வணக்கம் சென்னை
வணக்கம் தமிழ்நாடு
தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களே, தமிழக முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களே, துணை முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்களே, தமிழக சட்டப்பேரவை தலைவர் திரு. தனபால் அவர்களே, தொழில் அமைச்சர் திரு சம்பத் அவர்களே, சிறப்பு பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே,
எனதருமை நண்பர்களே,
சென்னையில் இன்று நான் இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்கு அன்பான வரவேற்பை அளித்த இந்த நகர மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்நகரத்தில் உற்சாகமும், ஆற்றலும் நிறைந்திருக்கிறது. இந்த நகரம் அறிவார்ந்த, படைப்பாற்றல் கொண்ட மக்கள் நிறைந்தது.
சென்னையிலிருந்து இன்று, நாம் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்குகிறோம். இந்தத் திட்டங்கள், புதுமை மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பின் அடையாளங்களாகும். இந்தத் திட்டங்கள் தமிழகத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யும்.
நண்பர்களே,
636 கிலோ மீட்டர் தூர கல்லணைக் கால்வாய்க்கு அடிக்கல் நாட்டப்படுகிறது என்பதால், இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது. இதன் பயன்கள் அளப்பரியதாக இருக்கும். இது, 2.27 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கான பாசன வசதியை இது முன்னேற்றும்.
இதன் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறப்பாகப் பயனடையும். உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காகவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காகவும், தமிழக விவசாயிகளை நான் பாராட்ட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தக் கல்லணையும், அதன் கால்வாய்களும், தமிழக நெற்களஞ்சியத்தின் வாழ்வாதாரமாக, ஜீவநாடியாகத் திகழ்கின்றன. நமது கடந்த காலத்தின் பெருமைமிகு சின்னமாக கல்லணை திகழ்கிறது. இது நமது தற்சார்பு இந்தியா இலக்குகளுக்கு உத்வேகமாகவும் விளங்குகிறது. புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் ஔவையாரின் வரிகளான,
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இது, தண்ணீர் மட்டம் உயரும் போது, சாகுபடி உயரும், அதனால், மக்கள் முன்னேறுவார்கள், அதனால் நாடு முன்னேறும் என்பதாகும்.
தண்ணீரைச் சேமிக்க நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.
இது தேசிய பிரச்சினை மட்டுமல்ல, இது உலகப் பிரச்சினை.
ஒவ்வொரு துளியிலும், அதிக விளைச்சல் என்னும் மந்திரத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இது வருங்கால தலைமுறைக்கு உதவும்.
நண்பர்களே.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் மேலும் 9 கி.மீ தூரப் பிரிவை தொடங்கி வைப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகும். இது வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரை செல்லும்.
உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையிலும், இந்தத் திட்டம் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒப்பந்தத்தாரர்கள் இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே வாங்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் சென்னை மெட்ரோ, தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்குவிக்கக்கூடியதாக உள்ளது. அடுத்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 119 கி.மீ தூரத்திற்கான பணிகளுக்கு ரூ. 63,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நகரிலும் இல்லாத வகையில், ஒரே சமயத்தில் இந்த அளவு நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய திட்டமாகும் இது. நகர்ப்புறப் போக்குவரத்து மீதான கவனம், மக்கள் எளிதான வாழ்க்கையை மேற்கொள்வதை ஊக்குவிக்கும்.
நண்பர்களே,
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதியை அதிகரிப்பதுடன் வணிகத்துக்கும் உதவுகிறது. இதனால் தங்க நாற்கர வழித்தடத்தின் ஒரு பகுதியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை கடற்கரை- எண்ணூர் – அத்திப்பட்டு பிரிவின் 4-ம் வழித்தடம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்துக்கும், காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே விரைவான சரக்குப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். சென்னை கடற்கரை, அத்திப்பட்டு இடையேயான இந்த நான்காவது வழித்தடம் இதற்கு உதவும்.
விழுப்புரம்-தஞ்சாவூர்-திருவாரூர் மின்மயமாக்கல் திட்டம், டெல்டா மாவட்டங்களுக்கு பெரிதும் பயன்படும். 228 கி.மீ தூர வழித்தடமானது, உணவு தானியங்களை மிக விரைவாக எடுத்துச் செல்வதற்கு உதவும். இது இத்திட்டத்தின் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.
நண்பர்களே,
இந்த நாளை எந்த இந்தியரும் மறக்கமுடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். நமது பாதுகாப்பு படையினர் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் துணிச்சல் வரும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.
நண்பர்களே,
உலகின் மிகவும் பழமையான மொழியான தமிழில், மகாகவி சுப்பிரமணிய பாரதி கூறினார்.
