திரு. மேமன் மாத்யூ, திரு. ஜேக்கப் மாத்யூ, திரு. ஜயந்த் ஜேக்கப் மாத்யூ, திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் டாக்டர் சசி தரூர், அன்புக்குரிய விருந்தினர்களே, நமஸ்காரம்.
மலையாள மனோரமா செய்தி மாநாடு 2019-ல் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேரளாவின் புண்ணிய பூமிக்கும், அதன் தனித்துவமான கலாச்சாரத்துக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இது ஆன்மிக மற்றும் சமூக ஞானம் கொண்ட பூமி. ஆதிசங்கரர், மகாத்மா அய்யன்காளி, ஸ்ரீ நாராயண குரு, சட்டாம்பி சுவாமிகள், பண்டிட் கருப்பன், துறவி குரியகோஸ் இலியாஸ் சவாரா, துறவி அல்போன்சோ மற்றும் பிற மகான்களைத் தந்த பூமி இது. தனிப்பட்ட முறையில் எனக்கும் கேரளா விசேஷமானது. கேரளாவுக்கு வருவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. மக்கள் எனக்கு மீண்டும் ஆசி வழங்கிய பிறகு பெரிய பொறுப்புடன் நான் முதலில் செய்த விஷயங்களில் ஒன்று குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்றது தான்.
நண்பர்களே,
மலையாள மனோரமா செய்தி மாநாட்டில் நான் உரையாற்றப் போவது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது வாழ்வில் இருப்பவர்கள், உலகப் பார்வையுடன் ஒத்துப் போகக் கூடிய களங்களில் பங்கேற்பதைத் தான் விரும்புவது வழக்கம். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருப்பது நிறைய சவுகரியங்களைத் தருவதாக இருக்கும். சொல்லப்போனால் நானும்கூட அதுபோன்ற சூழ்நிலைகளில் இருப்பதை விரும்பக் கூடியவன் தான். அதேசமயத்தில், ஒருவருடைய சிந்தனை எப்படிப்பட்டதாக இருந்தாலும், தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்ந்து கலந்துரையாடலில் இருந்தாக வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.
எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும் என்பது கிடையாது. ஆனால், நாகரிக சமுதாயத்தில் மக்களின் கருத்துகள் கேட்கப் படுவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். அநேகமாக என்னுடைய நிலையில் சிந்தனை கொண்டவர்கள் அதிகம் இல்லாத ஒரு களத்தில் இப்போது நான் இருக்கிறேன். ஆனால், அதிக சிந்தனையாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய ஆக்கபூர்வமான விமர்சனங்களைத் தான் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
நண்பர்களே,
மலையாள மக்களின் மனங்களில் ஓர் அங்கமாக மலையாள மனோரமா ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இருந்து வருவதை நான் அறிவேன். அதன் செய்தியாக்கம் மூலமாக, கேரள மக்களை அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாக அது உருவாக்கியுள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இந்தப் பத்திரிகை கணிசமான பங்கு ஆற்றியுள்ளது. பல இளைஞர்கள், குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்கள் உங்களுடைய புத்தகங்களைப் படித்திருப்பார்கள்! அந்த வகையில், நீங்கள் தலைமுறைகளைக் கடந்து அறியப் பட்டிருக்கிறீர்கள். இந்த மகத்தான பயணத்தில் அங்கமாக இருக்கும் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஆர்வம் தரக் கூடிய ஒரு தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார்கள் – புதிய இந்தியா என்ற தலைப்பைத் தேர்வு செய்துள்ளனர். நீங்கள் இப்போது மோடிஜியின் வார்த்தைகளில் பேசுகிறீர்களா? – என்று விமர்சகர்கள் உங்களைக் கேட்பார்கள். அதற்கு உங்கள் பாணியில் பதிலைத் தயாராக வைத்திருப்பிர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால், என மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு தலைப்பை நீங்கள் தேர்வு செய்திருப்பதால், புதிய இந்தியாவின் உத்வேகம் என்னவாக இருக்கும் என்று நான் நினைப்பவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
நண்பர்களே,
நாம் நகர்ந்தாலும் நகராவிட்டாலும், மாற்றத்தை ஏற்றாலும், மாற்றத்தை ஏற்காவிட்டாலும் இந்தியா வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, இந்த மாற்றம் நல்லதற்காக நடக்கிறது – என்று எப்போதுமே நான் கூறி வருகிறேன். தனிப்பட்ட விருப்ப லட்சியங்கள், கூட்டு பெருமுயற்சிகள் ஆகியவையும், தேசத்தின் முன்னேற்றத்துக்குச் சொந்தக்காரர்கள் என்ற எண்ணமும் தான் புதிய இந்தியா என்பதன் மையமான உத்வேகமாக இருக்கிறது. பங்கேற்புடன் கூடிய ஜனநாயகம், குடிமக்களை மையமாகக் கொண்ட அரசாங்கம், ஆக்கபூர்வமான குடிமக்கள் என்பவை தான் புதிய இந்தியாவாக இருக்கும். பொறுப்புமிக்க மக்கள் மற்றும் பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற காலகட்டத்தைக் கொண்டதாகப் புதிய இந்தியா இருக்கும்.
