மதிப்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்!
இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூருக்கு வருகை தந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தப் பிராந்தியம் அதன் ஆற்றல்மிக்க மற்றும் தொழில்முனைவோருக்குப் பெயர் பெற்றதாகும்.
நண்பர்களே,
வர்த்தகம் என்பது கருத்துக்கள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது, அதே நேரத்தில் வரலாறு முழுவதும் அது மக்களை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. வர்த்தகமும், உலகமயமாக்கலும் கோடிக்கணக்கான மக்களைத் தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளன.
மதிப்பிற்குரியவர்களே,
இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலகளாவிய நம்பிக்கை மற்றும் நேர்மறைப் பார்வையை இன்று நாம் காண்கிறோம். இந்தியா வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் கலவையாக பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக இந்தியா ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம்" என்ற பயணத்தை நாங்கள் தொடங்கினோம். போட்டித்தன்மை மற்றும் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையை நாங்கள் அதிகரித்தோம். டிஜிட்டல் மயமாக்கல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை நாங்கள் விரிவுபடுத்தினோம். இந்தியா தனியாக சரக்குப் போக்குவரத்து வழித்தடங்களை நிறுவி தொழில்துறை மண்டலங்களை உருவாக்கியுள்ளோம். நாங்கள் சிவப்பு நாடாவில் இருந்து சிவப்புக் கம்பளத்திற்கு மாறி, தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளோம். இந்தியாவில் உற்பத்தி, தற்சார்பு இந்தியா போன்ற எங்களின் முன்முயற்சிகள் உற்பத்திக்கு ஊக்கம் அளித்துள்ளன. அனைத்துக்கும் மேலாக நாட்டின் கொள்கை நிலைத்தன்மையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
நண்பர்களே,
தொற்றுநோய் முதல் புவிசார் அரசியல் பதற்றங்கள் வரை தற்போதைய உலகளாவிய சவால்கள் உலகப் பொருளாதாரத்தை சோதித்துள்ளன. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது ஜி 20 நாடுகள் என்ற முறையில் நமது பொறுப்பாகும். எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்கவல்ல, நெகிழ்வான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய மதிப்புத் தொடர்களை நாம் உருவாக்க வேண்டும். இந்தச் சூழலில், பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், அபாயங்களைக் குறைப்பதற்கும், மீள்திறனை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய மதிப்புத் தொடர்களை தொகுப்பதற்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்தியாவின் முன்மொழிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மதிப்பிற்குரியவர்களே,
வர்த்தகத்தில் தொழில்நுட்பத்தின் மாறிவரும் சக்தி மறுக்க முடியாததாகும். இணையதள ஒற்றை மறைமுக வரியான ஜிஎஸ்டிக்கு இந்தியா மாறியிருப்பது, மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவித்து ஒரே உள்நாட்டு சந்தையை உருவாக்க உதவியிருக்கிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த இணையதள வசதி வர்த்தகத் தளவாடங்களை மலிவானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றியிருக்கிறது. 'டிஜிட்டல் வணிகத்திற்கு வெளிப்படையான இணையதளம்' என்பது, டிஜிட்டல் சந்தைச் சூழலை ஜனநாயகப்படுத்தும் பெரிய மாற்றமாகும். ஏற்கனவே நாங்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள், மின்னணு வணிகத்தின் பயன்பாடு ஆகியவை சந்தை அணுகலை அதிகரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. 'வர்த்தக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கான உயர்நிலைக் கொள்கைகளை' இந்தக் குழு உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கொள்கைகள், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் இணக்க சுமைகளைக் குறைப்பதற்கும் நாடுகளுக்கு உதவும். எல்லை தாண்டிய இ-வர்த்தக வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், சவால்களும் ஏற்பட்டுள்ளன. எனவே பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்ய கூட்டாக நாம் செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியமும் உள்ளது.
மதிப்பிற்குரியவர்களே,
உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு விதிகள் அடிப்படையிலான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பலதரப்பு வர்த்தக முறையை இந்தியா நம்புகிறது. 12 வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் வளரும் நாடுகளின் கவலைகளை இந்தியா ஆதரித்துள்ளது, அங்கு லட்சக் கணக்கான விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது. எம்.எஸ்.எம்.இ.க்கள் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எம்.எஸ்.எம்.இ.க்கள் வேலைவாய்ப்பில் 60 முதல் 70 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. எங்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ என்றால் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு என்று பொருளாகும். அரசு இ-சந்தை என்ற இணைய தளத்தின் மூலம் எம்.எஸ்.எம்.இ.க்களை பொதுக் கொள்முதலில் இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. சுற்றுச்சூழலில் 'குறைகள் இல்லை', 'பாதிப்புகள் இல்லை' என்ற நெறிமுறையைப் பின்பற்ற எம்.எஸ்.எம்.இ துறையுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். உலகளாவிய வர்த்தகம் மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடரில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்திய தலைமைத்துவத்தின் முன்னுரிமையாக உள்ளது. எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு தடையற்ற தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஜெய்ப்பூர் முன்முயற்சி, எம்.எஸ்.எம்.இ.க்கள் எதிர்கொள்ளும் சந்தை மற்றும் வணிகம் தொடர்பான தகவல்களுக்கு போதுமான அணுகல் இல்லாத சவாலை சரி செய்யும். உலகளாவிய வர்த்தக உதவி மையத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கேற்பு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
மதிப்பிற்குரியவர்களே,
சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுப்பது ஒரு குடும்பம் என்ற முறையில் ஜி20 உறுப்பினர்களின் கூட்டு பொறுப்பாகும். உலகளாவிய வர்த்தக அமைப்பு படிப்படியாக மிகவும் பிரதிநிதித்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு மாறுவதை உறுதி செய்வதில் பணிக்குழு கூட்டாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். உங்களின் விவாதங்கள் வெற்றிகரமாக நடைபெற நான் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!