மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு, பகத்சிங் கோஷ்யாரி அவர்களே, முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களே, துணை முதலமைச்சர் திரு. அஜீத் பவார் அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் அஷ்வினி வைஷ்ணவ், ராவ்சாகப் தன்வே அவர்களே, மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பஃட்னாவிஸ் அவர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்.
சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்த நாள், நாளை கொண்டாடப்படவுள்ளது. சிவாஜி மகராஜ் இந்தியாவின் பெருமிதம், அடையாளம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்ந்தவர்.
தானே மற்றும் திவா-வை இணைக்கும் 5 மற்றும் 6-வது ரயில்பாதைகள் தொடங்கப்பட்டு இருப்பது போக்குவரத்தை மிகவும் எளிதாக்கும். இந்த புதிய 2 பாதைகளின் நான்கு நேரடி பலன்களில், முதலாவதாக உள்ளூர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தனித்தனி பாதை; இரண்டாவதாக வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் கடந்த செல்வதற்காக காத்திருக்கத் தேவையில்லை; மூன்றாவதாக மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்யாண் மற்றும் குர்லா வரையிலான பிரிவில் பெருமளவு தடையின்றி இயங்க முடியும் என்பதோடு, நிறைவாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பாதையை மூடுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கல்வா மும்ரா பயணிகள் தப்பிக்கலாம்..
இந்த புதிய ரயில் பாதைகள் மற்றும் மத்திய ரயில்வேயில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி கொண்ட 36 புதிய உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுவது, உள்ளூர் ரயில் சேவையை விரிவுபடுத்தி, வசதிகளை நவீனப்படுத்துவது என்ற அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது.
மும்பை புறநகர் ரயில் போக்குவரத்தை நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாக மாற்றும் வகையில், மும்பை ரயில் போக்குவரத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது. மும்பையில் மேலும் 400 கி.மீ. தொலைவுக்கு புறநகர் ரயில் பாதைகளையும், 19 ரயில் நிலையங்களை அமைப்பதோடு, நவீன சிபிடிசி சிக்னல் சாதனங்களை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் நாட்டின் தேவை. இது கனவு நகரான மும்பையின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும். இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுதான் நமது முன்னுரிமைப் பணி.இந்திய ரயில்வேயை மேலும் பாதுகாப்பானதாக, வசதி மிகுந்ததாக, நவீனமானதாக மாற்றுவது என்ற அரசின் உறுதிப்பாட்டை கொரோனா பெருந்தொற்றால் கூட அசைக்க முடியவில்லை. கடந்த இரண்டாண்டுகளில் ரயில்வே துறை, சரக்கு போக்குவரத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. 8 ஆயிரம் கி.மீ தூர ரயில்பாதைகள் மின்சார மயமாக்கப்பட்டு இருப்பதுடன், 4500 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் கிசான் ரயில்கள் மூலம் விவசாயிகளுக்கு நாடு தழுவிய சந்தைகளுடன் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டது.
காந்திநகர் மற்றும் போபாலில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையங்கள், இந்திய ரயில்வேயின் அடையாளமாக வேகமாக உருவெடுத்து வருவதுடன் 6,000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்திய ரயில்வேக்கு புதிய பொலிவை அளிக்கும். வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் ரயில்வே துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்து நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. வரும் ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் தேச சேவையில் ஈடுபடுத்தப்படும்.
நண்பர்களே, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதிகள் மும்பைக்கு பெருமளவில் நன்மை பயக்கும். மேலும், ஏழை மற்றும் நடுத்தர பிரிவு மக்களுக்கு வசதிகளையும், சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் இவை ஏற்படுத்தும். மீண்டும் ஒரு முறை மும்பைவாசிகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி!