கேரள சகோதரிகளே , சகோதரர்களே,
கடவுளின் சொந்த நாடு என அழைக்கப்படும் கேரளத்திற்கு வருகை தர எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அஸ்தமுடி ஏரியின் கரையில் உள்ள கொல்லம், சென்ற ஆண்டின் வெள்ளப் பெருக்கு அசம்பாவிதத்திலிருந்து மீண்டு எழுந்து வருகிறது. ஆனால் கேரளாவை மறு சீரமைக்க நாம் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்த புறவழிச்சாலை பணியை நிறைவு செய்ததற்கு உங்களுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மக்களின் வாழ்க்கையை மேலும் எளிதாக்கும். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது எனது அரசின் உறுதிப்பாடாகும்.
அனைவருடனும் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த உறுதிப்பாட்டுடன் எனது அரசு இந்தத் திட்டத்திற்கு 2015 ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. மாநில அரசின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2014 மே மாதத்தில் எமது அரசு பதவி ஏற்ற பிறகு, கேரள மாநிலத்தின் அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு நாம் உயர் முன்னுரிமை அளித்து வந்துள்ளோம். பாரத் மாலா திட்டத்தின்கீழ் மும்பை கன்னியாகுமரி தாழ்வாரத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன.
நமது நாட்டில் அடிப்படை வசதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின் பல்வேறு காரணங்களுக்காக நின்று போவதை நாம் பார்த்திருக்கிறோம். விலையேற்றம், காலதாமதம் காரணமாக அரசுப் பணம் அதிக அளவில் விரயமாகி வருவதை நாம் அறிவோம். இத்தகைய அரசுப்பண விரயம் தொடரக்கூடாது என்று நாம் முடிவு செய்தோம். “பிரகதி” மூலம் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு திட்ட செயல்பாட்டை விரைவுபடுத்தி வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும், கடைசி புதன்கிழமை அன்று மத்திய அரசின் அனைத்துத் துறை செயலாளர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் அமர்ந்து இத்தகைய திட்டங்கள் தாமதம் ஆவது குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.
சில திட்டங்கள், இருபது முதல் முப்பது ஆண்டுகள் வரை மிக நீண்ட காலம் காலதாமதம் ஆகியிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். திட்டங்களின் பலன்கள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு சாதாரண மனிதனை அடையாமல் தடுப்பது பெரிய குற்றமாகும். இதுவரை ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான 250க்கும் மேற்பட்ட திட்டங்களை பிரகதியின் மூலம் ஆய்வு செய்துள்ளேன்.
நண்பர்களே, அடல் ஜி அவர்கள், சாலை இணைப்புத் திறனின் ஆற்றலில் நம்பிக்கைக் கொண்டவர். அவரது தொலைநோக்கை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.தேசிய நெடுஞ்சாலைகள் முதல் கிராமப்புறச் சாலைகள் வரை அமைப்பு வேகம் முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
நாங்கள் அரசு அமைத்த போது நாட்டின் 56சதவீத கிராமப்புறக் குடியிருப்புகள் மட்டுமே சாலை இணைப்பைப் பெற்றிருந்தன. இன்
று 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறக் குடியிருப்புகள் சாலை வசதியை பெற்றுள்ளன. விரைவில் 100 சதவீத இலக்கை உறுதியாக அடைந்துவிடுவோம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
சாலைத் துறையைப் போன்றே ரயில்வேக்கள், நீர்வழிப்பாதைகள், விமானப்பாதைகள் ஆகியவற்றுக்கும் எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வாரணாசி முதல் ஹால்டியா வரையிலான தேசிய நீர்வழிப்பாதை ஏற்கனவே செயல்படத் துவங்கியுள்ளது. இது மிகத் தூய்மையான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கக் கூடியவை. கடந்த நான்கு ஆண்டுகளில் மண்டல விமான இணைப்புகளும் பெரும் அளவில் மேம்பட்டுள்ளன. ரயில்பாதையை இரு வழிகளிலும் மின்மயமாக்குதல், புதிய ரயில்பாதைகள் அமைத்தல், ஆகியவற்றின் வேகமும் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. இவை அனைத்தும் வேலை வாய்ப்புப் பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சாலைகளையும், பாலங்களையும் நாம் கட்டும் போது . நகரங்களையும், கிராமங்களையும் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. விருப்பங்களை சாதனைகளுடனும், வாய்ப்புகளை நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியை மனநிறைவுடனும் இணைக்கிறோம்.
