உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நடந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜான்சி கோட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ராஷ்ட்ர ரக்ஷா சமர்பன் பர்வ்'-வைக் கொண்டாடும் பிரமாண்ட விழாவில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல புதிய முன்முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துவக்கம் இந்த திட்டங்களில் ஒன்றாகும். சங்கத்தின் முதல் உறுப்பினராக பிரதமர் பதிவு செய்யப்பட்டார். தேசிய மாணவர் படையினரின் பயிற்சிக்கான நாடு தழுவிய திட்டம்; தேசிய போர் நினைவிடத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான வசதி; தேசிய போர் நினைவகத்தின் கைபேசி செயலி; டிஆர்டிஓ-வால் வடிவமைக்கப்பட்ட இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான 'சக்தி' என்ற மேம்பட்ட மின்னணு போர் உடை, இலகுரக போர் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் ஆகியவை பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. உ.பி.யின் பாதுகாப்பு தொழில்வழித்தடத்தின் ஜான்சி முனையில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டின் ரூ.400 கோடி திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
ஜான்சியில் உள்ள கரௌதாவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூபாய் 3000 கோடி செலவில் கட்டப்படடவிருக்கும் இந்த பூங்கா, மலிவான மின்சாரம் மற்றும் மின் தொகுப்பின் நிலைத்தன்மை ஆகிய இரட்டை நன்மைகளை வழங்க உதவும். ஜான்சியில் அடல் ஏக்தா பூங்காவையும் பிரதமர் திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட இந்த பூங்கா சுமார் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு நூலகமும், திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையும் இதில் இருக்கும். ஒற்றுமை சிலையின் பின்னணியில் இருந்த புகழ் பெற்ற சிற்பி திரு ராம் சுதாராவால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், வீரம் மற்றும் வலிமையின் சிகரம் ராணி லட்சுமிபாயின் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, ஜான்சியின் இந்த பூமி விடுதலையின் மாபெரும் அமிர்த மஹோத்ஸவை இன்று கண்டு வருகிறது என்றார். இன்று இந்த மண்ணில் ஒரு புதிய வலுவான மற்றும் சக்திவாய்ந்த இந்தியா உருவாகி வருகிறது. ராணி லட்சுமிபாய் பிறந்த இடமான காசியை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை அடைவதாக பிரதமர் கூறினார். குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புரப், கார்த்திகை பவுர்ணமி, மற்றும் தேவ்-தீபாவளி ஆகிவற்றுக்கும் பிரதமர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். வீரம் மற்றும் தியாக வரலாற்றில் பங்களித்த பல மாவீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார். “ராணி லட்சுமிபாயின் பிரிக்க முடியாத கூட்டாளியாக இருந்த வீராங்கனை ஜல்காரி பாயின் வீரம் மற்றும் படைத் திறமைக்கு இந்த நிலம் சாட்சியாக இருந்து வருகிறது. 1857 சுதந்திரப் போராட்டத்தின் அழியா நாயகியின் காலடியில் நான் தலைவணங்குகிறேன். இந்த மண்ணில் இருந்து இந்திய வீரம் மற்றும் கலாச்சாரத்தின் அழியாக் கதைகளை எழுதி, இந்தியாவைப் பெருமைப்படுத்திய சண்டேலா-பண்டேலாக்களுக்கு தலைவணங்குகிறேன்! தாய்நாட்டின் பாதுகாப்பிற்கான தியாகத்தின் அடையாளமாக இன்றும் விளங்கும் துணிச்சலான அல்ஹா-உடால்களின் புந்தேல்கண்டின் பெருமைக்கு நான் தலைவணங்குகிறேன்" என்று பிரதமர் கூறினார்.
ஜான்சியின் புதல்வர் மேஜர் தியான் சந்தை நினைவுகூர்ந்த பிரதமர், விளையாட்டுத் திறமைக்கான உயரிய விருதிற்கு ஹாக்கி ஜாம்பவானின் பெயர் சூட்டுவது குறித்தும் பேசினார்.
ஒருபுறம் நமது படைகளின் பலம் இன்று அதிகரித்து வருகிறது, ஆனால் அதே நேரத்தில், எதிர்காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு களம் தயாராகி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தொடங்கப்படவிருக்கும் 100 சைனிக் பள்ளிகள், நாட்டின் எதிர்காலத்தை சக்தி வாய்ந்த கரங்களில் கொடுக்க வரும்காலங்களில் செயல்படும். சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது என்றார் அவர். 33 சைனிக் பள்ளிகளில் இந்த ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை ஏற்கனவே தொடங்கியுள்ளது. ராணி லட்சுமிபாய் போன்ற மகள்களும் சைனிக் பள்ளிகளில் இருந்து வெளிப்படுவார்கள், அவர்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் பொறுப்பை தங்கள் தோள்களில் எடுத்துக்கொள்வார்கள்.
தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் உறுப்பினராகப் பதிவுசெய்யப்பட்ட பிரதமர், சக முன்னாள் மாணவர்கள் தேசத்திற்குச் சேவை செய்ய முன்வர வேண்டும் என்றும், முடிந்தவரை பங்களிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தமக்குப் பின்னால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜான்சி கோட்டை இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், வீரம் இல்லை என்ற காரணத்தால் எந்தப் போரிலும் இந்தியா தோற்றதில்லை என்று கூறினார். ஆங்கிலேயர்களுக்கு இணையாக ராணி லட்சுமிபாயிடம் வளங்களும், நவீன ஆயுதங்களும் இருந்திருந்தால், நாட்டின் சுதந்திர வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும் என்றார் அவர். உலகிலேயே அதிக ஆயுதங்கள் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நீண்ட காலமாக இருந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று நாட்டின் தாரகமந்திரம் - உலகத்திற்காக இந்தியாவில் உற்பத்தி செய் (“மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்”) என்பதே ஆகும். தனது படைகளை தன்னிறைவு அடைய செய்யும் முயற்சியில் இந்தியா இன்று ஈடுபட்டுள்ளது. ஜான்சி இதில் ஒரு முக்கிய பங்காற்றும், என்று அவர் கூறினார்.
'ராஷ்டிர ரக்ஷா சம்பர்பன் பர்வ்' போன்ற நிகழ்வுகள் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு சூழலை உருவாக்குவதில் பெரிதும் உதவும் என்றார் பிரதமர். நமது தேசிய வீரர்களையும், வீராங்கனைகளையும் இதே போன்று பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார்.