மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவர் அவர்களே,
மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு,ஹரிவன்ஷுக்கு ஒட்டுமொத்த அவையின் சார்பிலும் என் சார்பிலும் முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லியும் நலம்பெற்று நம்முடன் பங்கெடுத்துக் கொள்வதால், இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இன்று ஆகஸ்ட் 9ம் தேதி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆகஸ்ட் புரட்சி மிகவும் முக்கியமானதாகும். அதிலும் பாலியா முக்கியப் பங்கினை வகித்துள்ளது. விடுதலைப் போராட்ட காலத்தில் 1857ம் ஆண்டு முன்னணியில் இருந்த பாலியாவில் நடந்த புரட்சியில் பலர் உயிர்த் தியாகம் செய்தனர். மங்கள் பாண்டே, சித்து பாண்டே, முன்னாள் பிரதமர் திரு.சந்திரசேகர் ஆகியோரது வரிசையில் நமது ஹரிவன்ஷும் இடம்பெற்றுள்ளார்.
ஹரிவன்ஷ் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும் அண்மைக் காலம் வரையில் இந்த கிராமத்துடன் தொடர்பிலேயே இருந்தவர். ஜெயப்பிரகாசரின் கனவுகளைச் செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் இவர் அறங்காவலாரகப் பணியாற்றி வருகிறார்.
ஹரிவன்ஷ் சிறந்த பாரம்பரியத்திலிருந்து வந்தவர். வாரணாசியைச் சேர்ந்தவர் அவர் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. வாரணாசியில்தான் அவர் கல்வி கற்றார். பனாரசில்தான் எம்ஏ பொருளாதாரம் முடித்தவர். பின்னர் ரிசர்வ் வங்கி பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் அதை விரும்பாமல் குடும்பச் சூழல் காரணமாக தேசிய வங்கியில் இணைந்தார்.
தலைவர் அவர்களே,
அவர் ஐதராபாதில் முக்கியமான சமயங்களில் இரு ஆண்டுகள் பணியாற்றினார். அவ்வப்போது மும்பை, தில்லி ஆகிய நகரங்களிலும் பணி புரிந்தார். ஆனால், அந்த நகரங்களால் அவர் ஈர்க்கப்படவில்லை. ஆனால், “ரவிவார்” பத்திரிகையில் பணியாற்றுவதற்காக கொல்கத்தா சென்றார். அனைவரும் நன்கு அறிந்த தொலைக்காட்சி மூலம் புகழ் பெற்று விளங்கிய திரு. எஸ்.பி. சிங்குடன் இணைந்து ஹரிவன்ஷ் பணியாற்றினார். இதழாளராகப் பயிற்சி பெறும்போது, தரம்வீர் பாரதி இதழில் பணியாற்றி வந்தார். அங்குதான் தனது வாழ்க்கையை அவர் தொடங்கினார். அதையடுத்து “தரம் யுக்” இதழில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஹரிவன்ஷ். அவர் வகிக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கும் அவர் மதிப்பளித்து வந்துள்ளார். திரு. சந்திரசேகரிடம் பணியாற்றிய ஹரிவன்ஷ் எல்லா தகவல்களையும் அறிந்திருந்தார். சந்திரசேகர் அவர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போகிறார் என்ற தகவலையும் அவர் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார். அப்போது அவருக்குப் பல பத்திரிகைகளுடன் தொடர்பு இருந்தது. ஆனால், திரு.சந்திரசேகர் விலகப் போகிறார் என்பதை அவரது சொந்தப் பத்திரிகைக்கும் தெரிவிக்கவில்லை. தான் வகித்த பொறுப்புக்கு உரிய கண்ணியத்தை அவர் காத்து வந்துள்ளார். நல்ல விலை போகும் என்ற போதிலும் பத்திரிகையில் செய்தி வெளியாகாமல் ரகசியத்தைப் பேணிக் காத்தவர் அவர்.
ஹரிவன்ஷ் பீகாரில் ரவிவார் பத்திரிகையில் சேர்ந்தார். அப்போது பீகார் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் பின்னர்தான் உருவானது. அப்போது “பிரபாத் கபர்” என்ற பத்திரிகையில் சேருவதற்காக ராஞ்சி நகருக்குச் சென்றார். அப்போது அந்தப் பத்திரிகை 400 பிரதிகள்தான் விற்றது. வாழ்க்கையில் வங்கிப் பணி உள்பட பல வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், 400 பிரதிகள் மட்டுமே விற்பனை ஆன பத்திரிகையில் பணியாற்றவே அவர் விரும்பினார். அவரது நாற்பதாண்டு கால இதழியல் பணி காட்டிய திறமை சமூகப் பணிக்கே இருந்தது. வேறு செல்வாக்கு, அதிகாரத்துக்கும் இல்லை.
ஹரிவன்ஷ் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சமூகம் சார்ந்த இதழியலில் ஈடுபட்டதே காரணம் என்று நம்புகிறேன். அதிகார வர்க்கம் சார்ந்த இதழியலை விட்டு அவர் விலகியே இருந்தார்.
