பிரதமர் திரு. நரேந்திர மோடியும் ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் திரு. விளாடிமிர் விளாடிமிரோவிச் புடின்-உடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்யாவின் வழக்கப்படி சமீபத்தில் ரஷ்ய கூட்டமைப்பு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், அதிபர் புடினுக்கும் ரஷ்யாவின் நட்புணர்வு மிக்க மக்களுக்கும் விழாக்கால வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பிரதமரின் இந்த வாழ்த்துக்களை அதிபர் புடின் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதோடு பிரதமர் மோடியும் இந்திய மக்களும் வளமும் முன்னேற்றமும் அமைதியும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில், குறிப்பாக 2019-ம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறப்பு சலுகைகளுடன் கூடிய யுத்ததந்திர ரீதியான கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டது குறித்தும் இந்த இரு தலைவர்களும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். 2020-ம் ஆண்டில் அனைத்துத் துறைகளிலும் இந்திய-ரஷ்ய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து நெருக்கமாக கலந்து பேசி தீவிரமாகப் பாடுபடுவது என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில் 2020-ம் ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த ஆண்டு மே மாதம் மாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள 75-வது வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அதிபர் புடின் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளதையும் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு ஆகியவற்றில் பங்கு கொள்ளவும் தாம் ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் கூறினார். 21வது இருதரப்பு வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகை தருமாறும் அதிபர் புடினை அவர் கேட்டுக் கொண்டார்.
பிராந்திய ரீதியிலான, உலகளாவிய விஷயங்கள் குறித்தும், பிராந்திய ரீதியிலான, உலக அளவிலான பாதுகாப்பு, அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் அணுகுமுறையும் ஒன்றிணைவது குறித்தும் இந்த இருதலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.