மேதகு பிரதமர் லீ சியான் லூங் அவர்களே,
மாட்சிமை பொருந்திய மன்னர்களே,
அதிபர்களே,
ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் பேருவகை கொள்கிறேன்.
நாம் நமது கூட்டாண்மையின் 25 ஆவது ஆண்டைக் கொண்டாடினாலும் நமது பயணம் மிக நீண்டது, ஆயிரமாயிரம் ஆண்டுப் பழமை கொண்டது.
இந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஆசியான் அமைப்பின் தலைவர்களை வரவேற்பது பெருமைக்கு உரியது. நாளை குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது, நீங்கள் விருந்தினர்களாகச் சிறப்பிக்கப்படுவீர்கள். ஆசியான் அமைப்பின் அனைத்து கூட்டமைப்பு நாடுகளிலிருந்தும் வந்துள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் பங்கு பெறுவது இதுவரை எப்போதும் இல்லாத முறையாகும்.
நீங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இங்கே கூடியிருப்பது 125 கோடி இந்திய மக்களின் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது.
கீழை நோக்குக் கொள்கைச் செயல்பாடுகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ராஜதந்திர கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இந்த நாடுகளின் கூட்டு முயற்சி எடுத்துரைக்கிறது.
நமது நட்பு கலாசார, நாகரிகங்களுடன் தொடர்பின் அடிப்படையில் அமைந்தது. இந்தியாவின் பண்டைய இதிகாசமான ராமாயணம் இந்திய துணைக் கண்டத்திலும் ஆசியான் நாடுகளிலும் தொடர்ந்து மதிப்பினைப் பெற்று வருகிறது.
மூலம் நமது பொதுப் பண்பாட்டுப் பொக்கிஷம் எனப் போற்றப்படும் ராமாயணத்தைக் கொண்டாடும் விழா ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கலைக்குழுக்களின் மூலமாக நடத்துவதற்கு ஆசியான் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பவுத்தம் உள்ளிட்ட இதர பெரிய மதங்களும் நம்மை நெருக்கமாகப் பிணைத்துள்ளன. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் இஸ்லாம் மார்க்கம் இந்தியாவுடன் பல நூறு ஆண்டுகள் குறிப்பிடத் தக்க தொடர்பு வைத்துள்ளது.
நமது பொதுவான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் நினைவு அஞ்சல் தலையை இணைந்து வெளியிட்டிருக்கிறோம்.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
ஆசியான் நாடுகளிலும், இந்தியாவிலும் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு ஆண்டு முழுதும் நடைபெறும் ஆசியான் நினைவு செயல்பாடுகள் கொண்ட பிரம்மாண்டமான நிறைவாகவே இந்த உச்சி மாநாடு அமைந்துள்ளது. மேலும் இதுவரை மேற்கொண்ட பயணம் குறித்து ஆய்வு செய்வதற்கும் எதிர்காலத் தேவைக்கான வகுப்பதற்கும் அரிய வாய்ப்பையும் இந்த உச்சி மாநாடு அளித்துள்ளது.
என்னைப் பொறுத்தவரையில், நமக்குள் நட்பு ரீதியிலான சுதந்திரமான விவாதத்தின் மூலம் தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும்.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
1992ஆம் ஆண்டு முதல் நமது கூட்டாண்மை பல்வேறு துறைகள் சார்ந்த விவாதம் முதல் ராஜதந்திர கூட்டாண்மை வரையிலானவற்றிலிருந்து இந்த ராஜதந்திரக் கூட்டாண்மை உருவாகியுள்ளது. இன்று வருடாந்திர உச்சி மாநாடு மட்டுமின்றி, முப்பது வகையான துறைகள் ரீதியான பேச்சுவார்த்தை நடைமுறைகளையும் ஏழு அமைச்சர்கள் நிலையிலான உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளோம்.
ஐந்து ஆண்டு திட்டச் செயல்பாட்டின் மூலம் அமைதி, வளம், சமமான வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஆசியான் – இந்தியா கூட்டாண்மையின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதில் நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
2016-2020ஆம் ஆண்டு காலத்துக்கான மூன்றாவது செயல் திட்டத்தை அமல்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றம் மிகவும் பாராட்டத் தக்கது.
ஆசியான் – இந்தியா கூட்டுறவு நிதியம், ஆசியான் – இந்தியா பசுமை நிதியம், ஆசியான் – இந்தியா அறிவியல் தொழில்நுட்ப நிதியம் ஆகியவற்றின் மூலமாக திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
கடல்களில் சட்டம் சார்ந்த ஒழுங்கு முறையின்படி அமைதி மற்றும் வளம் குறித்த ஆசியானின் தொலைநோக்குப் பார்வையை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. சர்வதேச சட்டத்தை மதிப்பது, குறிப்பாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் வகுக்கப்பட்ட கடல்சார் சட்டம் ஆகியவை மிக இன்றியமையாதவை என்பது குறிப்பிடத் தக்கது.