மதிப்புக்குரிய விருந்தினர்களே, பல ஆண்டுகளாக, உயர்விருப்ப லட்சியம் என்பது மோசமான வார்த்தை என்று ஆகும் அளவுக்கு கலாச்சாரம் வேரூன்றி விட்டது. உங்களுடைய வெளி தொடர்புகளைப் பொருத்து உங்களுக்கான கதவுகள் திறந்தன. பழைய காலத்தவர்கள் குழுவைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதைப் பொருத்து வெற்றி கிடைத்தது. பெரிய நகரங்கள், பெரிய நிறுவனங்கள், பெரிய குடும்பங்கள் – இவை எல்லாம் தான் முக்கியமானவையாக இருந்தன. லைசென்ஸ் ராஜ்ஜியம், பர்மிட் ராஜ்ஜியம் என்ற பொருளாதார கலாச்சாரம், தனிப்பட்ட நபர்களின் லட்சியங்களைக் கொண்டவர்களின் இருதயங்களை நொறுக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே நல்லவற்றுக்காக மாறுகின்றன. துடிப்புமிக்க ஸ்டார்ட்-அப் சூழலில் புதிய இந்தியாவின் உத்வேகத்தை நாம் காண்கிறோம். ஆயிரக்கணக்கான திறமையான இளைஞர்கள், தொழில் செய்வதில் தங்களுடைய உத்வேகத்தை வெளிப்படுத்தி, அற்புதமான களங்களை உருவாக்கியுள்ளனர். விளையாட்டுத் துறையிலும் இந்த உத்வேகத்தை நாம் காண்கிறோம்.
கடந்த காலத்தில் அரிதான பங்கேற்பு இருந்த துறைகளிலும் கூட இப்போது இந்தியா மிளிர்கிறது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், இந்த துடிப்புக்கு யார் சக்தி தருவது? பெரும்பாலான மக்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த துணிச்சலான இளைஞர்கள் தான் இவற்றைச் செய்கிறார்கள். அவர்கள் பெரிய வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ அல்லது வங்கிகளில் நிறைய சேமிப்பு வைத்திருப்பவர்களோ கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் ஏராளமான அர்ப்பணிப்பும், உயர் விருப்ப லட்சியமும் தான். அவர்கள் உயர்விருப்ப லட்சியங்களை காரியங்களாக மாற்றி, இந்தியாவைப் பெருமையுறச் செய்கிறார்கள். என்னைப் பொருத்த வரை புதிய இந்தியாவின் உத்வேகம் இதுதான். இளைஞர்களின் பெயருடன் வரும் துணைப் பெயர்கள் பற்றி கவலைப்படாத இந்தியாவாக இது இருக்கிறது. தங்களுடைய பெயருடன், திறமையை எப்படி வெளிக் காட்டுகிறார்கள் என்பது தான் விஷயமே. யாராக இருந்தாலும், ஊழலுக்கு இடமில்லை என்ற இந்தியா இது. போட்டியில் வெல்வது என்பது தான் விதிமுறை.
