புதுவை துணை நிலை ஆளுநர் அவர்களே,
மதிப்புக்குரிய விருந்தினர்களே,
என் அன்பு நண்பர்களே
புதுவையின் தெய்வீகத்தன்மை என்னை மீண்டும் ஒருமுறை இந்தப் புனித பூமிக்கு வரவழைத்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் புதுவைக்கு வந்திருந்தேன்.
துறவிகள், அறிஞர்கள்,கவிஞர்கள் வாழ்ந்த பூமி இது.
அன்னை பாரத்திற்குப் புரட்சியாளர்களைத் தந்த இடமாகவும் இது உள்ளது.
மகாகவி சுப்பிரமணிய பாரதி இங்கே வாழ்ந்துள்ளார்.
ஸ்ரீஅரவிந்தர் புதுவையின் கடற்கரையில் கால் பதித்துள்ளார்.
இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளைக் கொண்டதாக புதுவை உள்ளது
பன்முகத் தன்மையின் அடையாளமாக இந்த இடம் உள்ளது.
மக்கள் 5 மொழிகள் பேசுகிறார்கள், வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின்பற்றுகிறார்கள், ஆனாலும் ஒன்றாக வாழ்கிறார்கள்.
நண்பர்களே,
இன்றைக்கு, புதுவை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாம் தொடங்கி வைக்கிறோம்.
இந்தப் பணிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்தவையாக உள்ளன.
மறு கட்டுமானம் செய்யப்பட்ட மேரி கட்டடத்தை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பாரம்பரியத்தைத் தக்கவைத்துக் கொண்டு, அதன் பழமை மாறாமல் இந்தக் கட்டடம் புதுப்பிக்கப் பட்டுள்ளது.
புரோமெனடு கடற்கரையின் அழகிற்கு இது மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்து, கூடுதல் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதாக இருக்கும்.
நண்பர்களே,
நமது வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உலகத் தரமான கட்டமைப்பு வசதிகள் இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றன.
நான்குவழிப் பாதை வசதியுடன் கூடிய, 45-ஏ தேசிய நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டப்படுவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சட்டநாதபுரத்தில் இருந்து காரைக்கால் மாவட்டம் வழியாக நாகப்பட்டினம் வரையில் 56 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இது இருக்கும்.
நிச்சயமாக போக்குவரத்துத் தொடர்பு வசதி மேம்படும்.
பொருளாதார செயல்பாடுகள் வேகம் பெறும்.
அதேசமயத்தில், புனிதமான சனீஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்கான வசதி அதிகரிக்கும்.
வேளாங்கண்ணி தேவாலயம்,
நாகூர் தர்கா
ஆகிய - மாநிலங்களுக்கு இடையிலான தலங்களை இணைப்பதாகவும் இந்த வசதி இருக்கும்.
நண்பர்களே,
கிராமப்புற மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இதனால் வேளாண்மைத் துறை லாபம் பெறும்.
இந்தியா முழுக்க நமது விவசாயிகள் புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
அவர்களுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை.
நல்ல சாலை வசதிகள் இந்த உதவியை அளிக்கின்றன.
நான்குவழிப் பாதை வசதியுடன் சாலை அமைவதால் இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் உருவாகும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
நண்பர்களே,
வளமையான வாழ்வு என்பது நல்ல ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டதாக உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில், உடல் தகுதி மற்றும் நலவாழ்வை மேம்படுத்த இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தப் பின்னணியில், இங்குள்ள விளையாட்டு வளாகத்தில் 400 மீட்டர் சிந்தட்டிக் அதலெட்டிக் டிராக் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கேலோ இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணி மேற்கொள்ளப் படுகிறது.
இந்திய இளைஞர்களிடம் விளையாட்டுத் திறமையை வளர்க்க இது உதவும்.
குழுவாக சேர்ந்து செயல்படுதலையும், நன்னெறிகளையும் விளையாட்டு நமக்கு கற்றுத் தருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டு வீரருக்கான உணர்வை அது நம்மிடம் உருவாக்குகிறது.
புதுவையில் நல்ல விளையாட்டு வசதிகள் வருவதால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேசிய மற்றும் உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்த முடியும்.
லஸ்பேட்டையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதி இன்றைக்கு தொடங்கப் பட்டிருப்பது, விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்கான மேலும் ஒரு முன்முயற்சியாக உள்ளது.
