பாலைவனமயமாக்கலுக்கு எதிரான ஐ.நா. சிறப்பு மாநாட்டின் 14வது மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த சிறப்பு மாநாட்டினை இந்தியாவிற்கு கொண்டு வந்தமைக்காக நிர்வாக செயலாலர் திரு. இப்ரஹீம் ஜியோவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்வதில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனை நிலத்தின் தரத்தைக் குறைப்பதை தடுத்து நிறுத்தும் கடமையில் உலகளவில் நிலவும் உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதாக அமைகிறது.
இரண்டு ஆண்டுக் கால தலைமைப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொள்ளும்போது சிறப்பான வகையில் பங்களிப்பை செலுத்தவும் இந்தியா ஆர்வத்தோடு இருக்கிறது.
நண்பர்களே,
பல ஆண்டுக் காலமாகவே இந்தியாவில் நாங்கள் நிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். இந்திய கலாச்சாரத்தில் நிலம் என்பது புனிதமான ஒன்றாக மதிக்கப்படுகிறது. அது தாயாகவும் கருதப்படுகிறது.
காலையில் எழுந்திருக்கும்போது நமது கால்கள் பூமியைத் தொடுகின்றன. அத்தருணத்தில் பூமித்தாயிடம் அதற்காக எங்களை மன்னிக்கும்படி கோரி பிரார்த்தனை செய்வதும் எங்கள் வழக்கமாக இருந்து வருகிறது.
நண்பர்களே,
பருவநிலையும், சுற்றுச் சூழலும் பல்வேறு உயிர்கள், நிலம் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பருவநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கத்தை உலகம் எதிர்கொண்டு வருகிறது என்பதும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மையாகும். நிலம், தாவரங்கள், விலங்கு வகைகள் ஆகியவற்றை இழப்பது, முற்றிலுமாக அழிவதற்கான அபாயத்தை எதிர்கொள்வது ஆகியவற்றிலிருந்தும் இதைக் காண முடியும். பருவநிலை மாற்றம் வெப்பமான சீதோஷ்ண நிலையின் விளைவாக கடல் மட்டத்தின் அளவு உயர்வது, அலைகளின் செயல்பாடு, தாறுமாறான மழைப்பொழிவு, புயல்கள், மணற்புயல்கள் ஆகியவற்றுக்கு வழிவகுப்பதோடு, நிலமானது பல்வேறு வகையிலும் அதன் தரம் குறைவதற்கும் இட்டுச் செல்கிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்த சிறப்பு மாநாட்டின் மூலம் மூன்று மாநாடுகளையும் இந்தியா நடத்தி முடித்துள்ளது. ரியோ நகரில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட மூன்று முக்கிய கவலைகள் மீது கவனம் செலுத்துவதில் எங்களின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் கூறுகிறது.
இதை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் பருவநிலை மாற்றம், உயிரிகளின் பன்முகத் தன்மை, நிலம் தரமிழத்தல் ஆகிய பிரச்சனைகளை கையிலெடுப்பதில் வளரும் நாடுகளுக்கிடையே மேலும் அதிகமான ஒத்துழைப்பிற்கான முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென முன்மொழிவதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது.
நண்பர்களே,
பாலைவனமயமாக்கல் பிரச்சனையானது உலகத்தில் உள்ள நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை பாதிப்பதாக உள்ளது என்பதை அறியும்போது நீங்கள் அதிர்ச்சி அடையவும் கூடும். எனவே நிலம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது. அதனோடு கூடவே உலகம் தண்ணீர் நெருக்கடியிலும் சிக்கியுள்ளது. ஏனெனில் தரமிழந்த நிலத்தைப் பற்றி நாம் கூறும்போது தண்ணீர் பற்றாக்குறை என்ற பிரச்சனையையும் நாம் சேர்த்தேதான் கூறுகிறோம்.
தண்ணீரை மீண்டும் நிரப்புவதை அதிகரிப்பதன் மூலமும், தண்ணீர் வீணாவதை குறைப்பதன் மூலமும், நிலத்தில் ஈரப்பதத்தை நிறுத்தி வைப்பதன் மூலமும் தண்ணீர் வழங்கலை மேம்படுத்த முடிவது போன்ற அனைத்து நடவடிக்கைகளுமே, நிலம் மற்றும் தண்ணீர் குறித்த முழுமையான ஒரு நடைமுறை உத்தியின் பகுதிகளே ஆகும். தண்ணீருக்கான உலகளாவிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமென ஐநா சபையின் பாலைவன மயமாக்கலுக்கு எதிரான சிறப்பு மாநாட்டின் தலைமையை நான் கேட்டுக் கொள்கிறேன். நிலம் தரமிழப்பதை தடுத்து நிறுத்துவதற்கான நடைமுறை உத்தியின் மையமாக இது விளங்குகிறது.