கடல் சார்ந்த விவகாரங்களில் ஆசியான் அமைப்புடன் நடைமுறை சாத்தியமுள்ள ஒத்துழைப்பு மற்றும் கூட்டினை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.
மறு ஆய்வு அமர்வின்போது, கடல்சார்ந்த விவகாரங்களில் ஆசியான் – இந்தியாவின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க வேண்டியிருந்தது. இது இந்திய – பசிபிக் மண்டலத்தில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு மிக முக்கியமான பார்வைகளில் ஒன்றாக இருக்கிறது.
நமது இத்தகைய கூட்டங்கள், செயல்பாடுகளில் நமது உரைகளில் கடல்சார்ந்த ஒத்துழைப்பும் உள்ளடங்கியிருக்கின்றது. உண்மையில், நீலப் பொருளாதாரம் குறித்த பயிலரங்கிலும், வழக்கமான உரையாடல்களிலும் ஆசியான் – இந்தியா இணைவு உச்சி மாநாட்டில் எதிரொலிக்கும் கருத்தாக்கமாக அமைந்துள்ளது.
கடல் சார்ந்த ஒத்துழைப்பு விஷயங்களில் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண முயற்சிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்வழிப் போக்குவரத்தில் சுதந்திரம் ஆகியவை முக்கியமான விஷயங்களாக அமைந்துள்ளன.
பல நூறாண்டுகளாகவுள்ள தரைவழி, வான் வழி, கடல்வழி, கலாசாரம், நாகரிகம் மற்றும் மக்களுக்கு இடையிலான நேரடி உறவுகள் மூலமாக இந்தியா ஆசியான் அமைப்புடன் பரிமாறிக்கொள்ளும் தொடர்புகளை உறுதி செய்வதாக இந்த இணைவுக்கான உச்சிமாநாடு அமைந்துள்ளது.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
டிஜிட்டல் வழி இணைப்பு தகவல் மற்றும் தொலைத் தொடர்பில் முக்கிய இடம்பெறுகிறது.
இதில், மண்டல அளவில் உயர் திறனுள்ள கண்ணாடி இழை (ஃபைபர் ஆப்டிக்) மூலமான இணைப்பு மற்றும் ஊரகப் பகுதிகளை டிஜிட்டல் மூலமாக அகன்ற அலைவரிசை இணைப்பதற்கான வழிமுறைகளும் இதில் அடங்கும்.
ஊரகப் பகுதிகளில் மேற்கொள்வதற்கான முன்னோடித் திட்டத்தை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இது கம்போடியா, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, மியான்மர், வியத்நாம் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் கிராமங்களை உருவாக்க உதவும். இத்திட்டத்தின் வெற்றி ஆசியான் அமைப்பிலுள்ள இதர நாடுகளிலும் பரவும்.
அத்துடன், தொலைத்தொடர்பு (Telecom), இணைவுத் தொழில்நுட்பம் (Networking Technologies) ஆகிய துறைகளில் சிறந்த வகையில் பயிற்சி அளிக்கவும் முன்வந்துள்ளோம். மேலும், தொலைத்தொடர்பு குறித்த கொள்கை, விதிமுறைகளிலும் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் ஆகியவற்றிலும் ஆசியான் நாடுகளில் உள்ள தகவல் தொடர்பு, தொலைத்தொடர்புத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முன்வந்துள்ளோம்.
நமது புரிதல்களை இன்னும் ஆழமாக்கிக் கொள்ளவும், நிதி விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளவும் டிஜிட்டல் நிதியாக்கம் மற்றும் முதலீட்டு மேம்பாடு, கட்டுமானம் ஆகியவை தொடர்பாக உரையாடல் நடத்த ஏற்பாடு செய்வது குறித்து திட்டமிட்டுள்ளேன். நிதி பயங்கரவாதத்தை முறியடிக்க இணைந்து செயல்படுவது இன்னொரு முக்கியமானதாகும். இது விஷயத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
நம் நாடுகளுக்கு இடையில் 7,000 கோடி டாலராக இருந்த வர்த்தகம் 25 ஆண்டுகளில் 25 மடங்காக உயர்ந்துள்ளது. ஆசியான் நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் முதலீடுகள் வலுவாகவும் உள்ளது, வளர்ந்தும் வருகிறது.
வர்த்தகத்தை மேலும் மேலும் மேம்படுத்துவதற்காக ஆசியான் அமைப்புடன் தொடர்ந்து பணியாற்றுவோம். நமது வணிகர்கள், தொழிலதிபர்களுக்கு இடையில் கருத்துகளைப் பரிமாறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவோம்.