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
இதன் பொருள்
நாம் ஆயுதங்களையும் செய்வோம், காகிதமும் செய்வோம், தொழிற்சாலைகளையும் உருவாக்குவோம், பள்ளிகளையும் உருவாக்குவோம், நகரும், பறக்கும் வாகனங்களையும் தயாரிப்போம். உலகை அசைக்கும் கப்பல்களைக் கட்டுவோம், என்பதாகும்.
இந்தத் தொலை நோக்கால் ஊக்கம் பெற்று, இந்தியா, பாதுகாப்பு துறையில் தன்னிறைவை அடையும் மகத்தான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இரண்டு பாதுகாப்புத் தளவாட வழித்தடங்களில் ஒன்று தமிழகத்தில் வருகிறது. இந்த வழித்தடம் ஏற்கனவே ரூ. 8,100 கோடிக்கான முதலீட்டு உத்தரவாதங்களைப் பெற்றுள்ளது. இன்று நம் எல்லைகளைப் பாதுகாக்கும் மற்றொரு வீரனை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அர்ஜூன் முதல் ரக போர் ஊர்தி மார்க் 1-ஏ-வை ஒப்படைப்பதில் நான் பெருமையடைகிறேன். இது உள்நாட்டு வெடி பொருட்களைப் பயன்படுத்தக்கூடியதாகும்.
தமிழகம் ஏற்கனவே, வாகன உற்பத்தியின் மையமாகத் திகழ்கிறது. இப்போது, தமிழகம் இந்தியாவின் பீரங்கி உற்பத்தி மையமாகவும் உருவெடுத்து வருவதை நான் காண்கிறேன். தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி நாட்டின், வடக்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது. இது இந்தியாவின் ஒன்றுபட்ட உணர்வைப் பிரதிபலிக்கிறது.
நமது ஆயுதப் பாதுகாப்பு படை உலகின் மிகச் சிறந்த நவீனப் படையாக திகழ்வதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். அதே சமயம், இந்தியாவை பாதுகாப்புத் துறையில் தற்சார்பு கொண்டதாக உருவாக்குவதில் முனைப்புடன் கவனம் செலுத்துவோம். இந்தியாவின் துணிச்சலை பறைசாற்றும் வகையில் நமது ஆயுதப் படைகள் திகழ்கின்றன.
நமது தாய்திருநாட்டைப் பாதுகாப்பதில் முழு திறனுடன் உள்ளதை அவர்கள் மீண்டும், மீண்டும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகின்றனர். இந்தியா அமைதியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்தி வருகின்றனர். அதே தருணத்தில், இந்தியா தனது இறையாண்மையை எப்பாடுபட்டாவது பாதுகாக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் திகழும் நமது படைகளின் தீரம் போற்றுதலுக்குரியது.
நண்பர்களே,
சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். வெகு விரைவில், சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம், புதுமைப் படைப்பதில் முன்னணி மையமாக உருவெடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். , இந்தியா முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அது உருவாக்கும்.
நண்பர்களே,
ஒன்று நிச்சயம்
உலகம் இந்தியாவை நிறைந்த உற்சாகத்துடனும், ஆக்கப்பூர்வமான சிந்தனையுடனும் நோக்குகிறது. இது, இந்தியாவின் தசாப்தமாக மலரவிருக்கிறது. 130 கோடி இந்தியர்களின் கடின உழைப்பால்தான் இது சாத்தியமாகிறது. இந்த விருப்பம் மற்றும் புத்தாக்கத்துக்கு இந்திய அரசு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளது.
அரசின் சீர்திருத்த அர்ப்பணிப்பை இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையில், இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். இரக்கமும், அன்பும் கொண்ட மீனவ சமுதாயத்தினர் மீது இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களுக்கான கூடுதல் கடன் சலுகைகளை உறுதி செய்ய இந்த நிதி நிலை அறிக்கையில் வகை செய்யப்பட்டுள்ளது. மீன்பிடித்தலுக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உள்பட 5 இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படவுள்ளன.
கடற்பாசி பண்ணை குறித்து நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது கடலோர சமுதாயத்தினரின் வாழ்க்கையை முன்னேற்றும். கடல் பாசி உற்பத்திக்காக, பல்நோக்கு கடல் பாசி பூங்கா தமிழகத்தில் வரவுள்ளது.
நண்பர்களே,
இந்தியா மிக வேகமாக, இயற்பியல், சமூக உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இன்று, உலகின் உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியா பெரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. அண்மையில், நமது கிராமங்கள் அனைத்துக்கும் இணையத் தொடர்பை ஏற்படுத்தும் இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். இதேபோல, இந்தியா உலகின் மிகப் பெரிய ஆரோக்கியப் பராமரிப்பு மையமாக உருவாகியுள்ளது.
தொழில்நுட்பத்துக்கும், வெளியுலக கற்றலுக்கும் முக்கியத்துவம் அளித்து கல்வித்துறையை இந்தியா மாற்றம் செய்து வருகிறது. இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை கொண்டு வரும்.