நண்பர்களே,
நீடித்த வளர்ச்சிக்கு நிலத்தின் செழுமையை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். பருவநிலை மாற்றத்திற்கான ஐநா சபையின் கட்டமைப்பிற்கான சிறப்பு அமைப்பின் பாரீஸ் மாநாட்டில் இந்தியா குறித்த புள்ளிவிவரங்கள் தரப்பட்டன என்று இன்று என்னிடம் நினைவூட்டினார்கள்.
நிலம், நீர், காற்று, மரங்கள், அனைத்து உயிரினங்கள் ஆகியவற்றுக்கிடையே செழுமையான ஒரு சமநிலையை நிலைநாட்டுவதில் இந்தியாவின் ஆழமான கலாச்சார வேர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் எடுத்துக் கூறப்பட்டது.
நண்பர்களே,
இந்தியாவால் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்க முடிந்துள்ளது என்பதறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடையக் கூடும். 2015க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மரம் மற்றும் காடுகளின் அடர்த்தி என்பது 0.8 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வளர்ச்சி நோக்கங்களுக்காக வனப்பகுதி நிலங்களில் செய்யப்படும் எந்தவொரு மாற்றத்திற்கும் பதிலாக அதே அளவிற்கு காடுகளை வளர்ப்பதற்கான சமமான நிலத்தை வழங்க வேண்டும். அந்த வனப்பகுதி நிலம் வழங்கியிருக்கக் கூடிய மரத்தின் மதிப்பை பணமாக செலுத்த வேண்டிய தேவையும் உண்டு.
இவ்வாறு வனப்பகுதி நிலங்களை வளர்ச்சிக்காக கைக்கொள்ளும்போது அதற்கு மாற்றாக ஏற்பாடுகளை செய்வதற்கென கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 40 முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு கடந்த வாரம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் ஒரு திட்டத்தையும் எனது அரசு தொடங்கியுள்ளது. நிலத்தை மீட்டெடுப்பது, குறுபாசனம் ஆகியவையும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். ஒவ்வொரு துளி நீருக்கும் மேலும் அதிகமான பயிரை விளைவிப்பது என்ற இலக்குடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் செலவில்லாத இயற்கை விவசாயத்திலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு நிலத்தின் தரத்தையும் மதிப்பிடுவதற்கான திட்டம் ஒன்றையும் நாங்கள் அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் தரத்தை குறிப்பிடும் அட்டைகளையும் வழங்கி வருகிறோம். இதன் மூலம் அவர்கள் சரியான உரங்களைப் பயன்படுத்தி, சரியான அளவில் தண்ணீரை பயன்படுத்தி, சரியான பயிர்களை விளைவிக்க உதவுகிறது. இதுவரையில் 21 கோடியே 70 லட்சம் நிலத்தின் தரம் குறித்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பூச்சிக் கொல்லிகள், கெமிக்கல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்து இயற்கை உரங்களின் பயன்பாட்டையும் நாங்கள் அதிகரித்துள்ளோம்.
நீர் மேலாண்மை என்பதும் மற்றொரு முக்கியமான விஷயமாகும். ஒட்டு மொத்தத்தில் தண்ணீர் தொடர்பான முக்கியமான அனைத்து விஷயங்களையும் கையாளும் வகையில் ஜல் சக்தி அமைச்சகம் ஒன்றையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அனைத்து வடிவங்களிலும் தண்ணீரின் மதிப்பை அங்கீகரித்த வகையில் தொழிற்சாலை செயல்பாடுகள் பலவற்றிலும் தண்ணீர் சேதாரத்தை முற்றிலுமாக அகற்றுவதை நாங்கள் கட்டாயமாக அமலாக்கியுள்ளோம். கழிவு நீரை பெருமளவிற்கு சுத்திகரித்து அதிலுள்ள உயிர்கள் எவற்றுக்கும் ஊறு விளைவிக்காத வகையில் ஆற்று வழியில் மீண்டும் செலுத்தும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு ஏற்பாடு அமைகிறது.
