இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள துர்கா ஜஸ்ராஜ் அவர்களே, சாரங் தேவ் பண்டிட் அவர்களே, பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளையின் இணை நிறுவனர் நீரஜ் ஜெட்லி அவர்களே, நாட்டின் பல பகுதியிலிருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் கலந்து கொண்டிருக்கும் இசை கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!
இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் இசையின் பெருமையை நமக்கு வழங்கியுள்ளார்..அவரது பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூர்வது அவரது நித்தியமான இசை ஆளுமைக்கு செலுத்தும் மரியாதையாகும். இந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பது பாராட்டத்தக்கது.
நண்பர்களே, இந்திய இசைப் பாரம்பரியம் வல்லுனர்கள் வெளியிட்ட விசாலமான ஞானத்தைக் கொண்டதாகும். இசையின் மகத்துவத்தை உணரும் ஆற்றல் மூலம், இந்தியாவின் சாஸ்திரிய இசைப் பாரம்பரியத்தின் சிறப்பை உணர முடியும். இசை நமது உலகளாவிய கடமைகளைத் தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்கவும் உதவுகிறது.
இந்தியாவின் மிக வளமான கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை பண்டிட் ஜஸ்ராஜ் அறக்கட்டளை லட்சியமாக கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்ப யுகத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்து அறக்கட்டளை கவனம் செலுத்த வேண்டும். முதலாவதாக இந்திய இசை உலகமயமாக்கல் சூழலில் அதன் அடையாளத்தை பதிக்க வேண்டும். யோகா தினத்தின் அனுபவம் இந்திய பாரம்பரியத்திலிருந்து உலகம் பயனடைந்ததை உணர்த்துகிறத. இந்திய இசையும், மனித மனத்தின் ஆழம் வரை சென்றடையும் திறனைக் கொண்டுள்ளது. உலகின் ஒவ்வொரு மனிதரும் இந்திய இசையைப் பற்றி தெரிந்து கொள்ளவும், கற்கவும் அதன் பலன்களைப் பெறவும் உரிமையுடையவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது நமது பொறுப்பாகும்.
இரண்டாவதாக அனைத்து இடங்களிலும் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய யுகத்தில் இசைத் துறையிலும், தொழில்நுட்ப, தகவல் தொழில்நுட்பப் புரட்சி அவசியமாகும். இசைக்காக தங்களை அர்ப்பணித்துள்ள ஸ்டாட் அப்-கள் இந்திய இசைக்கருவிகள் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும். காசியைப் போல கலை, கலாச்சார மையங்களை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கையை நேசிக்கும் தன்மையில் இந்தியா வைத்துள்ள நம்பிக்கையை உலகிற்கு உணர்த்தியுள்ளது. பாரம்பரியத்துடன் கூடிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அனைவருக்குமான முயற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.
உங்கள் அனைவரது சீரிய பங்களிப்பு மூலம், பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை வெற்றியின் புதிய உச்சத்தைத் தொடும் என நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு .மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது