இயற்கை விவசாயம் குறித்த தேசிய மாநாட்டில் விவசாயிகளிடம் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு நரேந்திர சிங் தோமர், குஜராத் ஆளுநர், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
“தற்போது நமது பயணம், சுதந்திரத்தின் 100-வது ஆண்டு வரை புதிய தேவைகள் மற்றும் பதிய சவால்களுக்கு ஏற்றபடி நமது விவசாய முறையைப் பின்பற்ற வேண்டும்”வணக்கம்,
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு. அமித் பாய் ஷா அவர்களே, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, குஜராத் முதல்வர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, அனைத்து முக்கிய பிரமுகர்கள், மற்றும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திகழும் நாடு முழுவதும் உள்ள எனது ஆயிரக்கணக்கான விவசாய சகோதர சகோதரிகளே, இன்று நாட்டின் விவசாயத் துறைக்கு மிக முக்கியமான நாள். தேசிய இயற்கை வேளாண்மை மாநாட்டில்பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை நான் வலியுறுத்தினேன். வேளாண் அமைச்சர் தோமர் அவர்கள் தெரிவித்தபடி, தொழில்நுட்பம் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சுமார் எட்டு கோடி விவசாயிகள் எங்களுடன் இணைந்துள்ளனர். எனது அனைத்து விவசாய சகோதர சகோதரிகளையும் வரவேற்கிறேன்.
ஆச்சார்யா தேவ்விரத் அவர்களுக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாணவனைப் போல மிகவும் கவனமாக அவர் பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் ஒரு விவசாயி இல்லை, ஆனால் இயற்கை விவசாயத்திற்கு என்ன தேவை, என்ன செய்ய வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மிக எளிமையான வார்த்தைகளில் அவர் விளக்கினார். அவரது சாதனைகள் மற்றும் அவரது வெற்றிகரமான பரிசோதனைகள் பற்றி எனக்குத் தெரியும் என்பதால் அவர் கூறுவதை கேட்க முழு மனதுடன் நான் அமர்ந்தேன். விவசாயிகளின் நன்மைக்காக அவர் கூறியதை நம் நாட்டு விவசாயிகள் ஒரு போதும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.
இந்த மாநாடு குஜராத்தில் நடக்கும் போதிலும் அதன் நோக்கம் மற்றும் தாக்கம் இந்தியாவின் ஒவ்வொரு விவசாயியிடமும் உள்ளது. விவசாயத்தின் பல்வேறு பரிமாணங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் இயற்கை விவசாயம் போன்றவை 21-ம் நூற்றாண்டில் இந்திய விவசாயத்தை மாற்றியமைப்பதில் பெரியளவில் பங்காற்றும். இந்த மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. எத்தனால், இயற்கை விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் புதிய சாத்தியங்களை விரிவுபடுத்துகிறது. குஜராத்தில் நடைபெறும் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த சோதனைகள் முழு நாட்டிற்கும் திசையை காட்டுகின்றன என்பதில் நான் திருப்தி அடைகிறேன். தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, இயற்கை விவசாயத்தைப் பற்றி நாட்டு விவசாயிகளுக்கு மிகவும் கோர்வையான முறையில் விளக்கிய குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் என்பது கடந்த காலத்தைப் திரும்பி பார்க்கவும், அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், புதிய வழிகளை திட்டமிடுவதற்குமான நேரம் ஆகும். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக விவசாயத்தின் வளர்ச்சியும் பயணமும் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக நெருக்கமாகப் பார்த்தோம். இப்போது நமது சுதந்திரத்தின் 100-வது ஆண்டு வரையிலான நமது பயணம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய தேவைகள் மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்ப நமது விவசாயத்தை மாற்றியமைப்பதாகும். கடந்த 6-7 ஆண்டுகளில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விதைகள் முதல் சந்தைகள் வரை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மண் பரிசோதனை முதல் நூற்றுக்கணக்கான புதிய விதைகள் உற்பத்தி செய்வது வரை, பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதியிலிருந்து உற்பத்தி செலவை விட 1.5 மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பது வரை, வலுவான நீர்ப்பாசன வலையமைப்பு முதல் கிசான் ரயில்கள் வரையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தோமர் அவர்கள் தனது உரையில் இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துடன், கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மீன்வளம், சூரிய சக்தி மற்றும் உயிரி எரிபொருள் போன்ற பல்வேறு மாற்று வருமான ஆதாரங்களுடன் விவசாயிகள் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர்.
