அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்களே, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் திரு பி.பி. சவுத்ரி அவர்களே,
இந்திய கம்பெனி செகரட்டரிகள் கல்வி நிலையத்தின் தலைவர் டாக்டர் ஷியாம் அகர்வால் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மதிப்புமிக்கவர்களே.
ஐ.சி.எஸ்.ஐ. இன்று பொன்விழாவைக் கொண்டாடுகிறது.இந்தக் கல்வி நிலையத்தின் செயல்பாடுகளில் தொடர்புடைய அனைவருக்கும் இந்த நிகழ்வை ஒட்டி எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 49 ஆண்டு காலமாக ஐ.சி.எஸ்.ஐ.-யின் பயணத்தில் அங்கமாக இருந்தவர்கள் மத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர்களைப் பாராட்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய நல்ல வாய்ப்பு. நாட்டில் உள்ள ஒவ்வொரு கம்பெனியும், இந்த நாட்டுச் சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்வதிலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதையும், இது பிரச்சினையாகாமல் இருப்பதையும் உறுதி செய்யக் கூடிய நிபுணர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்குக் கிடைத்த பெருமை. நாட்டின் கார்ப்பரேட் கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.
உங்கள் கல்வி நிலையத்தின் குறிக்கோள் – சத்யம் வதா, தர்மம் சரா – என்பதாகும். ஒருவர் உண்மையைப் பேச வேண்டும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அது கூறுகிறது. உங்களுடைய ஆலோசனைகள் சரியானதாக இருந்தாலும் அல்லது தவறானதாக இருந்தாலும் நாட்டின் கார்ப்பரேட் நிர்வாகத்தில் விளைவை அது ஏற்படுத்துகிறது.
நண்பர்களே, பல சமயங்களில், தங்களுக்கு வகுக்கப்பட்ட பாதையில் மக்கள் செல்லாமல் இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக யுதிஷ்டிரருக்கும், துரியோதனருக்கும் ஒரு குருதான் கல்வி கற்பித்தார். இருந்தபோதிலும், அவர்களுடைய செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக மாறுபட்டிருந்தது.
மகாபாரதத்தில், துரியோதனர் Janami Dharmam Na Cha Mei Pravittih, Janami Adharmam Na Cha Mei Nivrittih என்று கூறியதாக மேற்கோள் காட்டுகிறார்கள். “நேர்மையான செயல் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும், ஆனால் அந்தப் பாதையில் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. அநீதியான செயல் என்ன என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதில் இருந்து விலகி இருக்க எனக்கு விருப்பம் இல்லை” என்பது அதன் அர்த்தம்.
சத்யம் வதா, தர்மம் சரா என்ற இந்த வரிகளின் மூலம் இதுபோன்ற உங்கள் கல்வி நிலையம் மக்களுக்கு நன்மதிப்புகளை நினைவுபடுத்துகிறது. நாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை ஒரு நிறுவன செயல்பாடாக ஆக்குவதில் உங்கள் கல்வி நிலையம் ஒரு முக்கியமான பங்காற்றுகிறது.
சகோதர சகோதரிகளே, ஆச்சார்யார் சாணக்கியர் கூறியிருக்கிறார் :
ஏகன் ஷுஷ்கா விரிக்ஷேனா
த்யா மனேன் வான்ஹி நா;
தஹ்யதே டா வனம் சர்வம் குபுத்ரென் குலம் யதா.
`வனத்தில் காய்ந்து போன ஒரு மரம் தீ பிடித்தாலும், ஒட்டுமொத்த வனமே தீ பிடித்து எரியும். அதேபோல, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தாலும், குடும்பத்தின் ஒட்டுமொத்த நற்பெயருமே களங்கப்பட்டுவிடும்” என்பது இதன் அர்த்தம்.
நண்பர்களே, உரைகோள் நாட்டுக்கும் பொருந்தும். நாட்டில் உள்ள சிலர், அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். நேர்மையான நமது சமூக அமைப்பை பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். அதுபோன்ற சக்திகள் பொறுப்புக்கு வரும்போது அந்த நிறுவனங்களையும், செயல்முறையையும் சுத்தப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
அரசு பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சரவையின் முதலாவது முடிவின்படி – சிறப்புப் புலனாய்வுக் குழு – SIT அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பாக உச்ச நீதிமன்றம் இந்த யோசனையைத் தெரிவித்திருக்கிறது.
- வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க கருப்புப் பணச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
- பல நாடுகளுடன் வரி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. முன்பிருந்த வரி ஒப்பந்தங்கள் திருத்தப்பட்டன. அந்த நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு புதிய வழிமுறைகள் கண்டறியப் பட்டுள்ளன.
- திவால் அறிவிப்புக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
- 28 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பினாமி சொத்துகள் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.
- பல ஆண்டுகளாக தடைபட்டுக் கிடந்த சரக்கு மற்றும் எளிய வரி – GST – அமல்படுத்தப் பட்டுள்ளது.
- பண மதிப்பு நீக்கம் என்ற முடிவை தைரியமாக எடுத்தது இந்த அரசுதான்.
- சகோதர சகோதரிகளே, நிறுவன நேர்மையை நாட்டில் பலப்படுத்துவதற்காக இந்த அரசு பாடுபடுகிறது. இந்த அரசு மட்டும் மேற்கொண்டுள்ள அயராத கடின உழைப்பின் பலனாக, குறைவான ரொக்கம் கொண்ட பொருளாதாரத்தை நாம் கொண்டிருக்கிறோம். இந்திய வரலாற்றில் ஊழல் இல்லாத செயல்பாட்டின் தொடக்க நாளாக 2016 நவம்பர் 9 ஆம் தேதி நினைவில் வைக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஜி.டி.பி.க்கு எதிரான ரொக்க விகிதம் 9 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2016 நவம்பர் 8 க்கு முன்பு இது 12 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தில், நாட்டில் நேர்மை என்ற புதிய காலக்கட்டம் வராதிருந்தால் இது சாத்தியமாகி இருக்குமா? கருப்புப் பணத்தை முன்னர் எவ்வாறு எளிதில் மாற்ற முடிந்தது என்பதை உங்களைவிட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு கருப்புப் பணம் பதுக்குவோர் அதற்கு முன்பு குறைந்தபட்சம் 50 முறைகள் யோசிக்க வேண்டியிருக்கிறது.