நண்பர்களே,
குறிப்பிட்ட சிலருடைய குரல் மட்டுமே புதிய இந்தியா கிடையாது. 130 கோடி இந்தியர்களில் ஒவ்வொருவருடைய குரலாகவும் புதிய இந்தியா இருக்கிறது. ஊடகங்களைப் பொருத்தவரை, மக்களின் இந்தக் குரல்களைக் கேட்க வேண்டியது முக்கியம். இப்போது நாட்டுக்காக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு குடிமக்களும் விரும்புகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று சமீபத்திய நடவடிக்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது நரேந்திர மோடியின் சிந்தனை அல்லது முயற்சி என்பதாக மட்டும் கிடையாது. காந்திஜியின் 150வது பிறந்த ஆண்டு விழா நடைபெறும் சமயத்தில், ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்கிட வேண்டும் என்ற முயற்சியை இந்திய மக்கள் தாங்களாகவே எடுத்துக் கொண்டுள்ளனர். இவையெல்லாம் அசாதாரணமான தருணங்கள். நாட்டில் மாற்றத்தை உருவாக்குவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நாம் தவற விட்டுவிடக் கூடாது.
நண்பர்களே,
ஓர் அரசாங்கம் என்ற வகையில், இந்தியாவின் முன்னேற்றத்துக்காக தனிப்பட்டவர்களின் லட்சியங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கு, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். `வாழ்வு நிலையை எளிதாக்குதல்' விலைவாசி கட்டுப்பாடு, ஐந்து ஆண்டுகளில் 1.25 கோடி வீடுகள் கட்டியது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுத்தது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது, அனைவருக்கும் ஆரோக்கிய சேவைகள், இளைஞர்களுக்கு சரியான சூழலை உருவாக்கித் தருவதற்கு ஏற்ப கல்வி கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது என பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இவையெல்லாம் எந்த அளவுக்கு, செய்யப் பட்டிருக்கின்றன என்று அறிந்தால் மலைத்துப் போவீர்கள். நாம் இணையற்ற, அசுர வேகத்தில் இறுதி நிலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறோம். 36 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன, சிறுதொழில் செய்வோருக்கு 20 கோடி கடன்கள் தரப் பட்டுள்ளன, 8 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் தரப்பட்டதால் சமையலறைகள் புகையில்லாததாக மாறியுள்ளன, சாலைகள் அமைக்கும் வேகம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இவையெல்லாம் சில உதாரணங்கள் தான். இருந்தபோதிலும், சுயநலத்தைத் தாண்டி சமூக அக்கறையில் மக்கள் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது தான் புதிய இந்தியாவின் சாராம்சமாக இருக்கிறது என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. ஜன் தன் கணக்குகள் நிலுவை தேவைப்படாத கணக்குகளாக இருந்தாலும், பரம ஏழைகள் ஏன் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கியில் போட்டிருக்கிறார்கள்? நமது நடுத்தர வர்க்க மக்கள் ஏன் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்? ஒரே வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, நமது முதியவர்கள் ஏன் ரயில்வே சலுகைகளை விட்டுக் கொடுத்தார்கள்?
அறக்கொடையாளர் தன்மை வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்பு காந்திஜி உருவாக்கிய சிந்தனையின் வெளிப்பாடாக இது இருக்கலாம். இன்றைக்கு, இந்தியாவின் மாற்றத்தை வெறும் பார்வையாளராக இருந்து பார்ப்பவராக மட்டுமின்றி, அதில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் பரவலாகக் காணப்படுகிறது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் கூட அதிகரித்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!
நண்பர்களே,
சாத்தியமற்றவை என்று முன்பு சொல்லப்பட்ட மாற்றங்களை இப்போது நீங்கள் காண்பீர்கள். ஹரியானா போன்ற மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கு ஆள் தேர்வு வெளிப்படைத் தன்மையாக நடப்பதை நினைத்துகூட பார்த்திருக்க முடியாது. ஆனால் ஹரியானாவில் எந்த கிராமத்திற்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர் சேர்க்கை நடைபெறுவது பற்றி மக்கள் பேசுகிறார்கள். இப்போது ரயில் நிலையங்களில் மக்கள் வை-பை என்ற இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.
இது சாத்தியமாகும் என்று யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள்? முன்பு நடைமேடைகள் சரக்குகள் மற்றும் பயணிகளுடன் தொடர்புடையதாக இருந்தன. ஆனால் இப்போது, 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில், மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகள் முடிந்த பிறகு ரயில் நிலையங்களுக்குச் சென்று வை-பை வசதியைப் பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்கிறார்கள். அதே நிர்வாகம் தான், அதே மக்கள் தான், இருந்தாலும் களத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நண்பர்களே,
இந்தியாவில் உத்வேகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்லிவிட முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கேட்டது – நம்மால் முடியுமா? குப்பைகளில் இருந்து நம்மால் விடுபட முடியுமா? கொள்கைகள் முடங்கியிருப்பதை நம்மால் சரி செய்ய முடியுமா? நம்மால் ஊழலை ஒழிக்க முடியுமா? என்று கேட்டார்கள். இப்போது மக்கள் சொல்வது – நம்மால் முடியும் என்ற வார்த்தைகளைத் தான். நாம் தூய்மையான பாரதமாக மாறுவோம். நாம் ஊழல் இல்லாத நாடாக இருப்போம். நல்ல அரசு நிர்வாகத்தை மக்கள் இயக்கமாக நாம் மாற்றுவோம். வில் – என்ற ஆங்கில வார்த்தை முன்பு சந்தேகத்துக்காக பயன்படுத்தப்பட்டது, இப்போது இளைஞர்கள் நிரம்பிய நாட்டில் ஆக்கபூர்வ உத்வேகத்துக்கு அதே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
நண்பர்களே,
புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக எங்கள் அரசு எப்படி முழு மனதுடன் செயல்படுகிறது என்பதை ஓர் உதாரணத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். ஏழைகளுக்கு இந்த அரசு 1.5 கோடி வீடுகளை மிகுந்த வேகமாக கட்டி முடித்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். முந்தைய அரசைவிட இது பெரிய முன்னேற்றம். முன்பும் திட்டங்களும், நிதியும் இருந்தது, ஆனால் நீங்கள் வித்தியாசமாக என்ன செய்தீர்கள் என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியைக் கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.
முதலில், நாம் வீடுகளைக் கட்டவில்லை, இல்லங்களை உருவாக்குகிறோம் என்ற உண்மையை நாம் உணர்ந்திருந்தோம். எனவே வெறுமனே நான்கு சுவர்களை மட்டும் கட்டுவது என்ற எண்ணத்தைத் தாண்டி நாம் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அதிக வசதிகள், அதிக மதிப்பு கிடைக்க வேண்டும், குறைந்த அவகாசத்தில் அது நடக்க வேண்டும், கூடுதல் செலவு ஏதும் இல்லாமல் இவற்றை முடிக்க வேண்டும் என்பதாக எங்கள் அணுகுமுறை இருந்தது.
எங்கள் அரசு கட்டிய வீடுகள், முடிவு செய்யப்பட்ட கட்டட அமைப்பு என்ற அணுகுமுறையில் கட்டப்படவில்லை. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்பவும், அந்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் வீடுகள் கட்டப்பட்டன. அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கச் செய்வதற்கு, அரசின் பல்வேறு துறைகளை நாங்கள் ஒருங்கிணைத்தோம். எனவே, வீடுகளுக்கு மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு, கழிப்பறை மற்றும் இதுபோன்ற அனைத்து தேவைகளும் உடனே பூர்த்தி செய்யப்பட்டன.