கிராமங்களில் சேமிப்பு, குளிர் சங்கிலி மற்றும் உணவு பதப்படுத்துதல் வசதிகள் ஆகியவற்றை பலப்படுத்த பல லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு வளங்களை வழங்குகின்றன, அவர்களுக்கு விருப்பமான தேர்வுகளை வழங்குகின்றன. ஆனால் ஒரு முக்கியமான கேள்வி நம் முன் உள்ளது. மண்ணே கைகொடுக்காத போது என்ன நடக்கும்? வானிலை சாதகமாக இல்லாமல், பூமித்தாயின் கருவில் உள்ள நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது என்ன நடக்கும்? இன்று, உலகம் முழுவதும் இந்த சவால்களை விவசாயம் எதிர்கொள்கிறது. பசுமைப் புரட்சியில் ரசாயனங்களும் உரங்களும் முக்கிய பங்காற்றியது உண்மைதான். ஆனால் அதே சமயம் அதன் மாற்று வழிகளில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதும், அதில் அதிக கவனம் செலுத்து வேண்டும் என்பதும் அதே அளவு உண்மையாகும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் இறக்குமதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டும். இதனால், வேளாண் செலவு அதிகரிக்கிறது; விவசாயிகளின் செலவு அதிகரிக்கிறது மற்றும் ஏழைகளின் அன்றாட செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனை விவசாயிகள் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கும் தொடர்புடையது ஆகும். எனவே, நாம் அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
''பானி ஆவே தே பஹேலா பால் பாந்தே'' எனும் பழமொழி குஜராத்தியில் உள்ளது. அதாவது, வருமுன் காத்தல் சிறந்தது. விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் இன்னும் மோசமாகும் முன் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க இதுவே சரியான தருணம். நமது விவசாயத்தை வேதியியல் ஆய்வகத்திலிருந்து வெளியே எடுத்து இயற்கையின் ஆய்வகத்துடன் இணைக்க வேண்டும். இயற்கையின் ஆய்வகம் என்பது முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானது. ஆச்சார்யா தேவ்விரத் அவர்களும் இதை விரிவாக விளக்கியுள்ளார். இதை ஒரு சிறு ஆவணப்படத்திலும் பார்த்திருக்கிறோம். அவர் கூறியது போல், நீங்கள் அவரது புத்தகத்தில் அல்லது யூடியூபில் அவரது உரைகளை காணலாம். உரத்தில் உள்ள ஆற்றல் இயற்கையிலும் உள்ளது. மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை நாம் அதிகரிக்க வேண்டும், மண்ணின் வளமான சக்தியை அது அதிகரிக்கிறது.
பசுவின் சாணம் மற்றும் பசுவின் சிறுநீரைக் கொண்டு தீர்வுகளை தயாரிக்கலாம். பயிரை பாதுகாப்பதோடு உற்பத்தியையும் இது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விதை முதல் மண் வரை அனைத்தையும் இயற்கை முறையில் கையாளலாம். இந்த விவசாயத்திற்கு உரமோ, பூச்சிக்கொல்லி மருந்துகளோ செலவாகாது. இதற்கு குறைந்த நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது, வெள்ளம் மற்றும் வறட்சியை சமாளிக்கும் திறனை இது கொண்டுள்ளது. குறைந்த நீர்ப்பாசனம் பெறும் நிலமாக இருந்தாலும் சரி, கூடுதல் நீர் உள்ள நிலமாக இருந்தாலும் சரி, இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகள் ஒரு வருடத்தில் அதிக பயிர்களை மகசூல் செய்ய முடியும். அதாவது, குறைந்த செலவு, அதிகபட்ச லாபம். இதுதான் இயற்கை விவசாயம்.
நண்பர்களே,
உலகம் எவ்வளவு நவீனமாக மாறுகிறதோ, அவ்வளவு அதிகமாக 'அடிப்படைக்குத் திரும்பு' என்பதை நோக்கி நகர்கிறது. இந்த ‘பேக் டு பேஸிக்’ என்பதன் அர்த்தம் என்ன? இதன் பொருள் உங்கள் வேர்களுடன் இணைதல்! விவசாய நண்பர்களை விட இதை யார் புரிந்துகொள்வார்கள்? வேர்களுக்கு எவ்வளவு தண்ணீர் பாய்ச்சுகிறோமோ அந்த அளவுக்கு செடி வளரும். இந்தியா ஒரு விவசாய நாடு. நமது சமூகம் வளர்ச்சியடைந்து, பாரம்பரியங்கள் வளர்க்கப்பட்டு, விவசாயத்தை மையமாக வைத்து பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விவசாயி நண்பர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தால் நமது நாகரீகம் மிகவும் செழித்து வளர்ந்திருக்கும் போது, விவசாயத்தைப் பற்றிய நமது அறிவும் அறிவியலும் எவ்வளவு செழுமையாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருந்திருக்கும்? எனவே, சகோதர சகோதரிகளே, உலகம் இயற்கையைப் பற்றி பேசும்போது, அடிப்படைகளுக்குத் திரும்புவது பற்றிக் குறிப்பிடும்போது, அதன் வேர்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
நண்பர்களே,
