மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,
ஊக்கமளிக்கக் கூடிய வகையில் உரையாற்றிய மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, அவரது உரை மீதான விவாதத்தில் பங்கேற்று சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். குடியரசுத்தலைவரின் உரை, இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகும்; தற்போதைய சிக்கலான மற்றும் சவாலான காலகட்டத்திலும், இந்த நாடு எவ்வாறு அதன் பாதையை தேர்வு செய்து, அதன்படி நடந்துகொள்கிறது என்பதோடு, இலக்குகளை அடைவதில் எந்தளவிற்கு முன்னேறிச் செல்கிறது என்பதையும் எடுத்துரைப்பதாக உள்ளது. இந்த அனைத்து அம்சங்கள் குறித்தும், குடியரசுத்தலைவர் அவரது உரையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அவரது உரையின் ஒவ்வொரு வார்த்தையும், நாட்டுமக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, குடிமக்கள் ஒவ்வொருவரையும், நாட்டு நலன் பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது. இதற்கு, வார்த்தைகளால் நன்றி தெரிவிக்க இயலாது. இந்த அவையில் 15 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடைபெற்றுள்ளது. நள்ளிரவு 12 மணி வரையிலும் விவாதம் நடத்தப்பட்ட போதிலும், நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மனசாட்சி விழித்தெழத்தக்க வகையில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மிகுந்த உரிமையோடு, வலிமையான, ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும், நான், எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, விவாதத்தில் அதிக ஈடுபாடு காட்டி, ஒவ்வொரு கருத்தையும் கவனத்துடன் ஆராய்ந்து, அதனை ஆதரிக்கும் முயற்சியுடன் பங்கேற்ற நமது பெண் எம்.பி.க்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன். அதிலும் குறிப்பாக, அவர்களது ஞானம் மற்றும் விவாதத்திற்கு ஆயத்தமாகி அதனை எடுத்துரைத்த விதத்திற்காக, அவர்களை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் தெரிவித்த மதிப்புமிக்க, கருத்தாழமிக்க அம்சங்கள், அவையையும், விவாதத்தையும் செழுமைப்படுத்தியுள்ளன.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
நமது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தருணத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. 75 ஆண்டுகள் என்ற நிலையை நோக்கிச் செல்வது, ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடியதாகும். எனவே, எந்தவொரு சமூக இனம் அல்லது இந்திய நிலப்பரப்பின் எந்த மூலை முடுக்காக இருந்தாலும், சமூகத்தில் அல்லது பொருளாதாரத்தில் எத்தகைய நிலையில் உள்ளவராக இருந்தாலும், நமது சுதந்திரத்தால் ஈர்க்கப்பட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, இந்தியா விடுதலை பெற்றதன் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக, 2047-ம் ஆண்டை நோக்கிச் செல்ல உறுதியேற்போம். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டை எட்டுவதற்கு, இன்னும் 25 ஆண்டுகள் உள்ளது. இந்த 25 ஆண்டுகளில், நாடு எந்தளவிற்கு முன்னேற்றம் அடைவது என்பதோடு, உலக வரைபடத்தில் இந்தியா எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதே இந்தியர்கள் அனைவரின் தொலைநோக்காக இருக்க வேண்டும். இது, நாடாளுமன்றம், இந்த புண்ணிய பூமி மற்றும் வளர்ச்சிக்கான சூழலை ஏற்படுத்த ஒத்த கருத்துடைய மக்களின் பொறுப்பு ஆகும்.
