எனது நண்பர்களே நலமா,
இந்தக் காட்சி, இந்தச் சூழல் கற்பனைக்கு எட்டாததாகும். எதையும் பெரிய அளவிலும், பிரமாண்டமானதாகவும் நடத்திக் காட்டுவது டெக்ஸாஸின் பிரிக்க முடியாத இயல்பாகும்.
இன்று டெக்ஸாஸின் துடிப்பும், இதில் பிரதிபலிக்கின்றது. இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அடங்காதது மட்டுமல்லாமல், இந்த நாளை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியிருப்பதில் ஒற்றுமை காணப்படுகிறது.
என்.ஆர்.ஜி-யில் காணப்படும் இந்த ஆற்றல் இந்தியாவுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்புக்கு சான்றாகும்.
அதிபர் டிரம்பாக இருந்தாலும், மிகப்பெரிய அமெரிக்க ஜனநாயகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, பிரதிநிதிகளான ஸ்டெனி ஹோயர், செனட்டர் கார்னின், செனட்டர் க்ரஸ் உள்ளிட்ட இதர நண்பர்களாக இருந்தாலும், இந்தக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியாவைப் பாராட்டியதுடன், என்னையும் புகழ்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து தெரிவித்து நம்மைப் பாராட்டியிருக்கிறார்கள். இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் திறமைக்கும், சாதனைகளுக்கும் கிடைத்த பெருமையாகும்.
இது 130 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த பெருமையாகும். அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் சார்பிலும் நான் அவர்களை இதயம் கனிந்த வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களையும், நான் வாழ்த்துகிறேன். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் பதிவு செய்திருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போதிய இடமின்மை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவ்வாறு பதிவு செய்து பங்கேற்க இயலாதவர்களிடம் நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருகிறேன்.
ஹூஸ்டன் மற்றும் டெக்ஸாஸ் நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறைந்த கால அவகாசத்திலும், கடந்த இரண்டு நாட்களாக வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு இடையிலும், சீரான ஏற்பாடுகளைச் செய்ததுடன், சூழ்நிலையையும் அவர்கள் அருமையாகக் கையாண்டுள்ளனர். அதிபர் டிரம்ப் சொன்னதைப் போல, ஹூஸ்டன் வலுவானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
நண்பர்களே,
இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் நலமா மோடி, ஆனால், மோடியைப் பற்றி மட்டும் குறிப்பிட ஒன்றுமில்லை. 130 கோடி இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றும் சாதாரண மனிதர் நான். என்னைப் பார்த்து நீங்கள் நலமா மோடி என்று கேட்கிறீர்கள். அதற்கு எனது இதயம், உண்மையில் இந்தியாவில் அனைவரும் நலம் என்று பதில் சொல்கிறது.
நண்பர்களே,
நான் சொல்வதைப் பார்த்து நமது அமெரிக்க நண்பர்கள் வியப்படையக்கூடும். அதிபர் டிரம்ப் மற்றும் எனது அமெரிக்க நண்பர்களே, நான் இந்த அளவுக்குத் தான் கூறுகிறேன். இதை இந்தியாவின் பல்வேறு மொழிகளில், எல்லாமே நலமாக இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.
நமது மொழிகள், நமது சுதந்திரமான ஜனநாயக சமுதாயத்தின் மிகப்பெரும் அடையாளமாகத் திகழ்கின்றன. பல நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான வட்டார மொழிகள், ஒன்றுக்கொன்று பக்க பலமான உணர்வுடன் இருப்பதால் எங்கள் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த மொழிகள் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு இன்னும் தாய்மொழிகளாக உள்ளன.
மொழியால் மட்டுமல்லாமல் பல்வேறு இனங்களாலும், பிரிவுகளாலும், வழிபாட்டு முறைகளாலும், நூற்றுக்கணக்கான பிராந்திய உணவு வகைகளாலும், பல்வேறு உடைகளை உடுத்தும் விதத்திலும், பருவநிலையிலும், மாறுபட்டு இருக்கும் நாடு ஒன்றுபட்டிருப்பது அற்புதமானதாகும்.
பன்முகத்தன்மையின் ஒற்றுமை என்பது எங்களது பாரம்பரியம், அதுவே எங்களது சிறப்பாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை எங்களது எழுச்சிமிகு ஜனநாயகத்தின் அடிப்படையாகும். இதுதான் எங்களது ஆற்றலுக்கும், ஊக்கத்துக்கும் ஆதாரமாகும். நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுடன் பன்முகத்தன்மையையும், ஜனநாயகத்தையும் கொண்டு செல்கிறோம்.
நமது நாட்டின் பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாக இன்று இந்த மைதானத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் குழுமியிருக்கின்றீர்கள்.
இங்கே இருக்கின்ற உங்களில் பலர் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமான 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்றிருப்பீர்கள். இந்திய ஜனநாயகத்தின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அந்தத் தேர்தல் அமைந்தது.
அந்தத் தேர்தலில் 61 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்றனர். இது அமெரிக்காவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இருமடங்காகும். இதில் எட்டு கோடி இளைஞர்கள் முதல் தடவையாக வாக்களித்தனர்.
இந்த ஜனநாயக வரலாற்றின் முதல்முறையாக பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தனர். இதேபோல, இந்த முறை அதிக அளவிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களே,
2019 பொதுத் தேர்தலில் மற்றொரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த ஒரு அரசு, முன்பைவிட கூடுதல் எண்ணிக்கையில் இடங்களைப் பெற்று ஆட்சிக்கு வந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.
இது எதனால் நடந்தது, இதற்கு காரணம் என்ன? இதற்கு காரணம் மோடி அல்ல, இந்தியர்களால்தான் இது நடந்துள்ளது.
நண்பர்களே,
இந்தியர்கள் பொறுமைசாலிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இப்போது நாம் நாட்டின் வளர்ச்சி விஷயத்தில் பொறுமையற்றவர்களாக இருக்கிறோம். 21 ஆம் நூற்றாண்டில் நமது நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமான வார்த்தை வளர்ச்சி என்பதுதான். இன்று இந்தியாவின் மிகப்பெரிய தாரக மந்திரம், அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம் என்பதுதான். இந்தியாவின் இன்றைய மிகப்பெரிய கொள்கை பொதுமக்கள் பங்கேற்பு. இந்தியாவின் மிகப் பிரபலமான முழக்கம், உறுதிப்பாடே இந்தியாவின் சாதனை என்பது ஆகும். புதிய இந்தியாவை உருவாக்குவதே தற்போதைய மிகப்பெரிய உறுதிப்பாடு ஆகும்.
புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்க இந்தியா தற்போது இரவு-பகலாக பாடுபட்டு வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நமக்கு நாமேதான் போட்டியாகும்.
நமக்கு நாம்தான் சவாலாக உள்ளோம். நம்மை நாமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
இன்று முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்தியா வேகமாக முன்னேற விரும்புகிறது. எதுவும் மாறாது என்ற சிந்தனையுடைய சிலரது எண்ணத்தை இந்தியா சவாலாக எடுத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் 130 கோடி இந்தியர்கள் ஒன்றாக இணைந்து சாதனை படைத்திருக்கிறோம். இதை முன்பு யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.
நமது நோக்கம் உயரியது. அதைவிட அதிகமாக நாம் சாதிக்கிறோம்.
சகோதர, சகோதரிகளே,
கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் கிராமப்புற சுகாதாரம் 38 சதவீத அளவுக்கே காணப்பட்டது. ஐந்தாண்டுகளில் நாங்கள் 11 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளைக் கட்டியிருக்கிறோம். இன்று கிராமப்புற சுகாதாரம் 99 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயு இணைப்புகள் 55 சதவீத அளவுக்கே இருந்தன. ஐந்தாண்டுகளுக்குள் அது 95 சதவீதத்தை எட்டியுள்ளது. ஐந்தாண்டுகளில் 15 கோடிக்கும் மேற்பட்ட மக்களை எரிவாயு இணைப்புகளால் நாம் இணைத்திருக்கிறோம்.