- நண்பர்களே, மகாபாரதத்தில் சல்லியன் என்ற ஒரு பாத்திரமும் உண்டு. கர்ணனின் தேருக்கு சாரதியாக இருந்தவர் சல்லியன். அதேசமயத்தில் அர்ஜுனனுக்கு தேர்ச் சாரதியாக இருந்தது கிருஷ்ணன். சல்லியன் என்ற இந்தச் சாரதி போர்க்களத்தில் உள்ளவர்களின் ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து பேசிக் கொண்டு, மனக் கசப்பை பரப்பிக் கொண்டிருந்தார். உனக்கு தைரியமில்லை, உன்னுடைய குதிரைகளும் தேரும் பலவீனமானவை, உன்னால் எப்படி போரிட முடியும் என்று அவர் கூறுவார். சல்லியன் மகாபாரத காலத்தைச் சேர்ந்தவர். ஆனால் இப்போதும் சல்லியனின் மனநிலையைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மனக் கசப்பை பரப்புவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அதுபோன்றவர்களுக்கு ஒரு காலாண்டில் ஜி.டி.பி. குறைந்திருப்பது கூட மிகப் பெரிய செய்தியாகிவிட்டது. நீங்கள் எப்படி செய்யப் போகிறீர்கள்? அடுத்து என்ன நடக்கும்? என்று கெடுதலை மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
டோக் லாம் பிரச்சினை எழுந்தபோது, கெடுதலான சிந்தனைகளை அவர்கள் மீண்டும் பரப்பினார்கள், எதுவும் செய்ய முடியாது என்று கூறினார்கள். கெட்ட சிந்தனைகளைப் பரப்புவதில் சிலர் மகிழ்ச்சி கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கிறது. ஒரு காலாண்டில் ஜி.டி.பி. குறைவு என்பது அவர்களுக்கு ஒரு தவணைக்கான மருந்தைப் போன்றது. அவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளது. நண்பர்களே, அவர்களுடைய சிந்தனைக்கு புள்ளிவிவரங்கள் பொருந்தி வரும்போது, அமைப்புகளும், நடைமுறைகளும் அவர்களுக்குச் சரியானதாகத் தோன்றுகிறது. இருந்தபோதிலும், அதே புள்ளிவிவரங்கள் அவர்களுக்குப் பொருந்தி வராமல் போனால், அமைப்புகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி உடனடியாக கேள்விகள் கேட்கத் தொடங்குகிறார்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவர்களை அடையாளம் கண்டாக வேண்டும். அப்போதுதான் உண்மை என்ற சரியான பாதையில் நாம் செல்ல முடியும்.
நண்பர்களே, ஒரு காலாண்டில் நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 5.7% என்ற அளவுக்குப் போயிருப்பது இதுதான் முதல் முறை என்று உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா ? இல்லை, அப்படியில்லை. முந்தைய ஆட்சியில் ஜி.டி.பி. வளர்ச்சி 5.7% அல்லது அதைவிட குறைவாக 8 முறை சென்றிருக்கிறது. வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம், 1.5 சதவீதம் குறைந்த காலாண்டுகளை நாட்டின் பொருளாதாரம் பார்த்திருக்கிறது. அந்த ஆண்டுகளில் அதிக பணவீக்கம், அதிக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் அதிக நிதிப் பற்றாக்குறையால் பிரச்சினைகள் இருந்தன என்பதால், அத்தகைய வளர்ச்சிக் குறைவு நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய கேடு விளைவிக்கும்.
2014க்கு முந்தைய இரண்டு ஆண்டுகளை, அதாவது 2012 – 13 மற்றும் 2013 – 14 ஆம் ஆண்டுகளை நீங்கள் பார்த்தால், சராசரி வளர்ச்சி விகிதம் 6% ஆக இருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளை மட்டும் ஏன் நான் எடுத்துக் கொண்டேன் என சிலர் கேட்கலாம். ஏனெனில் சல்லியனின் மனநிலையில் உள்ளவர்களுக்கு மறுப்பு கூறுவதற்கு அதிக நேரம் தேவைப்படாது.
நண்பர்களே, முந்தைய அரசின் அந்த இரண்டு ஆண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கான நடைமுறையையும், இந்த அரசின் மூன்று கால நடைமுறையையும் கருத்தில் கொண்டு அந்த இரண்டு ஆண்டுகளை நான் குறிப்பிட்டேன். இந்த அரசின் பதவிக் காலத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4% என்று மத்திய புள்ளியியல் அலுவலகம், CSO, அறிவித்தபோது, சிலர் அதை மறுத்தார்கள். உண்மை நிலவரங்கள் பற்றி தங்களின் புரிதலுடன் இந்த ஜி.டி.பி. விவரம் பொருந்தி வரவில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. அந்த விகிதாச்சாரத்தில் பொருளாதாரம் வளருவதாக தங்களால் உணர முடியவில்லை என்று அவர்கள் கூறினர். தங்களுடைய சல்லியன் மனோநிலைக்கு அது பொருந்தி வரவில்லை என்பது அதன் அர்த்தம்.
அதே நிறுவனங்கள் அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கவில்லை, அதே நடைமுறைகள் அந்த நேரத்தில் அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கவில்லை. ஆனால் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் 5.7% சதவீதமாகக் குறைந்தவுடன், அவர்களுடைய உற்சாகம் அதிகரித்துவிட்டது. நிறுவனங்கள் சரியாக இருப்பதாக அவர்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள். தாங்கள் அதை உணரவில்லை என்று இதே மக்கள் கூறினார்கள். அந்த வேகத்தில் பொருளாதாரம் வளரவில்லை, அதை ஏற்க முடியாது என்றார்கள்.