நண்பர்களே,
நிலம் தரமிழத்தலின் மற்றொரு வடிவம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதைத் தடுக்கவில்லையெனில், இதை மாற்றி அமைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அதுதான் பிளாஸ்டிக் கழிவு என்ற அச்சுறுத்தலாகும். மிக மோசமான உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுப்பதுடன், நிலங்களை உற்பத்தித் திறனை அழித்து, விவசாயத்திற்கு தகுதியற்றதாகவும் மாற்றும் அபாயமும் உள்ளது.
வரும் ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா முடிவு கட்டும் என எமது அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வளர்த்தெடுப்பதிலும், திறமையான வகையில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அவற்றை அகற்றும் முறையை மேற்கொள்வதிலும் நாங்கள் உறுதியோடு உள்ளோம்.
நமது உலகமும் கூட ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
நீர்வள ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவது அல்லது ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது என எதுவாக இருந்தாலும் சரி, சுற்றுச் சூழலின் நிலை என்பது மனிதர்களின் தனித்தகுதியோடு நேரடியாகத் தொடர்புடையதாகும். இதற்கான ஒரே வழி என்பது நமது நடத்தையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றமே ஆகும். ஏதாவதொரு விஷயத்தை அடைந்தே தீர வேண்டுமென சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தீர்மானிக்கும் போதுதான் நாம் விரும்புகிற விளைவுகளை நம்மால் காண முடியும்.
எத்தனை கட்டமைப்புகளை வேண்டுமானாலும் நாம் அறிமுகப்படுத்தலாம். ஆனால் களத்தில் உள்ள கூட்டுச் செயல்பாட்டின் மூலமாகவே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். தூய்மைமிக்க இந்தியாவிற்கான திட்டத்திலும் இந்தியா அதையே கண்டது. அனைத்துப் பகுதி மக்களும் இதில் பங்கேற்றதன் மூலம் 2014-ல் 38 சதவீதமாக இருந்த கழிப்பறை வசதி இப்போது 99 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக அகற்றும் விஷயத்திலும் கூட இதே மாதிரியான உணர்வைத்தான் நான் காண்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் இந்த விஷயத்தில் ஆதரவாக இருப்பதோடு சாதகமான ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதில் முன்கையெடுத்துச் செயல்படுகின்றனர். ஊடகங்களும் கூட மதிப்புமிக்க பங்கினை ஆற்றி வருகின்றன.
நண்பர்களே,
நிலம் குறித்த உலகளாவிய நிகழ்ச்சி நிரல் குறித்து மேலும் உறுதியளிக்கவும் நான் விரும்புகிறேன். இந்தியாவில் வெற்றிபெற்ற நிலம் தரமிழக்கும் நிலையை சமப்படுத்துவதற்கான நடைமுறை உத்திகள் சிலவற்றை புரிந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள முன்வரும் நாடுகளுக்கு இந்தியாவின் உதவியையும் வழங்கத் தயாராக உள்ளேன்.
நிலம் தரமிழப்பதிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த அளவில் இந்தியாவின் தற்போதைய நிலையான 21 மில்லியன் ஹெக்டேர்கள் என்ற இன்றைய நிலையில் இருந்து 2030-ம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர்களாக உயர்த்த முடிவு செய்துள்ளது என்பதையும் இந்த மன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.
மரங்களை மேலும் வளர்ப்பதன் மூலமாக கார்பன் சிங்க் என அழைக்கப்படும் வெளியாகும் கரியமில வாயுவை அகற்றும் செயல்பாட்டில் 2.5 பில்லியன் மெட்ரிக் டன் என்பதில் இருந்து 3 பில்லியன் மெட்ரிக் டன் என்பதாக உயர்த்துவது என்ற இந்தியாவின் மிகப்பெரும் உறுதிப்பாட்டிற்கும் இந்த முயற்சி உதவி செய்வதாக அமையும்.
நிலத்தின் தரத்தை மீட்டெடுப்பது உள்ளிட்டு பல்வேறு நடைமுறை செயல்பாடுகளுக்கும் தொலையுணர்வு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் இந்தியர்களாகிய நாங்கள் பெருமை கொள்கிறோம். குறைந்த செலவில் செயற்கைக் கோள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் நிலத்தின் தரத்தை மீட்டெடுக்கும் உத்திகளை வளர்த்தெடுக்க நமது நட்பு நாடுகளுக்கு உதவி செய்வதில் இந்தியா மகிழ்ச்சி அடையும்.
