குஜராத் ஆளுனர் திரு.ஆச்சார்யா தேவ்விரத் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அமித் ஷா அவர்களே, ஹர்தீப் சிங் பூரி அவர்களே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அகமதாபாத், சூரத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.
உத்தராயன் தொடக்க தினமான இன்று, அகமதாபாத், சூரத் நகரங்களுக்கு மிக முக்கியப் பரிசு கிடைத்துள்ளது. நாட்டின் இரு பெரும் வர்த்தக மையங்களான அகமதாபாத் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள், இவ்விரு நகரங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். கெவாடியாவிற்கு, நேற்று புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, அகமதாபாதிலிருந்து கெவாடியாவிற்கு, அதிநவீன ஜன்-சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதை முன்னிட்டு, குஜராத் மக்களைப் பாராட்டுவதோடு, எனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகளே,
இன்று, ரூ.17,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கட்டமைப்புப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரூ.17,000 கோடி மதிப்புள்ள முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்திலும், புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் நாடு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கடந்த சில தினங்களில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன அல்லது புதிய திட்டங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நண்பர்களே,
அகமதாபாத்தும், சூரத்தும், சுயசார்பு குஜராத் மற்றும் சுயசார்பு இந்தியாவிற்கு அதிகாரமளிக்கும் நகரங்களாகத் திகழ்கின்றன. அகமதாபாதில் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்ட அருமையான தருணத்தை நான் நினைவுகூறுகிறேன். மக்கள் அனைவரும் கூரைகளின் மீது நின்று கொண்டிருந்தனர். அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. அகமதாபாதின் கனவு மற்றும் அடையாளமாகத் திகழும் மெட்ரோ திட்டத்துடன் அவர்கள் எந்தவகையில் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை நான் பார்த்தேன். அகமதாபாத் மெட்ரோ ரயில், தற்போது மோதேரா விளையாட்டரங்கம் முதல் மகாத்மா மந்திர் வரை ஒரு தடத்தில் இயக்கப்படுகிறது, மற்றொரு தடம் குஜராத் தேசிய சட்டப் பல்கலைகழகம் மற்றும் கிப்ட் சிட்டியை இணைக்கிறது. இதன் மூலம், இந்த நகரில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.
நண்பர்களே,
அகமதாபாதிற்கு பிறகு குஜராத்தின் இரண்டாவது பெரிய நகரமாகத் திகழும் சூரத், மெட்ரோ போன்ற அதிநவீன பொதுப் போக்குவரத்து திட்டங்கள் மூலம் இணைக்கப்பட உள்ளது. சூரத் மெட்ரோ ரயில், நகரிலுள்ள முக்கிய வர்த்தக மையங்கள் அனைத்தையும் இணைப்பதாக உள்ளது. ஒரு வழித்தடம், சர்தானா பகுதியை ட்ரீம் சிட்டியுடனும், மற்றொரு வழித்தடம் பேசான் பகுதியை சரோலி லைன் பகுதியுடனும் இணைக்கும். வருங்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது தான், இந்த மெட்ரோ திட்டங்களின் சிறப்பம்சமாகும். அதாவது, இன்று மேற்கொள்ளப்படும் முதலீடு, நமது நகரங்களுக்கு பல ஆண்டுகளுக்குத் தேவையான மேம்பட்ட வசதிகளை வழங்கும்.
சகோதர, சகோதரிகளே,
நாட்டில் மெட்ரோ ரயில்பாதைகள் விரிவுபடுத்தப்படுவது, முந்தைய அரசுகளுக்கும், எங்களது அரசுக்குமிடையேயான அணுகுமுறை வித்தியாசத்திற்கு, மிகச் சிறந்த உதாரணமாகும். 2014-க்கு 10-12 ஆண்டுகள் முன்புவரை, 225 கிலோமீட்டர் தொலைவுக்குத்தான் மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டில் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 450 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, நாட்டிலுள்ள 27 நகரங்களில், 1,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
நாட்டில் மெட்ரோ கட்டுமானம் குறித்த நவீன சிந்தனைகள் இல்லாமல் இருந்த காலம் அது. நாட்டில் மெட்ரோவுக்கென கொள்கை ஏதுமில்லை. இதன் விளைவாக, பல்வேறு நகரங்களில், பல்வேறு விதமான மெட்ரோ திட்டங்கள், பல்வேறுபட்ட தொழில்நுட்பம் மற்றும் வழிமுறைகளில் செயல்படுத்தப்படுகின்றன. மற்றொரு சிக்கல் என்னவென்றால், நகரங்களில் செயல்பாட்டில் உள்ள மற்ற வகையான போக்குவரத்து முறைகளுடன், மெட்ரோ திட்டத்திற்கு ஒருங்கிணைப்பு இல்லாதது தான். தற்போது, நகரங்களின் பல்வேறு போக்குவரத்து முறைகளையும் நாம் ஒருங்கிணைத்து வருகிறோம். அதாவது, பேருந்து, மெட்ரோ மற்றும் வழக்கமான ரயில் போக்குவரத்துகள், தனித் தனியாக இயங்காமல், கூட்டாக செயல்படுவதுடன், ஒன்றுக்கொன்று உதவுவதாக மாற்றப்பட்டுள்ளன. எனது அகமதாபாத் பயணத்தின்போது, தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை தொடங்கப்பட்டது, தற்போதைய ஒருங்கிணைப்பு மூலம் எதிர்காலத்தில் இத்திட்டம் மேலும் உதவிகரமாக அமையும்.