வர்த்தகம், முதலீடு குறித்து அண்மையில் நடைபெற்ற கூட்டம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளின் வெற்றி
அண்மையில் நடைபெற்ற தொழில், வர்த்தக முதலீட்டு மாநாடு (Business & Investment Meet and Expo), ஆசியான் – இந்தியா வணிக கவுன்சில் கூட்டம் (ASEAN India Business Council Meeting), வணிகஇணைவு மாநாடு (Biznet Conference), வணிகத் தொடக்க விழா (Start-up Festival), கணினி சார்ந்த ஹாக்கதான் (Hackathon), ஐசிடி எக்ஸ்போ (ICT Expo) ஆகிய நிகழ்வுகள் சாதகமான முடிவுகளைக் காட்டுகின்றன.
நமது திட்ட மேம்பாட்டு நிதியமும் விரைவில் விளைவு தரும் திட்டங்களும் நமது நாட்டு நிறுவனங்கள் மண்டல அளவில் இணைந்து செயல்படும் மதிப்புள்ள சங்கிலியாக உருவாகப் பெரிதும் துணைபுரியும். குறிப்பாக, ஆடைகள், ஜவுளி, மருந்துகள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகிய துறைகளில் இது பெரிதும் உதவும்
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
பல நூறாண்டுகளாக நம் நாடுகளுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு நீடிப்பதற்கு மக்களிடையில் உள்ள உறவுதான் அடித்தளமாக இருக்கிறது.
இந்தியர்கள் புலம்பெயர்ந்து தெற்காசியாவில் தொலைவில் உள்ள நாடுகளில் வாழ்கிறார்கள். தெற்காசிய நாடுகளில் பரவலாகவும் வாழ்கிறார்கள். அவர்களை அந்தந்த நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
சிங்கப்பூரில் இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா சார்பில் புலம்பெயர் இந்தியர் நாள் (Pravasi Bharatiya Divas) இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரித்து போற்றியுள்ளது.
அதே சமயம் புது தில்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முதல் கூட்டத்திலும் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த மேயர்கள் கூட்டத்திலும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நமது வரலாற்று உறவுகளைக் கட்டமைப்பதற்காக 2019ஆம் ஆண்டினை ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டாக அறிவிக்க உத்தேசித்துள்ளேன். சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் வகையில் பண்பாட்டுப் பாரம்பரிய வழிகளை அமைக்கலாம்.
நமது மண்டலத்தில் சுற்றுலாப் பயணிகளையும் புனிதப் பயணிகளையும் ஈர்ப்பதற்கு பவுத்த சுற்றுலா மிக முக்கியமாக அமையும்.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
நமது பாரம்பரியம் மிக்க நாகரிகத்துடன் தொடர்புள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணியில் இந்தியா பங்கேற்று வருகிறது.
கம்போடியா, மியான்மர், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு, வியத்நாம் ஆகிய நாடுகளில் ஆலயங்களைப் புதுப்பித்து எழுப்புவதில் இந்தியாவுக்குப் பெரிய பங்குண்டு.
அருங்காட்சியகங்களில் ஆசியான் – இந்தியா அறிவூட்டும் இணையதளத் தொடர்பு (virtual knowledge portal) ஏற்படுத்துவது இந்தப் பாரம்பரியத்துக்குப் பெரிதும் உதவும்.
நமது நிகழ்வுகளில் மிக முக்கிய அம்சமாகத் திகழ்வது இளைஞர்களின் ஆற்றலும் அவர்கள் குறித்த எதிர்காலமும் ஆகும்.
இளைஞர் உச்சி மாநாடு (Youth Summit), கலைவிழா (Artist Residency), இசை விழா (Artist Residency), டிஜிட்டல் வணிகத்துக்கான ஆயத்த விழா, (Start Up Festival) ஆகிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன ஜனவரி 24ஆம் தேதி இளைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதன் மூலம் அவர்களது ஊக்கத்துக்கு உற்சாகம் அளித்துள்ளோம்.
நமது மண்டலத்தில் இளைஞர்களை அதிகாரமுள்ளவர்களாக உயர்த்தும் விதத்தில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் 1000 ஃபெலோஷிப்களை அறிவித்துள்ளேன். அவர்கள் இந்தியாவின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் (Indian Institutes of Technology) இணைந்து ஒருங்கிணைந்த முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
அத்துடன், ஆசியான் நாடுகளைச் சார்ந்த பொறியாளர்கள் இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் அகாடமியில் (Indian Academy of Highway Engineers) பயிற்சி அளிக்கவும் விரும்புகிறோம்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக இணைவு (Network of Universities) அமைக்கவும் உத்தேசித்துள்ளேன்.
மாட்சிமை நிறைந்தோரே, மேதகு தலைவர்களே,
நிறைவாக, இந்த அழைப்பை ஏற்று வந்திருந்து இந்த நினைவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் என்நாட்டு மக்களுடன் இணைந்து மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசியான் வருடாந்திர அமர்வின் இணைத் தலைவராகவும் 2018ம் ஆண்டுக்கான ஆசியான் – சிங்கப்பூர் தலைவராகவும் உள்ள சிங்கப்பூர் குடியரசின் பிரதமர் மேதகு லீ சியான் லூங் அவர்களை சிங்கப்பூர் சார்பில் தொடக்க உரையை நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.