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடைசி கமாண்டர் இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாக, இந்தியா என்பது ஏராளமான நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கண்டம் என்றும், எந்த சக்தியாலும், எப்போதும் இதனை ஒன்றுபட்ட நாடாக மாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். ஆனால், இந்தியர்கள் இந்த சந்தேகங்கள் மற்றும் கணிப்புகளை தவிடுபொடியாக்கிவிட்டனர். அத்துடன், அத்தகைய சந்தேக மனதுடன் இருந்தவர்களின் கதவுகளையும் நாம் அடைத்துவிட்டோம். நமது மறுமலர்ச்சி, கலாச்சார ஒற்றுமை மற்றும் பாரம்பரியங்கள் மூலம், தற்போது நாம் ஒருங்கிணைந்த தேசமாகவே இருந்து, உலகில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதன் வாயிலாக, உலகிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறோம். நமது 75 ஆண்டுகாலப் பயணத்தில் இந்த நிலையை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மாய ஜனநாயகம் என்று பலர் கூறிவந்தனர். இந்தக் கருத்தையும் சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டோம். ஜனநாயகம் என்பது நமது டி.என்.ஏ.வில் ஊறிப்போனது என்பதோடு, ஒவ்வொரு நாடித்துடிப்பும் இதே உணர்வுடன் தான் துடிக்கிறது. ஜனநாயக உணர்வு என்பது நமது எண்ணம், முன்முயற்சி மற்றும் அனைத்து முயற்சிகளிலும் ஒன்றிவிட்டதாகும். நாட்டில் பல்வேறு தேர்தல்கள் நடைபெற்று, ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இந்த உணர்வை நாம் நிலைநாட்டி, ஒருங்கிணைத்துள்ளோம். எந்தவொரு புதிய ஆட்சியையும், இந்த நாடு முழுமனதோடு ஏற்று முன்னேற்றமடையச் செய்து வருகிறது.
இது 75 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நம் நாடு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளதால், நமது ஜனநாயகப் பண்புகளை போற்றி வருகிறோம். நம் நாடு, 100-க்கும் மேற்பட்ட மொழிகள், பேச்சுவழக்குகள், தோற்றம் மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டதாக உள்ள போதிலும், இன்றளவும் நாம் ஒன்றுபட்ட குறிக்கோளுடன், பொதுவான தடத்தில் பயணித்து இந்த சாதனையைப் படைத்துள்ளோம். தற்போது நாம் இந்தியாவைப் பற்றிப் பேசும் வேளையில், சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகளை நினைவுகூற நான் விரும்புகிறேன். “ஒவ்வொரு தேசமும் தெரிவிக்க விரும்பும் கருத்து, நிறைவேற்ற வேண்டிய பணி, அடைய வேண்டிய இலக்கு“ ஒன்று இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். கொரோனா பரவிய காலத்தில், உள்நாட்டில் அந்த நிலைமையை சிறப்பாகக் கையாண்ட விதம் நமக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உதவியது, நமக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. வேதங்கள் முதல் விவேகானந்தர் வரை தெரிவித்துள்ள உணர்வுகளோடு ஒன்றிப்போனவர்களாக, நாம் வளர்ந்திருக்கிறோம்.
सर्वे भवन्तु सुखिन:। ये सर्वे भवन्तु सुखिन:। सर्वे संतु निरामया। ie., அதாவது, “அனைத்து உணர்வுள்ள மனிதர்களும் நிம்மதியாக இருக்கட்டும், யாரும் நோய்வாய்ப்படக் கூடாது“ என்பதே அது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா நடந்துகொண்டது. இந்தியாவை, நம்பகமான, சுயசார்பு உடைய தேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, இந்த நாடும், குடிமக்களும் மேற்கொண்டுள்ளனர்.
