ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், சொத்து அட்டைகள் பெற்றுக்கொண்ட ஒரு லட்சம் மக்களை நான் வாழ்த்துகிறேன். இன்று மாலை உங்கள் குடும்பத்தோடு அமர்ந்து நீங்கள் உணவருந்தும் போது முன்னெப்போதையும் விட மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
"இது உங்கள் சொத்து. எனக்குப் பின் இதை நீங்கள் தான் அடையப் போகிறீர்கள்" என்று நீங்கள் பெருமையுடன் உங்கள் குழந்தைகளிடம் சொல்லலாம். நம் முன்னோர்களிடம் இருந்து நமக்கு வந்த சொத்துக்களுக்கான ஆவணங்கள் இல்லை. ஆனால், தற்போது ஆவணங்களைப் பெற்றுக் கொண்டவுடன் அதிகாரம் பெற்றவர்களாக நாம் உணர்கிறோம்.
இந்த மாலை உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். புதிய கனவுகளை நீங்கள் காணலாம், அவற்றை பற்றி குழந்தைகளுடன் உரையாடலாம். இன்று நீங்கள் பெற்ற உரிமைகளுக்காக உங்களை நான் வாழ்த்துகிறேன்.
உங்களது வீடு உங்களுக்கு சொந்தமானது என்பதை சட்டபூர்வமான ஆவணத்துடன் நிரூபிக்கும் உரிமையை, நீங்கள் பெற்றுள்ளீர்கள். இந்தத் திட்டம் நமது கிராமங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. நாம் அதை பார்க்கத் தான் போகிறோம்.
என்னுடைய அமைச்சரவை சகா திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள், ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் அவர்கள், துணை முதல்வர் திரு துஷ்யந்த் சௌதாலா அவர்கள், உத்திரகாண்ட் முதல்வர் திரு திரிவேந்திர சிங் ராவத் அவர்கள், உத்திரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்கள், மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவ்ராஜ் சிங் சவுஹான் அவர்கள், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டுள்ளனர்.
திரு நரேந்திர சிங் தோமர் அவர்கள் கூறியபடி, 1.25 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு இணைந்துள்ளனர். கிராமங்களைத் தன்னிறைவு அடையச் செய்ய இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேருக்கு அவர்களது வீடுகளுக்கான சொத்து விவர அட்டை இன்று வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படும்.
திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இந்த திட்டம் தொடங்கப்படுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த இரு தலைவர்களின் பிறந்த நாட்கள் மட்டும் ஒன்றாகக் கொண்டாடப்படவில்லை, அவர்களது போராட்டங்களும் கொள்கைகளும் கூட ஒத்து இருந்தன.
திரு ஜெயப்பிரகாஷ் நாராயணும், திரு நானா ஜி தேஷ்முக்கும், ஏழை மற்றும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினார்கள்.
கிராமங்களில் வாழும் மக்களுக்குள் பூசல்கள் ஏற்படும் போது அவர்களால் தங்களையும் தங்களது சமூகத்தையும் வளர்த்துக் கொள்ள இயலாது என்று திரு நானா ஜி கூறினார், இது போன்ற வேறுபாடுகளைக் களைய உடைமைத் திட்டம் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நிலம் மற்றும் வீடுகளின் உரிமை, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று உலகெங்கும் உள்ள பல நிபுணர்கள் கூறியுள்ளார்கள். தங்களது சொத்திற்கு அடையாளம் கிடைக்கும் போது, குடிமக்களின் தன்னம்பிக்கை உயர்வதுடன், முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
சொத்தின் ஆவணங்களின் பேரில் வங்கியிலிருந்து கடன் எளிதாகக் கிடைக்கும், வேலைவாய்ப்புக்கான வழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்றைய காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தங்களது சொத்துக்களை முறையாக ஆவணப்படுத்தி உள்ளனர். கிராம மக்கள் தங்கள் சொத்துக்களை எளிதில் வாங்கவோ விற்கவோ இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.
நண்பர்களே,
இன்று நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தாங்களே சொந்தமாக பணம் ஈட்ட விரும்புகின்றனர். இது போன்ற இளைஞர்களுக்கு சொத்து அட்டை வழங்கப்பட்டவுடன் அதனைப் பயன்படுத்தி, அவர்கள் வங்கிகளில் சுலபமாக கடன் பெற்றுக் கொள்ள முடியும் .
ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நிலங்கள் குறித்து துல்லியமான விவரங்களைப் பெற முடியும். துல்லியமான ஆதாரங்களின் உதவியுடன் கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த முடியும், இது இந்தத் திட்டத்தின் மற்றொரு பயன் ஆகும்.
சகோதர, சகோதரிகளே,
பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் இதர பொது வசதிகளை எங்கே கட்டுவது என்று இது நாள் வரை தெளிவில்லாமல் இருந்தது. அதிகாரி அல்லது ஊர் பெரியவர் அல்லது சக்தி வாய்ந்தவர் சொல்படி தான் அனைத்தும் நடந்தது. ஆனால் தற்போது, வரைபடம் தயராக உள்ளது. இதைக் கொண்டு அனைத்தையும் சிக்கலில்லாமல் முடிவு செய்ய முடியும்.
