ஒடிசா ஆளுநர் திரு. ரகுபர் தாஸ் அவர்களே, முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு. பிஸ்வேஸ்வர் டுடு அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!
ஜெய் ஜகன்னாத்!
இன்று, பகவான் ஜகந்நாதர் மற்றும் மா பிராஜா ஆகியோரின் தெய்வீக ஆசீர்வாதங்களுடன், ஜஜ்பூர் மற்றும் ஒடிசாவில் வளர்ச்சியின் புதிய அலை தொடங்கியுள்ளது. இன்று பிஜு பாபுவின் பிறந்தநாளும் கூட. ஒடிசா மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பிஜு பாபுவின் பங்களிப்பு ஈடு இணையற்றது. நாட்டுமக்கள் அனைவர் சார்பாகவும் மதிப்பிற்குரிய பிஜு பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, ரூ.20,000 கோடி மதிப்பிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சிகள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அணுசக்தி, சாலைகள், ரயில்வே மற்றும் போக்குவரத்து தொடர்பானதாக இருந்தாலும், இவை, தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவித்து,புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டங்களுக்காக ஒடிசா மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று, நாட்டில் உள்ள அரசு, நிகழ்காலத்தைப் பற்றி அக்கறை கொள்வது மட்டுமல்லாமல், 'வளர்ந்த இந்தியாவை' உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்வதன் மூலம் நாட்டின் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கியும் அயராது உழைக்கிறது. எரிசக்தித் துறையில், மாநிலங்களின் திறன்களை, குறிப்பாக கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களின் திறன்களை நாங்கள் அதிகரித்து வருகிறோம். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து முக்கிய மாநிலங்களில் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்குவதற்காக உர்ஜா கங்கா திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நமது நாட்டின் பணிக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இன்றைய நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. முன்பு, திட்டங்களை திட்டமிட்டபடி முடிப்பதில் முந்தைய அரசுகளிடம் அர்ப்பணிப்பு இல்லை. இதற்கு மாறாக, ஒருமுறை தொடங்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதற்கு நமது அரசு முன்னுரிமை அளிக்கிறது.
நண்பர்களே,
கிழக்கு இந்தியா ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஒடிசாவின் அரிய கனிம வளம் உட்பட இந்த வளங்களை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல எங்கள் அரசு பயன்படுத்துகிறது. இன்று, ஒடிசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், கஞ்சம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு நாங்கள் அடிக்கல் நாட்டினோம். தினமும் 50 லட்சம் லிட்டர் உப்பு நீரை சுத்திகரித்து, மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒடிசாவில் வளர்ச்சி முயற்சிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. பிஜு பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு நான் மீண்டும் ஒருமுறை அவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், வளர்ச்சிக்கான முன்முயற்சிகளுக்காக அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஜகன்னாத்!