எனது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மேம்பாடும்தான் எனது உறுதியான நோக்கம். வரிசையில் நின்றிருக்கும் கடைசி நபர்தான் எனது முன்னுரிமை. மீன்வளத்துறைக்கு எனது அரசு புதிதாக ரூ.7,500 கோடி நிதியை அனுமதித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வீதத்திலான ரொக்கமில்லாத மருத்துவக் காப்பீட்டை வழங்கியுள்ளோம். இதுவரை இத்திட்டத்தின்கீழ் எட்டு லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர். அரசு இத்திட்டத்தில் இதுவரை ரூ.1,100 கோடி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் அமலாக்கத்தை விரைவுப்படுத்துமாறு கேரள அரசை கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கேரள மக்கள் இத்திட்டப்பயன்களை பெறுவது ஏதுவாகும்.
கேரளாவின் பொருளாதார மேம்பாட்டில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தில் அது முதன்மைப் பங்கினை அளிக்கிறது. சுற்றுலாவைப் பொறுத்தவரை எனது அரசு கடுமையாக உழைத்து மிகச் சிறந்த பலன்களை எட்டியுள்ளது. இதன் காரணமாக உலகப் பயணம் மற்றும் சுற்றுலா சபையின் 2018 அறிக்கையின்படியான புதிய தரவரிசையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. இது முக்கியமான மேம்பாடாகும். நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு இது கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் போட்டியிடும் திறன் குறியீட்டில் இந்தியா 65 ஆம் இடத்திலிருந்து 40-ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
2017-ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவது சுமார் ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. 2013-ல் இது 70 லட்சமாக இருந்தது. இந்த உயர்வு 42 சதவீதம் ஆகும். சுற்றுலா மூலம் இந்தியா சம்பாதித்த அந்நிய செலாவணி 2013-ல் ரூ.1,800 கோடியாக இருந்து 2017-ல் ரூ.2,700 கோடியாக உயர்ந்துள்ளது. இது 50 சதவீத உயர்வாகும். 2017-ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையை மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுள் இந்தியா ஒன்றாக இருந்தது. 2016-ஐ ஒப்பிடும் போது இதன் வளர்ச்சி 14 சதவீதமாகும். அதே ஆண்டில் உலகச் சுற்றுலா சராசரி வளர்ச்சி 7 சதவீதம் மட்டுமே.
இந்தியச் சுற்றுலாத் துறையில், மின்னணு விசா அறிமுகப்படுத்தியது பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த வசதி இப்போது உலகெங்கும் உள்ள 166 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கிறது.
சுற்றுலா, பராம்பரியம், ஆன்மீக இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எமது அரசு இரண்டு பெரிய திட்டங்களை தொடங்கியுள்ளது. சுற்றுலாத் தலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் ஆகியனவே இந்தத் திட்டங்களாகும்.
கேரளாவின் சுற்றுலாத் திறனை உணர்ந்து அம்மாநிலத்திற்கு சுதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்களின்கீழ் ரூ.550 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் பத்மநாப சுவாமி கோவிலில் இது போன்ற திட்டம் ஒன்றை நான் தொடங்கி வைக்க உள்ளேன்.
கேரள மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்கள், நலனுக்காக பத்மநாப சுவாமியை தரிசித்து வேண்டுதல் விடுக்க உள்ளேன்.
“கொல்லம் கண்டால் இல்லம் வேண்டாம்” என்ற பழமொழியை நான் கேட்டிருக்கிறேன், அதாவது கொல்லத்திற்கு சென்றால் அனைவரும் அதனை தனது வீடு போல பாவிக்கின்றனர் என்று பொருள். அதே போன்ற உணர்வை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
கொல்லம் மற்றும் கேரள மக்களின் அன்பு மற்றும் பாசத்திற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேம்பட்ட வலுவான கேரளாவுக்காக என் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறேன்.