வணக்கம்!
மெலின்டா மற்றும் பில் கேட்ஸ், மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், உலகெங்கும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், புதுமை சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நண்பர்களே, 16வது மாபெரும் சவால்கள் குறித்த வருடாந்திர கூட்டத்தில் உங்களுடன் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் கூட்டம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சூழ்நிலைகள் மாறியதை அடுத்து மெய்நிகர் நிகழ்வாக நடத்தப்படுகிறது. உலக அளவிலான பெருந்தொற்று நம்மைப் பிரிக்க முடியாது என்ற அளவிற்கு தொழில்நுட்பத்தின் சக்தி வளர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறுகிறது. மாபெரும் சவால்கள் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களின் உறுதியான செயல்பாட்டை இது காட்டுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைப்பு செய்தல் மற்றும் புதுமை சிந்தனையின் உறுதியை இது காட்டுகிறது.
நண்பர்களே,
அறிவியல் மற்றும் புதுமைச் சிந்தனைகளில் முதலீடு செய்யும் சமூகங்கள் தான் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்றன. ஆனால், இதை குறுகிய காலக் கண்ணோட்டத்தில் செய்துவிட முடியாது. மிகவும் முன்னதாகவே அறிவியல் மற்றும் புதுமைச் சிந்தனைகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் உரிய காலத்தில் அதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதேபோல, கூட்டு முயற்சி மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடியதாக புதுமைச் சிந்தனை படைப்புகளுக்கான பயணம் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அறிவியல் ஒருபோதும் மிளிர முடியாது. இந்த நெறிகளை மாபெரும் சவால்கள் நிகழ்ச்சி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பரந்த அளவில் நடத்தப்படுவது பாராட்டுக்கு உரியது.
கடந்த 15 ஆண்டுகளில் உலக அளவில் பல நாடுகளுடன் இணைந்து நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த விஷயங்களில் நீங்கள் செயல்பட்டிருக்கிறீர்கள். மருந்துகளுக்கு எதிராக நுண்கிருமிகளின் செயல்பாடு மாறுவது, மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கியம், வேளாண்மை, சத்துணவு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் ஆரோக்கியம் என பல்வேறு துறைகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உலக அளவில் திறமைகளை நீங்கள் ஒருங்கிணைத்திருக்கிறீர்கள். இன்னும் பல வரவேற்புக்குரிய புதுமை சிந்தனை படைப்புகளும் இருக்கின்றன.
நண்பர்களே,
குழுவாக சேர்ந்து பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை, இந்தப் பெருந்தொற்று சூழ்நிலை நமக்கு உணர்த்தியுள்ளது. நோய்களுக்கு பூகோள எல்லைகள் கிடையாது. நம்பிக்கை, இனம், பாலினம் அல்லது நிறங்களின் வேறுபாடு இல்லாமல் அனைவரையும் நோய்கள் தாக்கும். நோய்கள் என்று சொல்லும்போது, இப்போதைய பெருந்தொற்றை மட்டும் நான் குறிப்பிடவில்லை. மக்களை, குறிப்பாக இளைஞர்களைப் பாதிக்கக் கூடிய தொற்றும் தன்மை உள்ள மற்றும் தொற்றும் தன்மை இல்லாத பல நோய்கள் உள்ளன.
நண்பர்களே,
இந்தியாவில் பலமான, துடிப்பான விஞ்ஞானிகள் சமுதாயம் இருக்கிறது. மிகச் சிறந்த அறிவியல் ஆய்வு நிலையங்களும் எங்களிடம் இருக்கின்றன. அவை இந்தியாவின் மிகப் பெரிய சொத்துகளாக உள்ளன. குறிப்பாக, கோவிட்-19 நோய்க்கு எதிரான செயல்பாடுகளில் கடந்த சில மாதங்களில் சிறப்பான சொத்துகளாக உள்ளன. நோய்க் கட்டுப்பாடு முதல், திறன் வளர்ப்பு வரை இந்த நிறுவனங்கள் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளன.
நண்பர்களே,
இந்தியாவின் பரப்பு, பன்முகத்தன்மை மற்றும் அளவீடுகள் எப்போதும் உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்து வருகிறது. அமெரிக்க மக்கள் தொகையைவிட எங்களுடைய நாடு நான்கு மடங்கு அதிகமானது. எங்களுடைய பல மாநிலங்களின் மக்கள் தொகை ஐரோப்பிய நாடுகள் அளவிற்கு உள்ளன. இருந்தாலும், மக்களின் சக்தியால், மக்களால் முன்னெடுக்கப்பட்ட அணுகுமுறை காரணமாக, கோவிட்-19 நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவுக்கே உள்ளது. இன்றைக்கு, ஒரு நாளில் நோய் பாதிப்பு ஏற்படுவோர் எண்ணிக்கையும், நோய் பாதிப்பு வளர்ச்சி விகிதமும் குறைந்து வருகின்றன. இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். இது அதிகபட்ச அளவாக உள்ளது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நூறு அளவில் இருந்தபோதே, சூழ்நிலைக்கேற்ற முடக்கநிலையை அமல் செய்த முதலாவது வரிசை நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. முகக்கவச உறையைப் பயன்படுத்துவதை வலியுறுத்திய நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. குறைந்த செலவில் தடமறியும் நுட்பங்களை உருவாக்குவதற்கு இந்தியா தீவிரமாக முயற்சிகளைத் தொடங்கியது. துரித ஆன்டிஜென் பரிசோதனைகளை ஆரம்பத்திலேயே பயன்படுத்திய நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. கிரிஸ்பர் (CRISPR) மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் புதுமை செய்த நாடாகவும் இந்தியா இருக்கிறது.