இந்தியாவில் முன்பு ஊரகச் சாலைத் தொடர்பு 55 சதவீதமாக மட்டுமே இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் நாம் அதனை 97 சதவீதமாக ஈட்டியிருக்கிறோம். ஐந்தாண்டுகளில், நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் 2 லட்சம் கிலோ மீட்டர் (அதாவது 200 ஆயிரம் கிலோ மீட்டர்) தூரத்திற்கும் அதிகமாக சாலைகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் மட்டுமே வங்கிக் கணக்குகளை வைத்திருந்தனர். கடந்த ஐந்தாண்டுகளில் 100 சதவீத குடும்பங்கள் வங்கி நடைமுறையில் சேர்ந்துள்ளனர். ஐந்தாண்டுகளில் 37 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
நண்பர்களே,
தற்போது மக்கள் அடிப்படைத் தேவைகள் பற்றி கவலைப்படாமல் இருந்தால் மட்டுமே பெரிய அளவில் அவர்களால் கனவு காண முடியும். இந்த திசையில் தங்களது ஆற்றலைச் செலுத்தி சாதனை படைக்க முடியும்.
நண்பர்களே,
சுலபமான வாழ்க்கையை வாழ்வதைப் போலவே எளிதாக தொழில் நடத்துவதும் முக்கியமாகும். அப்போது தான் அதிகாரமயமாக்கல் பாதையை அணுக முடியும். நாட்டின் சாதாரண மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, மிகத் துரிதமான வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.
இன்று உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். தரவு என்பது புதிய எண்ணெய் என தற்போது கூறப்படுவதுண்டு இதன் பொருளை ஹூஸ்டனைச் சேர்ந்த நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நான் இதை தரவு என்பது புதிய தங்கம் என சொல்கிறேன். முழுக் கவனமும் தொழில் 4.0 என்பதில்தான் உள்ளது. உலகிலேயே எந்த நாட்டில் மிகக்குறைவான விலையில் தரவு கிடைக்கிறதோ, அந்த நாடு இந்தியாவாகும்.
இந்தியாவில் ஒரு ஜி.பி. தரவின் விலை 25 முதல் 30 சதவீதத்திற்குள்ளாகவே இருக்கிறது. இது ஒரு டாலரில் கால் பகுதியாகும். உலகில் ஒரு ஜி.பி. தரவின் விலை 25 முதல் 30 மடங்கு அதிகம் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த குறைந்த விலை தரவு டிஜிட்டல் இந்தியாவின் புதிய அடையாளமாக மாறியிருக்கிறது. குறைந்த விலை தரவு இந்தியாவின் நிர்வாகத்தை செழுமைப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது மத்திய – மாநில அரசுகளின் 10 ஆயிரம் சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
நண்பர்களே,
இந்தியாவில் ஒரு காலத்தில் பாஸ்போர்ட் வாங்குவதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது ஒருவாரத்திற்குள் பாஸ்போர்ட் வீடுநோக்கி வந்து விடுகிறது. விசா வாங்குவதற்கு முன்பெல்லாம் எத்தகைய பிரச்சனைகள் இருந்தன என்பதை என்னைவிட, நீங்கள் நன்கு அறிந்திருக்க முடியும். இப்போது இந்தியாவின் இ-விசா வசதியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது.
நண்பர்களே,
புதிய நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கு இரண்டு, மூன்று வாரங்கள் ஆன காலம் ஒன்று இருந்தது. இப்போது 24 மணிநேரத்திற்குள் புதிய நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். வரித்தாக்கல் செய்வது மிகப்பெரிய தலைவலியாக இருந்த காலமும் உண்டு. வரிப் பிடித்தத்தை திரும்பப் பெறுவதற்கு பல மாதங்கள் ஆனது.
இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள் இந்த முறை ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 50 லட்சம் பேர் அதாவது ஐந்து மில்லியன் மக்கள் தங்களது வருமான வரிக் கணக்குகளை ஆன்-லைன் மூலம் தாக்கல் செய்தனர்.
ஐந்து மில்லியன் கணக்குகள் ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன என்பது இதன் பொருளாகும். அதாவது ஹூஸ்டனில் மொத்த மக்கள் தொகையைவிட, இது இருமடங்குக்கும் அதிகமாகும். இதைவிட பெரிய பிரச்சனை வரிப் பிடித்தத்தை திரும்பப் பெறுவதற்கு முன்பெல்லாம் பல மாதங்கள் ஆனது. தற்போது எட்டு முதல் 10 நாட்களுக்குள் வங்கிக் கணக்குகளுக்கு அது நேரடியாக மாற்றப்படுகிறது.
