நண்பர்களே,
தேர்தலுக்குப் பின்னரும், புதிய மக்களவை அமைக்கப்பட்ட பின்னருமான முதலாவது அமர்வு இதுவாகும். புதிய உறுப்பினர்களுடன் அறிமுகம் ஆவதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். புதிய உறுப்பினர்கள் இணையும் போது புதிய விருப்பங்களும், புதிய ஆர்வமும், புதிய கனவுகளும் அவர்களுடன் இணைந்து கொள்கின்றன. இந்திய ஜனநாயகம் சிறப்பாக எதனைச் செய்துள்ளது? ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்திய ஜனநாயகத்தில் சிறப்பு அம்சங்களையும், பலத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதையும், நாடு விடுதலை அடைந்த பின், அதிக எண்ணிக்கையில் பெண் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதையும் நாம் காண்கிறோம். முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடும் போது, இந்த முறை பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தல் முக்கியமான பல அம்சங்களால் நிறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின், அறுதிப் பெரும்பான்மையுடன் முன்பிருந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான இடங்களோடு தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவையின் கூட்டத்தொடர் எப்போதெல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையில் நடைபெற்றதோ, அப்போது நாட்டின் நலனுக்காக முடிவுகள் எடுத்து நன்றாக செயல்படவும் செய்தது என்பதைக் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த அனுபவங்களின் அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க வாதங்களையும், விவாதங்களையும் முன்வைக்க வேண்டும், இயன்ற நல்வழியில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
“அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம்” என்பதில் நாம் பயணத்தைத் தொடங்கினோம். ஆனால், “அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம்” என்பதோடு, விஸ்வாசம் அல்லது நம்பிக்கை என்பதை வியத்தகு வகையில் நாட்டு மக்கள் சேர்த்துள்ளனர். இந்த நம்பிக்கையோடு சாமானிய மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்ற நிச்சயம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்வோம்.
ஜனநாயகத்தில் ஆத்திரமூட்டும் எதிர்க்கட்சி என்பது தற்போது முன்நிபந்தனையாகிவிட்டது. இப்போது எதிர்க்கட்சி எண்ணிக்கையைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். சில குறிப்பிட்ட எண்களை மக்கள் அவர்களுக்குத் தந்துள்ளனர். ஆனால், நம்மைப் பொறுத்தவரை அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும், உணர்வும் மதிப்புமிக்கவை. அதிகாரத்தில் இருப்பவர் யார், எதிர் வரிசையில் இருப்பவர் யார் என்பதைவிட, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த நாற்காலியில் அமர்ந்து அவைக்குள் இருக்கும் போது நடுநிலை உணர்வு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். விரோத எண்ணத்தை விட்டொழித்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பாரபட்சமின்றி மக்கள் நலனுக்குப் பணியாற்றுவதன் மூலம் இந்த அவையின் கண்ணியத்தைக் காக்க நாம் முயற்சி செய்வோம். நாடாளுமன்றம் முன்பைவிட அதிக அளவில் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பொது நலனுக்காக அதிக ஆர்வத்துடனும், விரைவாகவும் சிறந்த கூட்டுச் சிந்தனையுடனும் பணியாற்றும் வாய்ப்பை நாம் பெறுவோம்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த உங்களிடமிருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். அதேசமயம், இந்த உணர்வை வலுப்படுத்த வரும் ஐந்தாண்டுகளில் நீங்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்ய வேண்டும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக பங்களித்து, ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பரவச் செய்தால், அனைவரும் ஆக்கப்பூர்வ செயலுக்கு ஆட்பட்டுவிடுவார்கள். எனவே, 17-வது மக்களவை காலத்தில் புதிய ஆர்வத்துடனும், புதிய நம்பிக்கையுடனும், புதிய தீர்மானத்துடனும், புதிய கனவுகளுடனும் ஒருங்கிணைந்து முன்னேற உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சாமானிய மக்களின் விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.