ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்! ஜெய் பாபா கேதார்! இந்த தெய்வீகமான நிகழ்ச்சிக்காக இந்த புனித தலத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும், எனது மரியாதையுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
இன்று கேதார்நாத் புனித தலத்தில், புகழ்பெற்ற தலைவர்கள், மதிப்பிற்குரிய சங்கராச்சார்ய பாரம்பரியத்துடன் தொடர்புடைய மதிப்பிற்குரிய முனிவர்கள், சாதுக்கள், நாடு முழுவதும் உள்ள மடாலயங்கள் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் சக்தி பீடங்களில் உள்ள பக்தர்கள் நம்மை நேரடியாகவும், காணொலி காட்சி மூலமும் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆதி சங்கராச்சார்யாவின் சமாதி மீண்டும் கட்டப்பட்டுள்ளதை நீங்களும் காண்கிறீர்கள்.
நண்பர்களே,
சில அனுபவங்களை, வார்த்தைகளில் விவரிக்க இயலாது. நான் பாபா கேதார்நாத் கோயிலுக்கு வரும்போதெல்லாம், இங்குள்ள காற்று, இமயமலை உச்சிகள் என ஒவ்வொரு துகளுடனும் நான் இணைகிறேன். பாபா கேதாருடன் இணைந்திருப்பது, என்னால் விளக்க முடியாத ஒரு அனுபவம்.
தீபாவளி பண்டிகையை நேற்று நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினேன். பண்டிகையின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை ராணுவ வீரர்களிடம் நான் எடுத்துரைத்தேன். கோவர்தன பூஜை தினமான இன்று ராணுவ வீரர்களின் பூமியில் நான் இருக்கிறேன். கேதார்நாத்துக்கு வருகை தரும் பாக்கியத்தை பெற்றுள்ளேன். பாபா கேதாரை வழிபட்டபின், ஆதி சங்காராச்சாரியா சமாதியில் சிறிது நேரம் இருந்தேன். அது தெய்வீகமான உணர்வு. அவரது சிலை முன் அமர்ந்திருத்தபோது, அதி சங்கரர் கண்களில் இருந்து ஒளி வீசுவது போல் தோன்றியது. அது பிரம்மாண்ட இந்தியாவின் நம்பிக்கையை எழுப்புகிறது.
சங்கராச்சார்யாவின் சமாதி நம்முடன் மீண்டும் உள்ளது. இத்துடன் சரஸ்வதி நதி கரையில், படித்துறையும் கட்டப்பட்டுள்ளது. மந்தாகினி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் மூலம் கருண்சாட்டிக்கு செல்ல முடியும். கருண்சாட்டியுடன் எனக்கு சிறப்பு தொடர்பு உள்ளது. அங்குள்ள ஒரு சிலரை என்னால் அடையாளம் காண முடியும். அவர்களை சந்திப்பது மகிழ்ச்சி. மந்தாகினி ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும், பக்தர்களின் பயணத்தை அதிக பாதுகாப்புடையதாக்கும். புனிதயாத்திரிகள் மற்றும் புரோகிதர்களுக்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள வீடுகள் அனைவருக்கும் வசதியை அளிக்கும், பகவான் கேதார்நாத்துக்கு சேவை செய்வதை தற்போது எளிதாக்கும். முன்பு, இங்கு வரும் சுற்றுலா பயணிகள், இயற்கை பேரிடர் ஏற்படும்போது சிக்கிக் கொள்வதை நான் பார்த்துள்ளேன். பலர் புரோகிதர்களின் ஒற்றை அறையில் தங்குவது வழக்கம். குளிரில் நமது புரோகிதர்கள் நடுங்குவர், ஆனால் விருந்தினர்கள் பற்றியே அவர்கள் கவலைப்படுவர். இவை அனைத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது, அவர்கள் அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுபடபோகிறார்கள்.
நண்பர்களே,
பயணிகளுக்கான சேவைகள் மற்றும் வசதிகள் தொடர்பான பல திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சுற்றுலா மையம், பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கான நவீன மருத்துவமனை, மழை பாதுகாப்பு இடங்கள் போன்றவை பக்தர்களுக்கு சேவை அளிக்கும். இங்கு வரும் புனிதயாத்திரிகளுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. பயணிகளுக்கு அருமையான அனுபவம் ஏற்படும்.
நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன் இங்கு ஏற்பட்ட பேரழிவு கற்பனை செய்ய முடியாதது. அப்போது நான் குஜராத் முதல்வராக இருந்தேன். நான் உடனடியாக இங்கு வந்தேன். பேரழிவை வேதனையுடன் பார்த்தேன். கேதார்புரியில் கேதார் தாம் மீண்டும் உருவாக்கப்படுமா என சந்தேகம் இங்கு வரும் மக்களுக்கு ஏற்பட்டது. ஆனால், இது மீண்டும் பெருமையுடன் எழுந்து நிற்கும் என என் உள்மனது கூறியது. பாபா கேதார், ஆதி சங்கராச்சாரியாவின் சாதனை, முனிவர்களின் தவம் காரணமாக எனக்கு எந்த நம்பிக்கை இருந்தது. அதேநேரத்தில், பூகம்பத்துக்குப்பின் கட்சை மீண்டும் உருவாக்கிய அனுபவத்தை நான் பெற்றிருந்தேன். அதனால், எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை நனவாவதை என் கண்ணால் பார்ப்பதை விட வாழ்வில் ஏதாவது சிறந்த திருப்தி இருக்க முடியுமா. இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
எனது வாழ்க்கையின் முற்பகுதியில் தம்மை வளர்த்தெடுத்த இந்த இடத்திற்கு சேவை செய்ய முடிந்தது, ஓரு நல்வாய்ப்பு. இந்தக் கோவிலின் மேம்பாட்டு பணிகளை அயராது தொடர்ந்த தொழிலாளர்கள், பூசாரிகள், அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி. இந்தப் பணிகளை முதலமைச்சர் ட்ரோன்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பழமைவாய்ந்த பூமியில், நவீனத்துடன் தெய்வீகம் இணைக்கப்பட்டு, இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றிருப்பது பகவான் ஷங்கரின் இயற்கையான அருளாசியின் விளைவாகும்.
நமது சான்றோர்கள், ஆதி சங்கராச்சாரியாவை ஷங்கர் என அழைப்பர். ஷங்கர் என்பதற்கு சமஸ்கிருதத்தில் "शं करोति सः शंकरः" என்பது பொருளாகும். அதாவது, நன்மை செய்யும் ஒருவர்தான் ஷங்கர். இந்த இலக்கணம் ஆச்சார்ய ஷங்கரால் நேரடியாக நீரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மிகவும் சிறப்புடையது, சாமானிய மக்களின் நலனுக்கு வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்.
நண்பர்களே,
நமது கலாச்சார பாரம்பரிய நம்பிக்கையின் மையங்கள் அனைவருக்கும் உகந்ததாகவும் மதிப்புமிகு பெருமிதம் கொள்வதாகவும் இன்று இருக்கின்றன. அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரின் மாபெரும் ஆலயம் உருவாகிவருகிறது, அயோத்யா தனது புகழை மீண்டும் பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அயோத்தியாவில் தீபோத்சவம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இதிலிருந்து தொன்மையான இந்தியக் கலாச்சாரம் எவ்வாறு இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம். இன்றைய இந்தியா அதன் பாரம்பரியத்தில் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தியா இன்று கடினமான இலக்குகளையும் கால வரம்பையும் தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டுள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப்போராட்டம் தொடர்பான இடங்களுக்கும், புனித யாத்திரைக்கான பக்தி சார்ந்த இடங்களுக்கும் மக்கள் பயணம் செய்யவேண்டும். இதன் மூலம் இந்தியாவின் உணர்வை அறிந்துகொள்ள வேண்டும்.
21ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் உத்தராகண்டுக்கு உரியது. சார்தாம் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் சார்தாம் சாலைத் திட்டப்பணிகள் அதிவேகமாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணி தொடங்கப்பட்டுவிட்டதால் எதிர்காலத்தில் பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்திற்குக் கம்பிவட வாகனம் மூலம் வரமுடியும். இதன் அருகே புனிதமான ஹேம்குந் சாஹிபும் உள்ளது. ஹேம்குந் சாஹிபை எளிதாக தரிசனம் செய்வதற்குக் கம்பிவடப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நண்பர்களே,
உத்தராகண்டின் ஏராளமான வளங்கள் மற்றும் மக்களின் திறன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து உத்தராகண்டின் வளர்ச்சிக்கான ‘மகா யாகத்தில்’ மாநில அரசு ஈடுபட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்ட் காட்டிய கட்டுப்பாடு பாராட்டத்தக்கது. புவியியல் ரீதியான சிரமங்களை விஞ்சி, உத்தராகண்டும் அதன் மக்களும் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை இன்று சாதித்துள்ளனர். இதுதான் உத்தராகண்டின் பலமும் சக்தியும் ஆகும். உத்தராகண்ட் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. தமது சொந்த உயரத்தைவிடவும் கூடுதலான உயரத்திற்கு எனது உத்தராகண்ட் முன்னேறும்.
நாட்டில் உள்ள அனைத்து சாதுக்கள், ஆச்சார்யாக்கள் ஆசியுடன் பாபா கேதார் தலத்திலிருந்து, நாம் புதிய தீர்மானங்களுடன் நாம் முன்னேறி செல்வோம். தீபாவளிக்குப்பின், புதிய வைராக்கியம், புதிய ஒளி, புதிய ஆற்றல் ஆகியவை நாம் ஏதாவது செய்ய பலம் அளிக்கட்டும். தீபாவளி மற்றும் சத் பூஜாவுக்கு இடையே வரும் பல பண்டிகைகளுக்காக நான் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடனும், பக்தியுடனும் மற்றும் முழு மனதுடன் என்னுடன் இணைந்து கூறுங்கள்.
ஜெய் கேதார்!
ஜெய் கேதார்!
ஜெய் கேதார்!
நன்றி !