பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மாட்சிமை தங்கிய திருமிகு. உர்சுலா வோன் டெர் லேயனுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றிருப்பதற்கு மாட்சிமை தங்கிய திருமிகு. உர்சுலா வோன் டெர் லேயனை பிரதமர் பாராட்டினார். அவரது பதவிக்காலத்தில், முன்னதாகவே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவர் என்பதால், அவரது தலைமை மேலும் முக்கியத்துவம் பெறுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை, பன்முகத்தன்மை, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகம், சர்வதேச நிலைமை ஆகிய விழுமியங்களில் இருநாடுகளின் பகிர்வை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தியா-ஐரோப்பிய ஆணையத்தின் கூட்டுறவு என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பருவகால மாற்றம், தொலைத் தொடர்பு, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி, கடல்சார்ந்த பாதுகாப்பு, தீவிரமயமாதல் மற்றும் பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, முன்னுரிமையாகக் கருதி பேசியதை அவர் பாராட்டினார். இந்தியா-ஐரோப்பிய யூனியன் கூட்டுறவை கூட்டாக பலப்படுத்துவதில் தாம் அதிக ஆர்வமுடன் இருப்பதை பிரதமர் வெளிப்படுத்தினார்.
பிரெஸல்ஸ் நாட்டில் அடுத்து நடைபெறவிருக்கும் இந்தியா- ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு மாட்சிமை தங்கிய திருமிகு. உர்சுலா வோன் டெர் லேயன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் திரு.மோடி நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொண்டார்.