எனது அமைச்சரவை சகா திரு மன்சுக் பாய் அவர்களே, இந்திய மருந்துக் கூட்டணியின் தலைவர் திரு சமீர் மேத்தா அவர்களே, காடிலா ஹெல்த்கேர் லிமிடெட்டின் தலைவர் திரு பங்கஜ் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய பங்கேற்பாளர்களே,
வணக்கம்!
இந்த உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக இந்திய மருந்துக் கழகத்தை நான் முதற்கண் வாழ்த்துகிறேன்.
கொவிட்-19 பெருந்தொற்று சுகாதாரத் துறையின் முக்கியத்துவத்தை பெருமளவு அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், இந்திய மருந்துத் துறையும் நன்றாக முன்னேறியுள்ளது.
இந்திய சுகாதாரத் துறை பெற்ற உலகளாவிய நம்பிக்கையானது சமீப காலங்களில் இந்தியாவை "உலகின் மருந்தகம்" என்று அழைக்க வழிவகுத்தது. ஏறக்குறைய 3 மில்லியன் மக்களைப் பணியமர்த்தி, சுமார் பதின்மூன்று பில்லியன் டாலர் வர்த்தக உபரியை ஈட்டி, இந்திய மருந்துத் தொழில் நமது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்து வருகிறது.
மலிவு விலையில், உயர் தரம் மற்றும் அளவு ஆகியவற்றின் கலவையானது, இந்திய மருந்து துறை மீதான பெரும் ஆர்வத்தை உலகெங்கிலும் உருவாக்கியுள்ளது. 2014 முதல், இந்திய சுகாதாரத் துறை 12 பில்லியன் டாலர்களுக்கு மேல் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும், இன்னும் நிறைய சாத்தியங்கள் உள்ளன.
நண்பர்களே,
ஆரோக்கியத்திற்கான எங்கள் வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சர்வே பவந்து சுகின்: சர்வே சந்து நிராம்யா:।
மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ளோம். பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். இந்த ஆண்டு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். வரவிருக்கும் மாதங்களில், எங்கள் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிக்கையில், நாங்கள் இன்னும் பலவற்றைச் செய்வோம்.
நண்பர்களே,
கொவிட்-19 காலத்தில் புதுமைகளின் முக்கியத்துவம், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. நமது வாழ்க்கை முறைகள், நாம் நினைக்கும் மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மறுகற்பனை செய்ய இடையூறுகள் கட்டாயப்படுத்தின. இந்திய மருந்துத் துறையின் சூழலியலும், வேகம், அளவு மற்றும் புதுமைக்கான விருப்பம் ஆகியவையும் உண்மையிலேயே ஈர்க்கக்கூடியவை. எடுத்துக்காட்டாக, இந்த கண்டுபிடிப்பு உணர்வுதான் இந்தியாவை தனிநபர் பாதுகாப்பு கவசங்களின் பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக மாற வழிவகுத்தது. மேலும், கொவிட்-19 தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தி செய்வதிலும், நிர்வகிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் இருக்க வழிவகுத்ததும் அதே புதுமை உணர்வுதான்.
நண்பர்களே,
மருந்து துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளிலும் இதே புதுமை உணர்வு பிரதிபலிக்கிறது. கடந்த மாதம், "இந்தியாவில் பார்மா-மெட்டெக் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் கொள்கை" என்ற வரைவு ஆவணத்தை அரசாங்கம் வெளியிட்டது. மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தக் கொள்கை பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னணியில் வைக்கும் புதுமைக்கான சூழலியலை உருவாக்குவதே எங்கள் லட்சியம். அனைத்து பங்குதாரர்களுடனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் எங்களது கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன. ஒழுங்குமுறை கட்டமைப்பின் மீதான தொழில்துறை கோரிக்கைகளுக்கு நாங்கள் செவிசாய்க்கிறோம். மேலும், இந்த திசையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களின் மூலம் தொழில்துறை பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
நண்பர்களே,
தொழில்துறை, கல்வி உலகம் மற்றும் குறிப்பாக நமது திறமையான இளைஞர்களின் ஆதரவு முக்கியமானது. அதனால்தான் கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை நாங்கள் ஊக்குவிக்கிறோம். தொழில்துறையை அதிக உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஒரு பெரிய குழு இந்தியாவில் உள்ளது. இந்த பலத்தை ''டிஸ்கவர் அண்ட் மேக் இன் இந்தியா''-வுக்குப் பயன்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
நீங்கள் கவனமாக ஆராய விரும்பும் இரண்டு பகுதிகளையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். முதலாவது மூலப்பொருள் தேவைகள் தொடர்பானது. நாங்கள் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கையில், அதிக கவனம் தேவைப்படும் ஒரு பிரச்சினை இது என்பதைக் கண்டறிந்தோம். இன்று, 1.3 பில்லியன் இந்திய மக்கள் இந்தியாவை தற்சார்பு ஆக்குவதற்குத் உறுதி பூண்டுள்ள நிலையில், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கான முக்கிய மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தியா வெல்ல வேண்டிய ஒரு துறை இது.
முதலீட்டாளர்களும் புதுமையாளர்களும் இந்தச் சவாலை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டாவது பகுதி இந்தியாவின் பாரம்பரிய மருந்துகளுடன் தொடர்புடையது. சர்வதேச சந்தையில் இந்த தயாரிப்புகளுக்கு இப்போது குறிப்பிடத்தக்க மற்றும் வளர்ந்து வரும் தேவை உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த தயாரிப்புகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றம் மூலம் இதைக் காணலாம். 2020-21-ல் மட்டும், 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மூலிகை மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையத்தை இந்தியாவில் அமைக்கவும் உலக சுகாதார அமைப்பு பணியாற்றி வருகிறது. உலகளாவிய தேவைகள், அறிவியல் தரநிலைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகளுக்கு ஏற்ப நமது பாரம்பரிய மருந்துகளை பிரபலப்படுத்துவதற்கான கூடுதல் வழிகளைப் பற்றி சிந்திக்க முடியுமா?
நண்பர்களே,
இந்தியாவில் சிந்தித்து, இந்தியாவில் கண்டுபிடித்து, உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். உங்களது உண்மையான வலிமையைக் கண்டறிந்து உலகிற்கு சேவை செய்யுங்கள்.
புதுமைகள் மற்றும் தொழில்களுக்கு தேவையான திறமை, வளங்கள் மற்றும் சூழலியல் எங்களிடம் உள்ளன. எங்களின் விரைவான முன்னேற்றங்கள், புதுமையின் உணர்வு மற்றும் மருந்துத் துறையில் எங்களின் சாதனைகளின் அளவு ஆகியவை உலகத்தால் கவனிக்கப்பட்டுள்ளன. முன்னோக்கி நகர்த்துவதற்கும் புதிய உயரங்களை அளவிடுவதற்கும் இதுவே சிறந்த நேரம். புதுமைக்கான சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று உலகளாவிய மற்றும் உள்நாட்டு தொழில்துறை தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். இந்த உச்சிமாநாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்திய மருந்துத் துறையின் நிலையை வலுப்படுத்தும் முதன்மை நிகழ்வாக அமையட்டும்.
இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டின் போது நடத்தப்படும் விவாதங்கள் பலனளிக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை ஏற்பாட்டாளர்களை நான் வாழ்த்துகிறேன்.
நன்றி.
மிக்க நன்றி.