இத்தாலி பிரதமர் மாண்புமிகு திரு மரியோ திராகியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் இன்று உரையாடினார்.
ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்தும், பிராந்தியம் மற்றும் உலக அளவில் அவற்றின் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தனர்.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இரு பிரதமர்களும், சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான தேவை குறித்தும் வலியுறுத்தினர்.
ஆப்கானிஸ்தான் நிகழ்வுகளை அடுத்து எழுந்துள்ள மனிதநேய நெருக்கடி மற்றும் நீண்டகால பாதுகாப்பு விஷயங்களை எதிர்கொள்ள ஜி20 உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பை அவர்கள் வலியுறுத்தினர்.
பருவநிலை மாற்றம் ஜி20 செயல்திட்டம் உள்ளிட்ட இதர முக்கிய விஷயங்களையும் இரு தலைவர்கள் விவாதித்தனர். காப்-26 போன்ற எதிர்வரும் பல்முனை நிகழ்ச்சிகள் குறித்த தங்களது கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஜி20 விவாதங்களை செயல்திறன் மிக்க வகையில் வழிநடத்துவதில் இத்தாலியின் துடிப்புமிக்க தலைமையை பிரதமர் பாராட்டினார்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் சம்மதித்தனர்.