எனவே, ஜி.டி.பி.யை கணக்கிடும் புதிய நடைமுறையில் ஏதோ தவறு இருப்பதாக இதில் சிலர் கூறி வந்தார்கள். அந்த சமயத்தில் இவர்கள் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசவில்லை. ஆனால் கெடுதலான உணர்வின் அடிப்படையில் அவர்கள் பேசுகிறார்கள். அதனால்தான் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அவர்களால் காண முடியவில்லை.
சகோதர சகோதரிகளே. ஆனால், ஜி.டி.பி. வளர்ச்சி இரண்டு காலாண்டுகளில் 6.1 மற்றும் 5.7%-க்கு குறைந்தவுடன், அதே புள்ளிவிவரம் அந்த சல்லியன் மனப்பான்மை உள்ள பொருளாதார நிபுணர்களுக்கு, சரியானதாகத் தோன்றுகிறது.
சகோதர சகோதரிகளே, நான் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. அவ்வாறு நான் கூறிக் கொண்டதும் கிடையாது. இருந்தபோதிலும், பொருளாதாரம் பற்றி இன்றைக்கு இவ்வளவு விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, நான் கடந்த காலம் சிலவற்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சகோதர சகோதரிகளே, இன்றைக்கு இருக்கும் ஜி-7, ஜி-8 அல்லது ஜி-20 போன்ற குழுக்களாக இல்லாமல், சரியக்கூடிய (பொருளாதாரம்) ஐந்து என்ற சர்வதேச பொருளாதாரக் குழுவில் இந்தியா சேர்க்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது.
சரியக்கூடிய பொருளாதார நிலை கொண்ட குழுவில் உள்ள நாடுகளில் சொந்தப் பொருளாதாரமே சீர்கெட்டிருப்பதோடு மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தின் மீட்பில் தடைக்கல்லாக இருப்பவை என்பதால், அந்தக் குழுவே அபாயகரமானதாகப் பார்க்கப்பட்டது. அந்தக் குழுவின் உறுப்பினராக இந்தியா சேர்க்கப் பட்டிருந்தது. அதாவது நம்முடைய பொருளாதாரத்தை நம்மால் கையாள முடியாது என்பதும், மற்றவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறோம் என்பதும் இதன் அர்த்தம். அதனால் சரியக்கூடிய பொருளாதார நிலை உள்ள குழுவில் இந்தியா சேர்க்கப் பட்டிருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில் உயர்நிலையில் இருந்த பொருளாதார நிபுணர்கள் இருந்தபோதிலும், இதுபோன்ற ஒரு நிலை எப்படி ஏற்பட்டது என்று என்னைப் போன்ற குறைந்த பொருளாதார அறிவுள்ள நபர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் – ஜி.டி.பி. வளர்வதற்குப் பதிலாக பணவீக்க விகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை செய்திகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இருந்தது. வட்டி விகித வளர்ச்சி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் நாட்டின் வளர்ச்சிப் பாதை எதிராக இருந்தபோது அந்த அம்சங்கள் சிலருக்கு பிடித்தமானவையாக இருந்தன.
இப்போது அதே அம்சங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டும்போது, சரியான பாதையில் வளர்ச்சி உள்ளதாகக் காட்டும்போது, அந்த சிலர் இன்னமும் தங்களின் நிறக்கண்ணாடியுடனேயே பார்க்கின்றனர். தெளிவான விஷயங்களை அவர்களால் பார்க்க முடியவில்லை. அதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். உங்களுக்கு காட்சிப் படங்களையும் நான் காட்டுகிறேன்.
10% க்கும் அதிகமாக இருந்த பணவீக்கம் குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் இதன் சராசரி 2.5% ஆக உள்ளது. 10% -ஐ நீங்கள் 2.5 % உடன் ஒப்பிட முடிகிறதா. 4% ஆக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏறத்தாழ 1 %-க்கு குறைந்துவிட்டது. நீங்களே அதைக் காணலாம்.
குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறையை முந்தைய ஆட்சியில் இருந்த 4.5%-ல் இருந்து மத்திய அரசு 3.5%-க்குக் கொண்டு வந்திருக்கிறது.
இன்றைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்நியச் செலாவணி கையிருப்பு $30,000 சுமார் கோடியில் இருந்து $40,000 கோடி என்ற அளவுக்கு உயர்ந்து 25% அதிகரித்துள்ளது.
பொருளாதாரத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள், நம்பிக்கை, வெற்றி ஆகியவை சிலருக்கு போதிய விஷயங்களாகத் தெரியவில்லை. எனவே சிலர் நாட்டு நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார்களா அல்லது வெறுமனே மற்றவர்களின் நலன்களுக்கு துணை போகிறார்களா என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நண்பர்களே, கடந்த மூன்று ஆண்டுகளில் 7.5% சராசரி வளர்ச்சியை எட்டியுள்ளபோதிலும், ஏப்ரல் – ஜூன் காலக்கட்டத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்திருக்கிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை. இருந்தபோதிலும், இந்தப் போக்கை மாற்றுவதற்கு அரசு முழுமையாக உறுதிபூண்டிருக்கிறது. அந்தத் திறமை நமக்கு உள்ளது. முடிவுகள் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் பலமாக இருப்பதாக பல நிபுணர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதற்கான நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும். அதிக முதலீடுகளைக் கொண்டு வருவதற்கும் வளர்ச்சியின் வேகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.
அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளால் வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியா புதியதொரு காலக்கட்டத்திற்குச் செல்லும் என்று உறுதியளிக்க நான் விரும்புகிறேன். அடுத்த காலாண்டுக்கான மதிப்பீடுகளின்படி பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்றும் அது 7.7% சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் இன்றைக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கட்டமைப்பு சீரமைப்பில் உள்ள துறைகளுக்கு தேவையைப் பொருத்து உதவிகள் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. அது MSME ஆகவோ அல்லது ஏற்றுமதி துறையாகவோ அல்லது நமது முறைசாரா பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம். மாறிவரும் சூழ்நிலையில் நேர்மைக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும் என்பதையும், நேர்மையாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கும் என்பதையும் இந்தத் தளத்தில் இருந்து மீண்டும் வலியுறுத்திக் கூறுவதற்கு நான் விரும்புகிறேன்.
பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ள வர்த்தகர்களில் சிலருக்கு, தங்களின் புதிய வணிகத்தைப் பார்த்த பிறகு, பழைய ஆவணங்களையும் சோதனை செய்வார்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அப்படி எதுவும் நடக்காது என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். முந்தைய ஆட்சியில் அப்படி நடந்திருக்கலாம். அப்போதிருந்த விதிகள், மனப்போக்கு மற்றும் செயல்பாடு வேறு மாதிரி இருந்தன. பிரதான நீரோட்டத்தில் நீங்கள் சேருவதைத் தடுப்பதைவிட பெரிய பாவம் எதுவும் இருக்க முடியாது. எனவே, பிரதான நீரோட்டத்தில் இணைய விரும்புவோரை வரவேற்பது என்பது எங்கள் அரசின் கருத்தாக உள்ளது. தயவுசெய்து பழைய சிந்தனைகளை விட்டுவிடுங்கள். கவலைப்படாதீர்கள். எப்போதும் உங்களுடன் நாங்கள் இருப்போம்.
ஜி.எஸ்.டி. பற்றியும் கூறுவதற்கு நான் விரும்புகிறேன். அது அமல் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிறது. எது சரியாக செயல்படுகிறது, எது சரிப்பட்டு வரவில்லை என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மிகச் சிறிய விஷயங்களில்கூட கருத்துகளை நாங்கள் கேட்டு வருகிறோம். தொழில்நுட்பம், படிவங்கள் நிரப்புதல் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் ஆய்வு செய்து, தீர்வுகள் காணுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கூறப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளையும் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பழமைவாதிகள் அல்ல என்று வர்த்தகர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எல்லா விஷயங்களும் தெரிந்தவர்கள் அல்ல. ஆனால் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், அதை நாங்கள் செய்வோம்.
எல்லாமே எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் கூறிக்கொள்ளவில்லை. இருந்தாலும், சரியான திசையில் செல்வதற்கான முயற்சியாக இது உள்ளது. எங்காவது தடைகள் இருந்தால்,, தேவையைப் பொருத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அவற்றை சரி செய்து சீரமைப்பு காலத்தை நோக்கிச் செல்ல முயற்சி செய்வோம்.
நண்பர்களே, பொருளாதார நிலைமை பற்றி உங்களுடன் பேசும்போது, பின்வரும் விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நான் விரும்புகிறேன். இந்த விவரங்களின் அர்த்தங்களை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
நண்பர்களே, எப்போது நீங்கள் புதிதாக கார் வாங்கினாலும், கட்டாயத்தின் பேரில் அதை வாங்கியிருக்க மாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுடைய வீட்டு பட்ஜெட், குழந்தைகளின் கல்விக்கான செலவு, குடும்பத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவ சிகிச்சைக்கான செலவு போன்ற விஷயங்களை பரிசீலித்திருப்பீர்கள். மேலும் உங்களிடம் சேமிப்பு பணம் இருந்தால், வீடு அல்லது கார் வாங்குவது பற்றி யோசித்திருப்பீர்கள். இதுதான் நமது சமூகத்திலும் அடிப்படையான சிந்தனை. அதுபோன்ற சூழ்நிலையில் –
- ஜூன் மாதத்துக்குப் பிறகு பயணிகள் கார்களின் விற்பனை நாட்டில் ஏறத்தாழ 12% உயர்ந்திருந்தால் என்ன கருதுவீர்கள்?
- வர்த்தக வாகனங்களின் விற்பனையும் ஜூன் மாதத்துக்குப் பிறகு 23% அதிகரித்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
- நாட்டில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14%-க்கும் அதிகமாக உயர்ந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
- உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில் 14%-க்கும் மேல் அதிகரித்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
- சர்வதேச விமான சரக்குப் போக்குவரத்து ஏறத்தாழ 16% அதிகரித்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
– தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 14%-க்கும் மேல் அதிகரித்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
சகோதர சகோதரிகளே, மக்கள் வாகனங்கள் வாங்குகிறார்கள், புதிய தொலைபேசி இணைப்புகள் பெறுகிறார்கள், விமான பயண சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த முன்னேற்றங்கள் காட்டுகின்றன. நகர்ப்புறங்களில் தேவை அதிகரித்திருக்கிறது என்பதை இந்த விவரங்கள் காட்டுகின்றன.
எனவே, கிராமப் பகுதிகளில் உள்ள தேவைகளின் குறியீடுகளை நாம் பார்த்தால் டிராக்டர்களின் விற்பனை அண்மைக்கால மாதங்களில் 34%-க்கும் மேல் அதிகரித்திருக்கிறது.
FMCG துறையிலும் செப்டம்பர் மாதத்தில் தேவையின் வளர்ச்சி அதிகரித்துதான் இருக்கிறது.
நண்பர்களே, நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும் போது இவையெல்லாம் நடக்கின்றன. ஆம், பொருளாதாரம் வலுவாக இருக்கிறது என்று நாட்டு மக்கள் உணரும் போது இது நடக்கும்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட PMI உற்பத்திக் குறியீடு, உற்பத்தி அதிகரிப்பு போக்கில் இருப்பதைக் காட்டுகிறது. எதிர்கால உற்பத்தி நிறைவு குறியீடு 60-ஐத் தாண்டியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட விவரங்களை நாம் பார்த்தால், நிலக்கரி, மின்சாரம், ஸ்டீல் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆகியவை அதிவேக வளர்ச்சி கண்டிருப்பதை அறியலாம்.
நண்பர்களே, தனிநபர் கடன் வழங்குவதும்கூட பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
வீட்டு வசதி கம்பெனிகள் மற்றும் வங்கியியல் சாரா நிதி நிறுவனங்கள் அளித்துள்ள கடன்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இவை மட்டுமல்ல, மூலதனச் சந்தையில் பரஸ்பர நிதிகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் அதிகமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் IPO-க்கள் மூலமாக கம்பெனிகள் ரூ. 25000 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளன. கடந்த ஆண்டு முழுமையான காலத்திலும் இந்தத் தொகை ரூ.29000 கோடியாக இருந்தது.
நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், நிதி சாரா நிறுவனங்களில் ரூ.45,000 கோடிக்கும் அதிகமான தொகை கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நிதித் துறையின் பலமான அஸ்திவாரத்தை இந்த விவரங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் நிதி அளிப்பு என்பது வங்கிக் கடன்களாக மட்டும் இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது இதன் அர்த்தம்.
நண்பர்களே, காலம் மற்றும் ஆதாரவளங்களை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. முந்தைய அரசின் மூன்றாண்டு கால செயல்பாடுகளையும் இந்த அரசின் செயல்பாடுகளையும் வைத்து பணிகளின் வேகத்தில் உள்ள தெளிவான வித்தியாசத்தை நீங்கள் காண முடியும்.
முந்தைய அரசின் கடைசி மூன்று ஆண்டுகளில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஊரகப் பகுதி சாலைகள் அமைக்கப்பட்டன. எங்கள் அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஊரகப் பகுதி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது ஊரகப் பகுதி சாலை அமைப்பதில் 50% வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அர்த்தமாகிறது.
முந்தைய அரசின் கடைசி மூன்று ஆண்டுகளில் 15,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன. எங்கள் அரசு தனது மூன்று ஆண்டுகளில் 34,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க உத்தரவுகள் வழங்கியுள்ளது.
இந்தத் துறையில் முதலீடுகள் பற்றி நீங்கள் பேசினால், முந்தைய அரசு கடைசி மூன்றாண்டுகளில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சாலைகள் அமைப்பதற்கு ரூ.93,000 கோடி செலவிட்டுள்ளது. இந்த அரசில் இந்தத் தொகை ரூ.1.83 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்த அரசு இதற்கான முதலீட்டை ஏறத்தாழ இரட்டிப்பாக ஆக்கியுள்ளது என பொருளாகிறது.
நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு எவ்வளவு நிர்வாக மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நாட்டை கொள்கை முடக்க நிலையில் இருந்து மீட்டு, கொள்கை உருவாக்குநர் மற்றும் செயல்படுத்துநர் என்ற பங்கை இந்த அரசு எவ்வளவு சிறப்பாக ஆற்றியுள்ளது என்பதை இந்த விவரங்கள் காட்டுகின்றன.
அதேபோல, ரயில்வே துறையைப் பற்றி நாம் பேசுவதாக இருந்தால் :
- – முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 1,100 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த அரசின் மூன்றாண்டுகளில் இது 2100 கிலோ மீட்டரையும் தாண்டிவிட்டது. அதாவது நாங்கள் ரயில்பாதைகள் அமைப்பதில் இரு மடங்கு அதிக வேகத்துடன் செயல்பட்டிருக்கிறோம் என அர்த்தமாகிறது.
– முந்தைய ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில் 1300 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதைகள் இரட்டை வழிகளாக மாற்றப்பட்டன. இந்த அரசின் மூன்றாண்டு காலத்தில் 2600 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதைகள் இரட்டை வழியாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது இரட்டை வழி பாதையாக மாற்றுவதில் நாங்கள் இரு மடங்கு அதிக வேகத்தில் செயல்பட்டிருக்கிறோம் என்று அர்த்தமாகிறது.
நண்பர்களே, முந்தைய ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில் ரூ.1.49 லட்சம் கோடிக்கு மூலதனச் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் மூன்றாண்டு காலத்தில், இந்தத் தொகை ரூ.2.64 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 75%க்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக அர்த்தமாகிறது.
இப்போது, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தி பற்றி நான் பேசுவதாக இருந்தால் :
– முந்தைய அரசின் கடைசி மூன்று ஆண்டுகளில் மொத்தம் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் மூன்றாண்டு காலத்தைப் பற்றிப் பேசினால், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு 22,000 மெகாவாட் மின் உற்பத்தி மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்தத் துறையில், இந்த அரசின் செயல்பாடு ஏறத்தாழ இரண்டு மடங்கு நன்றாக இருந்துள்ளது என பொருளாகிறது.
– முந்தைய அரசின் கடைசி மூன்று ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏறத்தாழ ரூ.4,000 கோடி செலவிடப்பட்டது. எங்கள் அரசு மூன்றாண்டுகளில் ரூ.10.600 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறது.
கப்பல் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி பற்றி நாம் பேசினால், முந்தைய ஆட்சியில் சரக்கு கையாளுவதன் வளர்ச்சி எதிர்மறையாக இருந்தது. ஆனால் இந்த அரசின் மூன்றாண்டு காலத்தில் அது 11% வளர்ச்சி கண்டிருக்கிறது.
நண்பர்களே, ரயில், சாலை மற்றும் மின்சாரம் போன்ற கட்டமைப்புகளை பலப்படுத்துவதுடன், சமூக கட்டமைப்பையும் பலப்படுத்துவதற்கு அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நாங்கள் முக்கியமான கொள்கை முடிவு எடுத்து, கட்டுப்படியாகும் செலவில் வீட்டுவசதி அளிப்பதற்கான துறையில் நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறோம். இந்தத் துறையில் இதுவரை நடந்திராத விஷயம் இது.
நண்பர்களே, முந்தைய ஆட்சியின் கடைசி மூன்றாண்டுகளில் ரூ.15,000 கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு முதல் மூன்றாண்டுகளில் ரூ.1.53 லட்சம் கோடிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் வீடுகள் அளிப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
சகோதர சகோதரிகளே, நாடு முழுக்க நடைபெறும் இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக மூலதன முதலீடுகள் தேவைப்படுகின்றது. நாட்டுக்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதில் அரசு பணியாற்றி வருகிறது.