நண்பர்களே,
தமிழகத்தின் கலாச்சாரத்தை பாதுகாப்பதும், கொண்டாடுவதும் நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும். தமிழகத்தின் கலாச்சாரம் உலக அளவில் புகழ்பெற்றது.
இன்று தமிழகத்தின் தேவேந்திர குல வேளாளர் சமுதாய சகோதர, சகோதரிகளுக்கு தெரிவிக்க என்னிடம் ஒரு மகிழச்சிகரமான அறிவிப்பு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனத்தின் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு, ஏழு பெயர்களில் அல்லாது, அவர்களது பாரம்பரியமான பெயரில் அவர்கள் இனி அழைக்கப்படுவார்கள். தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் திருத்தம் செய்ய அரசியல் சாசனத்தைத் திருத்தும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. அடுத்த அமர்வின் போது நாடாளுமன்றத்தில் இது தாக்கல் செய்யப்படும்.
இந்தக் கோரிக்கை மீது விரிவான ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசுக்கு நான் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலக் கோரிக்கைக்கு இந்த ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
தில்லியில் 2015-ல் தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது. காலனி ஆதிக்கவாதிகள் அவர்களது பெருமையையும், கண்ணியத்தையும் அகற்றியது குறித்த கவலையை காணமுடிந்தது.
பல தசாப்தங்களாக எதுவும் நடக்கவில்லை. பல அரசுகளிடமும் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம் நான் ஒன்றைச் சொன்னேன். அவர்களது தேவேந்திர என்னும் சொல் என்னுடைய பெயரின் நரேந்திர என்பதை ஒத்துள்ளது என்று அவர்களிடம் கூறினேன். அவர்களது உணர்வுகளை நான் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த முடிவு பெயர் மாற்றத்தை விட மேலானது. இது நீதி, கண்ணியம், வாய்ப்பு ஆகியவை பற்றியது. தேவேந்திர குல சமுதாயத்தினரிடம் கலாச்சாரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது. அவர்கள் நல்லிணக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகின்றனர். அவர்களது நாகரிகமான இயக்கம். தன்னம்பிக்கையையும், சுய மதிப்பையும் நிரூபிப்பதாக உள்ளது.
நண்பர்களே,
இலங்கையில் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் விருப்பம், நலன் மீது நமது அரசு எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான் என்பதில் நான் பெருமையடைகிறேன். மேம்பாட்டு பணிகள் மூலம், இலங்கை தமிழ் சமுதாயத்தினரின் நலனை நாம் உறுதி செய்து வருகிறோம். கடந்த காலத்தை விட அதிகமான வளங்களை, அந்நாட்டில் நமது அரசு தமிழர்களுக்காக வழங்கியுள்ளது.
அத்திட்டங்கள்;
வடக்கு -கிழக்கு இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள்
தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள்
சுகாதாரத்துறையில், தமிழ் சமுதாயத்தினருக்காக பிரத்யேக ஆம்பலன்ஸ் சேவை
திக்கோயாவில் ஒரு மருத்துவமனை
இணைப்பை ஊக்குவிக்க, யாழ்ப்பாணத்துக்கு ரயில்வே கட்டமைப்பு, மன்னார் வரை மறுகட்டமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள்
விரைவில் திறக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை கட்டியுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை தலைவர்களிடம் தமிழர்களின் உரிமைகள் பற்றி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய நாங்கள் எப்போதும் உறுதி பூண்டுள்ளோம்.
நண்பர்களே,
நமது மீனவர்கள் நீண்ட கால பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதன் வரலாற்றுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், அவர்களது உரிமை நலன்களை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
இலங்கையில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் போதெல்லாம், அவர்களை விரைவாக விடுதலை செய்வதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். 1600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் எனது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இலங்கையின் பிடியில் எந்த இந்திய மீனவரும் இல்லை. இதேபோல, 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய படகுகளை மீட்டுக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
நண்பர்களே
மனித நலன் சார்ந்த அணுகுமுறை மூலம், இந்தியா கோவிட்-19க்கு எதிரான உலகின் போராட்டத்தை வலுவாக்க இந்தியா உந்துசக்தியாக திகழ்கிறது.
இப்பூவுலகை வாழ்வியலுக்கு ஏற்றதாக சிறப்பாக மாற்றியமைக்கவும், நமது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கவும் நம்மால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். நமது அரசியல் சாசனத்தை வகுத்தவர்கள் இதைத்தான் நாம் செய்ய வேண்டுமென்று விரும்பினார்கள். இன்று தொடங்கப்பட்ட மேம்பாட்டு பணிகளுக்காக நான் மீண்டும் ஒருமுறை தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
நன்றி!
வணக்கம்.