2-ம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, ஒருபுறம் ஒவ்வொரு நாடும் அமைதி பற்றிப் பேசத் தொடங்கினாலும், வல்லமை உள்ள ஒவ்வொரு நாடும் , அமைதி பற்றிப் பேசிக்கொண்டே, தங்களது ராணுவக் கட்டமைப்புகளை அதிகரிக்கத் தொடங்கின. ஐ.நா. சபை அமைக்கப்பட்ட பிறகு, அவர்களது ராணுவ வல்லமையை பன்மடங்கு அதிகரித்துள்ளன. உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில், நாம் வெறும் பார்வையாளராக இருக்க வேண்டுமா அல்லது, புதிய உலகிற்கேற்ப ஒத்துப்போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றை பின்பற்ற வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்தாக வேண்டும். அந்த காலகட்டம் இந்தியாவிற்கு உகந்ததாக இருந்ததா? ஆனால், கொரோனாவிற்குப் பிறகு தற்போது அந்த நிலை மாறி, தவிர்க்க முடியாத இடத்தை இந்தியா பிடித்துவிட்டது. புதிய உலகில் இந்தியா தாமாகவே வலுப்படுத்திக் கொள்வதோடு, சுயசார்பு அடையும். இதற்கான விடை தான் சுயசார்பு இந்தியா. மருந்துத் துறையில் நாம் ஏற்கனவே சுயசார்பு நிலையை எட்டிவிட்டோம். உலக நலனில் முக்கியப் பங்காற்றி வருகிறோம். மேலும் சுயசார்பு மற்றும் தகுதிமிக்க இந்தியா உருவாகும்போது, மனிதகுல நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் பாடுபடுவதில் மேலும் முக்கியப் பங்கு வகிக்கும். நாம் அனைவரும், सर्वे भवन्तु सुखिनः (அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழட்டும்) என்ற மந்திரத்தை நமது உதிரத்திலேயே பெற்றுள்ளோம். எனவே தான், சுயசார்பு இந்தியாவை உருவாக்க வலுவான குரலில் அழைப்பு விடுத்துள்ளோம். இது, எந்தவொரு அரசியல்வாதி அல்லது அரசாங்கத்தின் குரல் மட்டுமல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். தற்போது, “உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுப்போம்“ என்ற முழக்கம் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் எதிரொலிக்கிறது. அடுத்து நாம் கை வைக்கும் ஒவ்வொரு பொருளும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதாக இருப்பதைக் காண்பது பெருமிதம் அளிக்கும். இதுபோன்ற சுய கவுரவ உணர்வு, சுயசார்பு இந்தியாவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, நமது எண்ணம், நமது கொள்கைகள், நமது முடிவுகள் அனைத்தும், இந்தியாவை சுயசார்பு நாடாக மாற்றுவதற்குத் தேவையானவையாக இருக்க வேண்டும். இது தான் எனது கருத்து.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
நெருக்கடியான இந்த காலகட்டத்திலும், நாம் பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். அதே நோக்கத்துடன் தொடர்ந்து நடைபோடுவதுடன் இந்தியாவைப் போன்ற ஒரு பொருளாதாரத்தை உருவாக்கவும் மீண்டும் பயன்படுத்தவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நாம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த தொடங்கியதிலிருந்து, டிராக்டர்கள் மற்றும் வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள், நமது பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிக்கும். இந்தியப் பொருளாதாரம் பெரும் உற்சாகம் அளிக்கக் கூடியதாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்படுமென உலகம் முழுவதும் உள்ள நிபுனர்கள் கூறிவருகின்றனர். பெருந்தொற்று காலத்திலும், நாடு வளர்ச்சி அடைந்ததுடன், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறோம் என்று நான் நம்புகிறேன்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
கொரோனா காலகட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை நாம் அறிமுகப்படுத்தினோம். இந்த வேளாண் சீர்திருத்தங்கள், காலத்தின் கட்டாயம் என்பதோடு, வேளாண்துறை பன்னெடுங்காலமாக சந்தித்து வரும் சவால்களுக்குத் தீர்வுகாணவும் அவசியமாகும். வேளாண் துறைக்கு புத்துயிரூட்ட, உறுதியான முயற்சிகளை அயராது மேற்கொள்ள வேண்டும். இதற்காக நாம், நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வேளாண் துறையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடியவை என, பிரபல வேளாண் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்ட சவால்களுக்கு, போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இது நானாகக் கூறியவை அல்ல. எனவேதான், நாம் தாமதமின்றி முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இங்கு நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சி, குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர்கள் கூறிய கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன், அவர்கள் சட்டத்தின் நிறம் கறுப்பா அல்லது வெள்ளையா என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். மாறாக, சட்டத்தின் நோக்கம் மற்றும் சாராம்சங்கள் பற்றி விவாதித்திருந்தால், நாட்டிலுள்ள விவசாயிகள் தெளிவான நிலையை அறிந்து கொண்டிருப்பார்கள்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