– காப்பீட்டுத் துறையில் சீரமைப்பு என்ற பிரச்சினை முதலில் பேசப்பட்ட போது, அந்த விஷயம் நடந்தால், அது பெரிய பொருளாதார முடிவாக இருக்கும் என பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வந்தன. அது முந்தைய ஆட்சிக் காலத்தில். காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தம் செய்யாமலே அந்த அரசு பதவிக் காலத்தை நிறைவு செய்தது. நாங்கள் காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இது இந்த அரசின் கீழ் நடந்திருக்கிறது. இருந்தபோதிலும், இதுவும் பெரிய விஷயமாக சல்லியன் மனப்பான்மையில் உள்ள சிலருக்குத் தோன்றவில்லை. அவர்களுடைய காலத்தில் இது நடைபெறவில்லை, அவர்கள் விரும்பிய அரசின் காலத்தில் இது நடைபெறவில்லை என்பதால் அவர்களுக்கு இது பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.
– சீர்திருத்தம் – என்ற வார்த்தையை தங்கள் தீம் பாடலாக வைத்துக் கொண்டவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, 21 துறைகளில் நாங்கள் 87 சிறிய மற்றும் பெரிய சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம் என்பதைத்தான். கட்டுமானத் துறை, பாதுகாப்புத் துறை, நிதிச் சேவைகள், உணவுப் பதப்படுத்துதல் அல்லது நீங்கள் குறிப்பிடக் கூடிய மற்ற துறைகள் தொடர்பாக முதலீட்டுக் கொள்கைகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
தாராளமயமாக்கலுக்குப் பிறகும், கடந்த மூன்றாண்டுகளிலும் இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டு மூலதனத்தை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்கள் அரசால் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவுகளை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.
சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்தத் துறையில் இருக்கிறீர்கள். இருந்தபோதிலும், உங்கள் முன் நான் வைக்கும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். தாராளமயமாக்கல் காலம் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கியது. அந்த ஆண்டை அடிப்படையாக நான் எடுத்துக் கொண்டால், தாராளமயமாக்கல் தொடங்கியதில் இருந்து 2014 வரையில் அதன் விளைவுகள் என்ன என்பது பற்றியும், 2014 முதல் 2017 வரையில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் நாம் ஒப்பீடு செய்யலாம்.
– கட்டுமானத் துறையில் ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீட்டில் 75% கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வந்துள்ளது.
– பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையிலும், மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 69% கடந்த மூன்றாண்டுகளில் வந்துள்ளன.
– சுரங்கத் துறையில் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 56% கடந்த மூன்றாண்டுகளில் வந்துள்ளன.
கணினி மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் துறையில் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 53% கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் வந்துள்ளன.
– மின்சார உபகரணங்கள் துறையில் மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 52% கடந்த மூன்றாண்டுகளில் வந்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்ட மின் உற்பத்தித் துறையில் மொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 49% கடந்த மூன்றாண்டுகளில் வந்துள்ளன.
ஜவுளித் துறையில் மொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 45% கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் வந்துள்ளன.
– முன்பு நிறைய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ள ஆட்டோமொபைல் துறையிலும், மொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 44% கடந்த மூன்றாண்டுகளில் வந்துள்ளன என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
நாட்டின் பொருளாதாரத்தின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) அதிகரிப்பே அத்தாட்சியாக இருக்கிறது.
எங்களுடைய கொள்கைகள், அவற்றின் செயலாக்கம் மற்றும் எங்கள் தொலைநோக்கு பார்வை ஆகியவை நம்பிக்கையின் அளவை அதிகரித்துள்ளன. நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கத்தில், இந்த முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. சாலைக் கட்டுமானம் அதிகரிப்பு, ரயில் பாதைகள் விஸ்தரிப்பு அதிகரிப்பு, இவையெல்லாம் வேலைகள் உருவாக்கத்திற்கான தேவைகள் கிடையாதா ? இவை எப்படி நடந்தன ? ஆனால் சல்லியன் மனப்போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நண்பர்களே, உங்கள் கடின உழைப்பால் ஈட்டப்படும் ஒவ்வொரு பைசாவின் மதிப்பையும் இந்த அரசு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை எளிதானதாக அமைவதுடன், தங்கள் பணத்தை அவர்கள் சேமிக்க உதவும் வகையிலும் இருக்கும் வகையில் இந்த அரசு கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
நண்பர்களே, இந்த அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாகத்தான், முந்தைய ஆட்சியில் ரூ.350 ஆக இருந்த எல்.இ.டி. பல்புகளின் விலை தற்போது இந்த அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் ரூ.40 – 45 என குறைந்துள்ளது. இப்போது நீங்கள் சொல்லுங்கள், இது நடுத்தர அல்லது ஏழை மக்களுக்கு சேமிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா இல்லையா என்று. எல்.இ.டி. பல்பின் விலை அந்த ஆட்சியில் ஏன் ரூ.350 என இருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
- இதுவரையில் நாட்டில் 26 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு பல்புக்கு சராசரியாக ரூ.250 குறைந்திருக்கிறது என வைத்துக் கொண்டால், நாட்டில் நடுத்தர மக்களுக்கு இந்த வகையில் மட்டும் சுமார் ரூ.6,500 கோடி சேமிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பல்புகளால் ஒவ்வொரு வீட்டிலும் மின்சார உபயோகம் குறைந்திருக்கிறது. இதன் மூலமாக ஓராண்டில் மட்டும் நடுத்தரக் குடும்பங்களுக்கு ரூ.14,000 கோடி மதிப்புக்கு சேமிப்பு கிடைத்திருக்கிறது. எல்.இ.டி. பல்புகள் வாங்கியதிலும், மின்சார உபயோகத்திலும் சேர்த்து ரூ.20,000 கோடிக்கும் மேல் ஒட்டுமொத்த சேமிப்பு கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் காணலாம். இதுதான் நடுத்தரக் குடும்பங்களுக்கு அதிகாரமளிக்கும் செயல்.