சகோதர, சகோதரிகளே,
மிகவேகமாக வளர்ச்சியடைய விரும்பும் எந்த நாட்டுக்கும், அதன் மக்களுக்கு நலத்திட்டங்கள் மிகவும் அவசியமாகும். தேவையான மக்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதுடன், புதிய இந்தியாவை உருவாக்க சில விஷயங்களுக்கு விடைகொடுக்கப்பட்டு வருகிறது.
எந்த அளவுக்கு நலத்திட்டங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம், அந்த அளவுக்கு சிலவற்றை கைவிடுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை நாடு கொண்டாடும் போது, திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு இந்தியா விடைகொடுக்க உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா 1,500-க்கும் மேற்பட்ட மிகப் பழைய பொருந்தாத சட்டங்களுக்கு விடை கொடுத்துள்ளது. தொழில் தொடங்க உகந்த சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட ஏராளமான வரிகள் இடையூறாக இருந்தன.
இந்த வரிகளுக்கு எங்கள் அரசு விடை கொடுத்ததுடன் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாடு ஒரே வரி என்ற கனவை எங்கள் நாட்டில் நாங்கள் நனவாக்கியுள்ளோம்.
நண்பர்களே,
ஊழலுக்கு எதிராக நாங்கள் சவால் விடுத்துள்ளோம். ஒவ்வொரு மட்டத்திலும் இதற்கு விடை கொடுக்க ஒன்றன்பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் மூன்றரை லட்சம் போலி நிறுவனங்களுக்கு இவ்வாறு விடை கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகளைப் பயன்படுத்தி, வெறும் ஆவணங்களில் மட்டுமே இருந்து வந்த எட்டு கோடிக்கும் அதிகமான பெயர்களைக் கொண்ட போலி நிறுவனங்களுக்கு நாங்கள் விடைகொடுத்திருக்கிறோம். நண்பர்களே, இந்த போலி நிறுவனங்களை அகற்றியதன் மூலம் தவறானவர்களின் கைகளுக்கு சென்று கொண்டிருந்த ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சுமார் 20 பில்லியன் டாலர் (இரண்டாயிரம் கோடி) சேமிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதை நோக்கமாக கொண்டு, நாட்டில் வெளிப்படையான சுற்றுச்சூழல் நடைமுறையை நாங்கள் கட்டமைத்து வருகிறோம். சகோதர, சகோதரிகளே, வளர்ச்சித் திட்டங்களில் இருந்து ஒருவர் விலகியிருந்தாலும், அதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.
கடந்த 70 ஆண்டுகளாக எங்கள் நாடு சந்தித்து வந்த மிகப்பெரிய சவாலுக்கு சில நாட்களுக்கு முன்பு விடை கொடுத்து அனுப்பியிருக்கிறோம்.
ஆம், நீங்கள் சொல்வது சரிதான். அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு பற்றிய விஷயம்தான் இது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை முன்னேற விடாமல் சம உரிமைகள் வழங்கப்படாமல் 370 ஆவது பிரிவு அவர்களை நலிவடையச் செய்தது. இந்த நிலையைப் பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் பயன்படுத்திக் கொண்டன.
இந்தியாவின் இதரப் பகுதி மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள், தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கும் கிடைக்கின்றன.
பெண்கள், குழந்தைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக நிலவிய பாகுபாடு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
நண்பர்களே,
எங்கள் நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இதுபற்றி பல மணிநேரமாக விவாதம் நடைபெற்றது. இது நாடுமுழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் இதை பார்த்தது. இந்தியாவில் எங்கள் கட்சிக்கு மேலவையில் அதாவது மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. இருப்பினும் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இதுகுறித்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நீங்கள் பலத்த கரவொலி மூலம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
எப்போதெல்லாம் இந்தியா தனக்காக சிலவற்றை செய்கிறதோ, அது தங்களது சொந்த நாட்டை நிர்வகிக்க இயலாத சிலருக்கு இடையூறாகத் தெரிகிறது. இந்தியாவை நோக்கி வெறுப்புணர்வை விதைப்பதையே அவர்கள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும், அதை வளர்க்கும் அவர்கள் அமைதியின்மையையே விரும்புகிறார்கள். அவர்கள் யார் என்பது, உங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் தெரியும்.
