ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, அரியானா மாநில ஆளுநர் திரு சத்யதேவ் நாராயண் ஆர்யா அவர்களே, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு அசோக் கெலாட் அவர்களே, அரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு துஷ்யந்த் சவுதாலா அவர்களே, எனது மத்திய அமைச்சரவை தோழர்கள் திரு பியூஷ் கோயல், திரு கஜேந்திர சிங் ஷெகாவத், திரு அர்ஜூன் ராம் மெக்வால், திரு கைலாஷ் சவுத்ரி, ராவ் இந்தர்ஜித் சிங், ரத்தன் லால் கட்டாரியா, கிஷன்பால் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு சதோஷி சுசுகி அவர்களே, சிறப்பு விருந்தினர்களே அனைவருக்கும் வணக்கம்.
சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் கட்டமைப்பை நவீனமயமாக்கும் மகா வேள்வி இன்று புதிய உத்வேகம் பெற்றுள்ளது. நவீன டிஜிடல் கட்டமைப்பு வழியாக கடந்த 10,12 நாட்களுக்குள் மட்டும் ரூ. 18,000 கோடிக்கு மேல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் மாற்றப்பட்டுள்ளது. விமான நிலைய விரைப்பாதையில் தேசிய போக்குவரத்து அட்டை அறிமுகம் செயய்யப்பட்டது; அதேபோல , ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. ராஜ்கோட்டில் எய்ம்ஸ், ஐஐஎம் சம்பல்பூர் ஆகியவை தொடங்கப்பட்டன. 6 நகரங்களில் சிறிய நவீன வீடு கட்டும் திட்டங்கள் தொடங்கியுள்ளன. தேசிய அணுகால அளவுகோல், பாரதிய நிர்தேஷக் திராவியா, தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகம், கொச்சி-மங்களூர் இடையே குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டம், 100-வது உழவர் ரயில், கிழக்கு ரயில்வேயில் பிரத்தியேக சரக்கு ரயில் போக்குவரத்து போன்ற திட்டங்களை, மத்திய அரசு கடந்த 12 நாட்களில் மேற்கொண்டுள்ளது. நாட்டை நவீனமயமாக்கும் முயற்சியில், கொரோனா தொற்று காலத்திலும், பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் தயாரான இரண்டு கோவிட் தடுப்பூசிகளுக்கு சில நாட்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களே, பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான திட்டமாகக் காணப்படுகிறது. புதிய பாபூர் - புதிய குர்ஜா வழித்தடம் தொடங்கப்பட்டதிலிருந்து, அந்தப் பாதையில் சரக்கு ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர் என்ற அளவில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு மணிக்கு 25 கி.மீ வேகத்தில் மட்டுமே சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதேபோல, இந்தியாவில் திட்டப் பணிகளின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, அரியானாவின் புதிய அடேலியிலிருந்து, ராஜஸ்தானின் புதிய கிசான்கன்ஞ் வரை இரட்டை அடுக்கு பெட்டக சரக்கு ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த வசதி உடைய சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த சாதனையின் பின்னணியில் , ரயில்வேப் பொறியாளர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த பிரத்தியேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடமானது, ராஜஸ்தான் விவசாயிகள், தொழில்முனைவோர், வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் நிச்சயம் கொண்டு வரும். இந்த பிரத்தியேக சரக்கு வழித்தடம், நவீன சரக்குப் போக்குவரத்துக்கான வழியாக மட்டும் அல்லாமல், நாட்டின் துரித வளர்ச்சிக்கான பாதையாகவும் அமைந்துள்ளது. புதிய வளர்ச்சி மையங்கள் உருவாவதற்கான அடிப்படையை இந்த வழித்தடம் அமைப்பதுடன், நாட்டின் பல நகரங்களில் வளர்ச்சியையும் அதிகரிக்கவுள்ளது.
சகோதர, சகோதரிகளே, நாட்டின் பல பகுதிகளின் ஆற்றல் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை கிழக்கு ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து வழித்தடம் காட்டத் தொடங்கியுள்ளது. மேற்கு ரயில்வேயின் சரக்கு வழித்தடம், அரியானாவிலும், ராஜஸ்தானிலும் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை எளிதாக்கும். மகேந்திரகர், ஜெய்ப்பூர், அஜ்மீர், சிகார் போன்ற நகரங்களின் வளர்ச்சியில் புதிய சக்தியை அளிக்கும். இந்த மாநிலங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளும், தொழில்முனைவோரும் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தங்கள் உற்பத்திப் பொருட்களை குறைந்த செலவில் விரைவாக கொண்டு செல்ல முடியும். குஜராத், மகாராஷ்டிரா துறைமுகங்களுக்கு குறைந்த செலவில் விரைவாகச் செல்வதன் மூலம், இப்பகுதியில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்க வழி ஏற்படும்.