- இந்த அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, உள்ளாட்சிகளும் நிதி ஆதாயங்களைப் பெற்றிருக்கின்றன. உள்ளாட்சிகளில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்படுகின்றன. இரண்டாவது நிலையில் உள்ள ஒரு நகராட்சியில் ரூ.10 – 15 கோடி அளவுக்கு இதனால் சராசரி சேமிப்பு கிடைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்தப் பணம் அந்த நகரில் வளர்ச்சிப் பணிகளில் செலவிடப்படும். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
– முதல்முறையாக, வீடுகள் கட்டுவதற்கான கடன் மீது வட்டியில் நடுத்தர மக்களுக்கு இந்த அரசால் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் நடுத்தர மக்கள் வீடுகள் கட்டுவதற்கு சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
நடுத்தர மக்களின் சுமைகளைக் குறைப்பதில், நடுத்தர வகுப்பில் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதில், ஏழைகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எப்போதும் எடுத்து வருகிறது. நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, கொள்கைகள் உருவாக்கப் படுகின்றன, காலக்கெடுவுடன் கூடியதாக அவை அமல் செய்யப்படுகின்றன. இந்தத் திசையில் ஆக்கப்பூர்வமாக நாங்கள் செயல்படுகிறோம்.
இலவசங்களை அளிப்பதற்குப் பதிலாக மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதால் சில நேரங்களில் என்மீது வசைபாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னுடைய நிகழ்காலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டின் எதிர்காலத்தை நான் விட்டுக்கொடுத்துவிட முடியாது. அதிகாரம் மற்றும் வாக்குகள் பற்றி மட்டும் தான் நாம் கவலைப்பட வேண்டுமா ? கடினமான ஒரு பாதையை நாம் தேர்வு செய்திருக்கிறோம். இருந்தாலும் மக்கள் நலனை மனதில் கொண்டு சரியான பாதையில் நாம் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.
இந்தக் காரணத்துக்காக அடிக்கடி நான் கண்டனத்துக்கு ஆளாகிறேன். பாருங்கள், நீங்கள் இலவசங்களைக் கொடுத்தால், உங்களுக்காக நன்றிப் பாடல்களை மக்கள் பாடுவார்கள். நேரடி மானிய பட்டுவாடா திட்டம் மூலமாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே மானியத் தொகைகளை மாற்றுவதில் எனது அரசு நம்பிக்கை கொண்டிருப்பதால், சுயநல சக்திகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போலிக் கணக்குகளை கண்டுபிடித்து ஒழிப்பதை இது உறுதி செய்திருக்கிறது. அதனால்தான் அதுபோன்ற மக்களுக்குப் பிரதமர் மோடியைப் பிடிப்பதில்லை.
அதனால்தான் சாமானிய மனிதனுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். எனது நிகழ்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டின் எதிர்காலத்தை விட்டுக்கொடுத்துவிட மாட்டேன் என்பதை எனது சக குடிமக்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.
நண்பர்களே, தனியார் மற்றும் பொதுத் துறையுடன், தனிநபர் துறையின் மீதும் இந்த அரசு முக்கியத்துவம் காட்டுகிறது. இல்லாவிட்டால், இந்தச் சொற்பொழிவு தனியார் மற்றும் பொதுத் துறை பற்றியதாக மட்டுமே இருந்திருக்கும். மக்களின் தனிப்பட்ட விருப்பங்களைக் கொண்ட, தனிநபர் துறையும் சம அளவு முக்கியமானது. அதனால்தான் தாங்கள் சொந்தமாக எதையாவது செய்ய வேண்டும் என விரும்புகிற, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிற இளைஞர்களுக்கு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்த அரசு அளித்து வருகிறது.
- முத்ரா திட்டத்தின் கீழ் கணக்கு வைத்துள்ள 9 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு எந்த வங்கி உத்தரவாதமும் இல்லாமல் ரூ.3.75 கோடிக்கும் அதிகமான தொகை கடன்களாக அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த 9 கோடி பேரில், 2.63 கோடி பேர், முதல்முறையாக கடன் வாங்கும் இளைஞர்களாக உள்ளனர். அதாவது தங்கள் தொழில் தொடங்குவதற்கு முதல்முறையாக முத்ரா திட்டத்தின் கீழ் தான் அவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது.
இந்திய தொழில் திறன் குறிக்கோள், ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் சுயவேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு இந்த அரசு ஊக்கம் அளிக்கிறது. அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தின் கீழ் மேலும் மேலும் நிறைய பேரைக் கொண்டு வரும் நிறுவனங்களுக்கு நிதி ஊக்கத்தொகைகள் அளிக்கப்படுகின்றன.
சகோதர சகோதரிகளே, அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு தொடர்பான குறியீடுகள் சிலவற்றை நாம் பார்த்தால், பின்வரும் விஷயங்கள் தெரிய வருகின்றன :
– மார்ச் 2014 இறுதிவாக்கில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO) ஒவ்வொரு மாதமும் பணம் பங்களிப்பு செய்து வந்தவர்களின் எண்ணிக்கை 3.26 கோடியாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 4.80 கோடியாக உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு பெருகாமல், இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்காது என்பதை சிலர் மறந்துவிட்டனர்.
நண்பர்களே, அரசின் திட்டங்கள் ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
ஜன் தன் திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அரசுக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் சுமார் 15 கோடி ஏழை மக்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு இலவச மின்சார இணைப்பு தருவதற்காக சில நாட்களுக்கு முன்பு சவுபாக்கியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏழைகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்பவை.
இருந்தபோதிலும், ஊழலும் கருப்புப் பணமும் நாட்டின் சாபக்கேடாக உள்ளன. கருப்புப் பணம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் உங்கள் கல்வி நிலையமும், கம்பெனி செகரட்டரிகளும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.
மொத்தமுள்ள 3 லட்சம் போலி நிறுவனங்களில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்கு உதவியதாக சந்தேகத்தில் சிக்கிய 2.1 லட்சம் கம்பெனிகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போலி நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை காரணமாக, கம்பெனி டைரக்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து, கம்பெனிகளின் செயல்பாடு இன்னும் அதிக அளவுக்கு வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே, தீவிர மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலக்கட்டம், நாட்டின் வரலாற்றில் நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றங்களைச் செய்வதாக இருக்கும்.
நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் முக்கியத்துவம் இப்போது நாட்டில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் நிர்வாக வரையறைகளை உருவாக்குவதில், ஐ.சி.எஸ்.ஐ. அளித்த பரிந்துரைகள் ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளன.
இப்போது புதிய தொழில் கலாச்சாரத்தை உருவாக்குவதில் தீவிர பங்காற்ற வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. அமல் செய்யப்பட்டதற்குப் பிறகு சுமார் 19 லட்சம் புதிய குடிமக்கள் மறைமுக வரி விதிப்பின் கீழ் வந்திருக்கிறார்கள். சிறிய வர்த்தகராக இருந்தாலும் அல்லது பெரிய வர்த்தகராக இருந்தாலும், ஜி.எஸ்.டி.யுடன் உள்ளடங்கி இருக்கும் நேர்மையான வரி முறையை அவர்கள் பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில், தொழில் துறையினரை ஊக்குவிக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்கள் கல்வி நிலையத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி.யில் உள்ள சின்ன சின்ன விஷயங்களில் ஒரு லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி தரும் பொறுப்பை இந்தக் கல்வி நிலையம் ஏற்க முடியுமா ? 7 முதல் 10 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, தங்கள் பகுதியில் உள்ள சிறிய வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களை ஜி.எஸ்.டி. முறையில் இணைத்து, கணக்குகளைத் தாக்கல் செய்ய அவர்களால் உதவ முடியும். வேலைவாய்ப்பில் புதிய ஜன்னலை அது திறந்துவிடும். முறைசார்ந்த வழியில் இதைச் செய்தால், ஒரு லட்சம் என்பது கூட சிறிய எண்ணிக்கையாகத்தான் இருக்கும்.
நண்பர்களே, 2022 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டை கொண்டாடப் போகிறது. தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறைகளில் கழித்து, தங்கள் வாழ்நாள் முழுக்க சுதந்திரத்துக்காகப் போராடி, நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மாபெரும் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் லட்சியங்கள் மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கனவு நமக்கு இருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் வரையில் போராடுவோம் என 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது முடிவு செய்ததைப் போல, ஒரு கனவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டும். நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டான 2022 ஆம் ஆண்டுக்கு ஒரு கனவுடன் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பர்களே, நாடு தனது சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் 2022 ஆம் ஆண்டுக்குள் செய்யக் கூடிய சில வாக்குறுதிகளை ஐ.சி.எஸ்.ஐ. -யிடம் இருந்து பெற நான் விரும்புகிறேன். இந்த வாக்குறுதிகள் உங்களின் உறுதியேற்பாக இருக்கும். இதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் –
- 2022 ஆம் ஆண்டுக்குள் பெரும்பகுதி வரி ஒத்திசைவு கொண்ட சமுதாயத்தை நாட்டில் உருவாக்கும் பொறுப்பை நீங்கள் ஏற்க முடியுமா?
- 20222 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் ஒரு போலி நிறுவனம்கூட இருக்காது என்பதை உங்களால் உறுதி செய்ய முடியுமா?
- 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கம்பெனியும் நேர்மையாக வரிகளைச் செலுத்துவதை நீங்கள் உறுதி செய்ய முடியுமா?
- உங்கள் உதவிகளை விரிவுபடுத்துவதன் மூலம் 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் நேர்மையான தொழில் கலாச்சாரத்தை உங்களால் உருவாக்க முடியுமா?
ஐ.சி.எஸ்.ஐ. -யின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தில், வழிகாட்டுதல்களுடன் லட்சியங்களை அடைவதற்கான பயணத்தை மேற்கொள்ளும் என்றும், தனது பணி கலாச்சாரத்தில் அவற்றைச் சேர்க்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இந்தப் பொன்விழா ஆண்டில் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொருளாதார விஷயங்கள் தொடர்பாக அரசின் மீது சமீப காலமாக எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்பதை எனது சக குடிமக்களுக்கு உறுதியளிக்க நான் விரும்புகிறேன். மக்களின் நலன்கள் பற்றிய விஷயங்களில் அரசு அக்கறை கொண்டிருக்கிறது. மிகக் கடுமையான விமர்சனங்களையும், எங்களுடைய பாணியில் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். 1.25 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டை வளர்ச்சிப் பாதையில், பணிவுடன் கூடிய வளர்ச்சிப் பாதையில், அதிக வேகம் என்ற நயத்துடன் மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் பாடுபடுவோம்.
எல்லா விமர்சனங்களுமே தவறானவை என்று நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை, எங்களை விமர்சனம் செய்பவர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இருந்தாலும், நாட்டில் நம்பிக்கையின்மை சூழ்நிலையை உருவாக்குவதில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்.
நமது பொருளாதாரத்தின் பலத்தைக் காட்டும் குறியீடுகள் சிலவற்றை உங்களுக்கு நான் காட்டியிருக்கிறேன். நமது பொருளாதாரம் எந்த அளவுக்கு வலுவாக இருக்கிறது என்பதையும், அரசின் முடிவெடுக்கும் அதிகாரங்களைத் தெளிவாகக் காட்டும் வகையிலும் மேலும் பல குறியீடுகள் இருக்கின்றன. அரசு செல்லும் திசை மற்றும் வேகத்துக்கான சான்றுகள் இவை. இந்தியாவுக்குள்ளும், வெளிநாடுகளிலும் இந்தியாவின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதும் பொருளாதார பலத்தைக் காட்டுகிறது.
அதை நாம் மறந்துவிடக் கூடாது. புதுப்பிக்கப்பட்ட வேகம், ஆர்வம், நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துடன் புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கு நாம் முன்னேறிச் செல்வோம்.
பொன்விழாவில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இந்தத் துறையில் இருப்பதால், இந்த விஷயம் குறித்து எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தத் தளத்தின் மூலமாக சக குடிமக்களை இந்தத் தகவல்கள் சென்றடையும் என்று நான் நம்புகிறேன்.
மீண்டும் ஒரு முறை பல – பல வாழ்த்துகள்
நன்றி.