நண்பர்களே,
அனைத்துத் தொழில்களையும் பற்றிக்கொள்ளும் சூரத் நகரம், மக்கள்தொகை அடிப்படையில், தற்போது நாட்டின் எட்டாவது பெரிய நகரமாக திகழ்ந்தாலும், உலகில் மிக வேகமாக வளரும் நான்காவது நகரமாக உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு 10 வைரங்களில் , ஒன்பது வைரங்கள் சூரத்தில் தான் பட்டை தீட்டப்படுகின்றன. நாட்டில், மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களில் 40 சதவீதமும், செயற்கை இழைகளில் 30 சதவீதமும், சூரத்தில் தான் உற்பத்தியாகிறது. தற்போது, நாட்டின் இரண்டாவது தூய்மையான நகரமாக சூரத் உள்ளது.
சகோதர, சகோதரிகளே,
முறையான திட்டமிடல் மற்றும் உள்ளடக்கிய சிந்தனைகளால் தான் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று. முன்பு, சூரத்தின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர், குடிசைகளில் தான் வசித்து வந்தனர், தற்போது ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்ட பிறகு, இந்த எண்ணிக்கை 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த நகரத்தில் நிலவும் நெரிசலைப் போக்க, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, குஜராத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் உள்ளன, இவற்றில் 80 சதவீத பாலங்கள், கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டவை என்பதோடு, மேலும் 8 மேம்பாலங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, முன்பு காந்திநகர் என்றாலே, அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் வசிக்கும் நகரமாகவும், போதிய கவனம் செலுத்தப்படாத, சோம்பலான இடமாக இருப்பதற்குப் பெயர் நகரம் அல்ல. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், காந்திநகரின் போக்கே மாறிவிட்டதைக் காண முடிகிறது. ஐ.ஐ.டி. உள்ளிட்ட எண்ணற்ற கல்வி நிலையங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
காந்தி நகரைப் போன்றே, அகமதாபாதிலும், ஏராளமான இடங்கள், நகரின் அடையாளச் சின்னமாக மாறியுள்ளன. சபர்மதி ஆற்றங்கரை, கங்காரியா ஏரி முகப்பு, நீர்நிலை விமான தளம், துரிதப் போக்குவரத்து போன்றவற்றுடன், உலகின் இரண்டாவது பெரிய விளையாட்டரங்கமும் மோதேராவில் அமைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத், இந்தியாவில் முதலாவது, உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களை, நாட்டின் நிதித் தலைநகரமான மும்பையுடன் இணைக்கும் புல்லட் ரயில் திட்டமும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்மைக் காலங்களில், குஜராத்தில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களும், இதுவரை இல்லாத அளவிற்கு, வளர்ச்சியடைந்துள்ளன.
நண்பர்களே,
இத்தகைய பெரும் முயற்சிகளுக்குப் பின்னால், 21-ம் நூற்றாண்டு இந்திய இளைஞர்கள் இருப்பதோடு, அவர்களது அளவற்ற எதிர்பார்ப்புகளும் உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்ற வேண்டுமெனில், உரிய கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்வது அவசியம். இதுபோன்ற சிரமங்களைக் கடந்து, கனவுகள் நனவாகும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மெட்ரோ ரயில் திட்டங்கள், அகமதாபாத் மற்றும் சூரத் நகரங்களைச் சேர்ந்த அனைத்து நண்பர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அமையும் என்பது உறுதி.
இந்த நம்பிக்கையோடு, குஜராத்தைச் சேர்ந்த, குறிப்பாக அகமதாபாத் மற்றும் சூரத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைப் பாராட்டி விடை பெறுகிறேன்.
நன்றிகள் பல!