அதிக மதிப்பு கிடைக்கச் செய்வதற்காக, மக்களின் தேவைகளை நாங்கள் கேட்டறிந்தோம். வீடுகளின் அளவுகளை அதிகரித்ததுடன் மட்டுமின்றி, தொகையையும் அதிகரித்தோம். இந்தப் பணிகளில் பெண்கள் உள்ளிட்ட உள்ளூர் கைவினைஞர்களை நாங்கள் பயன்படுத்தினோம். கூடுதல் செலவு இல்லாமல், குறைந்த அவகாசத்தில் இதை முடிப்பதற்காக, தொழில்நுட்பத்தை முக்கியமான அம்சமாக நாங்கள் எடுத்துக் கொண்டோம். கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும், அதன் புகைப்படங்கள் ஆன்லைனில் அதிகாரிகளுக்கு அனுப்பப் படுவதால், நிர்வாகம் பற்றி தெளிவான பார்வை கிடைக்கும். பயனாளிகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப் படுவதால், பணம் பறிபோகாமல் இருக்கிறது, முழு நிறைவை ஏற்படுத்துகிறது. இப்போது நீங்கள் பழையதைத் திரும்பிப் பார்த்தால், குறுக்கீடுகள் இல்லாமல் இதில் எந்த ஒரு விஷயத்தையும் உங்களால் செய்திருக்க முடியாது. தொழில்நுட்பத்தால் மட்டும் பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியாது. திட்டங்களை ஒருங்கிணைத்ததால் மட்டும் தீர்த்திருக்க முடியாது. எல்லா தலையீடுகளும் உரிய வகையில் உரிய காலத்தில் வரும் போது ஒட்டுமொத்தமான பலன்கள் கிடைக்கின்றன. இதுதான் எங்கள் அரசின் சிறப்பம்சமாக உள்ளது.
நண்பர்களே,
புதிய இந்தியாவுக்கான எங்களுடைய தொலைநோக்குப் பார்வை என்பது, நாட்டில் வாழ்பவர்கள் மீது அக்கறை கொண்டதாக மட்டும் இல்லாமல், வெளியில் வாழும் இந்தியர்களையும் சேர்த்ததாக இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் நமது மக்கள் நம் பெருமைக்கு உரியவர்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் பங்களிக்கிறார்கள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும், அதைத் தீர்ப்பதற்கு முதலில் நாங்கள் செல்கிறோம். மேற்கு ஆசியாவில் பல்வேறு பகுதிகளில் இந்திய நர்ஸ்கள் சிக்கிக் கொண்ட சமயத்தில், அவர்களை தாயகம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம். அதில் பெரும்பாலான நர்ஸ்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்றொரு மைந்தரான பாதிரியார் டோம் பிடிக்கப்பட்ட போதும் இதேபோல் தான் செய்தோம். ஏமனில் இருந்து பலர் திரும்பி வந்துள்ளனர்.
நான் ஏராளமான மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் நேரத்தை செலவழிக்கும் வகையில் என் பயணத் திட்டம் இருக்கும். இப்போது தான் பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு நான் வந்திருக்கிறேன். நம் மதிப்புக்குரிய நட்பு நாடான அங்கு நிறைய இந்தியர்கள் உள்ளனர். ஆனால், இந்தியப் பிரதமர்கள் யாரும் அங்கு சென்றது கிடையாது. அந்த கவுரவம் எனக்காக விட்டுவைக்கப்பட்டிருந்தது! அங்கு சிறைகளில் இருந்த 250 இந்தியர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு ராஜ குடும்பம் கருணையுடன் முடிவு எடுத்தது தான் இந்தப் பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக உள்ளது. ஓமன், சவூதி அரேபியாவிலும் இதேபோல மன்னிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹஜ் பயணத்துக்கான ஒதுக்கீட்டை சவூதி அரேபியா அதிகரித்துக் கொடுத்துள்ளது.