அமெரிக்காவில் நடந்த 9/11 ஆக இருந்தாலும், அல்லது மும்பையில் நடந்த 26/11 சம்பவமாக இருந்தாலும், அதன் சதிகாரர்கள் எங்கு உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நண்பர்களே,
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராகவும் உறுதியான போராட்டத்தை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அதிபர் டிரம்ப் உறுதியாக நிற்கிறார் என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தை அதிபர் டிரம்பின் உறுதிப்பாட்டிற்காக நாம் அவருக்கு மிகப்பெரிய கரவொலியை வாழ்த்தாக வழங்கவேண்டும்.
நன்றி, நன்றி நண்பர்களே.
சகோதர, சகோதரிகளே,
இந்தியாவில் மிகப்பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நமது நோக்கங்களுடன் நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.
புதிய சவால்களை சமாளிக்க நாம் உறுதிப்பூண்டிருக்கிறோம். அதை நாம் நிறைவேற்றுவோம். நாட்டின் உணர்வுகளை வைத்து நான் ஒரு கவிதையை சில நாட்களுக்கு முன்பு எழுதினேன். அதில் இரண்டு வரிகளை நான் உங்களிடம் இன்று படிக்க விரும்புகிறேன். நேரம் அதிகம் இல்லாததால் அதைப் பற்றி அதிகம் சொல்ல மாட்டேன்.
ஏராளமான கஷ்டங்கள் அங்கே மலை போல் குவிந்திருக்கின்றன. அதுதான் எனது உற்சாகத்திற்கு உச்சமாகத் திகழ்கிறது.
நண்பர்களே,
தற்போது இந்தியா சவால்களை தவிர்க்கவில்லை, அவற்றை நேருக்குநேர் நாங்கள் சந்திக்கிறோம். பிரச்சனைகளுக்கு சிறிய அளவில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளாமல் முழுமையான தீர்வு காண இந்தியா இப்போது அறிவுறுத்துகிறது. முன்பு முடியாது என கருதப்பட்ட அனைத்தையும் இந்தியா இப்போது முடியும் என செயல்படுத்தி வருகிறது.
நண்பர்களே,
இந்தியா தற்போது ஐந்து லட்சம் கோடி பொருளாதார நாடாக உருவாக வேகமாக வளர்ந்து வருகிறது. உள்கட்டமைப்பு, முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம். மக்களுக்கு உகந்த, மேம்பாட்டுக்கு ஏற்ற, முதலீட்டுக்கு உகந்த, சூழலை உருவாக்குவதை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்.
உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடியை (சுமார் 1.3 டிரில்லியன் டாலர்) நாங்கள் செலவழிக்கவுள்ளோம்.
நண்பர்களே,
உலகில் நிச்சயமற்ற நிலை உள்ள சூழ்நிலையிலும், கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகும். எந்த அரசின் முழு ஆட்சிக் காலத்திலும் இந்த அளவுக்கு வளர்ச்சி இருந்ததில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
முதன்முறையாக இந்த காலகட்டத்தில்தான் குறைவான பணவீக்கம், குறைவான நிதிப் பற்றாக்குறை, அதிக வளர்ச்சி காணப்படுகிறது. இன்று உலகிலேயே அந்நிய முதலீட்டை ஈர்க்கும் சிறப்பான நாடாக இந்தியா உள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு இருமடங்காக உயர்ந்திருக்கிறது.
அண்மையில், ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை நாங்கள் எளிமைப்படுத்தியுள்ளோம். நிலக்கரிச் சுரங்கம் மற்றும் ஒப்பந்த உற்பத்தித் துறையில் அந்நிய முதலீடு 100 சதவீத அளவுக்கு எட்டியுள்ளது.
ஹூஸ்டனில் நேற்று மின்சாரத் துறையின் தலைமை செயல் அதிகாரிகளை நான் சந்தித்தேன். பெரு நிறுவன வரியைக் கணிசமாகக் குறைத்து, இந்தியா எடுத்த நடவடிக்கை அனைத்துத்தரப்பு மக்களையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான செய்தியாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக தொழிலதிபர்களிடையே பரவியுள்ளது.