ஹாக்கி, வாலிபால், பளுதூக்குதல், கபடி, ஹேண்ட்பால் வீராங்கனைகள் இந்த விடுதியில் தங்குவதற்கு இடம் அளிக்கப்படும்.
இந்த விடுதியில் தங்கும் மாணவிகளுக்கு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
நண்பர்களே,
வரக்கூடிய ஆண்டுகளில் முக்கிய பங்காற்றப் போகும் ஒரு துறையாக சுகாதாரத் துறை உள்ளது.
சுகாதாரத் துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசமாக வளரும்.
அனைவருக்கும் தரமான சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நமது நோக்கத்தின்படி,
ஜிப்மரில் ரத்த மையத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.
இத் திட்டம் 28 கோடி ரூபாய் செலவில் தொடங்கப் பட்டுள்ளது.
ரத்தத்தை, ரத்தம் சார்ந்த பொருட்களை நீண்ட காலத்துக்கு சேமித்து வைப்பதற்கான வசதிகள், ஸ்டெம்செல் வங்கி போன்ற நவீன வசதிகள் இங்கு அமைந்துள்ளன.
இந்த மையம் ஆராய்ச்சிக்கான பரிசோதனை நிலையமாகவும், ரத்தம் செலுத்துதல் தொடர்பான அனைத்து அம்சங்களிலும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மையமாகவும் செயல்படும்.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில் சுகாதாரத் திட்டங்களுக்கு பெரிய உந்துதல் அளிக்கப் பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
நண்பர்களே,
திருவள்ளுவர்,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
என்று கூறியுள்ளார்.
அதாவது,
கற்றலும், கல்வியும் தான் உண்மையான சொத்துகள், மற்ற அனைத்துமே நிலையற்றவை என்று அவர் கூறியுள்ளார்.
தரமான சுகாதார வசதியை மேம்படுத்துவதற்கு, தரமான சுகாதார அலுவலர்கள் நமக்குத் தேவை.
காரைக்கால் மருத்துவக் கல்லூரி புதிய வளாகத்தில் முதற்கட்ட திட்டத்தின் கீழ் அமையும் கட்டடங்கள், இதற்கான முயற்சியாக இருக்கும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உருவாக்கப்படும் இந்த வளாகத்தில், எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்குத் தேவையான அனைத்து நவீன கற்பித்தல் வசதிகளும் இருக்கும்.
நண்பர்களே,
புதுவைக்கு அதன் கடலோரப் பகுதிதான் உணர்வுரீதியில் ஒன்றிய விஷயமாக உள்ளது.
மீன்வளம், துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீலப் பொருளாதார செயல்பாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடையாது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுவை துறைமுக மேம்பாட்டுக்கான அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மீன்பிடித்தல் தொழிலுக்காக இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி வருபவர்கள், இத் திட்டம் முடிவடைந்ததும் அதிக பயன்கள் பெறுவார்கள்.
சென்னைக்கு கடல்வழி போக்குவரத்து இணைப்பு வசதியை அளிப்பதாக இது இருக்கும். புதுவையின் தொழிற்சாலைகள் சென்னை துறைமுகத்துக்கு எளிதில் சரக்குகளை அனுப்பி வைக்கும் வாய்ப்பை இது உருவாக்கித் தரும்.
கடலோர நகரங்களுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்திற்கான வாய்ப்புகளையும் இது உருவாக்கித் தரும்.
நண்பர்களே,
பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை ஊக்குவிப்பதில் புதுவை நன்றாக செயல்பட்டுள்ளது.
தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யும் அதிகாரம் இதன் மூலம் மக்களுக்குக் கிடைத்துள்ளது.
புதுவையில் பல கல்வி நிலையங்கள் இருப்பதால், அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான மனிதவள மேம்பாட்டு வாய்ப்புகள் உள்ளன.
நிறைய வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் அளிக்கக் கூடிய வகையில், தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
புதுவை மக்கள் திறமைசாலிகள்.
இந்தப் பூமி அழகானது.
புதுவையின் வளர்ச்சிக்கு, அனைத்து உதவிகளையும் எனது அரசு அளிக்கும் என்ற உத்தரவாதத்தை நான் அளிக்கிறேன்.
இன்று தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக, புதுவை மக்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
மிக்க நன்றி
வணக்கம்