நிபுணர்களே,
வணக்கம்!
எங்களது நாட்டையொட்டியுள்ள நாடுகள் மற்றும் அண்டை நாடுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் இன்று ஆலோசனை நடத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு உரையைத் தொடங்குகிறேன்.
இந்த பெருந்தொற்று காலத்தில் நமது சுகாதார கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும் முறைக்காகவும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகையே கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு தாக்கியபோது, மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நமது பிராந்தியம் குறித்து பல்வேறு வல்லுநர்களும் கவலைகளை வெளிப்படுத்தினர்.
எனினும், தொடக்கம் முதலே, ஒருங்கிணைந்து நாம் இந்த சவாலை எதிர்கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நாம்தான் முதன்முறையாக, இந்த அச்சுறுத்தலை புரிந்துக்கொண்டு, இதனை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என உறுதிபூண்டோம்.
நமது முன்உதாரணத்தை, மற்ற பிராந்தியங்களும், குழுக்களும் பின்பற்றின.
பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உடனடியாக ஏற்படும் செலவை எதிர்கொள்வதற்காக கொரோனா அவசரகால நிதியை உருவாக்கினோம்.
மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள், பரிசோதனை கருவிகள் ஆகிய நமது வளங்களை பரிமாறிக் கொண்டோம்.
இதற்கும் மேலாக, மிகவும் மதிப்புமிகுந்த அறிவுப்புலமையை, நமது சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிப்பதன் மூலம், பகிர்ந்துகொண்டோம்.
பரிசோதனைகள், தொற்றை கட்டுப்படுத்துவது, மருத்துவக் கழிவு மேலாண்மை ஆகியவை தொடர்பாக, ஒவ்வொருவரும் மற்றவர்களின் சிறந்த நடைமுறைகள் மூலம் கற்றுக் கொண்டதுடன், காணொலிக் கருத்தரங்குகள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப தளங்கள் மூலம் அனுபவங்களை பகிர்ந்துகொண்டோம்.
நமக்கு எது சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில், நமக்கான தனிப்பட்ட சிறந்த நடைமுறைகளை உருவாக்கினோம்.
இந்த அறிவுப்புலமை மற்றும் அனுபவ தொகுப்பில் நம்மில் ஒவ்வொருவரும் அதிக அளவில் பங்களிப்பை செய்துள்ளோம்.
நண்பர்களே,
இந்த ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான உணர்வே, இந்த பெருந்தொற்று நமக்கு அளித்த பாடம்.
நமது வெளிப்படைத்தன்மை மற்றும் உறுதியான தீர்மானம் மூலம், உலகிலேயே மிகவும் குறைந்த உயிரிழப்பு விகிதத்தை நம்மால் எட்ட முடிந்தது.
இது மிகவும் பாராட்டத்தக்கது.
இன்று, நமது பிராந்தியம் மற்றும் உலக அளவில், தடுப்பூசி பயன்பாட்டை விரைந்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கும் கூட, அதே கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு முழுவதும், நமது சுகாதார ஒத்துழைப்பு என்பது மிகப்பெரும் அளவில் இருந்தது.
நமது இலக்கை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாம் சிந்திப்போமா?
உங்களது இன்றைய விவாதத்துக்காக சில ஆலோசனைகளை கூற விழைகிறேன்:
நமது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்காக சிறப்பு விசா திட்டத்தை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாமா? இதன்மூலம், சுகாதார அவசரநிலையின்போது, நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால், நமது பிராந்தியத்துக்குள் விரைந்து பயணம் மேற்கொள்ள முடியும்.
மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்ள நமது விமானப் போக்குவரத்து அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து பிராந்திய விமான ஆம்புலன்ஸ் சேவைக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா?
நமது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகளை சேகரிப்பது, ஒருங்கிணைப்பது மற்றும் ஆய்வுசெய்வதற்காக பிராந்திய தளத்தை நம்மால் ஏற்படுத்த முடியுமா?
அதேபோல, எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்காக தொழில்நுட்ப உதவியுடன் கூடிய பெருந்தொற்று தடுப்பு பிராந்திய இணையத்தை ஏற்படுத்த முடியுமா?
மேலும், கொரோனாவைத் தாண்டி, நமது சிறப்பான பொது சுகாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?
இந்தியாவில் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத், மக்கள் ஆரோக்கியம் ஆகிய திட்டங்கள், இந்த பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகள் ஆய்வுசெய்வதற்கு பயன்படும்.
இதுபோன்ற ஒத்துழைப்புகள், மற்ற துறைகளிலும் கூட, மிகப்பெரும் அளவிலான பிராந்திய ஒத்துழைப்புக்கான வழியாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.
இதற்கும் மேலாக, பருவநிலை மாற்றம்; இயற்கை பேரிடர்கள், வறுமை, கல்வியின்மை, சமூக மற்றும் பாலின சமநிலையற்ற தன்மை போன்ற பல்வேறு பொதுவான சவால்களை நாம் பகிர்ந்துகொண்டுள்ளோம்.
இதேபோல, பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான தொடர்புகளின் சக்தியையும் பகிர்ந்து வருகிறோம்.
இவை அனைத்திலும் நாம் கவனம் செலுத்தினால், அது நம்மை ஒருங்கிணைக்கும். இதன்மூலம், தற்போதைய பெருந்தொற்றிலிருந்து மட்டுமல்லாது, மற்ற சவால்களிருந்தும் கூட நமது பிராந்தியத்தால் மீண்டுவர முடியும்.
நண்பர்களே,
21-ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டாக இருக்க வேண்டுமென்றால், தெற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளுக்கு இடையே மிகப்பெரும் ஒருங்கிணைப்பு இல்லாமல் சாதிக்க முடியாது.
பெருந்தொற்று காலத்தில் நீங்கள் வெளிப்படுத்திய பிராந்திய ஒற்றுமை உணர்வின் மூலம், இதுபோன்ற ஒருங்கிணைப்பு சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விவாதம் பயனுள்ள வகையில் அமைவதற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
மிக்க நன்றி!