நண்பர்களே, நவீன கட்டமைப்பு உருவாக்கம், வாழ்க்கையிலும், வணிகத்திலும் புதிய அமைப்புகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது தொடர்பான பணியின் வேகத்தை மட்டும் அதிகரிக்காமல், பொருளாதார எந்திரங்கள் பலவற்றுக்கும் இது ஆற்றலை வழங்குகிறது. இந்த சரக்கு வழித்தடம் கட்டுமானத் துறையில் மட்டுமல்லாமல், சிமென்ட், எஃகு, போக்குவரத்து துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த சரக்கு வழித்தடம் 9 மாநிலங்களில் 133 ரயில்வே நிலையங்களைக் கடந்து செல்கிறது. இந்த ரயில் நிலையங்களில், பன்நோக்கு தளவாட மையம், சரக்கு முனையம், சரக்குப் பெட்டக கிடங்கு, பெட்டக முனையம், பார்சல் மையம் ஆகியவை அமையும். இவை அனைத்தும், விவசாயிகள், சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், மிகப் பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்.
நண்பர்களே, நாட்டில் இன்று கட்டமைப்பு பணி ஒரே நேரத்தில் இரட்டைப் பாதையில் பயணிக்கிறது. ஒரு பாதை தனிநபர் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. மற்றொரு பாதை நாட்டின் வளர்ச்சி எந்திரங்களுக்கு புதிய ஆற்றலை வழங்குகிறது. தனிநபர் வளர்ச்சி என்பது , வீட்டு வசதித்துறை, துப்புரவு, மின்சாரம், எல்பிஜி, சாலை மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தங்களால் நிகழ்கிறது. இதுபோன்ற திட்டங்களால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பலன் அடைந்துள்ளனர். மற்றொரு பாதையில், நாட்டின் வளர்ச்சி எந்திரங்களான தொழில்துறை, தொழில் முனைவோர் ஆகியவை, நெடுஞ்சாலை, ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, துறைமுக இணைப்பு திட்டங்கள் விரைவாக அமல்படுத்தப்பட்டதால் பயன் அடைந்துள்ளன. சரக்குப் போக்குவரத்து வழித்தடம் போல், பொருளாதார வளாகம், பாதுகாப்புத்துறை வளாகம், தொழில்நுட்பத் தொகுப்பு போன்றவை தொழில்துறைக்கு வழங்கப்படுகின்றன. இந்த தனிநபர் மற்றும் தொழில் கட்டமைப்பு, இந்தியாவை பற்றிய நல்ல தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்னிய செலாவணி இருப்பு அதிகரிப்பில் இது பிரதிபலிக்கிறது, இந்தியா மீது நம்பிக்கையை இது ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பானிய தூதர் திரு சுசுகி கலந்து கொண்டுள்ளார். ஜப்பானும் அதன் மக்களும் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கைக்கு உரிய நண்பர்களாக திகழ்கின்றனர். ஜப்பான் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியிலும், தொழில்நுட்ப அளவிலும் பெரும் ஆதரவு அளித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கும், அதன் மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்திய ரயில்வேயை தனிநபர், தொழில்துறை, முதலீடு ஆகியவை தொடர்ந்து நவீனப்படுத்தி வருகின்றன. முன்பு ரயில் பயணிகள் பட்ட சிரமங்களையும், அனுபவங்களையும் நாம் அறிவோம். சுத்தம், நேரத்தை கடைப்பிடித்தல், சேவை, டிக்கெட் வழங்குதல், வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் ரயில் பெட்டிகளின் சுத்தம், பயோ கழிவறைகள், நவீன டிக்கெட் முறைகளுக்கு, தேஜஸ் மற்றும் வந்தே பாரத், விஸ்தா-டோம் ரயில் பெட்டிகள் போன்ற மாதிரி ரயில்கள் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
நண்பர்களே, கடந்த ஆறு ஆண்டுகளில், அகல ரயில் பாதை, ரயில்வே மின்மயமாக்கம் ஆகியவற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது நம்பிக்கையையும், ரயில்களின் வேகத்தையும் அதிகரித்துள்ளது. அதிவேக ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில்பாதை அமைப்பதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகர் ஒவ்வொன்றும் ரயில்வேயுடன் இணைக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை . கொரோனா காலத்திலும், ரயில்வேத் துறை நண்பர்கள் உன்னதமான பங்களிப்பை அளித்துள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றதில், ரயில்வே பணியாளர்கள் பெரும் பங்களித்துள்ளனர். இந்த வகையில், நாட்டு மக்களின் ஆசிகள் ஒவ்வொரு ரயில்வே ஊழியரையும் நிச்சயம் சேரும்.
மீண்டும் ஒரு முறை, நான் மேற்கு ரயில்வேயின் பிரத்யேக சரக்கு வழித்தடத்துக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகள் பல!