அவர் பத்திரிகையை சமூக இயக்கமாகவே நடத்தி வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்காக இன்னுயிரை நீத்த ஆல்பர்ட் எக்காவின் மறைவுக்குப் பிந்தைய பரம் வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. ஆனால், அவரது மனைவி வறுமையில் வாடினார். இது குறித்து செய்தி ஓர் இதழில் வெளியாகியிருந்தது. உடனே, ஹரிவன்ஷ் நிதி திரட்டி, ரூ. நான்கு லட்சத்தை மறைந்த ஆல்பர்ட் எக்காவின் மனைவிக்கு அளித்து உதவிக் கரம் கொடுத்தார்.
இன்னொரு சம்பவம். சமூகத்தில் மதிப்பு மிக்க ஒருவரை நக்சல்கள் கடத்திச் சென்றுவிட்டனர். தனது பத்திரிகையின் மூலம் கடத்திய நக்சல்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டினார். துணிச்சலோடு நக்சல்களை நேரில் சந்தித்தார். உயிரைப் பணயம் வைத்து, அவர்களுடன் விவாதித்து, அந்த நபரை மீட்டார். இப்படி சாதனை நிகழ்த்தியவர்.
ஹரிவன்ஷ் நிறைய படிப்பவர். நிறைய நூல்களையும் படைத்தவர். அவருக்கு பத்திரிகை நடத்துவதும் பத்திரிகையாளர்களை மேற்பார்வையிட்டு நடத்துவதும் எளிதாகத்தான் இருந்திருக்கும் என நம்புகிறேன். ஆனால், சமூக நன்மை, சமூகப் பணிக்காக பத்திரிகை நடத்துவது வேறு. அதிகார வர்க்கத்துக்காக பத்திரிகை நடத்துவது வேறு.
நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வெற்றிகரமாகப் பணிகளை நிறைவேற்றியிருக்கிறீர்கள். எனினும், பெரும்பாலும், களத்தில் விளையாடும் வீரர்களை விட நடுவர்களாக இருப்போர்தான் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொருவரையும் விதிப்படி செயல்படும்படி நடத்துவது மிகப் பெரிய சவாலாகும். எனினும், ஹரிவன்ஷ் அவர்கள் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார்.
ஹரிவன்ஷ் அவர்களின் மனைவி திருமதி ஆஷா பீகார் மாநிலம் சம்பாரன் என்ற ஊரைச் சேர்ந்தவர். குடும்பத்தினர் அனைவரும் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயண், மகாத்மா காந்திஜியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர்கள். ஆஷாவும் எம்.ஏ. அரசியல் படித்தவர். அவரது கல்வியறிவு ஹரிவன்ஷிக்குப் பயன்படும்.
இனிமேல், அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஹரியின் (கடவுளின்) கடாட்சம் தேவைப்படுகிறது. ஹரியைத்தான் அனைவரும் நம்பியிருக்கவேண்டும். ஆளும் கட்சியினரோ எதிர்க்கட்சியினரோ அனைத்து உறுப்பினர்களும் உங்களது (ஹரிவன்ஷ்) ஆதரவைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
மாநிலங்களவைத் துணைத் தலைவருக்கான இந்தத் தேர்தல் இரு தரப்பினரின் பெயர்களிலும் ஹரி என்பது உள்ளது. போட்டியிட்ட மற்றவர் பெயர் பி.கே. ஹரி பிரசாத். ஜனநாயகத்தின் கண்ணியத்தைக் கடைப்பிடித்ததற்காக, பி.கே. ஹரிபிரசாதையும் பாராட்டுகிறேன். எல்லோருக்கும் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தாலும், ஜனநாயகக் கடமைக்காக தேர்தலில் ஈடுபட்டனர். எனவே, புதிதாக உறுப்பினர்களாக வந்திருக்கும் பலருக்கு வாக்களிப்பதில் பயிற்சி கிடைத்துள்ளது.
இந்த துணைத் தேர்தல் நடைமுறையைச் சுமுகமாக எடுத்துச் சென்று நிறைவேற்றியதற்காக அனைவருக்கும், மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகத்துக்கான புதிய துணைத் தலைவரின் அனுபவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
ஹரிவன்ஷ் விஷயத்தில் எல்லாம் புதுமை, அவர் தனது நாளேட்டில் ‘எத்தகைய எம்.பி. நமக்கு வேண்டும்?’ என்ற தலைப்பில் ஒரு தொடரை தொடங்கியிருக்கிறார். ஆனால், பிற்காலத்தில் தானும் எம்.பி. பதவிக்கு வருவோம் என்று அவர் அப்போது நினைத்திருக்க மாட்டார். அதே சமயம் நமக்கு எப்படிப்பட்ட எம்.பி. வேண்டும் என்று பெரிய பிரசாரத்தையே நடத்தியிருக்கிறார். அவர் தனது (கட்டுரைகளில் குறிப்பிட்ட) கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை இப்போது பெற்றிருக்கிறார். அதே சமயம் நம்மைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தசரத் மான்ஜி என்ற சமூக ஆர்வலரைப் பற்றி இப்போது எல்லோரும் அறிந்து கொண்டிருக்கிறோம். பேசுகிறோம். ஆனால், அவரைத் தனது பத்திரிகைச் செய்தி மூலமாகக் கண்டுபிடித்து, உலகக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஹரிவன்ஷ்தான்!
எனவே, சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களுடன் தொடர்புள்ள சிறந்த மனிதரால் இன்று வழிகாட்டப்படப் போகிறோம்.
அத்தகைய மனிதரை நான் மனமார அவரைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.