விவசாயம் தொடர்பாக பல அறிஞர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். நம் நாட்டில் விவசாயம் பற்றிய விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் இது குறித்து ரிக்வேதம் மற்றும் அதர்வணவேதம் போன்ற நமது புராணங்களிலும், க்ரிஷி-பராசரா மற்றும் காஷ்யபி கிருஷி சூக்தம் போன்ற பண்டைய நூல்களிலும், தெற்கில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த புனித திருவள்ளுவர் அவர்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நண்பர்களே,
விவசாயத்தைப் பற்றிய இந்த பண்டைய அறிவை நாம் மீண்டும் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நவீன காலத்திற்கு ஏற்ப அதை கூர்மைப்படுத்தவும் வேண்டும். இந்த திசையில், நாம் புதிதாக ஆராய்ச்சி செய்து, பண்டைய அறிவை நவீன அறிவியல் கட்டமைப்பிற்குள் வடிவமைக்க வேண்டும். இந்த திசையில், நமது ஐசிஏஆர், கிரிஷி விக்யான் கேந்திரங்கள் மற்றும் விவசாய பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் பெரிய பங்கை வகிக்க முடியும். நாம் தகவல்களை ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்த வேண்டியதில்லை, நடைமுறை வெற்றியாக அவற்றை மாற்ற வேண்டும். ஆய்வகத்தில் இருந்து விவசாய நிலத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். மேற்கண்ட நிறுவனங்களும் இந்த முயற்சியைத் தொடங்கி, இயற்கை விவசாயத்தை அதிகளவில் விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். வெற்றியை சாத்தியமாக்கி நீங்கள் காட்டும்போது, சாதாரண மனிதர்களும் கூடிய விரைவில் இணைவார்கள்.
நண்பர்களே,
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதோடு, நமது விவசாயத்தில் ஊடுருவியுள்ள தவறான நடைமுறைகளை பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். வயலில் தீ வைப்பதன் மூலம் மண் அதன் வளத்தை இழக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். இதேபோல், ரசாயனங்கள் இல்லாமல் பயிர் விளைச்சல் நன்றாக இருக்காது என்று ஒரு மாயை உள்ளது, ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. முன்பு இரசாயனங்கள் இல்லை, ஆனால் அறுவடை நன்றாக இருந்தது. மனிதகுலத்தின் வளர்ச்சியின் வரலாறு இதற்கு சாட்சி. அனைத்து சவால்களையும் மீறி, விவசாய யுகத்தில் மனித நேயம் செழித்து வேகமாக முன்னேறியதற்கு காரணமாக இயற்கை விவசாயம் விளங்கியது, மக்கள் அதை தொடர்ந்து கற்றுக்கொண்டனர். இன்று தொழில்துறை யுகத்தில், தொழில்நுட்பத்தின் சக்தி நம்மிடம் உள்ளது, வளங்கள் உள்ளன, வானிலை தொடர்பான தகவல்களும் உள்ளன. இனி விவசாயிகள் புதிய வரலாறு படைக்க முடியும். புவி வெப்பமடைதல் குறித்து உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்திய விவசாயிகள் தங்களது பாரம்பரிய அறிவின் மூலம் தீர்வை வழங்க முடியும். நாம் இணைந்து சாதிக்கலாம்.
சகோதர சகோதரிகளே,
சுரண்டல் இருக்கும் இடத்தில் ஊட்டச்சத்து இருக்காது என்று இயற்கை விவசாயம் பற்றிய காந்தியடிகளின் கூற்று முற்றிலும் உண்மையானது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டனர். இவற்றில் பல முயற்சிகள் இளைஞர்களால் தொடங்கப்பட்டவை. மத்திய அரசால் தொடங்கப்பட்ட பரம்பரகத் கிரிஷி விகாஸ் திட்டத்தாலும் அவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு, உதவியும் வழங்கப்படுகிறது.
நண்பர்களே,
இந்த புனிதமான காலகட்டத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் இயற்கையோடு இணக்கம் போன்றவற்றுக்கான சிறந்த தீர்வை உலகிற்கு இந்தியா வழங்க வேண்டும். பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்து உலகிற்கு அழைப்பு விடுத்தேன். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவும் அதன் விவசாயிகளும் இதற்குத் தலைமை தாங்கப் போகிறார்கள். எனவே, விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் போது, பாரத மாதாவின் நிலத்தை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இல்லாத நாடாக மாற்றி, ஆரோக்கியமான பூமிக்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் உலகிற்கு வழி காட்ட உறுதிமொழி எடுப்போம். தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கனவை நாடு இன்றைக்கு வளர்த்துள்ளது. விவசாயம் தன்னிறைவாக மாறும்போதுதான் இந்தியா தன்னிறைவு அடைய முடியும். நாட்டின் விவசாயிகளை இணைக்கும் அக்கறை கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!
குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.