நண்பர்களே,
கோவிட் நோய் பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா இப்போது முன்னணியில் உள்ளது. எங்கள் நாட்டில் 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு தடுப்பு மருந்துகள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில் 3 மருந்துகளின் பரிசோதனைகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றன. நாங்கள் இத்துடன் நிற்கப் போவதில்லை. தடுப்பு மருந்து போடுவதில் நல்லதொரு நடைமுறை இந்தியாவில் ஏற்கெனவே உள்ளது. எங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய டிஜிட்டல் ஹெல்த் அடையாளம் மற்றும் இந்த டிஜிட்டல் மயமான நெட்வொர்க் வசதிகளைப் பயன்படுத்துவோம்.
நண்பர்களே,
கோவிட் பாதிப்புக்கு அப்பாற்பட்டு, குறைந்த விலையில் தரமான மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கு இந்தியா நற்பெயர் பெற்றுள்ளது. உலக அளவில் தடுப்பூசிகள் போடுவதற்கான மருந்துகளில் 60 சதவீத மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப் படுகின்றன. எங்களுடைய இந்திரதனுஷ் நோய்த்தடுப்பு மருந்து திட்டத்தில், உள்நாட்டில் தயாரித்த ரோட்டாவைரஸ் தடுப்பூசி மருந்தையும் நாங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். நீண்டகால அடிப்படையில் பயன்கள் பெறுவதற்கு வலுவான பங்களிப்புகள் மூலம் வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இது உள்ளது. இந்தக் குறிப்பிட்ட முயற்சியில் கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவின் அனுபவம் மற்றும் ஆராய்ச்சித் திறமைகளுடன், உலக அளவில் ஆரோக்கியத்தைப் பேணும் முயற்சிகளின் கவனத்தை ஈர்க்கும் நாடாக இருப்போம். இந்தத் துறைகளில் மற்ற நாடுகள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவிகள் செய்ய நாங்கள் விரும்புகிறோம்.
நண்பர்களே,
கடந்த 6 ஆண்டுகளில் நல்ல ஆரோக்கிய பராமரிப்பு முறைகளை உருவாக்க நிறைய புதுமை சிந்தனை படைப்புகளை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். கழிவறை போன்ற விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தத்தை மேம்படுத்தி, நிறைய கழிவறைகளை கட்டியிருக்கிறோம். இது யாருக்கு அதிகமாக பயன் தரும்? ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள். இதனால் நோய்கள் பாதிப்பு குறைகிறது. அதிகமான பெண்களுக்கு இது உதவியாக உள்ளது.
நண்பர்களே,
எல்லா வீடுகளுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் அளிப்பதை இப்போது உறுதி செய்து வருகிறோம். இதனால் நோய் பாதிப்பு இன்னும் குறையும். நாங்கள் நிறைய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குகிறோம், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இவற்றை உருவாக்குகிறோம். இளைஞர்களுக்கு இதன் மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். நமது கிராமப் பகுதிகளுக்கு நல்ல ஆரோக்கிய வசதிகள் இதன் மூலம் கிடைக்கும். உலகில் மிகப் பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை நாங்கள் அமல் செய்து வருகிறோம், எல்லோருக்கும் இந்த வசதி கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
நண்பர்களே,
தனிப்பட்ட அதிகாரமளிப்பு மற்றும் கூட்டு நலன்களுக்காக கூட்டு முயற்சி என்ற உத்வேகத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம். கேட்ஸ் அறக்கட்டளையும், வேறு பல நிறுவனங்களும் அற்புதமாகச் செயல்பட்டு வருகின்றன. அடுத்த 3 நாட்களில் பயன்தரக் கூடிய, ஆக்கபூர்வமான விவாதங்களை நீங்கள் நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பெரும் சவால்கள் குறித்த இந்த நிகழ்ச்சியின் மூலம், ஊக்கம் தரும் வகையிலான புதிய தீர்வுகள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மனிதர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான முயற்சிகள் இதன் மூலம் உருவாகட்டும். பிரகாசமான எதிர்காலத்துக்கான சிந்தனையாளர்களாக நமது இளைஞர்களை உருவாக்கும் வாய்ப்புகள் தருவதாக இது அமையட்டும். என்னை அழைத்தமைக்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.