நண்பர்களே,
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நான் பயணம் சென்றபோது அங்கு ரூபே (RuPay) வங்கி அட்டை சேவை தொடங்கப்பட்டது. விரைவில் பஹ்ரைனிலும் இந்தச் சேவை தொடங்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள், தங்கள் வீடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கு உதவியாக இது இருக்கும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளைகுடா நாடுகளுடன் இந்திய உறவு நன்றாக இருப்பதைக் கேட்கும் போது நான் பெருமை கொள்கிறேன். இதனால் சாதாரண குடிமக்கள் தான் பயன்பெறுவார்கள் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
நண்பர்களே,
புதிய இந்தியாவின் உத்வேகத்தை ஊடகங்களில் இன்று நாம் காண்கிறோம். இந்தியாவில் பன்முகத்தன்மை கொண்ட ஊடகங்கள் உள்ளன, அவை பெருகி வருகின்றன. பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், இணையதளங்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தூய்மையான பாரதம் திட்டமாக இருந்தாலும், ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பதாக இருந்தாலும், தண்ணீர் சிக்கனமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமான இந்தியா திட்டமாக இருந்தாலும், பல்வேறு திட்டங்களில் ஊடகங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்களித்திருப்பதை இப்போது நான் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். ஊடகங்கள் தாங்களாகவே இயக்கங்கள் நடத்தி, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறுவதற்காக மக்களை ஒருங்கிணைத்துள்ளன.
நண்பர்களே,
காலம் காலமாக மொழியானது சக்தி மிக்க கருவியாக இருந்து வருகிறது. காலம் மற்றும் தூரத்தைக் கடந்து நல்ல சிந்தனைகள் இதன் மூலம் பரவுகின்றன. ஏராளமான மொழிகளைக் கொண்ட ஒரே நாடாக இந்தியா மட்டும் தான் இருக்கும். ஒரு வகையில் அது சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால், நாட்டில் பிரிவினையை உருவாக்க, சில சுயநலவாதிகள் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இன்றைக்கு பணிவான ஆலோசனை ஒன்றை நான் முன்வைக்கிறேன். இந்தியாவை ஒன்று சேர்ப்பதற்கு, மொழியின் ஆற்றலை நம்மால் பயன்படுத்த முடியாதா?
வெவ்வேறு மொழிகள் பேசுபவர்களை நெருக்கமாக கொண்டு வரும் பாலமாக ஊடகங்கள் பங்காற்ற முடியுமா? இது சிரமமானதாகத் தெரியவில்லை. நாடு முழுக்க பேசப்படும் 10-12 மொழிகளில் ஒரு வார்த்தையை அச்சிடுவதில் நாம் தொடங்க வேண்டும். ஓராண்டில் வெவ்வேறு மொழிகளில் ஒருவரால் 300க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகளை அறிந்து கொள்ள முடியும். வேறொரு இந்திய மொழியை ஒருவர் கற்றுக் கொண்டால், பொதுவான அம்சங்கள் எவை என்பதை அவர்கள் புரிந்து கொண்டு, இந்திய கலாச்சாரத்தில் உள்ள ஏகநிலையை உண்மையாகப் பாராட்டத் தொடங்குவார்கள். வெவ்வேறு மொழிகளைக் கற்க விரும்பும் மக்கள் குழுக்கள் அதிகரிக்கவும் இது உதவி செய்யும். மலையாளத்தைக் கற்கும் ஒரு குழு ஹரியானாவிலும், பெங்காலி கற்கும் ஒரு குழு கர்நாடகாவிலும் இருப்பது பற்றி கற்பனை செய்து பாருங்கள். முதலாவது அடி எடுத்து வைத்த பிறகு தான், பெரிய தொலைவுகளையும் அடைய முடிகிறது, நாம் முதலாவது அடியை எடுத்து வைப்போமா?
நண்பர்களே,
இந்த மண்ணில் நடந்துள்ள பெரிய மகான்களும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற நமது முன்னோர்களும் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தார்கள். 21ம் நூற்றாண்டில் அவற்றை நிறைவேற்றி, அவர்களைப் பெருமைப் படுத்தும் வகையிலான இந்தியாவை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை.
வரக் கூடிய காலங்களில் இவற்றையும், இன்னும் பலவற்றையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மலையாள மனோரமா குழுமத்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொள்கிறேன். என்னை அழைத்தமைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. மிக்க நன்றி.