நண்பர்களே,
கடந்த ஆறு வருடங்களாக பஞ்சாயத்து முறையை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்த ஸ்வாமித்வா திட்டம் மேலும் வலுப்படுத்தும். நகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு இணையாக கிராமங்களையும் மேம்படுத்த இந்த ஸ்வாமித்வா திட்டம் உதவிகரமாக இருக்கும். மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில், கிராமங்களில் நீண்ட நாட்களாக நிலவி வந்த தட்டுப்பாடுகளைக் களையவும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஞ்சாயத்துகளின் அனைத்துப் பணிகளும் தற்போது ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுக்கும் ஜியோ டேகிங்க் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆறு வருடங்களில் கிராமங்களின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வங்கி சேமிப்புக் கணக்கு, மின் இணைப்பு, கழிவறை வசதி, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்புடன் வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கடந்த 6 வருடங்களில் கிராம மக்களுக்கு செய்து தரப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளில், நீண்டகால பற்றாக்குறைகளை அகற்ற தொடர்ச்சியான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று, நாட்டில் எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லோரும் வளர்ந்து வருகின்றனர், அனைவரும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் திட்டங்களின் பலன்களை பெற்றுவருகின்றனர்.
கிராமத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக வங்கி கணக்குகளை இழந்திருந்தனர். இப்போது அவர்கள் வங்கிக்கணக்குகளைப் பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களையும் கண்ணாடி ஒளியிழை என்று அழைக்கப்படும் ஆப்டிகல் பைபர் இணைப்பின் மூலம் இணைக்கும் முயற்சி துரிதமாக நடைபெற்று வருகிறது.
கிராமங்களில், பல ஆண்டுகளாக கேஸ் இணைப்பு இல்லாமல் இருந்தவர்கள், தற்போது முறையான கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பத்தினர் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தனர். இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பத்தினர் சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல் இருந்தனர். இன்றைக்கு கிராமத்தில் உள்ள 2 கோடி ஏழை குடும்பத்தினர் கான்க்ரீட் வீடுகளை சொந்தமாக பெற்றுள்ளனர்.
ஏழைகளையும் கிராமங்களையும் தன்னிறைவு அடையச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. இதனை நிறைவேற்ற உடைமை திட்டத்தின் பங்கு மிக முக்கியம்
வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள். ஆனால் இவற்றால் விவசாயிகளுக்கு தீமையில்லை என்று நாடு புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டது.
நம் விவசாயிகள் தன்னிறைவு அடைவதில் விருப்பம் இல்லாதவர்கள்தான் இந்தச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர். சிறு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் இடையர்களுக்கு வழங்கப்படும் கிசான் கடன் அட்டையின் மூலம் இடைத்தரகர்களின் சட்டவிரோதமான வருமானம் தடைப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை 1.5 மடங்கு உயர்த்தி இருக்கிறோம். இது அவர்களால் செய்ய முடியாதது. விவசாயிகளுக்கான கடன் அட்டைகளின் மூலம் கருப்பு பணத்தின் ஆதாரம் முடக்கப்பட்டுள்ளது.
உரத்திற்கு வேம்பு பூச்சு, விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு உரித்தான பணத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்ற முடிவுகள் விரயமாவதை பெருமளவில் தடுக்கும் மற்றும் விவசாயிகளுக்கு உதவும் முயற்சிகள் ஆகும். இடைத்தரகர்கள் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குறைபாடுகளை நீக்குவதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தான் வேளாண் சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர். நாட்டின் முன்னேற்றம் இத்தகைய நபர்களால் தடைபடாது. கிராமங்களையும் ஏழை மக்களையும் தன்னிறைவு அடைய செய்யும் அரசின் முயற்சிகள் தொடரும். இந்த இலக்கை அடைய ஸ்வாமித்வா திட்டம் உறுதுணையாக இருக்கும்.
நண்பர்களே,
இடைத்தரகர்களின் உதவியுடன் இவர்கள் எத்தனை பொய்களை பரப்பினாலும், நாடு நிற்கப்போவதில்லை. கிராமங்களையும், ஏழைகளையும் தற்சார்படைய செய்து இந்தியாவின் உண்மையான திறனுக்கு அங்கீகாரம் அளிக்க நாடு உறுதி பூண்டுள்ளது.
ஸ்வாமிதா திட்டத்தை துரிதமாக செயல்படுத்தியதற்காக திரு நரேந்திர சிங் அவர்கள் மற்றும் அவரது துறையில் உள்ள குழுவினருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இன்று பலனடைந்துள்ள குடும்பங்களின் மகிழ்ச்சி எனக்கு பெரிய அளவில் திருப்தியை அளிக்கிறது. உங்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நீங்கள் உங்களது கனவுகளை அடைவதன் மூலம் நான் என்னுடைய கனவுகளை நனவாக்க இயலும்.
ஆகவே சகோதர, சகோதரிகளே, உங்களை விட நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால், ஒரு லட்சம் குடும்பங்கள் இன்றைக்கு உலகத்தின் மூலம் நம்பிக்கையோடு தங்களது சொத்து ஆவணங்களோடு நிற்கின்றன. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. அதுவும், திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் திரு நானா ஜி தேஷ்முக் ஆகிய இருபெரும் தலைவர்களின் பிறந்த நாளான இன்று இது நடந்துள்ளது. இதை விட பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்?
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்… அதே சமயம், முக கவசங்களை அணிவது பற்றியும், சமூக இடைவெளி குறித்தும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவவது பற்றியும் இந்த கொரோனா காலகட்டத்தில் நாம் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம்.
நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் கிராமம் நோயுறுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இதைப் பற்றை அக்கறைக் கொள்கிறோம். உலகில் இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நமக்கு தெரியும்.
நீங்கள் எனது குடும்பத்தினர்…அதனால் உங்களை கேட்டுக்கொள்கிறேன்- மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை அஜாக்கிரதை வேண்டாம். இந்த மந்திரத்தை மறந்து விடாதீர்கள். இந்த நம்பிக்கையோடு, நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் நான் வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி!