அரபிக் கடலின் ராணி என அழைக்கப்படும் கொச்சியில் நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீலக் கடல், உப்பங்கழி, பெரியார் நதி, பசுமை மிகுந்த சுற்றுச்சூழல், துடிப்பான மக்களை கொண்ட கொச்சி நகரங்களின் ராணியாகவே உள்ளது.
சிறந்த இந்திய ஞானியான ஆதிசங்கரர் இந்திய நாகரீகத்தை பாதுகாக்கவும், நாட்டை ஒருங்கிணைப்பதற்குமான தனது பயணத்தை இங்கிருந்துதான் துவக்கினார்.
கேரளாவின் மிகப் பெரிய தொழிற்சாலை தனது அடுத்தகட்ட வளர்ச்சியை சென்றடையும் இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த தருணம் கடவுளின் தேசத்திற்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை சேர்க்கிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக கேரளாவிலும் பிற மாநிலங்களிலும் தூய்மையான எரிசக்தியையும், சமையல் எரிவாயுவையும் (எல்.பி.ஜி) மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் பாரத் பெட்ரோலியத்தின் கொச்சின் சுத்திகரிப்பு நிலையம் முக்கிய பங்காற்றியுள்ளது.
எனது குழந்தை மற்றும் இளைஞர் பருவத்தில் சமையல் அறைகளில் பல தாய்மார்கள் விறகுடன் போராடியது என் நினைவுக்கு வருகிறது. அப்போது முதல் நான் அவர்களின் நிலையை மேம்படுத்தி இந்தியாவின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் சுகாதாரமான சமையல் அறைகளை வழங்க வேண்டும் என்று எண்ணினேன்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் இந்த கனவை நனவாக்குவதற்கான வழியாக அமைந்துள்ளது. மே 2016 முதல் உஜ்வாலா திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு ஏறத்தாழ ஆறு கோடி எல் பி ஜி இணைப்புகள் வழங்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
நண்பர்களே,
23 கோடிக்கும் மேற்பட்டோர் பெஹல் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இத்திட்டத்தில் உள்ள வெளிப்படைத் தன்மை, போலிக் கணக்குகளை கண்டறிய உதவியுள்ளது. உலகின் மிகப்பெரிய நேரடி பயன் பரிமாற்ற திட்டத்திற்காக பெஹல் கின்னஸ் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. “மானியத்தை விட்டுக் கொடுங்கள்” என்ற முன்முயற்சியின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களின் எல் பி ஜி மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட விரிவாக்கத்தினால் கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் எல் பி ஜி உற்பத்தியை இருமடங்காக உயர்த்தி உஜ்வாலா திட்டத்திற்கு பெருமளவு பங்களித்துள்ளது.
நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நகர எரிவாயு விநியோகத்தை விரிவாக்கம் செய்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற சி என் ஜி போக்குவரத்து எரிசக்தியை பிரபலப்படுத்தி வருகிறது. 10 சி ஜி டி ஏலச் சுற்றுகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பின் நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கப்படும்.
எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கவும், எரிசக்தி தளத்தில் எரிவாயுவின் பங்களிப்பை மேம்படுத்தவும் தேசிய எரிவாயு கட்டமைப்பு அல்லது பிரதமர் உர்ஜா கங்கா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு 15,000 கிலோமீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
கச்சா எண்ணெயின் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு இறக்குமதியில் 10 சதவீதம் வரை குறைத்து அந்நிய செலாவணியை சேமிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
11 மாநிலங்களில் பன்னிரெண்டு 2ஜி எத்தனால் ஆலைகளை அமைக்க எண்ணெய் பொது நிறுவனங்கள் லிக்னோசெலுலோஸ் மூலம் இரண்டாவது தலைமுறை எத்தனாலை உற்பத்தி செய்யும் முறையை கையாள உள்ளன.
இதன் அடிப்படையில் ஏற்கனவே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
ஆசியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உள்ள இந்தியா, தனது தேவைக்கும் அதிகமாக சுத்திகரிப்பு செய்யும் மையமாகவும் வளர்ந்து வருகிறது.
நாட்டில் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 247 எம்எம்டிபிஏ-க்கும் அதிகமாகும். ஐஆர்ஈபி திட்டத்தை உரிய நேரத்திற்குள் நிறைவு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இந்த கட்டுமானப்பணிகளுக்காக இரவு பகலாக உழைத்த அனைத்து ஊழியர்களின் உழைப்பை நான் அங்கீகரிக்கிறேன். இந்த திட்டத்தின் முக்கியமான கட்டுமானப் பணியின் போது 20,000 –க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்ததாக என்னிடம் கூறனார்கள்.
பல வழிகளில், இவர்களே இத்திட்டத்தின் உண்மையான நாயகர்கள் ஆவார்கள். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம் மூலம் எரிசக்தி சாரா துறையில் புத்திசாலித்தனமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
எனது நண்பர்களே,
பெட்ரோ கெமிக்கல் என்ற ரசாயனப் பொருட்கள் குறித்து நாம் அதிகம் பேசுவதில்லை.
ஆனால், அவை நம் கண்ணுக்குத் தெரியாமல் நமது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் கட்டுமானப் பணிக்குத் தேவையான பொருட்கள், பிளாஸ்டிக், சாயம், காலணி, துணிவகைகள், வாகன பாகங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்கும். பெரும்பாலான ரசாயனப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவிலேயே பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி செய்யப்படுவது நம் வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஐ ஆர் ஈ பி அமலாக்கத்திற்கு பிறகு கொச்சின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், ப்ரொஃபலின் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளதும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின்கீழ் பி பி சி எல் நிறுவனம் அக்ரிலிக் ஆசிட் அக்ரலேட்ஸ் மற்றும் ஆக்சோ ஆல்கஹால் உற்பத்திக்கான உலகத் தரம் வாய்ந்த மூன்று ஆலைகளை கொண்டு வரவுள்ளதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் சாயம், மை, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் மெத்தைகளில் உபயோகப்படுத்தப்படும் பஞ்சுப் பொருட்கள், நார், காலணிகள், அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் தயாரிப்பில் பயன்படும் பாலியால்ஸ் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பி பி சி எல் துவக்கவுள்ளது.
இதுசார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் கொச்சியில் அமைக்கப்படும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன்.
மாநில அரசின் திட்டத்தின்படி அமைக்கப்பட்டு வரும் பெட்ரோ கெமிக்கல் பூங்கா விரைவாக செயல்படும் என்று நான் நம்புகிறேன். மேலும், இது, பி பி சி எல்-ன் பெட்ரோ கெமிக்கல் முயற்சிக்கு தேவையான தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிபிசிஎல் நிறுவனம், பிற பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும் வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையிலும் திறன் மேம்பாட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
ஈட்டுமன்னூரில், புனித மகாதேவா கோயில் அருகே இந்நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.
ரூ.50 கோடி மதிப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் தனது கொச்சி உருளை சேமிப்பு கலனில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்.பி.ஜி நிரப்பு வசதியை கொண்டு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எல்.பி.ஜி சேகரிப்புத் திறனை மேம்படுத்தி, சாலைகளில் எல்பிஜி டேங்கர் பயன்பாட்டினை குறைக்கும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளா சந்தித்த மிக மோசமான மழை வெள்ளத்தின் போதும், பிபிசிஎல் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அனைத்து இன்னல்களையும் தாண்டி தொடர்ந்து செயல்பட்டு வந்தது நெகிழச் செய்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி உற்பத்தியை தடைபடாமல் தொடர, பணியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பஜ ஆலையிலேயெ தங்கிப் பணியாற்றினர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள மீட்பு வாகனங்களுக்கும் ஹெலிகாப்டர்களுக்கும் இது உதவியது.
அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் கொச்சி சுத்திகரிப்பு ஆலையம் தனது கடின உழைப்பு, சமூக பொறுப்புணர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக கொச்சி சுத்திகரிப்பு ஆலை செய்துவரும் பங்களிப்பு நமக்கு பெருமை அளிக்கிறது.
ஆனால், தற்போது நாம் அவர்களிடம் இருந்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம். தென்னிந்தியாவில் பெட்ரோ கெமிக்கல் புரட்சியை கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மேற்கொண்டு, புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து தேவைகளுக்கும் உதவட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
ஜெய்ஹிந்த்.