நண்பர்களே,
சவாலான பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த 36 மணி நேரமாக நீங்கள் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய சக்திக்காக தலைவணங்குகிறேன். சோர்வை என்னால் காண முடியவில்லை, முழுக்க முழுக்கப் புத்துணர்ச்சியைத் தான் காண்கிறேன்.
ஒரு பணியை சிறப்பாக முடித்த மன நிறைவைக் காண்கிறேன். சென்னையின் விசேஷமான காலை உணவான – இட்லி, தோசை, வடை சாம்பார்- மூலம் தான் இந்த மன நிறைவு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை நகரம் அளித்த விருந்தோம்பல் அற்புதமானது. இங்குள்ள அனைவரும், குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பவர்கள், சென்னையில் தங்கியதை அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நண்பர்களே,
ஹேக்கத்தானில் வெற்றி பெற்றவர்களை நான் பாராட்டுகிறேன். மேலும், இங்கே கூடியுள்ள ஒவ்வொரு இளம் நண்பரையும், குறிப்பாக எனது மாணவர் நண்பர்களை நான் பாராட்டுகிறேன். சவால்களை எதிர்கொண்டு, சாத்தியமான தீர்வுகளைக் காண்பதில் உங்களுடைய உத்வேகம், உங்கள் சக்தி மற்றும் ஆர்வத்தை காட்டியது ஆகியவை போட்டியில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் மிகுந்த மதிப்பு கொண்டது.
என் இளம் நண்பர்களே, இன்றைக்கு இங்கே பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டிருக்கிறோம். யார் கவனிக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் கேமராக்கள் குறித்த தீர்வு எனக்கு சிறப்பாகப் பிடித்திருக்கிறது. இப்போது என்ன நடக்கும் தெரியுமா? நாடாளுமன்றத்தின் சபாநாயகரிடம் நான் பேசுவேன். நிச்சயமாக நாடாளுமன்றவாதிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
என்னைப் பொருத்த வரை, உங்களில் ஒவ்வொருவருமே வெற்றியாளர் தான். ஆபத்து வாய்ப்புகளை எதிர்கொள்ள தயங்காதவர்கள் என்பதால் நீங்கள் வெற்றியாளர்கள். முடிவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கவலைப்படாமல், முயற்சிகளில் ஈடுபட நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள்.
இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் நிகழ்வை மகத்தான வெற்றிகரமானதாக ஆக்குவதற்கு ஆதரவு அளித்தமைக்காக சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சர் திரு. ஓங் யே குங் அவர்களுக்கும் நன்யங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் குறிப்பிட்டு நன்றி சொல்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
இந்தியாவின் தரப்பில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் ஆகியவை இணைந்து, 2வது இந்திய – சிங்கப்பூர் ஹேக்கத்தான் நிகழ்வை மாபெரும் வெற்றியானதாக ஆக்குவதை உறுதி செய்வதற்கு அற்புதமாகப் பணியாற்றியுள்ளன.
நண்பர்களே,
துடிப்புமிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் ஆக்குவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஒருவர் முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்ப்பது மன நிறைவான சில விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.
கடந்த முறை சிங்கப்பூர் சென்ற போது கூட்டாக ஹேக்கத்தான் நிகழ்வு நடத்தலாம் என்று நான் யோசனை கூறினேன். கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி சிங்கப்பூரில் நன்யங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, நவீனத்துவம் வாய்ந்த சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெறுகிறது.
நண்பர்களே,
இந்த ஹேக்கத்தானில் போட்டி நடத்துவதில் கவனம் செலுத்தப் போவதாகக் கடந்த ஆண்டு எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பணியாற்றிய, இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட குழுக்கள் இப்போது உருவாக்கப்பட்டன. எனவே, போட்டி என்பதில் இருந்து கூட்டு முயற்சி என்ற நிலைக்கு பாதுகாப்பாக நாம் நகர்ந்திருப்பதாகச் சொல்லலாம்.
இதுதான் நமக்குத் தேவையான பலமாகும். நம் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க கூட்டாக பொறுப்பெடுத்துக் கொள்வது இப்போதைய தேவையாக உள்ளது.
நண்பர்களே,
இதுபோன்ற ஹேக்கத்தான் நிகழ்வுகள் இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்பாகும். உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நவீன தொழில்நுட்பத்தின் வசதிகளை இதில் பங்கேற்பவர்கள் பெற முடியும். குறிப்பிட்ட காலவரம்புக்குள் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.
பங்கேற்பவர்கள் தங்களுடைய சிந்தனைகளை, புதுமை சிந்தனை தொழில் திறன்களை இங்கு பரிசோதித்துப் பார்க்கலாம். மேலும், இன்றைக்கு ஹேக்கத்தான்களில் கண்டறியப்படும் தீர்வுகள், நாளைய ஸ்டார்ட்-அப்-களுக்கான திட்டங்களாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இங்கே இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நடத்தி வருகிறோம்.
இந்த முன்முயற்சியில் அரசுத் துறைகள், தொழில் துறையுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அனைத்து முன்னணி கல்வி நிலையங்கள் கரம் கோர்த்து செயல்படுகின்றன.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் மூலம் கிடைக்கும் தீர்வுகளை எடுத்துக் கொண்டு, நிதி உதவி அளித்து, பரிசோதனைகளை மேம்படுத்தி, கை பிடித்து அழைத்துச் சென்று ஸ்டார்-அப்-களாக மாற்றுகிறோம்.
அதேபோல, என்.டி.யு., மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை இணைந்து இந்த ஹேக்கத்தானில் கிடைக்கும் சிந்தனைகளை தொழில் வாய்ப்பாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கூட்டாக ஆராயும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
அதில் புதுமை சிந்தனை மற்றும் ஸ்டார்ட்-அப்-கள் முக்கியப் பங்காற்றும்.
ஏற்கெனவே ஸ்டார்ட்-அப்களுக்கு உகந்த சூழல் நிலவும் மூன்று முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், புதுமை சிந்தனை மற்றும் பரிசோதனை தொழில்நுட்பங்களுக்கு ஊக்கம் தருவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
அடல் புதுமைச் சிந்தனை லட்சிய நோக்குத் திட்டம், பிரதமரின் ஆராய்ச்சி உதவித் தொகைகள், ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் ஆகியவை, புதுமை சிந்தனை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்தியா என்ற, 21வது நூற்றாண்டு இந்தியாவுக்கான அடித்தளமாக உள்ளன.
இயந்திர முறைகளைக் கற்பது, செயற்கைப் புலனறிதல், பிளாக்செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களை நமது மாணவர்களுக்கு 6வது வகுப்பில் இருந்தே அறிமுகம் செய்வதற்கு இப்போது நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
பள்ளிக்கூடத்தில் இருந்து உயர் கல்வி ஆராய்ச்சி வரையில், புதுமை சிந்தனைக்கான களமாக இருக்கும் வகையிலான சூழல் அமைப்பு உருவாக்கப்படுகிறது.
நண்பர்களே,
புதுமை சிந்தனை மற்றும் பரிசோதனை வாய்ப்புகளை இரண்டு பெரிய காரணங்களுக்காக நாங்கள் ஊக்குவிக்கிறோம். முதலாவது – இந்தியாவின் பிரச்சினைகளுக்கு எளிதாகத் தீர்வுகள் கண்டு, வாழ்வை எளிதாக்க நாங்கள் விரும்புகிறோம். அடுத்தது, ஒட்டுமொத்த உலகிற்குமான தீர்வுகளை, இங்கே இந்தியாவில் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் கண்டறியப்படும் தீர்வுகள், உலகளாவிய பயன்பாட்டுக்கானவை – இதுதான் எங்களுடைய லட்சியமாகவும், உறுதிப்பாடாகவும் உள்ளது.
ஏழை நாடுகளும் பயன்படுத்தும் வகையில் குறைந்த செலவிலானவையாக இவை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் – இந்திய புதுமை சிந்தனை கண்டுபிடிப்புகள், எங்கே இருந்தாலும் பரம ஏழைகள் மற்றும் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவானவை.
நண்பர்களே,
நாடுகளை, கண்டங்களைக் கடந்து மக்களை ஒன்று சேர்க்கும் விஷயமாக தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை நியாயமாக நான் நம்புகிறேன். அமைச்சர் ஓங் அளித்த ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன்.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிய நாடுகள் பங்கேற்கும் வகையில் இதுபோன்ற ஒரு ஹேக்கத்தானை நடத்தலாம் என்ற யோசனையை முன்வைக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். என்.டி.யு, சிங்கப்பூர் அரசு, இந்திய அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் இதை நடத்தலாம்.
ஆசிய நாடுகளில் உள்ள சிறந்த அறிவாளிகள் போட்டி போட்டுக் கொண்டு, `புவி வெப்பமாதல் மற்றும் பருவநிலை மாற்றம்’ பிரச்சினையைக் குறைப்பதில் புதுமைச் சிந்தனை தீர்வுகளை உருவாக்கட்டும்.
நிறைவாக, இந்த முன்முயற்சியை அபார வெற்றியாக ஆக்குவதற்குப் பாடுபட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபரிமிதமான கலாச்சாரம், உயர்ந்த பாரம்பர்யம் மற்றும் உணவு அளிக்கும் சென்னையில் நீங்கள் இருக்கிறீர்கள். சென்னையில் தங்கியிருக்கும் காலத்தை, சென்னையின் சிறப்புகளை அனுபவிக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று, பங்கேற்பாளர்கள் அனைவரையும், குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள நம் நண்பர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். சிற்பங்கள் மற்றும் கற்கோவில்களுக்குச் சிறப்பு பெற்ற மகாபலிபுரம் போன்ற இடங்களுக்குச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவை யுனெஸ்கோ உலக கலாச்சார தலமாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
நன்றி! மிக்க நன்றி!