இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பங்கேற்பாளர்களுக்கு வணக்கம்!
ரெய்ஸ் மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதத்தை ஊக்குவிப்பதில் இது சிறந்த முயற்சி. தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாடு தொடர்பான அம்சங்களை நீங்கள் சரியாக சுட்டிகாட்டியுள்ளீர்கள். தொழில்நுட்பம், நமது பணியிடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேம்பட்ட இணைப்பை கொண்டுள்ளது. முக்கிய சவால்களுக்கு தீர்வு காண தொழில்நுட்பம் நமக்கு உதவியுள்ளது. சமூக பொறுப்பு மற்றும் செய்கை நுண்ணறிவு இடையிலான இணைப்பு, செய்கை நுண்றிவை மேம்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவு என்பது மனித அறிவுசார் ஆற்றலுக்கான புகழஞ்சலி. சிந்திக்கும் சக்தி, மனிதர்களை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவியது. இன்று, இந்த கருவிகளும் தொழில்நுட்பங்களும் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் சக்தியைப் பெற்றுள்ளன. இதில், ஒரு முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு. மனிதர்களுடனான , செயற்கை நுண்ணறிவின் குழுப்பணி, பூமியில் அதிசயங்களை நிகழ்த்தலாம்.
நண்பர்களே,
வரலாற்றின் ஒவ்வொரு அடியிலும், அறிவு மற்றும் கற்றலில் இந்தியா உலகை வழி நடத்தியுள்ளது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திலும், இந்தியா மிகச்சிறந்த பங்களிப்புகளை அளித்து வருகிறது. மிகச் சிறப்பான தொழில்நுட்பத் தலைவர்கள் சிலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையின் மையமாக இந்தியா உள்ளது. நாம் தொடர்ந்து டிஜிட்டல் முறையில் நாம் சிறந்து விளங்கி உலகை மகிழ்விப்போம்.
நண்பர்களே,
இந்தியாவில், வெளிப்படைத்தன்மை மற்றும் சேவை வழங்கலை தொழில்நுட்பம் மேம்படுத்துகிறது என்பதை நாம் பார்க்கிறோம். உலகின் மிகப்பெரிய தனித்துவமான அடையாள அமைப்பு– ஆதார். உலகின் மிகவும் புதுமையான டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை–யுபிஐ நம்மிடம் உள்ளது. இது ஏழை மற்றும் பின்தங்கியவர்களுக்கு நேரடி பணப் பரிமாற்ற சேவைகளை வழங்க உதவியது. தொற்று சூழ்நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் தயார்நிலை எவ்வாறு பெரிதும் உதவியது என்பதைக் நாம் கண்டோம். நாம் விரைவாக மக்களுக்கு உதவி செய்தோம். இந்தியா தனது கண்ணாடியிழை நார் நெட்வொர்க்கை வேகமாக விரிவுபடுத்துகிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய இணைப்பு வழங்குவதே இதன் நோக்கம்.
நண்பர்களே,
இப்போது, செயற்கை நுண்ணறிவில், இந்தியா உலகளாவிய மையமாக மாற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பல இந்தியர்கள் ஏற்கனவே இதில் பணியாற்றி வருகின்றனர். வரவிருக்கும் காலங்களில் இன்னும் பலர் இதில் பணியாற்றுவர் என்று நம்புகிறேன்.