நிலத்தின் தரத்தை மீட்டெடுக்கும் விஷயத்தில் அறிவியல்ரீதியான அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றுக்கென வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சிலில் மையம் ஒன்றை உருவாக்குவது எனவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் நிலத்தின் தரத்தை மீட்டெடுப்பது தொடர்பான விஷயங்களில் அறிவு, தொழில்நுட்பம், இதில் ஈடுபடும் நபர்களுக்கான பயிற்சி ஆகியவற்றைப் பெற விழைவோருடன் ஒத்துழைப்பை வளர்த்தெடுக்க முடியும் என்பதோடு வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் வளர்த்தெடுக்க முடியும்.
நண்பர்களே,
மிகுந்த பேராவலுடன் புதுடெல்லி அறிவிப்பு ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் நான் அறிந்து கொண்டேன். 2030-ம் ஆண்டிற்கு நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றாகும். பாலைவன மயமாக்கலை தடுப்பதில் வெற்றி பெறுவதும் அதில் ஒரு பகுதியாகும். நிலத்தின் தரமிழப்பை ஈடு செய்வதற்கான உலகளாவிய நடைமுறை உத்தி ஒன்றை முன்வைப்பதை நோக்கி நீங்கள் விவாதிக்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது புராதனமான மறைநூல்களில் மிகவும் பிரபலமான ஒரு கருத்தை கூறுவதுடன் எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
ओम् द्यौः शान्तिः, अन्तरिक्षं शान्तिः
இதில் குறிப்பிடப்படும் சாந்தி என்பது அமைதி அல்லது வன்முறைக்கான தீர்வு மட்டுமே அல்ல. இங்கு அது வளத்தையும் குறிக்கிறது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றுமே இருத்தலுக்கான நியதியைக் கொண்டதாக, ஒரு குறிக்கோளைக் கொண்டதாக இருக்கும் நிலையில் அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டியதும் அவசியமாகும்.
அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே வளமாகும்.
எனவேதான் அது குறிப்பிடுகிறது : வானமும், சொர்க்கமும், விண்வெளியும் வளமாக இருக்குமாக.
பூமித்தாய் வளமாக இருப்பாளாக
இந்த பூமிக் கிரகத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் தாவர, விலங்கினங்கள் அனைத்தையும் இது உள்ளடக்கியுள்ளது.
அவை வளமாக இருக்கட்டும்.
ஒவ்வொரு சொட்டு நீரும் வளமாக இருக்கட்டும்.
புனிதமான கடவுள்களும் வளமாக இருக்கட்டும்.
ஒவ்வொருவரும் வளமாக இருக்கட்டும்.
நானும் வளமாக இருக்க ஆசி புரியட்டும்.
ஓம். வளம் வளம் வளம்.
எமது முன்னோர்களின் எண்ணமும் தத்துவமும் இவ்விதம் அனைத்தையும் தழுவியதாக, சிறந்த எண்ணங்கள் நிரம்பியதாகவே இருந்தன. எனக்கும் நமக்கும் இடையிலான உண்மையான உறவு பற்றி அவர்கள் அறிந்திருந்தனர். நமது வளத்தின் மூலமாகவே எனது வளம் இருக்கமுடியும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
எமது முன்னோர்கள் எமது என்று கூறும்போது அவர்களின் குடும்பம் அல்லது இனம் அல்லது மனித இனத்தை மட்டுமே குறிப்பிடவில்லை. அதில் வானம், நீர், தாவரங்கள், மரங்கள் என அனைத்துமே அடங்கியிருந்தன.
அமைதிக்காகவும் வளத்திற்காகவும் அவர்கள் பிரார்த்திக்கும் வரிசையை அறிந்து கொள்வதும் கூட மிக முக்கியமானதாகும்.
வானத்திற்காகவும், பூமிக்காகவும், நீருக்காகவும், தாவரங்களுக்காகவும் அவர்கள் பிரார்த்தித்தனர். இவை அனைத்துமே நமக்கு உயிரூட்டுபவை. இதைத்தான் நாம் இப்போது சுற்றுச் சூழல் என்று அழைக்கிறோம். இவை வளமாக இருக்குமானால், நாமும் வளமாக இருப்போம். இதுதான் அவர்களின் மந்திரமாக இருந்தது. இன்றும் கூட மிகவும் பொருத்தமான ஒரு சிந்தனையாகவே அது திகழ்கிறது.
இந்த உணர்வோடு இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
மிக்க நன்றி.