தைனிக் ஜாக்ரான் நாளிதழின் 75 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாக்ரன் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அனைவரையும் குறிப்பாக தினமும் நாளிதழை விநியோகிக்கும் வணிகர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். நாளிதழை தினமும் பல வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் வர்த்தகர்கள் மிகவும் உதவியாக உள்ளனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேசத்தை மறு-உருவாக்கம் செய்வதிலும் தைனிக் ஜாக்ரன் முக்கிய பங்கு வகித்துள்ளதாக பிரதமர் கூறினார். தைனிக் ஜாக்ரன் நாட்டிலும் சமூகத்திலும் மாற்றம் கொண்டுவரும் இயக்கத்திற்கு வலு சேர்த்துள்ளதை தனது சொந்த அனுபவத்தில் கண்டுள்ளதாக பிரதமர் கூறினார். இது குறித்து பேசுகையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார். டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வரும் நிலையில், நாட்டினை வலுபடுத்துவதில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் உறுதிபடுத்தினார்.
“குறைவான அரசு, அதிகமாக ஆளுமை” மற்றும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” போன்ற திட்டங்கள் புதிய இந்தியாவின் அடித்தளமாக அமைந்துள்ளதாக பிரதமர் கூறினார். இன்று, இளைஞர்கள் வளர்ச்சி பணியில் தங்களும் பங்குதாரர்களாக உணர்கின்றனர்.
சுதந்திரம் அடைந்து பல வருடங்கள் ஆகியும் நமது இந்தியா ஏன் இன்னும் பின் தங்கியுள்ளது? என்ற கேள்வியை அவர் எழுப்பினார். ஏன் நமது மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்று அவர் கேட்டார். கடந்த 70 ஆண்டுகளில் மின்சாரம் இல்லாத பல்வேறு பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் சென்று சேர்ந்துள்ளது, அதேபோல், ரயில்வே இணைப்பு இல்லாத மாநிலங்களும் தற்போது ரயில்வே வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் தொடர்ந்து பல ஒப்பீடுகளை மக்கள் முன் வைத்தார். அவர் தான் பதவி ஏற்கும் முன் இருந்த 67 வருடங்கள் (சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை) உடன் தான் பதவியில் உள்ள நான்கு ஆண்டுகளுடன் (2014-2018) ஒப்பிட்டார்.
இந்த கால கட்டத்தில், ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதிகள் 38 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஊரக சாலை இணைப்பு வசதி 55 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 55 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஊரக வீடுகளில் உள்ள மின்சார வசதி 95 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது நான்கு வருடங்களுக்கு முன் 70 சதவீதமாக மட்டுமே இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன் 50 சதவீதம் மக்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்ததனர், ஆனால் தற்போது கிட்டத்தட்ட அனைவரும் வங்கி சேவையை பெறுகின்றனர்.
2014-ல் வெறும் நான்கு கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர், கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் மூன்று கோடி மக்கள் இந்த வருமான வரி தாக்கல் செய்வோரின் பட்டியலுடன் இணைந்துள்ளனர்.
மற்றவை எல்லாம் அப்படியே இருக்க, இந்த மாற்றங்கள் மட்டும் எப்படி வந்தது என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்?
ஏழை மக்களும் சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களும் அடிப்படை வசதிகள் கிடைக்கும் போது, அவர்களே வறுமையில் இருந்து வெளியே வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாற்றம் நடைபெறுவதைக் கான முடிகிறது, இதனை புள்ளிவிவரங்களும் உறுதி செய்கிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அரசு ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முறையில் இந்தியா மற்ற வளர்ந்த நாடுகளுக்கு முன்னுதாரனாமாக மாறியுள்ளது. தொழில்நுட்பத்துடன் மனித மாண்புகளும் இணைகையில் “எளிதாக வாழ்தல்” உறுதிசெய்யப்படுகிறது. நீர்வழிகள் மற்றும் விமான போக்குவரத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறைவான காலத்தில் எரிவாயு நிரப்புதல், வருமான வரி திரும்ப பெறுதல், பாஸ்போர்ட் பெறுதல் போன்றவை குறித்து குறிப்பிட்டார். பிரதமர் வீட்டு வசதி திட்டம், எரிவாயு திட்டம், மின்சார திட்டம் போன்ற திட்ட பலன்கள் தேவைப்படும் மக்களை அரசே சென்று சேர்க்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற திட்டங்களின் பயனாளிகள் தினக் கூலிகள், பணியாளர்கள், விவசாயிகள் போன்றவர்கள் என்று அவர் கூறினார். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் இதுபோன்ற திட்டங்கள் மெம்மேலும் பெருகும் என்று கூறினார். இந்தியாவின் வளர்ச்சி உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார குற்றம் புரிந்தவர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகாமல் இருப்பதை உறுதி செய்யவதற்காக சர்வதேச அரங்குகளை இந்தியா சில திட்டங்களை முன்மொழிந்துள்ளதாக பிரதமர் கூறினார்.