இந்தியா சமீபத்தில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ உருவாக்கியது. இது தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கற்றல் மற்றும் கல்வியின் முக்கிய பகுதியான திறமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மின் படிப்புகள் பல்வேறு பிராந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளிலும் உருவாக்கப்படும். இந்த முழு முயற்சியும், செயற்கை நுண்ணறிவு தளங்களின், இயற்கை மொழி செயலாக்கம் (என்.எல்.பி) திறன்களிலிருந்து பயனடைகிறது. இளைஞர்களுக்கான பொறுப்பு செயற்கை நுண்ணறிவு திட்டத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாம் தொடங்கினோம், இந்த திட்டத்தின் கீழ், பள்ளிகளைச் சேர்ந்த 11000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடிப்படை படிப்பை முடித்தனர். அவர்கள் இப்போது தங்கள் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உருவாக்குகிறார்கள்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய திட்டம் குறித்தும் நான் குறிப்பிட விரும்புகிறேன். சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவின் சரியான பயன்பாட்டிற்கு இது அர்ப்பணிக்கப்படும். இது அனைத்து தரப்பினரின் ஆதரவோடு செயல்படுத்தப்படும். இதில் ரெய்ஸ் மாநாடும் முக்கிய பங்காற்றலாம். இந்த முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
நண்பர்களே,
நான் உங்கள் முன் சில சவால்கள் எடுத்துரைக்க விரும்புகிறேன். நமது சொத்துக்கள் மற்றும் வளங்களை உகந்த முறையில் நிர்வகிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாமா? சில இடங்களில், வளங்கள் பயனற்றவையாக உள்ளன. வேறு இடத்தில் வளங்கள் பற்றாக்குறையாக உள்ளது. உகந்த பயன்பாட்டைக் கண்டறிய அவற்றை நாம் வேறு இடத்துக்கு மறு ஒதுக்கீடு செய்யலாமா? மக்களுக்கு தேவையான சேவைகளை அவர்களின் வீட்டு வாசலில் விரைவாக வழங்குவதன் மூலம் அவர்களை மகிழ்விக்க முடியுமா?
நண்பர்களே,
வேளாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில், செயற்கை நுண்ணறிவுக்கு முக்கிய பங்கு இருப்பதை நான் காண்கிறேன். அடுத்த தலைமுறைக்கான, நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்தல், கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மின் தொகுப்புகளை அமைத்தல், பேரழிவு மேலாண்மை அமைப்புகளை வலிமையாக்குதலில் செயற்கை நுண்றிவை பயன்படுத்தலாம். பருவநிலை மாற்ற பிரச்னைகளை தீர்க்கவும் இதை பயன்படுத்தலாம்.
நண்பர்களே,
இந்த உலகத்தில் பல மொழிகள் உள்ளன. இந்தியாவிலும் பல மொழிகள் உள்ளன. . பேராசிரியர் ராஜ் ரெட்டி பரிந்துரைத்தபடி, மொழி தடைகளை அகற்ற, செயற்கை நுண்ணறிவை ஏன் பயன்படுத்தக்கூடாது? மாற்றுத் திறனாளிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
அறிவை பகிர்ந்து கொள்வதிலும், செயற்கை நுண்ணறிவு ஏன் பயன்படுத்தக் கூடாது? அறிவு, தகவல் மற்றும் திறன்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது நமது கூட்டு பொறுப்பாகும். சில பொறுப்பற்ற நாடுகள் ஆயுதமயமாக்கலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம். அதிலிருந்து நாம் உலகை பாதுகாக்க வேண்டும்.
நண்பர்களே,
செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் விவாதிக்கும்போது, மனித படைப்பாற்றல் மற்றும் மனித உணர்ச்சிகள் தொடர்ந்து நமது மிகப்பெரிய பலமாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அவை இயந்திரங்களை விட தனிச்சிறப்பானவை. நமது அறிவு மற்றும் இரக்கம் ஆகியவை கலக்காமல், மனிதகுலத்தின் பிரச்சினைகளை செயற்கை நுண்ணறிவால் தீர்க்க முடியாது. இயந்திரங்கள் மீது இந்த அறிவுசார் விளிம்பை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்? மனித நுண்ணறிவு எப்போதுமே, செயற்கை நுண்ணறிவை விட சில படிகள் முன்னால் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். மனிதர்கள் தங்கள் சொந்த திறன்களை அதிகரிக்க, செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
நண்பர்களே,
இங்கே ரெய்ஸ் மாநாட்டில், உலகின் முன்னணி பங்குதாரர்களுக்கான, உலகளாவிய அமைப்பை உருவாக்கியுள்ளோம். செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதற்கான, கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது. இந்த உலகளாவிய நிகழ்வில் பங்கேற்க வந்ததற்கு நன்றி. இந்த உலகளாவிய உச்சிமாநாடு அனைத்து வெற்றிகளையும் அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அடுத்த நான்கு நாட்களில் நடைபெறும் விவாதங்கள், பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கான திட்டத்தை உருவாக்க உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த திட்டம் உலகெங்கிலும் உள்ள வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மாற்ற உதவும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நன்றி.