போராடிவரும் விவசாய நண்பர்களின் உணர்வுகளை இந்த அவையும், இந்த அரசும் தொடர்ந்து மதித்து வருகின்றன. எனவே தான், விவசாயிகள், பஞ்சாபில் போராட்டம் தொடங்கியதிலிருந்தே, அரசின் சார்பில் மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதத்திலும், அவர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மூன்று சட்டங்களும், அவசரச் சட்டம் மூலமாகவே அமல்படுத்தப்பட்டன. பின்னர் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டத்தை அமல்படுத்திய பிறகு, நாட்டில் உள்ள எந்த மண்டியும்(சந்தையும்) மூடப்படவில்லை, அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயமும் நிறுத்தப்படவிலை. இந்த உண்மையைப் பற்றி நாம் பேசுவதில்லை. இது அர்த்தமற்றது. அத்தோடு மட்டுமல்லாமல், குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கொள்முதல் அதிகரித்துள்ளது, உண்மையில் சொல்ல வேண்டுமானால், புதிய சட்டங்கள் வந்த பிறகுதான் கொள்முதல் அதிகரித்துள்ளது.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
யாரும் கேட்காமலேயே, வளர்ந்து வரும் நாட்டிற்கு அவசியம் என்பதால் தான், முத்தலாக் தடைச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைத் திருமண முறைகேடுகளைத் தடுத்தாக வேண்டும் என்பதால் தான், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க சட்டம் கொண்டுவர நேரிட்டது. ஒரு நாடு முன்னேறவும், வளம் பெறவும் அதுபோன்ற சட்டங்கள் தேவை. பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சம உரிமை வேண்டுமென்று யாராவது கோரிக்கை விடுத்தார்களா? அல்லது கல்வி உரிமைச் சட்டத்தை கோரினார்களா? ஆனால், அதுபோன்ற சீர்திருத்தங்கள் மற்றும் சட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் அவசியம் தேவை. நாட்டில் இதற்குமுன், இந்தளவிற்கு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டிருக்கிறோமா? உலகம் இதை அறிந்திருந்தாலும், இதைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத் திட்டம் குறித்து, தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். 2014-ம் ஆண்டிற்குப் பிறகு, எனது பதவிக் காலத்தில், சில தொழிலாளர்கள், ரூ.7, அல்லது ரூ.25 அல்லது ரூ.50 அல்லது ரூ.250 என, மிகக் குறைந்த தொகையை ஓய்வூதியமாகப் பெற்று வருவது, பலநேரங்களில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது, நம் நாட்டில் நடைமுறையில் இருந்த ஒன்று. இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக, அவர்கள் அலுவலகத்திற்குச் செல்வதற்கு செலவிடும் ஆட்டோ கட்டணம் இதைவிட அதிகமாக உள்ளதை உணர்ந்தேன். அவைத் தலைவர் அவர்களே, இதுகுறித்து என்னிடம் யாரும் கோரிக்கை வைக்கவும் இல்லை, அல்லது எந்தவொரு தொழிற்சங்கத்திடமிருந்தும் மனு ஏதும் வரப்பெறவும் இல்லை. நாங்களாகத்தான் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 கிடைப்பதற்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். யாரும் வேண்டுகோள் விடுத்து, இந்த முடிவை எடுக்கவில்லை. சிறு விவசாயிகளின் நலனுக்காக, குறைந்தபட்ச நிதி உதவி தேவை என்று எந்தவொரு விவசாய சங்கமும் என்னை இதுவரை அணுகியதில்லை. இருந்தாலும், பிரதமரின் விவசாயிகள் ஆதரவு நிதியுதவித் திட்டம் (பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்) மூலம் அவர்களுக்கு நிதியுதவி உத்தரவாதத்தை நாங்கள் அளித்துள்ளோம்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
எந்தவொரு நாகரீக சமுதாயத்திற்கும் மாற்றம் மிகவும் அவசியம். அந்தக்காலத்தில் போராட்டங்கள் எவ்வாறு நடைபெற்றது என்பதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால், ராஜா ராம்மோகன் ராய், ஈஷ்வர் சந்த் வித்யாசாகர், ஜோதிபா பூலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் அவர்களைப் போன்ற பல்வேறு புரட்சியாளர்கள், பல்வேறு சம்பவங்களுக்கு எதிராகப் போராடி, பல்வேறு சமூக சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்துள்ளனர். தற்போது வழக்கத்தில் உள்ள நடைமுறையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், தொடக்கத்தில் அதற்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். பின்னர், அதன் பின்னணியில் உள்ள உண்மையை உணரும்போது, வெகுசீக்கிரத்திலேயே அவர்கள் புதிய நடைமுறையை ஏற்றுக் கொண்டு விடுவார்கள்.
இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதால், சில முடிவுகளை மேற்கொள்ளும்போது, ஒட்டுமொத்த நாடும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் என்பது ஏறத்தாழ சாத்தியமற்றது தான். இந்த நாடு பன்முகத்தன்மை அதிகமுள்ள நாடு. சில பகுதிகளில் அதிக பலனளிக்கக் கூடிய ஒரு சட்டத்தால், வேறு சில பகுதிகளில் குறைவான பலனே கிடைக்கக் கூடும் என்பதோடு, சில இடங்களில் ஏற்கனவே கிடைத்துவந்த சலுகையும் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. அதிகம் பேருக்கு பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, “sarvjan hitaye, sarvjan sukhaye” என்ற, சமூக நலன் கருதி அனைத்து முடிவுகளும் அனைவரையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படுகிறது, என நாங்கள் நம்புகிறோம்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
ஆயுஷ்மான் பாரத் திட்டம் வேண்டுமென்று இந்தியக் குடிமக்கள் யாரும் கேட்கவில்லை, ஆனால், மருத்துவப் பிரச்சினைகளிருந்து ஏழை மக்களைப் பாதுகாக்க அது தேவை என்பதை நாங்களாகவே உணர்ந்துதான் கொண்டுவந்தோம். நாட்டு மக்கள் யாரும் தங்களுக்கு வங்கிக் கணக்கு வேண்டுமென போராட்டம் நடத்தவும் இல்லை, கோரிக்கை மனு கொடுக்கவும் இல்லை. நாங்களாகத்தான் ஜன்தன் திட்டத்தை அறிவித்து, அதன்மூலம், அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.
தூய்மை இந்தியா வேண்டுமென யாராவது கேட்டார்களா? நாடு தாமாக முன்வந்து தான் தூய்மை இந்தியா இயக்கத்தை ஏற்றுக் கொண்டு, அதனை முன்னெடுத்துச் செல்கிறது. தங்களது வீடுகளில் கழிப்பறை கட்டித்தர வேண்டுமென யாராவது எங்களிடம் கேட்டார்களா… இல்லை, நாங்களாகவே இத்திட்டத்தை முன்னெடுத்து, 10 கோடி வீடுகளில் நவீன கழிப்பறைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்தோம். இது ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. நமது மக்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளை நாங்கள் உணர்ந்து தான், அவர்களது தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
தற்போதைய நிலையே தொடர நேரிட்டால், என்ன விளைவு ஏற்படும் என்பதை சித்தரிக்க, முற்கால நிகழ்வு ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன். இது, 40-50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கதை. இதை நான் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டது என்பதால், சரியான தேதி விவரங்கள் இல்லை. அப்போது நான் கேட்டதை, இப்போது நினைவுகூர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் அறுபதாம் ஆண்டு வாக்கில், மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த ஆணையம் ஒன்றை அமைத்துள்ளனர். அந்த ஆணையத்தின் தலைவருக்கு, ரகசியக் கடிதம் ஒன்று வரப்பெற்றது. அந்தக் கடிதத்திற்குள் கோரிக்கை மனு ஒன்று இருந்ததை அவர் கண்டறிந்தார். பல ஆண்டுகளாக நேர்மையாக உழைத்தும், தமக்கு எவ்வித சம்பள உயர்வும் கிடைக்கப் பெறாததால், கூடுதல் சம்பளம் கோரி அந்த நபர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அந்த நபரின் பெயர், பதவி விவரங்களைக் கேட்டு ஆணையத்தின் தலைவர் பதில் அனுப்பியுள்ளார். ஆனால், தாம் அமைச்சரவை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சிசிஏ-வாக பணியாற்றி வருவதாக மட்டும் மறுபடியும் எழுதியுள்ளார். சிசிஏ-வின் பணி விவரங்கள் பற்றி சரியான தகவல் கிடைக்காததால், அந்த ஊழியரின் பணி விவரங்களைக் கேட்டு, ஆணையத்தின் தலைவர் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்த அந்த ஊழியர் , நடத்தை விதிகளின்படி, ஆணையத்தின் தலைவர் கோரும் விவரங்களைத் தம்மால் தற்போதைய நிலையில் தெரிவிக்க முடியாது என்றும், 1975-ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த விவரங்களைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தம்மீது வருத்தப்படுவது ஏன் என ஆணையத்தின் தலைவர் பதில் அளித்துள்ளார். 