிற்குள் வந்தது. ஆனால், ஜார்கண்ட் மக்கள் குறைந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாக மாற்றியுள்ளனர். இதற்காக உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எனது வாழ்த்துகள்.
நன்றி !