இந்த முடிவு உலகளவில் இந்தியா போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
முன்னேற்றத்தை நோக்கி இந்தியாவில் இந்தியர்கள் செல்லவும், அமெரிக்காவில் அமெரிக்கர்கள் செல்லவும், மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய புதிய இந்தியாவின் பயணம், அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ், அமெரிக்காவின் வலுவான பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த வாய்ப்புகளை எட்டுவதற்கு புதிய சிறகுகளை அளிக்கும்.
அதிபர் டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்ட பொருளாதார அதிசயம் பெருமளவு உதவிகரமாக இருக்கும். அதிபர் டிரம்புடன் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் நான் ஆலோசனை நடத்தவுள்ளேன். இந்த பேச்சுவார்த்தை சில ஆக்கப்பூர்வமான பயன்களை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன்.
என்னைச் சிறந்த பேச்சாளர் என்று அதிபர் டிரம்ப் வர்ணித்தார். ஆனால் அவரோ எந்த ஒப்பந்தத்தையும், எளிதாக செய்து முடிப்பதில் வல்லவராவார். அவரிடம் இருந்து நான் பலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நண்பர்களே,
சிறந்த எதிர்காலத்தை நோக்கிய நமது முன்னோக்கிய பயணம் தற்போது மிக அதிக வேகத்துடன் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனது நண்பர்களாகிய நீங்கள் அனைவரும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். இதற்கு உந்துசக்தியாக நீங்கள் திகழ்கிறீர்கள். உங்கள் நாட்டிற்கு நீங்கள் வெகுதொலைவில் இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் நாட்டின் அரசு, உங்கள் பக்கத்திலேயே உள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு கொள்வதையும், பேச்சு வார்த்தை நடத்துவதன் பொருளையும் நாங்கள் வெகுவாக மாற்றியுள்ளோம். வெளிநாடுகளில் உள்ள நமது தூதரகங்கள் வெறும் அரசு அலுவலகமாக மட்டும் செயல்படாமல் உங்களது முதல் கூட்டாளிகளாக மாறியுள்ளன.
வெளிநாடுகளில் பணிபுரியும் நமது நண்பர்களின் நலன்களை பாதுகாப்பதில் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பயணத்தின்போது உதவும் செயலி, மின்னணு இடப்பெயர்ச்சி, வெளிநாடுகள் செல்வதற்கு முன்பாக மேற்கொள்ளும் பயிற்சி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் மேம்பாடு, இந்திய வம்சாவளி அட்டைதாரர்கள் அனைவருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அட்டை பெறும் வசதி உட்பட வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னரும், வெளிநாடு போய் சேர்ந்த பின்னரும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய சமுதாயத்திற்கான நல நிதியத்தை எங்கள் அரசு வலுப்படுத்தியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உதவி மையங்களை உலகம் முழுவதும் உள்ள பல புதிய நகரங்களில் அரசு திறந்துள்ளது.
சகோதர, சகோதரிகளே,
இன்று இந்த தளத்திலிருந்து வெளியாகும் செய்தியின் உணர்வு புதிய வரையறைகளுக்கு உயர்வையும், 21 ஆம் நூற்றாண்டின் புதிய வாய்ப்புக்களையும் அளிக்கக்கூடியதாகும். நமது இரண்டு நாடுகளும் ஒரே ஜனநாயக மாண்புகளின் சக்தியைக் கொண்டதாகும்.
இருநாடுகளும் புதிய கட்டமைப்புக்கான ஒரே விதமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த இருநாடுகளும் நமக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நிச்சயம் வழங்கும்.
திரு அதிபர் அவர்களே, நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். உங்களை வரவேற்கும் வாய்ப்பை எங்களுக்கு தாருங்கள். நமது நட்புறவு, நம் கனவுகளுக்கும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் துடிப்பான எதிர்காலத்திற்கும், புதிய உச்சத்தை அளிக்கும்.
அதிபர் டிரம்புக்கும், இங்கு வந்திருக்கும் அமெரிக்காவின் அரசியல் தலைவர்களுக்கும், சமுதாயப் பிரதிநிதிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
டெக்ஸாஸ் மாகாண அரசுக்கும், இங்குள்ள நிர்வாகத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ஹூஸ்டன், நன்றி அமெரிக்கா,
கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக,
நன்றி.