1975-ம் ஆண்டுவரை செயல்பட்ட ஆணையத்தை சந்திக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். நிலைமை கைமீறிப் போய்விட்டதை உணர்ந்த அந்த ஊழியர், அதன்பிறகு விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்துள்ளார். தாம், தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில், சிசிஏ என்ற பதவியில் பல ஆண்டுகளாக இருப்பதாகவும், அதாவது சிசிஏ என்றால் சர்ச்சிலின் சிகரெட் உதவியாளர் என்று பொருள் என குறிப்பிட்டு பதில் அனுப்பியுள்ளார். உண்மை என்னவென்றால், 1940-ம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக சர்ச்சில் பதவியேற்றபோது, திருச்சியிலிருந்து அவருக்கு சுருட்டு வாங்கி அனுப்பப்பட்டு வந்துள்ளது, அதை வாங்கி அனுப்புவது தான் இந்த சிசிஏ-வின் வேலையாக இருந்துள்ளது. எனவே, திருச்சியிலிருந்து சுருட்டு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காக அந்தப் பதவி நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. 1945-ம் ஆண்டு தேர்தலில் சர்ச்சில் தோல்வியடைந்த பிறகும், அந்தப் பதவியும் தொடர்ந்துள்ளது, சுருட்டு அனுப்புவதும் நீடித்து வந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. அதன்பிறகும் அந்தப் பதவி நீடித்துள்ளது அவைத்தலைவர் அவர்களே. சர்ச்சிலுக்கு சுருட்டு அனுப்புவதை உறுதிசெய்யும் பொறுப்பு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் தொடர்ந்து வந்ததால், அந்த ஊழியர் நியாயப்படி தமக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கோரியுள்ளார்.
இப்போது கவனியுங்கள். ஏற்கனவே உள்ள நிலையே தொடர வேண்டும் என்பதன் விளைவு இப்படித்தான் அமையும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலை தொடர்வது பற்றி யாரும் கேள்வியே எழுப்பக் கூடாது, அந்த நடைமுறையை மாற்றியமைப்பது பற்றி பரிசீலிக்கவே கூடாது என்பதற்கு, மிகப்பெரிய உதாரணம் இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது.
நம் நாடு, வலிமையானது, எனவே, வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்போது, நமது அரசியல் சாசன நடைமுறைகள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இதை மனதிற்கொண்டே நாம் அனைவரும் பயணிக்கிறோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இடைத்தரகர் கலாச்சாரம் தற்போது ஒழிந்துவிட்டது என்பது தான் உண்மை. இந்த வளர்ச்சிப் பயணத்தில், நாட்டிலுள்ள நடுத்தர மக்கள் முக்கியப் பங்கு வகிக்க உள்ளனர். எனவே, தனது மேம்பாட்டிற்காக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இதற்காகத்தான், அனைத்து விதமான சட்டரீதியான கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
நாட்டில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான சூழலை ஏற்படுத்த, அரசு, நம்பிக்கையுடன் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சினையில், குடியரசுத்தலைவர், அவரது கருத்துக்களை தெளிவாக விளக்கிக் கூறியிருப்பதற்காக நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். அதேவேளையில், தேசிய செயல்திட்டத்தை மனதில்வைத்து நாம் பீடுநடை போடுகிறோம். அதனை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து, பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற நோக்கத்துடன், பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்த நாட்டின் விவசாயிகளுக்கு நான் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன். இந்த எதிர்பார்ப்போடு, நமது குடியரசுத்தலைவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகூறி, எனது உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி!