வணக்கம்!
மறைந்த திரு ஹர்மோகன் சிங் யாதவ் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். இன்று நமது புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் ஒருவர், நாட்டை வழிநடத்திச் செல்லவிருக்கிறார். ஜனநாயகம் மற்றும் உள்ளடக்க சக்தியின் சிறந்த உதாரணம், இது.
நண்பர்களே,
தமது நீண்ட கால அரசியல் பயணத்தின் போது உத்தரப்பிரதேசம் மற்றும் கான்பூர் மண்ணிலிருந்து லோஹியா அவர்களின் கோட்பாடுகளை திரு ஹர்மோகன் சிங் யாதவ் முன்னெடுத்துச் சென்றார். மாநில மற்றும் தேசிய அரசியலில் அவரது பங்களிப்பு, சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணி, பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து வழிகாட்டும்.
நண்பர்களே,
சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவ் அவர்கள் தமது அரசியல் வாழ்வை கிராம பஞ்சாயத்திலிருந்து தொடங்கினார். கிராம சபையிலிருந்து மாநிலங்களவை வரை படிப்படியாக அவர் உயர்ந்தார். கடந்த 1984- ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலில் அரசியல் நிலையை அவர் எடுத்ததோடு, தனது சீக்கிய சகோதர, சகோதரிகளைப் பாதுகாப்பதற்கும் முன்வந்தார். அவரது உயிரைப் பணயம் வைத்து ஏராளமான அப்பாவி உயிர்களையும், சீக்கிய குடும்பங்களையும் அவர் காப்பாற்றினார். சௌரிய சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
நண்பர்களே,
அட்டல் உள்ளிட்ட தலைவர்களின் காலத்தில் நாடாளுமன்றத்தில் ஹர்மோகன் அவர்கள் பணியாற்றியுள்ளார். “அரசுகள் வரும், போகும். கட்சிகள் தொடங்கப்படும், கலைக்கப்படும். ஆனால் நாடு தழைக்க வேண்டும், ஜனநாயகம் நிலையாக உயிர்ப்பித்திருக்க வேண்டும்”, என்று அட்டல் அவர்கள் கூறுவார். ஜனநாயகம் காரணமாகத்தான் கட்சிகள் இயங்குகின்றன, தேசத்தால்தான் ஜனநாயகம் நீடிக்கிறது. எனினும் அண்மை காலங்களில் சமூக நலனுக்கும் மேலாக அரசியல் லாபத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் நாட்டிற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்; சமூகத்தின் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்; தேசம் தான் முதலில்.
நாட்டின் சேவைக்காக சமூக நீதியைப் பின்பற்றுவதும், ஏற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. சமூக நீதி என்பது, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமமான வாய்ப்புகளும், அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவது என்பதாகும். இத்தகைய மாற்றத்திற்கு, கல்வியை முக்கிய காரணியாக ஹர்மோகன் அவர்கள் கருதினார். சமூக நீதியின் உறுதிப்பாடுகள் முழுமையாக நிறைவடைவதை உறுதி செய்ய அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியம். மறைந்த ஹர்மோகன் சிங் யாதவ் அவர்களுக்கு மீண்டும் மரியாதை செலுத்துகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி!